பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டு இருபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட இவ்வேளையில் பாரதி பற்றிய முழு நிறைவான ஆய்வுகள் தோன்றவில்லை எனும் விடயம் ஒருபுறமிருக்க, அவன் பொறுத்து நம்பிக்கை தரக்கூடிய பல ஆய்வுகள் வெளிவந்துளளன என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதியியல் ஆய்வுகள் பல்வேறு கோணங்களிலிருந்தும் தளங்களிலிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வேளையில் இவ்வாய்வுகள் குறித்தும் இத்தருணத்தில் சிந்திக்க வேண்டியது சமகால தேவையாகும்.

அண்மையில் பாரதி பொறுத்து நந்தலாலா சஞ்சிகைக்குழு, பல எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் சந்தித்து உரையாடியபோது தத்தம் நிலைப்பாடுகளிலிருந்து அவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அக்கருத்தாடல்களில் இடம் பெற்ற மூன்று நபர்களின் பார்வைகளை சிந்தனைகளை இங்கு குறிப்பிட்டு அதன் வழி பாரதி பற்றிக் கருத்துக் கூற விழைகின்றேன்.

பாரதி பொறுத்து ஜெயமோகன்.....!

நான் பாரதியை மகாகவியாக ஏற்றுக் கொள்வதில்லை. மகாகவி என்பவன் ஒரு காலக்கட்டத்தின், ஒரு மக்கள் சமூகத்தின் கவித்துவ நுண்ணுணர்வை அவர்கள் வாசிக்கும் முறையிலேயே மாற்றியமைக்க கூடியவனாக இருக்க வேண்டும்.

சுபமங்களா ஆசிரியர் கோமல் பார்வையில் ...!

பாரதிதான் நவீன இலக்கியத்தின் பிதாமகன்னு நான் உறுதியாக நினைக்கின்றேன்.

கவிஞர் இன்குலாப் பார்வையில்...!

கவித்துவத்தின் சிகரத்தைத் தொட்டவன் அவன் சிகரத்தைத் தாண்டியும் செல்ல முயற்சித்தவன். ஆனால் அவனுக்கும் மறுபக்கம் என்று ஒன்றுண்டு.

மேற்குறித்த பாரதி பொறுத்த பார்வைகள் மூன்று பிரதான தளங்களைச் சுட்டி நிற்கின்றது. இவை குறித்து நோக்குவதற்கு பாரதியின் இலக்கியக் கோட்பாடு குறித்த தெளிவுணர்வு அவசியமானதொன்றாகின்றது.

தமிழ் இலக்கிய வரலாற்றுப் போக்கில் தனித்துவமான ஆளுமைச் சுவடுகளைப் பதித்தவன் பாரதி. அவன் அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல் முதலிய துறைகளை தமதாக்கி, அதனூடே, தொழிலாளார் எழுச்சி, மாதர் விடுதலை, சாதிய எதிர்ப்பு என்பன குறித்து சிந்தித்தான். சங்ககாலம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரை கலை இலக்கியத்தில் அரசியல் என்பது மறைபொருளாக வெளிப்;பட்டே வந்துள்ளது என்றபோதிலும் அவை பாரதியில் தான் சற்றுத் தூக்கலாகவே வெளிப்பட்டது எனலாம். சொல்லிற்கும் செயலிற்கும் இடைவெளி அற்று வாழ முயல்பவர்கள் சிலர். அவர்களுள் ஒருவராக வாழ்ந்தவன் பாரதி. உண்மையின் பக்கம் நின்று மக்களின் விடுதலைக்கு உழைத்தவராக, மக்களுக்கான இலக்கியக்காரனாக வாழ்ந்தவன் அவன். ஒருவகையில் பழமைவாதிகளிடமும், அந்தப்புரங்களிலும் முடங்கிக் கிடந்த இலக்கியத்தை பிடுங்கி எடுத்து மக்களிடம் ஒப்படைத்த மகாகவிஞனான பாரதி, நவீன இலக்கிய முன்னோடியாகக் கொள்ளப்படுவது வியப்பானதொனறல்ல.

