நமது நாட்டில் சிலபல திசைகளிலிருந்து உரிமைக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பது கண்டு சிரிப்பதா அழுவதா என்று குழப்பமாகிவிடும். அப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது அண்மையில் பத்திரிகையினருக்கும் சினிமாத் துறையினருக்குமிடையே நடந்த மோதல் சம்பவம்.  

பிரபல சின்னத்திரை நடிகை புவனேஸ்வரியைக் காவல்துறையினர் விபச்சார வழக்கில் கைது செய்ய, அவர் காவல்துறையினரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வேறு சில நடிகைகளின் பெயர்ப் பட்டியலையும் தந்ததாகக் கசிந்த செய்தியை அடுத்தே இந்த விவகாரம். 

‘தேச முக்கியத்துவம்’ வாய்ந்த இந்தச் செய்தியை வேறு எந்தப் பத்திரிகை வெளியிட்டிருக்கப் போகிறது... தினமலரைத் தவிர? உடனே போர்க்கொடி பிடித்திருக்கின்றனர் சினிமாக் கலைஞர்கள். எல்லோருமாகச் சேர்ந்து கமிஷனரைப் பார்த்து புகார் செய்திருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு கண்டனக் கூட்டமும் நடந்தது. இவர் அவர் என்றில்லாமல் சினிமாத்துறையைச் சார்ந்த அத்தனை பேரும் இக் கூட்டத்தில் ஆஜர். துவக்கத்திலேயே ராதாரவி இப்படி எச்சரித்ததாகத் தெரிகிறது: “எல்லை-வரம்பு மீறாமல், யாரையும் காயப்படுத்தாமல் பேச வேண்டும்.” (15-10-2009 குமுதம் ரிப்போர்ட்டர்). ஆனால், நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறியிருக்கிறது. நடிகர்கள் விவேக், சத்யராஜ், விஜயகுமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா போன்றோர் அத்துமீறலின் உச்சத்திற்கே போய் தடித்த வார்த்தைகளால் அரங்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டதாகவும் தகவல்கள். இதில் அதிகபட்ச எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பவர் விவேக். 

பத்திரிகைக்காரர்கள் மீது சினிமாக்காரர்களும், சினிமாக்காரர்கள் மீது பத்திரிகைக்காரர்களும் இன்றுவரையில் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர். இரு தரப்பாரும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் விவேக், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட சிலர் மீதே பத்திரிகைக்காரர்களின் அதிருப்தி என்பது குவிந்துள்ளது.  

சினிமா பிரஸ் கிளப் தனது பொதுக்குழுக் கூட்டத்தை சைதாப்பேட்டையில் நடத்தி, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. திரையுலகினரால் அவமரியாதைக்கு உள்ளாகியிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. விவேக் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பத்மஸ்ரீ விருதினை அவமதிக்கும் வகையில் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதால் அந்த விருதை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இனி சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் தரப்படும் விருந்தோம்பலை ஏற்பதில்லை; விவேக், சேரன், சூர்யா, சத்யராஜ் முதலியவர்கள் தொடர்பான செய்திகளைப் புறக்கணிக்கும்படி பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பது, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு சென்னை பிரஸ் கிளப் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தருவது என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  

அப்படி என்னதான் சினிமாக்காரர்கள் பேசினார்கள்?  

இது சம்பந்தமாக சில பத்திரிகைகளைப் புரட்டினால் விஷயம் நமக்கே குடலைப் புரட்டிவிடுவதாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் இங்கே எழுதி நம் பங்குக்கும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிவிடுவது முறையல்ல அல்லவா? எனினும் மாதிரிக்குச் சில: இந்தப் பத்திரிகையாளர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் தான் எதையும் எழுதுகிறார்கள். ஆபாசமாக எழுதுகிறவர்களுக்கு அக்கா- தங்கச்சி இல்லையா? இவர்கள் வீட்டுப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தட்டுமே? எங்களைப் பற்றி எழுதுகிறவன்களின் அலுவலகத்துக்குள் புகுந்து எழுதிய கையை உடைக்கவேண்டும், கண்ணை நோண்டவேண்டும், அந்த நாளிதழின் பொறுப்பாசிரியன் ஒரு பாஸ்டர்ட், கேடு கெட்ட நாய்..... இப்படியே போகிறது இந்த வசைமாரி... இல்லை இல்லை... வசைப்புயல். 

