சாலை விபத்தில் இறப்பது போல, விலைவாசி உயர்வைப்போல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் தொடர் கதையாகிப்போனது.

யாராவது தமிழக மீனவன் கொல்லப்படும் பட்சத்தில் தமிழகத்திலிருந்து ஒரு வேண்டுகோள் கிளம்பும், இலங்கையை கண்டிக்கும்படி, உடனே மத்திய அரசிடமிருந்து அவங்க (இலங்கை கடற்படை) அப்படியெல்லாம் பண்றவங்க இல்லையே? எதுக்கும் சொல்லி வைக்கிறோம். நீங்களும் மீனவர்கள் எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்ற ரீதியில் பதில் வரும்.

ஏதோ இப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், மீனவர் பாண்டியனும், ஜெயக்குமாரும் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி பதறிப்போய், தமிழர்களின் பிரச்சினைக்கு அவர் உபயோகிக்கும் அதியுச்ச வழிமுறையான கடிதம், தந்தி என இறங்கிவிட்டார். இல்லையென்றால் அவரே “மீனவர்கள் குடும்ப பிரச்சினைகளுக்காக தாங்களே கடலில் சென்று தற்கொலை செய்துகொள்கின்றனர்” என முடித்துவிடுவார். ஈழத்துக்காக தமிழ்நாட்டில் தீக்குளித்த 16 பேரை கொச்சைப்படுத்தியதைப் போல.

மத்திய அரசும் வழக்கம்போல இது தமிழர்களின் பிரச்சினை என்பதால் வருத்தத்தையும், கவலையையும் இலங்கையிடும் தெரிவித்து, (பரதேசிகளா தமிழ்நாட்டுல எழவு விழுந்தா தமிழ்நாட்டிடம் அல்லவா வருத்தமும், கவலையும் தெரிவிக்க வேண்டும்? எங்களையும் ஈழத்தமிழர்கள் போல், இலங்கையிடம் கையளித்து விட்டீர்களா?) இது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை கேட்டிருக்கிறது. இலங்கையும் வழக்கம்போல் இதை நாங்கள் செய்யவில்லை, எங்கள் ராணுவம் மிகவும் நேர்மையானது என்ற மறுத்துள்ளது- இந்த ஒற்றைப் பதிலே இந்திய அதிகார மையங்களுக்குப் போதுமானது.

புலிகள் செயல்பாட்டுடன் இருந்தவரை இதுபோன்ற தாக்குதல்களுக்கும், படுகொலைகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு இலங்கை அரசு புலிகள் மீது பழிபோடும், இந்திய அரசும் அப்படியே ஏற்றுக்கொள்ளும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பினால் “இங்கிருந்து சிலர் புலிகளுக்கு ஆயுதம் கடத்துகின்றனர். அதனால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் வருகின்றன” என இந்திய அதிகார மையம் மிரட்டும் தோரணையில் பிரச்சினையை திருப்பும். ஆனால் இன்று ஆயுதப்போராட்டமும், புலிகளும் இல்லை என்கின்ற நிலையில் பழியை யார் மீது போடுவது என்று தெரியாமல் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என இலங்கை மறுக்கிறது. அதையே ஒரு பதிலாகவும் இந்திய அரசு கொஞ்சமும் கூச்சமின்றி சொல்கிறது.

நூறு கோடி மக்கள் தொகைகொண்ட நாடு, வல்லரசு கனவோடு ஆயுதக் கொள்முதலில் ஈடுபடும் தேசம். எங்கோ சர்வதேச எல்லையில் நடைபெறும் சோமாலியர்களின் கடற்கொள்ளையை தடுக்க முடியும் என்கின்ற இந்தியா, இங்கே 18 மைலுக்கு உட்பட்ட தொலைவில் இலங்கை கடற்படை செய்யும் அட்டகாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறது. இது ஏதோ திடீரென்று நடைபெறும் சம்பவம் அல்ல. 40 ஆண்டுகளாக, 1000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள், 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை என நீளும் பிரச்சினை.

இந்தப் படுகொலைகளையும், தாக்குதல்களையும் எதை வைத்தும் நியாயம் கற்பிக்க முடியாது. மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்றால் அதிகபட்சமாக அவர்களை கைது செய்து இலங்கை நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கலாம். ஆனால், சட்டம், நியாயம் என்றால் என்ன என்று கேட்கும் சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களுக்கு இழைக்கும் கொடுமைகளை விரிவாக எழுதினால் அது நீலப்படத்திற்கு கதை எழுதியது போல் ஆகிவிடும்.

இலங்கை கடற்படை தங்களிடம் தமிழக மீனவர்கள் சிக்கியதும், அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துவது, அப்பா, மகன். அண்ணன், தம்பி ஆகிய உறவுமுறைகளுக்கிடையே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடச்சொல்லி ரசிப்பது. ஐஸ்கட்டியில் படுக்க செய்வது, கிரீஸ் மணல் ஆகியவற்றை கலந்து திங்கச் செய்வது, திட்டுவது, கயிற்றாலும், துப்பாக்கி கட்டையாலும் மீனவர்களை தாக்குவது, மீன்களை கடலில் கொட்டுவது, அள்ளிச்செல்வது, வலைகளை அறுப்பது, மீனவர்களை சுடுவது, படகுகளை உடைத்து சேதப்படுத்துவது என எத்தனை விதமான சித்திரவதைகளை கடலில் அந்த இடத்தில் செய்ய முடியுமோ! அத்தனையையும் செய்கிறது. இப்படிக் கொடூர மனம் படைத்த சிங்கள ராணுவத்தைதான் ராஜபட்சே மனிதாபமுள்ள மீட்புபடை என்று வர்ணிக்கிறார். இந்தக் காட்டு மிராண்டிகளைக் கொண்ட ராணுவத்திடம்தான் இன்று ஈழத்தின் மொத்த மக்களும் இன்று கையளிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்று நினைக்கவே மனது கனக்கிறது.