இவ்வாறு பல துறைகளில் வழிகாட்டியாகத் திகழக்கூடிய ஆளுமை, அவனுக்கு எப்படி வந்தது? தன் காலவோட்டச் சிந்தனைகளை முனைப்புடன் வெளிப்படுத்தியதுடன் நவீன இலக்கிய முன்னோடியாக விளங்கும் உள்ளத் தெளிவு - அவனுக்கு எங்ஙனம் பொருந்தியது? இவ்வாறான வினாக்களுக்கு விடை காண்பதிலேயே அவனது வரலாற்று முக்கியத்துவமும் இலக்கிய மேதாவிலாசமும் தங்கியுள்ளது.

பாரதியின் மேதாவிலாசம் குறித்து கலாநிதி எம்.ஏ.நுஃமான்

பாரதியை ஒரு மகாகவி என்ற நிலையில் அன்றி ஒரு மேதாவி என்ற நிலையிலேயே நான் அணுக முயல்கிறேன். அவனது மேதாவிலாசத்தின் அடிப்படைகள் என்று நான் கருதும் சில அம்சங்களை இங்கு சுருக்கமாக விளக்க முயல்கிறேன். தன் கால ஓட்டத்தின் உயர் நாடிகளை கிரகித்துக்கொண்டு அதற்கேற்ப புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துபவனே மேதாவியாவான். அவ்வகையில் பாரதியின் மேதாவிலாசத்தின் அடிப்படைகளாக பின்வரும் அம்சங்களை நான் கருதுகின்றேன்.

சமூகம், பண்பாடு ஆகியவற்றின் இயக்கவியல் தன்மையை பாரதி நன்கு புரிந்து கொண்டமை. இப்புரிந்துகொள்ளலின் அடிப்படையில், பழமைக்கும் புதுமைக்குமான முரண்பாட்டில், புதுமையின் வழி நின்று புதிய சமூகம், புதிய பண்பாடு ஆகியவற்றை உருவாக்குவதற்கான முற்போக்கான நவீன சிந்தனைப் போக்கு எது என்பதை அவன் இனங் கண்டு கொண்டமை.

வெகுசனங்களில் நம்பிக்கை கொண்டு, பரந்துபட்ட வெகுஜன எழுச்சிக்காகத் தன்னை இதய சுத்தியாக அர்ப்பணித்துக் கொண்டமை (1) எனக் குறிப்பிடுகின்றார். அன்றைய சமுதாயச் சூழலின், சமூக பொருளாதார முரண்பாடுகளையும் அவற்றின் மாற்றத்தின் இயக்கவியலையும் உள்ளுணர்வாகப் புரிந்து கொண்டு செயற்பட்டமையே அவனது மேதா விலாசத்தின் அடிப்படையாகும். காலத்தின் தேவைகளை அறிவாலும் உள்ளுணர்வாலும் தனதாக்கிக் கொண்ட பாரதி, இந்திய தேசியப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றான். அத்தகைய சமூக மாற்றப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கருவியாகவே கலை இலக்கியங்களையும் உபயோகித்தான். அவ்வகையில் சமுதாய விடுதலையுணர்வே பாரதியின் படைப்புக்களில் முனைப்புற்றுக் காணப்பட்டது. சமூகத்தின் எண்ணற்ற முரண்களை நியாயப்படுத்தவோ சமரசம் செய்யவோ நோக்கிலாத பாரதி இத்தகைய முரண்களின் தாற்பரியத்தை தோலுரித்துக் காட்டும் அவனது எண்ண ஓட்டம் பின்வருமாறு பிரவாகம் கொள்கின்றது.

