ராணி திலக் என்பவர் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற எனது தொகுப்பைப் படித்துவிட்டு பெண் எழுத்தைப் பற்றித் தனது அபிப்ராயத்தை உதிர்த்திருக்கிறார். அதற்கான சில விளக்கங்களைத் தருவதற்கான வாய்ப்பை உருவாக்கிய உன்னதத்துக்கு நன்றி.

ஒருவருடைய கவிதை சிலருக்கு பெரும் சிலிர்ப்பையும், சிலருக்கு சலிப்பையும், சிலருக்கு கோபத்தையும் உருவாக்குவது இயல்பானது. எனது தொகுதி சலிப்பை உருவாக்கினால் அதற்கு காரணம் வாசிப்பவருடைய அரசியலும் முன் தீர்மானமும் காரணமாக இருக்கலாம். இதிலிருந்து பொதுவான பெண் மொழி, பெண் கவிதையியல், பெண் அழகியல் பற்றிய கருத்துக்களையோ கோட்பாடுகளையோ உருவாக்கக் கூடிய அளவுக்கு அறிவு சார்ந்த உழைப்போ பெரும் ஆய்வுகளோ தமிழில் நடத்தப்படவில்லை. இது இப்படி இருக்க ஏழெட்டு கவிதைகளை எழுதி ஐந்தாறு பேர் வாசிக்கத் தந்துவிட்டதனால் பெண் மொழி பற்றி பெரும் கண்டுபிடிப்புகளைத் தந்துவிடும் தகுதியோ உரிமையோ இந்த நபருக்கு வந்து விடுவதில்லை. அவருடைய மிக ஆழமான அறிவின் அடையாளமாக வியக்க வைக்கும் மூன்று கேள்விகள் மட்டும் தோன்றியிருக்கிறது. இவற்றிற்கு மேலோட்டமாக சில பதில்கள்.

1. தன் அடையாளத்தோடு பிரபஞ்சத்தை ஏன் அணுக வேண்டும்?

மனித அறிவு அது சார்ந்த அணுகுமுறை அனைத்துமே பிரபஞ்சத்தை தன் அடையாளத்தின் அடிப்படையில் தான் எதிர்கொள்கின்றன. இங்கு தன் அடையாளம் என்பது உயிரியல் சார்ந்த பால் அடையாளமாகவோ, வரலாறு சார்ந்த இன அடையாளமாகவோ, அரசியல் சார்ந்த பண்பாட்டு அடையாளமாகவோ இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு தன்னடையாளம் இல்லாமல் அணுகுமுறை என்ற ஒன்று சாத்தியமில்லை. அந்த வகையில் தமிழில் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் எழுதும் ஒவ்வொருவருக்கும் தனித்த தன்னடையாளமும் அது சார்ந்த அணுகுமுறையும் இருந்தே தீரும். இந்த தன் அடையாள உருவாக்கத்தின் தன்மையே ஒவ்வொருவருக்குமான மொழியை அமைத்துத் தருகிறது. எனது தொகுப்பின் ஒவ்வொரு கவிதையிலும் ஒருவித தன் அடையாளம் இருக்கும். இவை தொடர்ந்து மாறும் தன்மையுடையது. ஒட்டு மொத்தத் தொகுப்பிலும் ஒரே ஒரு தன் அடையாளத்தைக் கண்டுபிடிப்பது, வாசிப்பு அறிவற்ற தான்தோன்றித்தனம். அதையும் ஒட்டு மொத்த பெண் மொழி மீது பொதுமைப்படுத்திச் சுமத்துவது அபத்தம் நிறைந்த திமிர்த்தனம். கவிதைக்கும் தன் அடையாளத்துக்கும் - தன் அடையாளத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவுகளை இப்படி அஞ்சலட்டைகளில் விவாதித்து முடிவு கண்டு விட முடியாது.

2. உடல், மொழி, புனைவு என்கிற tools ஐ விட்டுவிட்டால் இந்தப் பெண்கள் எதை எழுதுவார்கள்?

உடல், மொழி, புனைவு இவை முதலில் tools அல்ல, ஏதாவது ஆயத்த உபகரணங்கள் இருந்தால்தான் எதையாவது எழுதமுடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிற நபர்களின் கேள்வி இது. உடல், மொழி, புனைவு இவை இல்லாமல் மனித வரலாறே இல்லை. இவற்றை விட்டுவிட வேண்டிய தேவை எவருக்கும் இல்லை. பெண்கள் இவற்றை தொடர்ந்து எழுதுகிறார்கள் என்றால் அது சாதனையாக இருக்குமே தவிர அதில் வருத்தப்பட எதுவுமில்லை. உடல், மொழி புனைவு இவற்றை கருவிகளாக கண்டு ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடக்கும் பெரும் வன்முறையே மனித அரசியலின் அடிப்படையாக உள்ளது. பெண்கள் இவற்றை புதிது புதிதாக அர்த்தப்படுத்த முடியும் என்றால் இலக்கியம் தனது எல்லைகளை விரித்துக் கொண்டு செல்கிறது என்றே அர்த்தம்.

