மனிதர்கள் சாதனைகளைப் பற்றி நிறையவே பேசுவார்கள். பல நேரங்களில், நம்மாலும் பிறராலும் சாதிக்க முடியாமல் போனவற்றைப் பற்றியும் பேசுவார்கள். ‘சாதனை’ என்கிற வார்த்தையும், ‘சாதனைகள்’ குறித்த பெருமிதமும் மனிதர்களிடையே ஏராளமாகப் பொங்கி வழிவதுண்டு. ஆயினும் கூட, எது சாதனை என்பதைப் பற்றிய தெளிவு, பெரும்பாலான மனிதர்களிடம் இதுநாள் வரை காணப்படவில்லை. அதனால்தான், செய்ததெல்லாம் சாதனை, செய்வதாகச் சொன்னதெல்லாம் சாதனை எனும் போக்கு கடைபிடிக்கப்பட்டு அவை யாவும் வீதிதோறும் பறைசாற்றப்படுகின்றன.

ஒருவன் தனது நன்மைக்காகச் சாதித்துக் கொண்டதையும், பிறரது நன்மைக்காகச் சாதித்ததையும் வேறுபடுத்திப் பார்க்கும்போதுதான் சாதனை என்கிற வார்த்தைக்கு உண்மையான பொருள் கிடைக்கும். பொதுநலன் கருதிய தனிமனிதர்களின் சாதனைகளைத்தான் ‘சாதனை’ என்று கணக்கிடுவது சரியாக இருக்கும். தாஜ்மஹாலைவிட, காவிரியாற்றின் கல்லணை அழகுமிக்கதாக நமக்குத் தெரிய வேண்டும். வேடிக்கை காட்டுவதோ, வேடிக்கை பார்க்க வைப்பதோ மனித குலத்தின் வாழ்விற்கான சாதனைகளாக இருக்க முடியாது. இன்றைய நிலையில், ‘சாதனை’ என்கிற வார்த்தை ‘கூச்சல்’ போடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நமது ஆட்சியாளர்கள் கூட தமது சாதனைகள் பற்றி நிறையவே பேசுகிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்’ என்று சுவரொட்டி விளம்பரம் செய்து கூட்டமும் போடுகிறார்கள். எந்தச் சாதனையைச் சொல்லப் போகிறார்கள் என்று தெருவோரம் நின்று கேட்கிறோம். ‘இருபது தெருக் குழாய்கள், பதினாறு தையல் இயந்திரங்கள், முப்பது குப்பைத் தொட்டிகள்’ என்கிற பாணியில் அவர்களது ‘மகத்தான சாதனைகள்’ நீண்டுகொண்டே போகிறது. ஓர் அரசு மக்களின் வரிப் பணத்தில் ஏராளமான குற்றம் குறைகளோடு செய்து முடித்த சர்வ சாதாரண ‘கடமைகள்’ கூட இங்கே ‘சாதனை’களாக விஸ்வரூபம் எடுக்கின்றன. சாதனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுதான் சாதிக்க இயலாதவர்க்கான முதல் அடையாளம் என்பதைப் பெரும்பாலான ‘கொக்கரிப்பாளர்கள்’ உணர்ந்து கொள்வதில்லை.

உள்ளூர்ச் சாதனைகளையும், சாதனையாளர்களையும் விட்டுவிட்டு உலகச் சாதனைகளின் பக்கம் போனால், அது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. நாளுக்கு நாள் பருமனாகிக் கொண்டே இருக்கும் கின்னஸ் புத்தகத்தின் பக்கங்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் சாதனையாளர்கள் நம்மைக் கதிகலங்க வைக்கிறார்கள். எதிரே தெரியும்பாதை தெளிவாக இருந்தும்கூட ‘பின்னோக்கி நடந்தவர்’களும், எந்தக் கருத்தையும் ஆமோதிக்காமல் ‘நீண்ட நேரம் கை தட்டியவர்’களும், கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற சாதனைகள் சக மனிதனுக்கும், மனித குலத்திற்கும், எந்த வகையிலும் உதவாது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. கின்னஸ் புத்தகத்திற்காக நிகழ்த்தப்படும் சாதனைகள் யாவும், சாதனையாளருக்கும், புத்தகத்திற்குமான தனிப்பட்ட உறவாகி விடுவதால், சமூகம் இதன் பார்வையாளராக இருந்து விடுகிறது. அதுபோன்ற பல்லாயிரக்கணக்கான சாதனைகளால் ஒரு பயனையும் பெறமுடியாமல் போய்விடுகிறது.