“ மனிதர் உணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்;க்கை இனியுண்டோ? ||

எனும் அவனது வரிகள் மனிதனில் மனிதனுக்குள்ள உறவை, சமுகத்தின் குருதி உறிஞ்சும் பண்பை இப்படியாய் தன்னம்பிக்கையுடன் மாத்திரமல்லாமல், மிகுந்த கவித்துவத்துடனும் கூடவே கர்வத்துடனும்; போற்றிப்பாடுகிறான்.

இவ்வாறாக பாரதியின் இலக்கியக் கொள்கை பற்றிக் கூறுவதாயின் அழகியல் தாராம்மியம் பற்றி அளவிடுவதில் மூன்று அம்சங்களை நாம் கருத்தில் கொள்கிறோம். எந்தவொரு கலை ஆக்கமும் உண்மை, நன்மை, அழகு ஆகிய மூன்று அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். குறித்த காலத்தில் வாழ்க்கை அம்சங்களின் உண்மை நிலையை அது எடுத்துக் காட்ட வேண்டும். சமூக வளர்ச்சிக்கு அது பயன்பட வேண்டும். அதன் அழகு ஆத்மீக அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் தன்னில் இசைந்து வழங்கக்கூடிய கலை இலக்கிய ஆக்கங்களே நிரந்தர பயன்பாடு உடையன.2 இவ்வரைவிலக்கணம் அரசியல் இலக்கிய முன்னோடியான பாரதிக்கு முற்று முழுதாகவே பொருந்தும்.

கலை இலக்கியத்தில் இத்தகைய நிலைப் பட்டினை வரித்துக் கொண்ட பாரதி உள்ளடக்கம், உருவகம் என்ற வீண் வாதத்தில் இறங்காமல் வரலாற்றுப் பார்வை, அழகியல் அக்கறை, வர்க்கச் சார்ப்பு என்ற அடிப்படையிலே தமது ஆக்கங்களை வெளிப்படுத்தியிருக்கின்றான்.  இவ்விடயம் ஒரு புறமிருக்க, பாரதி பற்றிய முன்னைய அறிஞர்களின் கருத்துக்களை பரீசீலனை செய்வோம்.

பாரதி பற்றிய முதலாவது பிரிவினரின் பார்வையானது ~~ கலை இலக்கியம் என்பது சமுதாய விதிகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாததுஎன்ற தூய அழகியல் கோட்பாட்டை முன் வைக்கின்றது. இலக்கியம் நேரடியாகவோ மறைமுகமாகவோ யதார்த்தத்தை சித்தரிக்கக்கூடாது என கண்டிக்கும் இவர்கள் பரந்துபட்ட வெகுசனங்களை ஒரு புறத்திலும் கலை இலக்கிய கர்த்தாவை மறுபுறத்திலும் வைத்துப் பார்க்கின்றனர். கலைஞன் தனிப்பிறவி. பிறவியிலேயே நாமம் உடையவன். கிறுக்கன், பலவீனமானவன் என்ற அடிப்படைகளில் தனித்தன்மை கற்பிக்கப்படுகின்றான். மக்கள் இலக்கியத்தில் கலைநயம் என்ற பிரம்மஸ்திரத்தையே இவர்கள் உபயோகிக்கின்றனர். சுந்தரராமசாமியின் ஜே. ஜே சிலக்குறிப்புகள் என்ற நாவல் இத்தகைய பின்புலத்தில் எழுந்தவையாகும்.

இவ்வகையில் இவர்கள் கூறும்போது பொதுவில் சராசரி புத்திஜீவிகளின் அரசியல் கடமையான சமூகத்தின் அசிங்கங்களை அழகுபடுத்தல், அநீதிகளை மூடி மறைத்தல், நியாயப்படுத்தல், சமரசம் செய்தல் முதலிய பண்புகளே இவர்களது அழகியல் கொள்கையின் அடிப்படையாக அமைந்து காணப்படுகின்றது.