‘‘இந்தப் பெண்கள்’’ என்று குறிப்பிடுவதிலுள்ள பொறுப்பற்ற தனம் இலக்கிய விமர்சனமாக தமிழில்தான் பதிவாகிவிடுகிறது. இதைப் படித்து தமிழ் அறிவு ஜீவிகளுக்கு கோபமோ அறச்சீற்றமோ வந்து விடுவதில்லை. இது போன்ற கேவலங்களுக்குப் பின்னுள்ள சமூக உளவியல் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தது போல பூடகமான ஒன்று அல்ல. இவற்றின் ஆணாதிக்க, சாதிய இனத் திமிர்த்தனங்கள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விட்டன. இனி எழுதுபவர்கள் பொதுக்களத்தின் நாகரீகத்துக்கு உட்பட்டு எழுதவில்லை என்றால் அதில் சரிபாதியாக உள்ள பெண் பிரிவு எந்தவித எதிர்செயல்பாட்டுக்கும் தயாராக இருக்கும்.

3. ஒரு பெண் தன்னுடைய சிக்கல்களை மட்டும் தொடர்ந்து எழுதிவருவதென்பது தொடர்ச்சியா, சலிப்பா, குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதா?

முதலில் கவிதை எழுதுவதென்பது ‘ஒரு பெண்ணோ’ ‘ஒரு ஆணோ’ அல்ல. அதேபோல் எழுத்தில் வரும் சிக்கல்கள் என்பவை அவர்களுடைய சிக்கலும் அல்ல. என்னுடையத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சிக்கல்களைப்பற்றி மட்டும் பேசுபவை அல்ல. அந்த வகையில் இந்த அவதானிப்பே மூடத்தனமானது. எதையாவது உளறுவது அதை பதிவு செய்வது இவைதான் தன் அடையாளத்தை மட்டுமே வைத்து மொத்த சமூகத்தையும் அபத்தமாக்கும் கேவலங்கள். அடுத்து...

நான் ஏன் பெண்ணிய அடையாளத்தோடு (கருத்து) பெண் கவிதைகளைப் படிக்க வேண்டும்?

எந்த ஒரு கவிதையையும் படிக்க ஏதாவது ஒரு அடையாளப் புள்ளியில் தொடங்க வேண்டியிருக்கிறது. ‘கருத்து’ என்ற எந்தவித பின்னணியும் அற்ற வாசிப்பு என்ற போலித்தனங்கள் கலைந்து பலகாலம் ஆகிவிட்டது. ஒரு இசையைக் கூட அதன் வகைமை பற்றிய அறிவின்றி கேட்கக்கூட முடியாது என்ற நிலையில் பெண்ணியம் என்பது பெண் கவிதைகளை மட்டுமல்ல உலகின் அனைத்தையுமே வாசிக்கவும் அணுகவுமான ஒரு தொகுப்பு அறிவாக மாறியிருக்கிறது. இதைப்பற்றிய அக்கறையற்றவர்கள் பெண் கவிதைகளை மட்டுமல்ல எந்தக் கவிதையும் வாசிக்கவோ விமர்சிக்கவோ தகுதியற்றவர்கள்தான்.

சமீபகாலமாக பெண் எழுத்து, பெண்ணியம் என்பது பற்றிய தங்களின் அறியாமைகளையும் காழ்ப்புணர்வுகளையும் பலவித வடிவங்களையும் பிரபலங்களில் தொடங்கி சிறு பத்திரிக்கையின் பகுதி நேர கவிஞர்கள் வரை வெளிப்படுத்துவதென்பது தங்களை கவனப்படுத்த மேற்கொள்ளும் விளம்பர உத்தியாக வளர்ந்து வருகிறது. இந்தக் கடிதமும் அப்படி பரவி வரும் நோயின் ஒரு அறிகுறிதான். இந்த ராணிதிலக் என்ற பெயரில் ஒரு பெண் பெயர் பெயர் ஒட்டியிருப்பதும் கூட தன் எழுத்தின் மூலம் பெற முடியாத கவனத்தை ஒரு பெண்ணின் பெயர் மூலம் பெற நினைக்கும் விளம்பர உத்திதானா?

Pin It