வாக்களிப்போம் 49 O – முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிரான எமது மறுப்பைப் பதிவோம்.
 
தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டிச் சனநாயகம் என்ற பெயரில் மாபொரும் நாடகங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது. புதிய தேர்தல் கூட்டுகள் -உடைவுகள்- வாக்குக்காக இலவசப் பொருட்கள்- ஊழல் என்று எமக்குச் சுடச்சுடச் செய்திகள் தினமும் சொல்லப்படுகிறது! லாப்டாப் முதற் கொண்டு பஸ் பாஸ் வரை யார் கூடுதல் இலவசங்களை வழங்குவது என்று தி.மு.க வும-; அ.தி.மு.க வும் அடித்துக் கொள்கின்றன. இதற்குள் பா.ஜ.க பசுமாடு இலவசமாக வழங்கப் போகிறதாம்!  அவர்களை அண்டிய ஏனைய சிறு கட்சிகளும் தம்மால் முடிந்ததைச் சுருட்டிக் கொண்டு போவதில் குறியாயிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தின் காப்பாளர்களாகப் பாவனை செய்து காவடி ஆடிய வைகோவின் கட்சி ம.திமு.க வை அம்மா துரத்தியதும் தற்போது தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். இந்திய அரசின் உதவியுடன் ராஜபக்ச ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது கூட அவருக்குத் தேர்தல் புறக்கணிப்பு அக்கறை வரவில்லை.
 
ஸ்பெக்ட்ரம் ஊழல் முதற்கொண்டு மாபெரும் ஊழல்களை எம்மை வேடிக்கை பார்க்க வைத்து விட்டு அவர்கள் எமக்குத் தேர்தல் களியாட்டங்கள் காட்டுகிறார்கள். இந்தக் கட்சித் தலைமைகளின் ஓட்டாட்டித்தன ஊழல்களில் அவரது பங்கும் அனைவரும் அறிந்தது தானே. நம்மிடம் திருடிய பணத்தை வைத்து நமக்குப் படம் காட்டுவது போதாதென்று நமது வாக்குகளையும் கேட்கிறார்கள்.
 
இவர்கள் நாடகங்களில் நமக்கொரு லாபமும் இல்லை. சனநாயகம் என்று சொல்லி எங்கள் பெயரில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? கடும் உழைப்பின் பின்பும் காற்காசுக்கு வழியின்றித் தவிக்கும் நமக்கு இவர்கள் நாடகத்தில் என்ன பங்கிருக்கிறது? உணவுப்பொருட்களின் விலை வானைப் பிளக்கிறது. பெற்றோல் ரொக்கட் விலை விற்கிறது. பெரும் கம்பனிகளின் வளர்ச்சிக்கு 88 000 கோடி ரூபாய் ஒதுக்கும் மத்திய அரசு உணவு மான்மியமோ அல்லது பெற்றோலுக்கான விலையைக் குறைக்கவோ தயாராக இல்லலை. அவர்கள் அரசு-அவர்கள் கட்சிகள் நமக்கானதில்லை. நம்மை எத்தனை பாடு படுத்துகிறார்கள்.
 
நகரை அழகுபடுத்துகிறோம் என்று சொல்லி நம்மை நகரில் இருந்து வெளியே தூக்கி வீசுகிறார்கள். புதிய கார்களுக்கு வழியேற்படுத்த எமது வீடுகளை புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்குகிறார்கள்.
 
இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மானியம் என்று பொய்க்கதை பேசிவிட்டு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நமது நிலங்களைத் திருடிப் பல்நாட்டுக் கம்பனிகளுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள்.
 
லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தப் போவதாகத் தொடர்ந்து கதை விடுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் வழமை போலவே தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்து நம்மை வேலை நீக்கம் செய்யும் கம்பனிகளுடன் சேர்ந்து எமது உரிமைகளைத் தாக்குகிறார்கள்.
 
பாடசாலைச் சீருடை தருவோம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் லாப்டாப் தருகிறோம் என்று வாக்குக்காக ஒரு பக்கம் ஏமாற்று வித்தை. மறு பக்கம் அரசுப் பள்ளிகள் எவ்வித வசதியுமின்றிக் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இன்றி மிக மோசமாக நடத்தப்படுகின்றன.அதனால் தனியார் பள்ளிகள் கொள்ளை இலாபமீட்ட வழியேற்படுத்துகிறார்கள்.
 
அரச மருத்துவச்சாலைகள் மற்றும் அரச சுகாதார அமைப்புகளைத் திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழித்து வருவதன் மூலம் சாதாரண மக்கள் எட்ட முடியாத தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவசாலைகளை ஊக்குவிக்கிறார்கள். இதற்குள் இலவச மருத்துவ காப்பீடு தருவதாக வாக்குக்காக ஒரு பொய்ப்பிரச்சாரம் வேறு நடக்கிறது.
 
இந்த ஏமாற்று வித்தைகளை இனியும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது.
 
ஒரு கலர் ரீவிக்காக ஏமாந்துவிடும் இளிச்சவாயர்கள் அல்ல நாம். இலவச கலர் ரீவியை மறுப்போம். நியாயமான வேலைநேரத்துக்கும் ஓய்வுநேரத்துக்கும்மான உரிமையை கோருவோம்.

இலவச அரிசி கொடுப்பதாக ஏமாற்றுவதை மறுத்து வேலை செய்யும் உரிமையையும் நியாயமான ஊழியம் வழங்கும் கோரிக்கையையும் நாம் முன்வைப்போம்.
 
வெறும் லாப்டாப் பென்சில் பேனாக்களுக்கு ஏமாந்துவிடுபவர்கள் அல்ல நாம். நம் அனைவருக்குமான இலவசக்கல்விக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுவோம்.
 
அனைவருக்குமான இலவச மருத்துவசேவையைக் கோருவோம்.
 
நாடகக்காரக் கட்சிகள் எதற்கும் நாம் வாக்களிக்க மாட்டோம் என்று எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதேவேளை அதிகாரத்தை எமக்காகக் கைப்பற்றும் ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்க நாமனைவரும் ஒன்றுபடுவோம். தொழிலாளர் நலன்களை – ஒடுக்கப்படுவோர் நலன்களை முதன்மைப்படுத்திய உண்மையான சனநாயக உரிமைகளை மதிக்கின்ற நமக்கான கட்சியை நாம் தான் உருவாக்க வேண்டும்.
 
மக்களுக்காக மக்களால் ஒருங்கமைக்கப்படும் ஒரு மாற்றுக் கட்சி இன்று அவசியத் தேவை. இது பற்றிய செயற்பாட்டுக்கு அல்லது உரையாடலுக்கு உடனடியாக எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
 
45க்கு மேற்பட்ட நாடுகளில் ஒடுக்கப்படுபவர்களின் எதிர்ப்பை ஒருங்கமைத்து வரும் தொழிலாளர்களின் சர்வதேசியத்துக்கான அமைப்பின் இந்திய பிரிவான புதிய சோசலிச மாற்று இந்தியாவில் ஒடுக்கப்படுபவர்களுக்கான ஒரு மாற்றை உருவாக்க தொடர்ந்து போராடி வருகிறது. இந்த எதிர்ப்பியக்கத்தில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அல்லது எம்மைப்பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் விலாசம் அல்லது தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

விலாசம்  : PO BOX 1828 Banglore 560018

தொலைபேசி : 09551251841
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.