ஆனால் இத்தனை சித்திரவதைகளும், படுகொலைகளும் தமிழக மீனவர்களுக்கு தொடர் கதையாக நடந்த ஒரு தருணத்தில் கூட இந்திய கடற்படை தாக்குதலை தடுக்கவோ, உதவவோ வரவில்லை என்பதுதான் வேதனை. இலங்கை கடற்பரப்புகள் செல்லும் மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என்றால், அதே போன்று இந்திய எல்லைக்குள் வரும் இலங்கை மீனவர்கள் ஏன் தாக்கப்படுவதில்லை என்பதுவும் புரியவில்லை.

மும்பை தாஜ் ஹோட்டலிலும் மற்ற இடங்களிலும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 179 பேர் கொல்லப்பட்டபோது இந்திய இறையாண்மை பறிபோனதாக அலறும் இந்திய அதிகார மையமும், அதனை அப்படியே கட்டமைத்த ஊடகங்களும், 40 வருடமாக தமிழக மீனவர்கள் சித்திரவதைக்குள்ளாவதையும், 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் ஏன் குறைந்தபட்ச கவனத்தை கூட செலுத்த மறுக்கின்றனர்.

மும்பை தாஜ் விடுதியில் கொல்லப்பட்டவர்கள் வசதி படைத்த ஆளும் வர்க்கம். ஆனால் தமிழக மீனவர்கள் அன்றாட உணவுக்கே கடலை நம்பி வாழ்பவர்கள் என்பதாலா? அல்லது தமிழர்கள் என்பதாலா? இதே போன்று பல்வேறு நாடுகளிலேயும் மீனவர்கள் எல்லைத்தாண்டிச் செல்வதும், மீன் பிடிப்பதும் நடக்கிறது. அங்கெல்லாம் கண்டித்தும் அனுப்புவதும், அதிகபட்சமாக கைதுகள் மட்டுமே நடக்கின்றன. அதையும் தாண்டி மீனவன் தாக்கப்பட்டால், தாக்கப்பட்ட மீனவனின் நாடு என்ன பதிலடி கொடுக்கும் என்பது எதிரி நாட்டுக்கு தெரியும். அதனால் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், இங்கே தாக்கும் இலங்கையும், இந்தியாவும் உறவாளிகள். அதனால்தான் எதிரி நாட்டில் உளவு பார்த்தாலோ படுகொலை செய்தாலோ நீதிமன்றங்கள் மூலம் மட்டும் வழங்கும் மரண தண்டணையும், சட்டத்திற்குப்புறம்பான சித்திரவதைகளும் எந்த விசாரணையுமின்றி சட்டத்திற்கு புறம்பாக உடனே தமிழக மீனவனுக்கு கிடைக்கிறது.

உண்மையில் தமிழகத்திற்கும், இலங்கைக்குமிடையிலுள்ள கடல் பகுதி தமிழருக்கு மட்டுமே உரியது ஆகும். இந்தப் பக்கம் இந்தியத் தமிழருக்கும், அந்தப்பக்கம் ஈழத்தமிழருக்கும் மட்டுமே உரியது ஆகும். தமிழர்கள் மட்டுமே இந்தக் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வசிக்கின்றனர். ஆனால் இன்று, இந்தக் கடல் பகுதியில் தமிழன் மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது.

அந்தப்பக்கம் தமிழனே இருக்கக்கூடாது என்று விரும்பும் இலங்கை ராணுவமும், இந்தப்பக்கம் தமிழனின் மீது அக்கறையில்லாத. இந்திய ராணுவமும் காவலுக்க நிற்பதுதான், தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி தாக்கப்படுவதற்கு காரணம்.

சரி அதற்கு நாம் என்ன செய்யலாம். ஈழத்தில் கொத்து கொத்தாக குழந்தைகளும், பொதுமக்களும் கொல்லப்பட்ட போதும் ஒரு நியாயமான விடுதலைப் போராட்டம் அநியாயமாக அழிக்கப்பட்டு ஈழத்தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டபோதும் என்ன செய்தோம்.

உணர்ச்சி பொங்கப் பேசினோம். ஊர்வலம் சென்றோம். அறிக்கை வெளியிட்டோம். ஆயினும் ஈழத்தமிழருக்கு நம்மால் ஏதாவது பயன் விளைந்ததா? அதுபோலத்தான் இப்பொழுதும் பேசுவோம், எழுதுவோம், அறிக்கை வெளியிடுவோம், பேராடுவோம். ஆனால் இந்தியாவையோ இலங்கையையோ புண்படுத்தாதவாறு போராடுவோம்.

அடிமையையும், நடிகையையும் நம்பி அரசியலை ஒப்படைத்த நம்மால் வேறு என்ன செய்ய முடியும்.

“தனியோரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என அடிமை இந்தியாவில் உணர்வுடன் பொங்கினான் பாரதி. ஆனால் சுதந்திர இந்தியாவில் நாங்கள், எங்கள் பேச்சுக்கும், உயிருக்கும், மானத்திற்கும் மரியாதை இல்லலாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.