“கலைநயம” “கலையழகு” என இவர்கள் கூப்பாடு எழுப்பி குதியாட்டம் போடுகையில், இவர்களின் வரவு நல்லவராகவும் அர்த்தமுள்ளதாகவும் தோன்றும். சற்று ஆழமாக நோக்கினால்தான் அடிப்படையான சமூக மாற்றத்தை விரும்பாது அதனை எதிர்க்கும் மனப்போக்கிற்குப் பின்னால் அரசியல் பிற்போக்குத் தனமும் அதற்கு இலகுவாக விலை போக்கக்கூடிய ஜெயமோகன் போன்ற ஓடுகாலிகளும் மறைந்திருப்பதை காணலாம்;.

இத்தகைய நோஞ்சான் கோட்பாட்டுத்தளத்தில் நின்றுதான் ஜெயமோகன் பாரதியையும், அவனது ஆக்கங்களையும் தகர்க்க முற்படுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி, ராஜாஜி முதலானோர் “பாரதி மகாகவி அல்ல” என வாதிட்டபோது மேற் குறித்த நாகரிகத்தையே தமக்கு ஆதர்சமாக கொண்டிருந்தனர். இதன் சற்றே வளர்ச்சியடைந்த நிலையினையே நாம் ஜெயமோகனில் காணக்கூடியதாக உள்ளது. இது தற்செயல் நிகழ்ச்சியல்ல. வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பாகும்.

இன்றைய உலகமயமாதல் சூழலின் பின்னணியில் தோன்றியுள்ள தீவிரவாத சிந்தனைகள் மக்கள் இலக்கிய கோட்பாடுகளையும் மக்கள் இலக்கிய கர்த்தாக்களையும் தாக்கியும் தகர்த்தும் வருகின்றனர். வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் வகையில் இனம், மதம், மொழி சாதி முதலிய உணர்வுகள் தீவிரமாக்கப்பட்டு அவை வர்க்க போராட்ட நோக்கிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் பார்வையானது தேசிய ஜனநாயக சக்திகளை மட்டந்தட்டுவதுடன் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி இறுதியில் படு தோல்வி காணச் செய்வதாகவும் அமைந்துள்ளது. பா. மதிவாணன் வளவன் போன்றோர் இத்தகைய பார்வையை நிலைநிறுத்தி வருகின்றனர். பாரதி பொறுத்த இவர்களின் தாக்குதல் முனைப்பானது அடிப்படையில் சமூகமாற்றத்தை எதிர்க்கும் மனப்போக்கிற்கு பின்னால் பிற்போக்குதனம் மறைந்திருப்பதை காணலாம். இவ்வகையில் இத்தகைய அங்கிகாரத்தின் ஊடாக தமது வயிற்றுப் பிழைப்பிற்கும் கம்பீரத்திற்கும் வழி;ததேடிக கொண்டவர்கள் இச் சிந்தனைப் போக்குகளை நிலைநிறுத்தி வருகின்றனர்.

இவை தவிர, இந்திய சிந்தனை மரபினை சமுதாயப்புரட்சியுடன் இணைத்துப் பார்த்த பாரதியின் சமூகப் பங்களிப்பினை உணராத அதிதீவிரதவாத ஆய்வாளர்கள் சிலர் அவனை வைதீகக் கூண்டிற்குள் அடைத்துவிட முனைகின்றனர். மறுபுறமாக, சாதியை நிகாகரிப்பதாய் கூறும் பகுத்தறிவுவாதிகளிற் சிலர் பாரதியின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனக் கவிஞன் என்ற புழுதியை அவன்மீது வாரி வீசுகின்றனர். மிக அண்மைக் காலங்களில் பெண்நிலைவாத தீவிரவாதிகள் சிலரும் - பாரதிக்கு ஆணாதிக்க அடையாளம் கற்பித்து அவனது பெண் விடுதலை சார்ந்த முற்போக்கான கருத்துக்களையும் மறுத்துரைத்து வருகின்றனர். ~~ வர்க்க சமுதாயத்தின் மனிதச் செயற்பாடுகள் அனைத்து ஒரு வர்க்க முத்திரை இடப்பட்டே இருக்கும் என்பதை வரலாறு எமக்கு நிருப்பித்துக் காட்டியிருக்கின்றது. இந்த வர்க்க அடையாளம் எல்லாவிடத்தும் ஒரேவிதமான வெளிவெளியான பண்புடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

