ஏகபோக முதலாளி வர்க்கத்தினுடைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தங்கள் வெறுப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காக சூன் 20 அன்று கடலலையென மக்கள் வெள்ளம் இலண்டன் தெருக்களில் குவிந்தனர். இங்கிலாந்து வங்கியின் முன் துவங்கிய பேரணி பாராளுமன்றத்தின் முன்னர் முடிவுக்கு வந்தது.

முதலில் 2,50,000-க்கு மேற்பட்ட மக்கள் குவிந்திருப்பதாக காவல் துறை கூறினாலும், உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. பேரணியானது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பரந்துபட்ட தேசிய அமைப்பான மக்களுடைய மன்றம் (பீப்பிள்ஸ் அசெம்பிளி) என்ற கட்சி சார்பற்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், தீயணைப்புப் படையினர், ஓய்வூதியம் பெறுபவர்கள், பொதுச் சேவைகளில் உள்ள தொழிலாளர்கள் உட்பட தொழிலாளி வர்க்கத்தின் தொழிற் சங்கங்களும், உழைக்கும் மக்களுடைய நூற்றுக் கணக்கான அமைப்புக்களும் பிரிட்டனில் எல்லா பகுதிகளிலிருந்தும் பயணம் மேற்கொண்டு அங்கு வந்து பங்கேற்றனர்.

இதில் தனிப்பட்டவர்களும், உழைக்கும் வர்க்கத்தின் குழுக்களும் அவர்கள் சொந்தமாகத் தயாரித்த முழக்கத் தட்டிகளோடு பங்கேற்றனர். சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயத்தை எதிர்த்தும், சமூக செலவினங்களை வெட்டிக் குறைப்பதற்கு முடிவு கட்டவும், தேசிய நலவாழ்வுத் துறை அமைப்பையும், அரசு கல்வியையும் பாதுகாக்கக் கோரியும் முக்கிய முழக்கங்கள் இருந்தன. சில முழக்கங்கள், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும், பேரணியை ஆதரிக்காத தொழிற்சங்க காங்கிரசைக் (Trade Union Congress -TUC) கண்டித்தும் இருந்தன.

"டியுசி நீ எங்கே இருக்கிறாய்? முதலாளிகளை எதிர்த்தும் நீ போராட வேண்டும்!" என மக்கள் குரலெழுப்பினர்.

முதலாளித்துவ அமைப்பு உருவாக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு புரட்சியேயென வலியுறுத்தும்,"அமைப்பு உடைந்துவிட்டது. ஒரு புரட்சிதான் நமக்குத் தேவை!", "புரட்சிக்காக அணிதிரள்வோம்!", என்பன போன்ற முழக்கங்களும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.

தீயணைப்புப் படை வீரர்கள் ஒரு பெரிய பலூனை மிதக்க விட்டிருந்தனர். அதில், "நாங்கள் மக்களை மீட்கிறோம், வங்கிகளை அல்ல!" என்று எழுதப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் ஒரு கை வடிவத்திலான "கல்விக்கு கையை உயர்த்துவோம்"என்று எழுதப்பட்டிருந்த ஒரு பூதாகரமான பெரிய பலூனை வைத்திருந்தனர். அது மேலும் தனியார்மயப்படுத்தும் நோக்கம் கொண்ட அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் அட்லாண்டிக் கடந்த வாணிக மற்றும் முதலீட்டிற்கான பங்கேற்பை (Transatlantic Trade and Investment Partnership) எதிர்ப்பதாக, ஏவுகணை போன்ற ஒரு மாதிரியின் மீது, டிடிஐபி (TTIP)என்று எழுதப்பட்டிருந்தது. இதே போன்ற எதிர்ப்புப் பேரணிகள் மான்செஸ்டர், கிளாஸ்கோ மற்றும் பிரிட்டனில் எல்லா பெரிய நகரங்களிலும் நடைபெற்றன.

பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு அங்கமாக, இந்த நடவடிக்கைகளில் இந்தியத் தொழிலாளர்கள் சங்கமும் (Indian Workers Association - IWA)  பங்கேற்றது. ஐ.டபிள்யூ.ஏ-யின் உறுப்பினர்கள் "உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்" என்ற முழக்கம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய தட்டியை ஏந்தி வந்தனர். ஐ.டபிள்யூ.ஏ வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு-

சிக்கன நடவடிக்கைகள், அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான கொள்கையாக கூறப்படுகிறது. சிக்கன நடவடிக்கைகளில் செலவினங்களைக் குறைப்பது, வரி அதிகரிப்பு ஆகியன இருக்கலாம். 2007-08 உலக வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, பெரும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக, அமெரிக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் பெரிய அளவில் கடன்களை வாங்கினர். லாயிட்ஸ், முந்தைய நார்தர்ன் ராக், பிராட்போர்ட் மற்றும் பிங்கிலி, ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து-ஆர்பிஎஸ் ஆகிய வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 108 பில்லியன்களுக்கும் அதிகமான பவுண்டுகளை செலவழித்தது.

இதில் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் 80% பங்குகளை வாங்குவதற்காக மட்டும் 45.8 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டன. இந்த வங்கி தற்போது இலாபமீட்டத் தொடங்கிய நிலையில் அது 32.4 பில்லின் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பற்றாக்குறையானது இதனுடைய விளைவாக எழுந்திருப்பதாகும். அதே நேரத்தில், குறிப்பாக உடல் ஊனமுற்றவர்கள், ஓய்வூதியக்காரர்கள் போன்ற மிகவும் பலவீனமான மக்களுக்கு கடுமையான துன்பத்தை உருவாக்கும் மிகவும் அத்தியாவசியமான சேவைகளுக்கான செலவினங்கள் வெட்டிக் குறைக்கப்படுகின்றன.