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு என்பதுதான் மிகவும் வருந்தத் தக்க விதத்தில் கேவலமாக அமைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. முதலில், நடிகை புவனேஸ்வரி காவல்நிலையத்தில் கூறியதாகச் சொல்லப்படும் விபச்சாரப் பட்டியல் எப்படிக் கசிந்து பத்திரிகைகளின் கைக்குப் போனது? இமாலய வியப்பான இந்தக் கேள்வி நம்மை பல விதத்திலும் யோசிக்கத் தூண்டுகிறதா இல்லையா?  

ஒரு பத்திரிகையாளராகவும், சினிமாக்காரராகவும் இருக்கும்; காவல்துறையைத் தனது கைகளில் வைத்திருக்கும் முதல்வரே, பத்திரிகையாளர் மீதான புகாருக்குச் சற்றும் பொறுமை காட்டாமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பது அவர் திரைத்துறையினர் பக்கம் சாய்மானம் கொண்டவர் என்ற எண்ணத்துக்கு வழிவகுக்காதா? கொடுக்கப்படும் எல்லாப் புகார் மனுக்களையும் காவல்துறையினர் இவ்வளவு விரைவாக நடவடிக்கைக்கு உட்படுத்திய வரலாறு உண்டா? பின்னர் ஏன் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு வேகம்? எல்லாப் பத்திரிகையாளர்களையும் இழிவாகவும், தரக்குறைவாகவும் திரைத்துறையினர் பேசினார்கள் என்ற ஊடகங்களின் குற்றச் சாட்டுக்கள் மட்டும் ஏன் காதில் போட்டுக்கொள்ளப்படவில்லை, ஏன் திரைப் படத்துறையினர் மீது நடவடிக்கை இல்லை என்று பத்திரிகையாளர்கள் கேட்பதில் மட்டும் நியாயமில்லையா என்ன? 

ஆக, நடந்துவிட்ட இந்த ரசாபாசங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது ஐயங்கள் சிலவற்றையும் பார்ப்போம். சினிமா என்பதும் பத்திரிகைகள் என்பதும் இன்னுமுள்ள ஊடகங்கள் எல்லாமும் மக்களை - மக்களின் பணத்தை நம்பித்தானே செயல்படுகின்றன? ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள்தானே இறுதித் தீர்ப்பு எழுதுகிறவர்கள்? அந்த வல்லமை படைத்த மக்களைப் பற்றி எப்போதேனுமாவது கவலைப்பட வேண்டாமா அவர்களையே நம்பித் தொழில் நடத்துவோர்? சினிமா-அதிலும் நம் தமிழ் சினிமா எப்படியிருக்கிறது இன்றும்? பெண்ணை-பெண்ணின் உடலை ஒரு மூலதனமாகத்தானே இன்றளவும் நமது சினிமாக்கள் கருதுகின்றன?  

இந்தியா போன்ற பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் விழிப்புணர்வுக் குறைபாட்டின் காரணமாகத்தானே மக்களின் பெயராலேயே பல தவறுகளும் ஊழல்களும் நடக்கின்றன? நம் சினிமாக்காரர்களும் மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறிக் கொண்டுதானே பெண் உடலை கேவலமான பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் வகையில் திரையில் காட்டத் துணிகிறார்கள்? காட்சி ரீதியில் பெண்ணை மானபங்கப்படுத்திக்கொண்டே மறுபுறம் பண்பாடு, கற்பு, ஒழுக்கம், தாய், தாய்நாடு முதலியவற்றின் பெயரால் பெண்ணின் மீது ஆணாதிக்கக் கருத்துத் திணிப்பையும் மிக லாவகமாகப் புகட்டுகின்றனர்.  