ஒரு படைப்பாளியின் வர்க்க நிலைப்பாடு அவர் எந்த வர்க்கத்தில் பிறந்தவர் என்பதால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. பெண்ணணுரிமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளர்கள். தேசிய இன ஒடுக்குதலுக்கு நியாயம் கற்பிக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தின் படைப்பாளிகள், சாதியத்துடன் சமரசம் செய்ய முனையும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து எழுத்தாளர்கள் ஆகியோர் போலவே ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற் பிறந்து அதற்குத் துரோகமாக எழுதுவோர் உள்ளனர். ஒரு சமுதாயத்தில் எந்த வர்க்கச் சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அது அச்சமுதாயத்தின் ஒடுக்கும் வர்க்கச் சிந்தனையை ஆளுகிறது. அது மட்டுமின்றி ஒடுக்கப்படும் மக்களது சிந்தனையும் வௌ;வேறு வகையில் வௌ;வேறு அளவுகட்கு அது ஊடறுத்துச் செல்கிறது. பாட்டாளி வர்க்க உணர்வு என்பது சமுகத்தில் வர்க்கப் பண்பு பற்றிய அடையாளங் காணலின் மூலமும், ஒடுக்கப்பட்ட மக்களது எழுச்சிக்கான தேவையை அறிவதன் மூலமும் உருவாகி வளர்வது. இது இயல்பால், பிறப்பால் அமையும் ஒரு பண்பல்ல. மாறாகச் சமுதாய நடைமுறை மூலமுமே வளர்வது. பாட்டாளி வர்க்கப் பார்வை என்பது படிப்படியாக விருத்தி பெறுகிறது. (3)

அவ்வகையில் பாரதியை பார்ப்பனக் கவி என்றும் வைதீக கவி என்றும் குறுகிய வரம்புக்குள் நிலை நிறுத்தி தத்தம் வக்கிர நோக்குகளை அவன் மீது சுமத்த முற்படுவோர் அவனைத் தமது அரசியல் ஆதாயத்திற்காகவும் தனிப்பட்ட நலன்கட்காகவும் பயன்படுத்துவோரே என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.

பாரதி பற்றிய இரண்டாவது பார்வை குறிப்பாக முற்போக்கு மார்க்சிய சிந்தனை கொண்ட அறிஞகளினால் முன்வைக்கப்பட்டதாகும். பெரும்பாலும் இவ்வணியினரின் சமூக, பொருளாதார அரசியல், கலாச்சாரம் குறித்த சிந்தனைகளை உருவாக்குவதிலும் பாரதி கணிசமான அளவு தாக்கம் செலுத்தியுள்ளான். இலக்கியம் - படைப்பாளி என்போரை சமுதாயம் எனும் விளைநிலத்தின் பயிராக கண்ட இச் சிந்தனையாளர்கள் தீர்வு காட்டும் சித்தாந்தங்களையும் அதன்வழி படைக்கப்படும் இலக்கிய படைப்புக்களையுமே தமக்கு ஆதர்சமாக கொண்டனர். எனவே பாரதி போன்றோர் இவர்களிற் தாக்கம் செலுத்தியமை வியப்பிற்குரிய ஒன்றல்ல பாரதியை வரலாற்று அடிப்படையிலும் சமூகவியலடிப்படையிலும் ஆய்வு செய்த இப்பிரிவினர் அவனது பல்துறை சார்ந்த பங்களிப்புகளையும் ஆளுமைகளையும் வெளிக் கொணர்நதனர்.