இந்தக் கொள்கைகள், பொருளாதார மீட்சிக்கு வழி வகுத்திருப்பதாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, கூறிக் கொள்கிறது. ஆனால் இந்த மீட்சியின் மூலம் யார் பயனடைந்திருக்கிறார்கள் என்ற விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை. மீட்சியென அழைக்கப்படும் இந்த நடவடிக்கைகள் மூலம் பெரும் வங்கிகளும், ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்திருக்கிறார்கள், உழைக்கும் மக்களல்ல. பொதுத் துறையிலிருந்து 10,000 வேலைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சிக்கன நடவடிக்கைகள், நிதித் தட்டுப்பாட்டைக் குறைக்காது. ஏனெனில், செலவினங்களைக் குறைப்பதனால் வேலை வாய்ப்புகள் குறையும். அதன் மூலம் உழைக்கும் மக்கள் கொடுக்கும் வரித் தொகையும் குறையும். வேலையிலிருந்து தூக்கியெறியப்படும் மக்கள், சமூக நலன்களைப் பெறுவார்கள். அது நிதிப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும்.

மக்களுக்குத் தேவையானவற்றிற்கு செலவு செய்ய மறுக்கும் முதலாளி வர்க்கத்தின் இந்தப் பிரதிநிதிகள், இறையாண்மை கொண்ட நாடுகள் மீது அநியாயமான போர்களைத் தொடுப்பதற்காக, கொஞ்சமும் தயங்காமல், பில்லியன் கணக்கில் கடன் வாங்குவது இந்த வாதத்தினுடைய போலி வேடத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. மிகவும் செல்வந்தர்களாக இருக்கும் உயர் 10% த்தினர், பிரிட்டனில் உள்ள 70% செல்வங்களைத் தம் உடமையாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய மொத்த செல்வமானது வணிக வீழ்ச்சியான சூழ்நிலையில் இருமடங்காக அதிகரித்திருக்கிறது. அரசாங்கத்தின் சொந்த புள்ளி விவரப்படி, இந்த 10%-த்தினர் 120 பில்லியன்கள் பவுண்டு வரிகளைக் கட்டாமல் வைத்திருக்கின்றனர். வரும் ஆண்டில் இது மேலும் 70 பில்லியன் பவுண்டுகள் கூடுதலாகும்.

நிதி நிலையாக இருந்தாலும், அல்லது பொருளாதாரத்தின் திசையானாலும், அல்லது ஒரு வெளிநாட்டின் மீது போர் தொடுப்பதாக இருந்தாலும், நாடு எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதில் பிரிட்டனுடைய தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பங்கும் இல்லை. நாம் வாக்களித்து, ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே, நம்மை பாதிக்கும் எந்தப் பிரச்சனை குறித்தும் தீர்மானிக்கும் உரிமையை நாம் இழந்துவிடுகிறோம்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவதற்காக ஒரு போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்துகின்ற அதே நேரத்தில், இன்றுள்ள முதலாளி வர்க்க சனநாயக அமைப்பை மாற்றி நாடு எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை மக்களே தீர்மானிக்கக் கூடிய ஒரு அமைப்பை நிறுவ நாம் அணி திரள வேண்டும். டேவிட் கேமரூனுடைய பசப்பலான வார்த்தைகளால் நாம் ஏமாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாது. கன்சர்வேட்டிவ் கட்சி உழைக்கும் மக்களுடைய கட்சியல்ல. பிரிட்டிஷ் சமுதாயம் வர்க்கங்களற்ற சமுதாயமல்ல. கன்சர்வேட்டிவ் கட்சி, ஏகபோக முதலாளி வர்க்கக் கட்சியாகும். பிரிட்டிஷ் பாராளுமன்ற அமைப்பு முதலாளி வர்க்கத்தின் அமைப்பாகும். கன்சர்வேட்டிவ், லேபர், லிபரல் அல்லது பணக்காரர்களுடைய வேறு எந்தக் கட்சியாலும் முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரு வர்க்கங்களுக்கும் பயனுள்ளதாக இந்த அமைப்பை நடத்த முடியாது.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டவும், முதலாளித்துவ நெருக்கடிக்கு பணக்காரர்களை விலை கொடுக்குமாறு கேட்கவும், தொழிலாளி வர்க்கத்தையும், தொழிற் சங்கங்களையும், உழைக்கும் மக்களின் எல்லா முற்போக்கு அமைப்புக்களையும் ஒன்றுபட்ட ஒரு வீரமான போராட்டத்தை மேற்கொள்ளுமாறு இந்தியத் தொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

தன்னுடைய நலன்களுக்கு ஏற்ப தீர்மானங்களை எடுப்பதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பை மாற்றி சோசலிச அமைப்பைக் கொண்டு வருவதற்கு அது அணிதிரள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அமைப்பு மீண்டும் மீண்டும் நிகழும் பொருளாதார நெருக்கடிகள் இல்லாமல், அனைவருடைய நலனையும் உறுதி செய்யும்.

சிக்கன நடவடிக்கைகள் வேண்டாம்!

நெருக்கடிக்கு பணக்காரர்கள் விலை கொடுக்கட்டும், உழைக்கும் மக்களல்ல!

அமைப்பை மாற்றவும், ஒரு சோசலிச அமைப்பை நிறுவவும் அணிதிரள்வோம்!