தலைகுனிந்த காங்கிரஸ்; விழிபிதுங்கிய கம்யூனிஸ்ட்டுகள்; பெருமூச்சுடன் பா.ஜ.க; தலை சுற்றிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.வுக்கு! இவ்வளவுக்கும் காரணம் பீகாரில் காங்கிரஸ் கட்சியின் மகத்தான ‘சாதனை’தான்.
பீகார் சட்டப்பேரவையின் மொத்தத் தொகுதிகள் 243. எல்லாத் தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு 243 தொகுதிகளிலும் போட்டி யிட்டது காங்கிரஸ்.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் நுழைந்தார்கள். இவர்களுக்குக் கூடிய மக்கள் கூட்டம் என்ன? ஆர்ப்பரித்த மக்கள் என்ன? கிடைத்த கைதட்டல்களும் முழக்கங்களும் கொஞ்சமா, நஞ்சமா!
இது போதாதென்று, தன் கட்டுக்காவலையும் மீறி மக்களிடம் ஓடிப்போய் கை கொடுத்தார், கட்டிப்பிடித்தார், அவர்கள் வீட்டு வாசல்வரையும் கூடப் போய் நின்று புளகாங்கிதம் அடைந்தார் ராகுல். என்ன பிரயோசனம்?
தமிழ்நாட்டு மக்கள் 1967 இல் கொடுத்த மரண அடியைவிடக் கேவலமான அடியை, பீகார் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்து விட்டார்கள், காங்கிரசுக்கு.
243 தொகுதிகளில் 239 தொகுதிகளைக் கோட்டைவிட்டுவிட்டு வெறும் 4 தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. கேட்டால், “காங்கிரசுக்குப் போதாத காலம்” என்கிறார் அம்மாநிலக் காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஷ்நிக்.
உண்மைதான்! 1967 இல் தமிழ்நாட்டில் போதாத காலம், 2010 இல் பீகாரில் போதாத காலம். இனிவரும் காலங்களில் இந்தியா முழுவதுமே காங்கிரசுக்குப் போதாத காலமாகத் தான் இருக்கப் போகிறது.
தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசின் நிலைமை என்னாகும் என்பதை அக்கட்சியின் தலைமை தெரிந்து கொண்டாலும் கூட, தமிழ்நாட்டுக் கதர்ச் சட்டைகளுக்கு அது புரிவதே இல்லை.
கூட்டணியா? ஆட்சியில் பங்கு வேண்டும். ஆறேழு அமைச்சர் பதவிகள் வேண்டும். 130 பேரவைத் தொகுதிகள் வேண்டும். ஏழெட்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் அடுத்த தேர்தலில்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி மிரட்டிப் பார்க்கிறார்கள் கதர்ச்சட்டை போட்டுக்கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், ராகுல் காந்தியின் தொண்டரடிப் பொடி யுவராஜாவும். என்ன செய்வது? காங்கிரசை ஒழிப்பதுதான் இவர்களின் உள்நோக்கம் என்றால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்?
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதன் விளைவு என்னாகும் அல்லது அக்கட்சியின் நிலைமை என்னாகும் என்பதை பீகார் தேர்தல் முடிவு காட்டிவிட்டது. இது தமிழகத்திற்கும் பொருந்தும். அதேசமயம் வேறொரு செய்தியையும் கவனிக்க வேண்டும்.
பீகாரின் 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ.க.கூட்டணி 206 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களையும், பா.ஜ.க. 91 இடங்களையும் பெற்றுள்ளன. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு 24 தொகுதிகள்தான்.
இந்தளவுக்கு பா.ஜ.க.91 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அது அக்கட்சியின் தனி பலத்தாலோ அன்றி தனிச் செல்வாக்காலோ அன்று. கூட்டணி என்ற பெயரில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதீஷ்குமார் தயவினால், அவர் தோளில் ஏறி 91 இடங்களை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. தனித்துப் போட்டியிட்டு இருந்தால், காங்கிரசின் நிலைதான் பா.ஜ.க.வுக்கும் ஏற்பட்டு இருக்கும் என்ற எச்சரிக்கையை பீகார் மக்கள் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள், காங்கிரசைத் தோற்கடித்து.
பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் ஓர் அங்கம் என்பதும், இராமன் என்றும், அகண்ட பாரதம் என்றும் இந்துத்துவ நச்சு விதைகளை விதைத்து, மக்களிடையே வேற்றுமையை, பிரிவினையை ஏற்படுத்தும் சமூக பயங்கரவாதம் என்பதை உணர்ந்ததால்தான், மத்திய அமைச்சரும், காங்கிரஸ்காரருமான ப.சிதம்பரம் அதை ‘காவி பயங்கரவாதம்’ என்றார்.
தமிழ்நாட்டில், இக்கட்சியின் வளர்ச்சி என்பது கற்பனையில் கூட இல்லை. மாநிலக் கட்சிகளின் தயவால்தான் இன்று ஓரளவாவது பா.ஜ.க. பேசப்படுகின்றது. தனித்து நின்றால் இங்கே இக்கட்சி காணாமல் போய்விடும் என்பது வெள்ளிடைமலை. எப்படி இருந்தாலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி, நாட்டுக்குத் தீங்கு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பீகாரில் காங்கிரசின் வீழ்ச்சி அதற்கு எப்படிப் பாடமாக அமைந்ததோ, அதுபோல நிதீஷ் கூட்டணியால், பா.ஜ.க. பெற்ற வளர்ச்சியும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
மேற்கு வங்கத்தில் தேய்ந்து சுருங்கிய கம்யூனிஸ்ட்டுகள் பீகாரில் காணாமல் போய்விட்டார்கள். ஜெயலலிதாவை நம்பிக் கொண்டிருக்கும் அவர்கள் தமிழ்நாட்டில் என்னாவார்களோ தெரியவில்லை.
வரலாறு காணாத அடி வாங்கிய காங்கிரஸ், இனியாவது தமிழ்நாட்டில் அடக்கி வாசிக்க வேண்டும். தவறினால், பீகாரில் வாங்கிய 4 இடங்களைக் கூடத் தமிழக மக்கள் தர மாட்டார்கள் காங்கிரசுக்கு - வரும் தேர்தலில்.