தேசிய சர்வதேசிய கண்ணோட்டத்திலும் ஒப்பியல் அடிப்படையிலும் தமது ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தனர். இவ்வாய்வு முயற்சிகள் யாவும் முற்போக்கு மார்க்ஸியம் என இரு சிந்தனைத் தளங்களில் இடம் பெற்று வந்துள்ளது. இவ்விரு சிந்தனைகளிடத்தும் பல ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன. அந்த வகையில் பாரதியியல அறிஞர் பெ.சு மணி தொடக்கம் இன்றைய பாரதியல் ஆய்வாளர்கள் வரையில் அவர்களது பங்களிப்பு விதந்தோக்கத்தக்கது. இருப்பினும் பாரதிக்கு வழிபாடு செலுத்துகின்ற பண்பும் இவர்களது ஆய்வுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இழையோடிக் காணப்படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதொன்றாகும். இப்பண்பு பாரதியியல் ஆய்வு; வளர்ச்சியை வளம் படுத்துவதாகஅமையாது.

இவ்விடத்தில் தான் மூன்றாவது பிரிவினர் முக்கியத்துவம் உடையவர்களாக காணப்படுகின்றனர். பாரதியின் பல்துறை சார்ந்த பங்களிப்பினைப் பரிந்து கொள்ளத் தலைப்பட்ட அதேசமயம் அவனும் விமர்சன அடிப்படையில் உள்வாங்க கூடியவரே என்றடிப்படையில் பாரதியியல் ஆய்வுகளைத் தொடர்ந்தவர்கள் இவர்கள்.

குறிப்பாக பாரதியின் பங்களிப்புத் தொடர்பில் இவர்களது பிரிவினருடன் ஒப்பு நோக்கத்தக்கது என்ற போதினும் பாரதியின் தவறுகளை வரலாற்றுச் சூழ்நிலையில் வைத்து நோக்கிக் கருத்துக் கூற முனைவதில் இவர்கள் இரண்டாவது பிரிவினரில் இருந்து கணிசமான அளவு வேறுபடுகின்றனர். தேசிய சர்வதேசிய நிகழ்வுகளை பாரதி நன்கு புரிந்து கொண்டிருந்தான் என்பதனை அவனது எழுத்துக்கள் நமக்குப் பலுப்படுத்துகின்றன. அவ்வகையில் ரசியப் புரட்சியை வரவேற்ற முதல் தமிழ் கவிஞன் என்ற பெருமைக்குரிய பாரதி அதன் முக்கியத்துவத்தையும் உள்ளார்ந்த ரீதியாக புரிந்துகொண்டிருந்தான் என்பதனை அவனது பின்வரும் வரிகள் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன.

மாகாளி பாரசக்தி உருசிய நாட்டில்

கடைக் கண் வைத்தாள்! அங்கே

ஆகா! என்றெழுந்தது பார் யுகப் புரட்சி!

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!||

இவ்வரிகள் பாரதி ரசிய புரட்சியை உணர்ந்திருந்தது மட்டுமின்றி அதனை இந்திய பண்பாட்டுடன் இணைத்துப்பாடுவதில் தான அவனது வரலாற்று முக்கியத்துவம் அடங்கியுள்ளது என்ற விடயமும் கவனத்திற் கொள்ளத்தக்கது. ஓர் சந்தர்ப்பத்தில் லெனின் பற்றியும் சோசலிஸ்ட் அமைப்புப் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

ருசியாவிலும் கூட இப்போது ஏற்பட்டிருக்கும் சோசலிஸ்ட் ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருதவில்லை. சமீபத்தில் நடந்த மகா யுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள் பலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்துபோய் மஹா பலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தி இருக்கும் கூட்டு வாழ்க்கை குடியராசை அழிக்க மனமிருந்தும் வலிமையுற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்திலேயே ருசியாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்கு துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் ஏற்பட இடமுண்டாகும்.

