தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இந்திய தேசியப் பார்ப்பனிய ஆட்சி, சிங்கள ராணுவத்தைப் பயன்படுத்தி ஒடுக்கி, தமிழர் பிரதேசத்தை சிங்களமாக்கிவிட்டது. பல்லாயிரம் தமிழர்களைப் பிணமாக்கிய ஈழ இனப் படுகொலை இந்தியாவின் முழுமையான ஆதரவோடு நடந்து முடிந்துள்ளது. அய்ரோப்பிய நாடுகளும், அய்.நா.வும்கூட இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. மன்மோகன் சிங் ஆட்சியோ, கலைஞர் கருணாநிதி ஆட்சியோ இலங்கையின் இனப்படுகொலைகளைக் கண்டித்து, இதுவரை ஒரு கண்டனத் தையும் கண் துடைப்புக்காகக்கூட தெரிவித்தது இல்லை.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை கடந்த மே மாதம் 14 ஆம் தேதியிலிருந்து மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து விட்டார்கள். சட்டத்தின் நடைமுறை களுக்காக சடங்குக்காக தீர்ப்பாயம் ஒன்றும் தடையை நீடிக்கலாமா, கூடாதா என்று, ஒரு விசாரணை நாடகத்தை நடத்தியது. தடையை நீடிக்கக் கூடாது என்று, தீர்ப்பாயத்தின் முன் கருத்து கூற, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று, தீர்ப்பாய நீதிபதி கூறிவிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடையை விதித்துவிட்டு, அந்த இயக்கத்தின் உறுப்பினரே வந்து தான், கருத்து கூற வேண்டும் என்றால், “இது எந்த ஊர் நியாயம்?” என்று தானே கேட்க வேண்டியிருக்கிறது. காலைக்கட்டிப் போட்டுவிட்டு, ஓடச் சொல்லுகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று தீர்ப்பாயத்தின் முன் வாதாட வந்தவர்களையும் அனுமதிக்க மறுத்து விட்டார்கள். (குறுக்கு விசாரணைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது) மத்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சியும்கூட தடையை நீடிக்க வேண்டும் என்றே தீர்ப்பாயத்தின் முன் வலியுறுத்தியது.

 விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு முன் வந்தால், இந்தியா உதவத்தயார் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்தியாவின் சார்பில் கூறினார். இப்போது ஆயுதப் போராட்டம் ஏதும் நடக்கவில்லை. தமிழர்களின் பிரச்சினையை அரசியல் ரீதியாக முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசு என்ற, சர்வதேச நாடாளுமன்றத்தையும் அதற்கான பிரதமரையும், உலகம் முழுதும் வாழும் ஈழத் தமிழர்கள் தேர்வு முறை வழியாக ‘ஜனநாயக’ வழியில் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, அரசியல் தீர்வுக்கு வரவேண்டும் என்று கூறியவர்கள். நியாயமாக, இதை வரவேற்றிருக்க வேண்டுமல்லவா? மாறாக, “நாடு கடந்த தமிழீழ அரசுக்கும்” பயங்கரவாத முத்திரைக் குத்தி அதையே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீடிப்பதற்கான காரணமாக, இந்திய அரசு தீர்ப்பாயத்தின் முன் வலியுறுத்தி யுள்ளனர். இது அறிவு நாணயமற்ற செயல் அல்லவா?

 தடை நீடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள், மன்மோகன் சிங், கருணாநிதி, ப. சிதம்பரம் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் துறையின் வழியாக ஒரு செய்தியைப் பரப்பியுள்ளார்கள். உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கில் தடையை நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சூழ்ச்சியாக உளவுத் துறை வழியாக இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக் கிறார்கள்.

 சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் வைகோவைப் பயன்படுத்தி தன்னைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக கலைஞர் கருணாநிதி கூறி, வைகோவை கட்சியிலிருந்து வெளியேற்றினார். சோனியாவை கொல்ல தென்னாப்பிரிக்காவில் புலிகள் சதித் திட்டம் தீட்டியதாக 10 ஆண்டுகளுக்கு முன் புலனாய்வுத் துறை ஒரு கதை விட்டது. பிறகு பிரபாகரனே கொல்லப்பட்டுவிட்டதாக உளவுத் துறை பரப்பியது. அடுத்து ஜெயலலிதாவை கொல்ல புலிகள் திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுத் துறை கூறி, அந்த அம்மையாருக்கு ‘இசட்’ பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

 இப்போது மற்றொரு ‘கொலை மிரட்டல்’ அறிவிப்பு வெளி வந்திருக்கிறது. உண்மையான படுகொலைகளை தமிழர்கள் மீது திட்டமிட்டு, செய்து முடித்தவர்கள் - போலியான கொலை மிரட்டல் அறிவிப்புகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு, தமிழ் ஈழப் பிரச்சினையை பேசுகிறவர்களை மிரட்டுவதற்கும், அவர்களை அடக்குமுறை சட்டங்களின் கீழ் சிறைப்படுத்து வதற்கும் இந்த “மிரட்டலை” ஒரு கருவியாகப் பயன்படுத்து கிறார்கள். உண்மையான மிரட்டல், அச்சுறுத்தல், ஈழத் தமிழர் களுக்காக குரல் கொடுக்கும், தமிழின உணர்வாளர் களுக்கே தவிர, மன்மோகன் சிங்குக்கோ, கலைஞர் கருணாநிதிக்கோ அல்ல.

இத்தகைய ‘பூச்சாண்டிகளாலும்’ போலி நாடகங்களாலும் மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதை ஆட்சியாளர்களும் உளவுத் துறையும் புரிந்து கொள்ளட்டும்!

Pin It