நடைமுறை வாழ்விற்கு உதவாத எந்தச் சாதனையும் கேலிக்குரிய ஒரு நிகழ்வாகவே கருதப்படும். இதில், “காட்டாங்கொளத்தூரில் முப்பது மணி நேரம் பேசியவரை, கலிபோர்னியாவில் முப்பத்து மூன்று மணி நேரம் பேசியவர் சாதனை முறியடிப்புச் செய்தார்” என்றெல்லாம்கூட செய்திகள் நிறைய வெளிவருகின்றன. முப்பது மணி நேரமும், முப்பத்து மூன்று மணி நேரமும் தொடர்ந்து பேசிய அந்த இருவரும் என்ன பேசினார்கள்? அவர்களின் பேச்சு புத்தகமாக வெளிவருமா? அப்படியே வெளியானாலும் அதைப் படிக்க முடியுமா? இந்தப் பேச்சாளர்கள் யாருக்கான முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. கருவண்டுகளைத் தின்று சாதனை படைக்க உள்ளதாகத் தன் நண்பர்களிடம் சவால்விட்டு நிறைய கருவண்டுகளைத் தின்றதால் தன் உயிரையே இழந்தார் சென்னை, மணலிப்புதூரைச் சேர்ந்த விசுவநாதன் என்ற 18 வயது இளைஞர். இதுபோன்று, மனிதர்களையும், அவர்களது ஆற்றலையும் கேலிக்குரிய வகையில் வெளிப்படுத்தி அதைச் சாதனை என்று அறிவிப்பதும், அந்தச் சாதனையை முறியடிக்க வாருங்கள் என்பது போல் இன்னும் பலரை ஊக்குவிப்பதும் மனிதகுல மேன்மைக்கான செயல்பாடு களாக நிச்சயம் இருக்க முடியாது.

பொது நலன் கருதிய கோணத்தில்தான், சாதனைகள் நிகழ்த்தப்படவும், பின்னர் அவை முறியடிக்கப்படவும் வேண்டும். இரண்டு தீவுகளுக்கிடையில் ஒரு பர்லாங் நீளம் கொண்ட பாலத்தை ஐந்து பேர் சேர்ந்து ஆறு மாதத்தில் கட்டி முடித்தார்கள். படகில் போய் வந்து கொண்டிருந்த மக்கள் இப்போது அதன் வழியாகப் பேருந்தில் போய் வருகிறார்கள் என்பதும், அதே கோணத்தில் வேறொரு இடத்தில் நான்கு பேர் சேர்ந்து அதை முறியடிப்பதும்தான் உலகச் சாதனைகளாக அறியப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 67 வயதான ஜேம்ஸ் ஹாரிசன் ரத்ததானம் செய்வதில் கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். ரத்த வங்கிக்குக்கு 804 தடவை சென்று 480 லிட்டர் அளவுக்கு இவர் ரத்தம் அளித்துள்ளார்.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களை விட்டுவிட்டு, மனித குலத்திற்குச் சவாலாக மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒட்டாமலும், உதவாமலும் எதையாவது செய்து கொண்டிருப்பதும், இன்னும் ஒருபடி மேலே சென்று அதைச் சாதனை என்றுச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக் கொள்வதும் ஆறறிவாளர்களுக்கான அடையாளமாக இருக்க முடியாது.

மாபெரும் சமூகச் சிந்தனையாளர்களும் இந்த உலகிற்காக வியக்கத்தக்கக் கொடைகளை அளித்த அறிவியல் சிந்தனையாளர்களும் தம்மைச் சாதனையாளர்கள் என்று சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள் செய்வதெல்லாம் சாதனைகளாகத் தெரியவில்லை.

நீளமாக நகம் வளர்ப்பது, சோம்பல் பேர்வழிகளுக்கான சிறந்த அடையாளமாகக் கருதப்படுகிறது. தேவையற்ற நகத்தை வளர்த்துப் பராமரித்துக் கொண்டிருப்பவன் தேவையான வேலைகளைக் கோட்டை விடுவான் என்று சொல்வார்கள். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் அது உண்மையென்றும் தெரியவரும். ஆனால் மிக நீளமாக நகம் வளர்ப்பவர்களை சாதனையாளர்கள் என்று அறிவிக்கிறது கின்னஸ் புத்தகம். ஆஸ்திரேலியாவில் ஒருவர் வளர்த்த நகத்தை ஆப்பிரிக்காக்காரரின் நகம் எத்தனை சென்டிமீட்டரில் முறியடித்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். நீண்ட நேரம் முத்தம் கொடுத்துக் கொண்ட தம்பதிகள் கூட கின்னஸின் பார்வையில் சாதனையாளர்களாகத் தெரிகிறார்கள். நல்ல வேளையாக கின்னஸ் அடுத்த கட்டத்திற்குப் போகவில்லையே என்று நாம் சமாதானமடைய வேண்டியிருக்கிறது. 

- ஜெயபாஸ்கரன்