லெனின் வழி சரியான வழியில்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்யா ஸாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள், நிலஸ்வான்கள் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளை பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நமது தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே கொல்லைகளும் கொலைகளும் சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசியை தீர்ப்பதற்குரிய வழியை  தான் நாம் தேடிக் கண்டு பிடித்து, முயல வேணடும். (4)

பாரதியின் மேற்காட்டிய கூற்றுக்களில் வெளிப்படும் கருத்தென்ன ரசிய புரட்சியை வரவேற்று குதூகலித்த அவனது எழுத்துக்களில் லெனின் பற்றியும் சோசலிஸ்ட் அமைப்புப்பற்றியும் கருத்து மயக்கங்கள் காணப்பட்டமையை உணர முடிகின்றது. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.என ஆர்ப்பரித்த பாரதி, "மந்திரத்தால் மாங்காய் விழாதது மனமாற்றத்தால் வறுமையை ஒழித்து விடலாம்." எனக் கனவு கண்டது தீமையை எதிர்த்து போராடாதே என்ற முன்பின் முரணான சிந்தனைக்கே இட்டுச் சென்றது.

இதே மயக்க தயக்ககங்கள், நவீன இலக்கிய முன்னோடிகளான லூசுன், மார்க்சிம் கோர்க்கி முதலானோரிடமும் காணப்பட்டன. ஓர் ஒப்புமை வசதி கருதி இராணுவ பள்ளியொன்றில் லூசுன் ஆற்றிய உரiயின் பந்தியொன்றை இங்கொரு முறை குறித்துக் காட்டுவது அவசியமானதொன்றாகும். "நான் சலிப்புற்றிருக்கிறேன். இருந்தும் துப்பாக்கிகளை ஏந்தும் நீங்கள் இலக்கியம் பற்றி அறிய அவரக் கொண்டுள்ளீர்கள். ஆனால் நானோ துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தையே கேட்க விரும்புகின்றேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தை விடக்கேட்பதற்கு நன்றாக இருக்கும்." (5)

அன்றைய சீனாவின் சூழ்நலைகளும் கலவரங்களுமே லூசுனை இவ்வகையில் விரக்தி அடையச் செய்தது. இருப்பினும் 1917 ஆண்டு இடம்பெற்ற இரசிய புரட்சி சீனாவில் மிக வேகமாக செல்வாக்குச் செல்வத்தியதாலும் படர்ந்ததாலும் மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெறத் தொடங்பியது. இவ்வாறான சூழலில் லூசுன் மீண்டும் தன்னை சமூக மாற்றப் போராட்டங்களுக்கு கட்டியங்கூறும் எழுத்தாளராக பட்டை தீட்டிக் கொண்டார்.

இதே ஊசலாட்டத்திற்கு மார்க்சிம் கோர்ககியும் உள்ளானார் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் லெனினுடன் இருந்தவர், புரட்சியைக் கண்டவர், இருந்தும் சமூகமாற்ற நிகழ்வுகளின்போது எதிர்ப்புரட்சிக் கலசரங்களை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் கலக்கமடைந்தார். கிறிஸ்தவ கம்யூனிசம் பற்றிக்கூட பேசத் தொடங்கினார். ஆனால் கட்சியில் இருந்தாலும் லெனினுடன் விவாதித்தாலும் விரைவில் தெளிவு பெற்று மீண்டும் புரட்சிவழியில் நடைபோட்டார். பாரதி பக்கத்தில் லெனினும் இல்லை. பாரதியை சேர்த்துக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் இல்லை. எனவே நடைமுறை பற்றி கருத்து வித்தியாசம் பாரதியிடம் நீடித்தது.(6)

