இரட்டை வாக்குரிமையும் தனித் தொகுதியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே பஞ்சமர் என்றும் பறையர் என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதி வெறியர்கள் கொடுமைப்படுத்தி வந்தனர். ஊர் வேறு சேரி வேறு, பொதுப் பாதையில் நடந்தால் தீட்டு, பொதுக் குளத்தில் நீர் எடுத்தால் குற்றம், கோயில் நுழைவது குற்றம், கலப்பு திருமணம் செய்தால் குற்றம், கூலி கேட்டு போராடினால் குற்றம். இக்குற்றத்திற்கெல்லாம் இந்து மனு சாஸ்திரப்படி சானிப்பாலும், சாட்டையைடியும், தீ வைத்தலும், சித்ரவதை கொலையும்தான் சமூக சட்டமாயின.

இக் கொடுமைகளை எதிர்த்த அம்பேத்கர் அவர்கள் சொல்கிறார். தீண்டாத மக்கள் பிரச்சனை ஒரு சமூக பிரச்சனை என்று கூறுவது தவறு. அடிப்படையில் தீண்டாமையால் வேறு விதமான பிரச்சனைகளும் வரும். ஏனென்றால் குரோதம் கொண்ட பெரும் பான்மையினரிடமிருந்து ஒரு சிறுபான்மையினருக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பெற்றுத் தருகின்ற பிரச்சனையாகும்.

இதே காலகட்டத்தில் காந்தியடிகளும், காங்கிரசும் தீண்டத்தகாத மக்களின் பிரதிநிதியாக வேசமிட்டனர். காந்தியார் சொல்கிறார், தீண்டாமை உயிர் வாழ்வதைக் காட்டிலும் இந்து மதம் செத்து ஒழிவதே மேல் என்பேன். (1931, நவம்பர் 13)

இக்கால கட்டத்தில் வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொகுதியும், இரட்டை வாக்குரிமையும் என்ற இரண்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அக்கோரிக்கை பிரிட்டிசாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்து சனாதனவாதி காந்தி சொல்கிறார், தனித் தேர்தல் தொகுதி அவர்களுக்கு செய்யக் கூடிய தீங்கைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் எப்படி அவர்கள் சாதி இந்துக்களிடையே பரவியுள்ளார்கள் என்பதையோ, சாதி இந்துக்களோடு எந்தளவுக்கு சார்ந்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்து சமயத்தை பொறுத்தவரை தனித் தேர்தல் தொகுதிகள் இந்து சமயத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விடும். (1931, மார்ச் 11 எரவாடா சிறையில் இந்தக் கடிதத்தைக் கண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் காந்தி)

அரசு தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தனித் தொகுதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யுமானால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

திருவாளர் காந்தியாரின் கடிதத்திற்கு பிரிட்டிஷ் அரசு எழுதிய பதிலில் காந்தியார் அவர்களே நீங்கள் உண்ணாவிரதம் இருந்து இறக்க விரும்புவதன் ஒரே நோக்கம் இன்று பயங்கரமான ஊனங்களை அனுபவித்து வருவதாக நீங்களே ஒப்புக் கொள்கிற அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது வருங் காலத்தின் மீது பெருந்தாக்கம் செலுத்துகின்ற சட்ட மன்றங்களில் தங்கள் சார்பில் பேசுவதற்கு தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை பெற வரம்பிற்கு உட்பட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் வாய்ப்பினைப் பெற விடாமல் த டுக்க வேண்டும் என்பதற்காகவே நீங்கள் உண்ணாவிரதம் இருந்து இறக்க விரும்புகிறீர்கள். (ஜே.ராம்ஜே மத் டெனால்டு, 1932, செப்.8)

எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதம் துவக்கப்பட்ட பொழுது அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார். பொதுவான தன்மையான ஒருவன் என்ற முறையில் நிச்சய மரணத்திலிருந்து காந்தியை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கிருந்தது. நான் தீண்டத்தகாத மக்களுக்கு தலைமை அமைச்சர் வழங்கிய அரசியல் உரிமைகளை காப்பாற்ற வேண்டிய சிக்கலும் எனக்கிருந்தது. நான் மனித தன்மையின் அறைகூவலை ஏற்று காந்தியார் உயிரைக் காப்பாற்ற அவருக்கு மன நிறைவு தரக் கூடிய விதத்தில் வகுப்பு நல தீர்வை மாற்றியமைக்க உடன்பட்டேன். இதுவே பூனா உடன்படிக்கை.

ஆக இவ்வகையில் காந்தியாரும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களை வஞ்சித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கொடுமைகள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. ஒப்புக்காக இன்றைக்குள்ள தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனித் தொகுதி என்பது அரசியல் அடிமைத்தனம் என்பது தவிர வேறு இல்லை.

தமிழகத்திலே 47 தனித் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தும் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை பேசப்பட்டு தீர்ந்தபாடில்லை. காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த கொடுமையின் துரோகத்தின் விளைவாக இன்றைக்கு வரையும் அரசியல் அடிமைகளாகவே ஆக்கப்பட்டுள்ளனர்.

அம்பேத்கர் சொன்ன அரசியல் பொருளாதாரம் ஆட்சி அதிகாரம் என்ற கோட்பாடுகளை சரிவர புரிந்து கொள்ளாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகள், ஆதிக்க சாதி வெறிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் பார்ப்பன கட்சிகளுக்கு எடுபிடிகளாகவே உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் விடுதலை பெற வேண்டுமானால் தமிழ்த் தேச விடுதலைக்கான அரசியல் களத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் கட்சிகளை இனம் காண்போம். காங்கிரசை யும், பா.ஜ.க.வையும் ஓட ஓட விரட்டியடிப்போம், விடுதலை பெறுவோம்.

குறிப்பு: காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்தது என்ன? அம்பேத்கர்

தொகுப்பு: செவ்வேள்

Pin It