மறுபுறம் பத்திரிகைகள் எப்படியிருக்கின்றன? மக்கள் மீது சினிமா கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு எந்த வகையிலும் நம் பத்திரிகைகள் குறைந்தவையா? மக்களின் சிந்தனையோட்டத்தைத் தடுத்து, அதே சமயம் அந்தச் சிந்தனை எந்தத் திசையில் ஓடினால் ஆளுவோர்க்கு வசதி என்ற அடிப்படையில்தானே நமது பெரும்பாலான பத்திரிகைகளின் நடத்தையிருக்கிறது? (பத்திரிகையாளர்களை வசைபாடிய சினிமாக்காரர்களை விமரிசித்தும்; பண்பாடு, கற்பு பற்றியெல்லாம் விளக்கியும் எழுதிய ஒரு பத்திரிகை அதே இதழிலாவது நடுப்பக்கக் கவர்ச்சிப் படத்தைத் தவிர்த்திருக்கலாம்... பாவம், அப்போதும் ஒரு நடிகையின் அரைகுறை ஆடைப் படம் அதற்கு அவசியம் தேவைப்பட்டிருக்கிறது.) 

சினிமாவுக்கும் பத்திரிகைக்கும் இந்த சமூகத்தின் மீது எந்தளவுக்கு அக்கறை இருந்துவிடப்போகிறது? இந்தச் சமூகமே பணம், பணத்தால் பணம், பணத்தை வைத்துப் பணம், பணத்துக்காகப் பணம் என்று ஆகிப்போன சமூகம்தானே? லட்சியப்பூர்வமாக சினிமாவிலோ பத்திரிகைத்துறையிலோ எத்தனைபேர் இயங்கக்கூடும்?  

ஆனால், சினிமாவும், பத்திரிகையும் எத்துணை மகத்தானவை? “இந்தச் சாதனம் முன்பே எனக்குக் கிடைத்திருந்தால் புரட்சியை நான் இன்னும் பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே நடத்திமுடித்திருப்பேன்!” -என்று சினிமாவின் அருமை குறித்துப் பேசினாரே மாமேதை லெனின்! உலக சமூகங்களின் மாற்றங்களுக்கெல்லாம் தன்னலம் மறந்து பணியாற்றிய தலைவர்களெல்லோரும் பத்திரிகைகளைப் பயன்படுத்தியவர்கள் தானே? அப்படிப்பட்ட சினிமாவா இன்றிருப்பவை? அத்தகைய பத்திரிகைகளா இப்போது வருபவை எல்லாம்?  

ஆணின் பங்கேற்பில்லாமல் எப்படி ஒரு பெண்ணால் விபச்சாரியாக முடியும்? ஆண்களின் மன வக்கிரங்களின் தீனியாகத்தானே சினிமாவுக்கும் பத்திரிகைகளுக்கும் பயன்படுகிறவளாகிப்போனாள் பெண்?  

பெண்னென்றும் பாராமல் நடிகைகளைக் கேவலமாகக் கருதி செய்தி வெளியிட்ட அந்தப் பத்திரிகையின் லட்சணம் ஊரறிந்ததுதான். அதே வேளையில், கலைஞர்கள் தங்கள் வரம்பு எது என்று பார்க்கத் தவறியிருக்கின்றனர். காரணம், இரு தரப்பிலுமே பெரும்பாலும் சமூக அக்கறையற்ற, வியாபார நோக்கம் மட்டுமே பொதுச் சூழலாக இருக்கிறது. எல்லோர் வீடுகளிலுமே குடும்பம், குழந்தைகள், கணவன், மனைவி உண்டு. இதனை இப்போது மட்டுமல்ல... படம் எடுக்கிறபோதும், பத்திரிகை நடத்துகிற போதும் அவரவர்கள் உண்ர்ந்துகொண்டால் கொஞ்சம் நல்லது என்றே சொல்லத் தோன்றுகிறது. 

- சோழ. நாகராஜன்

Pin It