ஒரு சந்தர்ப்பத்தில் அறிஞர் பிளக்கனேவ் பின்வருமாறு கூறியமை இவ்விடத்தில் நினைவுகூறத் தக்கதாகும். மனிதர்களை மாபெரும் சமுதாயப் பிரச்சினைகள் எதிர்கொள்கின்றன. மற்றவர்களைவ விட யார் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகம் பணிபுரிகின்றார்களோ அவர்களைத்தான் மகா புருஷர்கள் என்று அழைக்கின்றோம். உலகில் நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்துக்கக் காலம் சமூகப் பிரச்சகைள் பலவற்றுக்கு முகம் கொடுத்து விடை காண முற்பட்ட பல்துறை சார்ந்த மேதைகளும் சிந்தனையாளர்களும் மகாபுருஷர்களும் தோன்றி இருக்கிறார்கள். அவர்களிடையே பாரதி முக்கியமான ஒருவராகத் திகழ்கின்றான்.அவ்வகையில் பாரதியின் தவறுகள் அன்றைய சூழலில் வைத்து நோக்கப்பட வேண்டும். இங்கு பாரதியில் காணப்படும் தவறுகளை விட அவனது சமூகப் பங்களிப்புக்கான சாதனைகள் விஞ்சி நிற்கின்றன.  எந்த விதத்தில் அவற்றின் பரிமாணம் உள்ளது என்ற கேள்வியும் முக்கியமானதொன்றாகும். இதுவரை கால பாரதியியல் துறைசாரந்த ஆய்வுகளை எடுத்து நோக்குகின்றபோது அவை இரு நிலைப்பட்ட தளங்களில் இடம்பெற்று வந்துள்ளமையை அவதானிக்கலாம்.

பொதுவாக மொழி, தொழிலாளர், பெண்கள், சாதி முதலியவைபற்றி தீவிரமான நவீன சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்தினான் என்பதற்காக மறுத்துரைப்போர்

ரசிய புரட்சியைப் பாடினான் என்பதற்காக பாரதியை தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடராக கொண்டு மார்க்சியவாதியாக காட்டமுயல்வோர்.

இவ்விரு பிரிவினர்களின் பார்வைகளும் ஒருதலைப் பட்சமானவையே. பாரதியை அவனது சரித்திர சூழலில் வைத்து நோக்கும் ஆழமான நுட்பமான மார்க்சிய ஆய்வுகளின் பயனாகவே திருப்திகரமான சிந்தனைகளை வெளிக் கொணரலாம். இத்துறையில் நம்பிக்கை தரக்கூடிய சில முயற்சிகள் வெளிவந்துள்ளன. பேராசிரியர் கைலாசபதி, தா.பாண்டியன் (பாரதியும் சாதிகளும் 1981, பாரதியும் யுகப்புரட்சியும் - 1981 ஆகிய நூல்கள் முக்கியமானவை) ஆகியோரின் பாரதி பற்றிய கட்டுரைகளில் பாரதியிற் காணப்படும் முரண்பாடுகளுக்கு இயக்கவியல் அடிப்படையில் விளக்கம் கூற முயன்றுள்ளனர்.

பாரதி ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினான் காரியம் மிகப் பெரிது. எனது திறமை சிறிது. ஆகையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சனமாக அன்று, வழிகாட்டியாக இவ்வகையிற் பாரதி ஆய்வுகள் விரிவடைதல் வேண்டப்படுவதாகும்.

அடிக்குறிப்புகள்:

1. நுஃமான் எம்.ஏ:( 1982) திறனாய்வுக் கட்டுரைகள் (சிவகங்கை -  பக் 139 -140)

2. LIUZAIFU (1981): Social Science in China, Aesthetic Criteria for Literary and Criticism Vol.11  Page 19

3. சிவசேகரம், சி(2000) எதிர்ப்பு இலக்கியமும் எசமானர்களும் (கொழும்பு - பக் 54-55)

4. திருநாவுக்கரசு(1981) (பதிப்பாசிரியர்) பாரதியார் கட்டுரைகள்(சென்னை -  பக் . 453)

5. கணேஷ். கே(1995) (தமிழில்) லூசுன் சிறுகதைகள் (சென்னை )

6. பாண்டியன். தா(1981) பாரதியும்; யுகப் புரட்சியும் (சென்னை பக். 56)