ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள பூஞ்ச் பகுதியில் ஐந்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல் வெளியானதையொட்டி, பாராளுமன்றத்தின் மழைக்கால அமர்வு, அமளிகளோடு தொடங்கியுள்ளது. ஆளும் வர்க்க கட்சிகளின் முன்னணி அரசியல்வாதிகள், பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெறியைத் தூண்டிவிட்டு வருகிறார்கள். ஏகபோகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள மின்னணு ஊடகங்களின் பல பிரிவுகள், பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெறியைத் தூண்டியும் இராணுவ நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தும் வருகிறார்கள்.

இன வெறியோடு பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெறியைத் தூண்டி விடுவதை இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி கண்டிக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கெனவே பதட்டமான உறவு இருக்கிறது. இதை மேலும் எந்தவிதத்திலும் சீர்குலைப்பதோ, இரண்டு நாடுகளுக்கு இடையில் போரோ அல்லது சிலர் கோருவது போல காஷ்மீரில் “வரம்புக்குட்பட்ட” போரோ அல்லது ஒரு முழு அளவிலான போரோ – இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும். மேலும் அதனால் நம்முடைய பொது எதிரியான ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியர்களே பயனடைவர்.

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்னர் இந்திய வீரர்கள் ஐந்து பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றனர் என்பதும், இப்படி இரண்டு பக்கங்களிலிமே உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதும் நன்கு தெரிந்ததே. இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உள்ள காஷ்மீர் கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு இராணுவங்களுமே பழிக்குப் பழி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியாக உள்ளன என்பது ஒரு துயரம் நிறைந்த உண்மை. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசாங்கமும் ஏகபோக ஊடகங்களும் வெறியை தூண்டிவிடுவார்களா இல்லையா என்பது ஆளும் வர்க்கங்களின் உடனடி நலன்களை பொறுத்தது.

சர்வதேச சூழலில் தென் ஆசியாவின் நிலைமையை பார்த்தோமானால், தன்னுடைய ஆதிக்கத்தை ஆசியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்காக, நேட்டோ கூட்டணியின் தலைமையிலுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் தெற்கு ஆசியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் போர் மேடையை விரிவுபடுத்த மும்முரமாக உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காக, குரங்கும் பூனைகளும் போல, இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றுக்கு ஒன்றை எதிராக வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. மேலும் அது இந்தியாவை சீனாவிற்கு எதிராகத் தூண்டிவிட்டு ஜப்பான், ஆஸ்திரேலியா, மற்ற சில ஆசிய நாடுகள் உட்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள கூட்டணியில் இந்தியாவைச் சேர்க்கவும், சீனாவை முற்றுகையிடவும் முயற்சித்து வருகிறது. இந்த பகுதியில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நோக்கங்களை அடையும் முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சீர்குலைக்க எப்படிப்பட்ட தந்திரத்தையும் பயன்படுத்தத் தயங்காது. அவர்கள் இந்தியாவிலோ  பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்து, பின்னர் அதைப் பயன்படுத்தி இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒருவருக்கொருவரை எதிராக நிறுத்தலாம் என்பதையும் நிராகரிக்க முடியாது.

நிலுவையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, நீடித்த அமைதியையும் நட்பு உறவுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணுகின்ற தெளிவான சக்திகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ளன என்பது தெரிந்ததே. இந்த சக்திகள் அதே கொள்கைகளை தொடர்ந்து நியாயப்படுத்துவதற்காக மோதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்தும் சீர்குலைத்தும் வந்த கடந்தகால வரலாற்றை எப்போதும் நினைவுபடுத்தி வருகின்றன. அதே ஏகாதிபத்திய சக்திகள்தான், குறிப்பாக ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்தியர்கள், இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தரமாக மோதலில் சிக்கி இருப்பதற்காக, பெரிய சக்தியாக வேலை செய்து வந்துள்ளன என்பதையும், அவர்கள் இன்னும் அதே திட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளதையும், மறைக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்திய மற்றும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர். இது இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு எதிரானது மட்டுமல்லாமல் இந்தப் பிராந்திய அமைதிக்கும் எதிரானது ஆகும்.

எல்லை பிரச்சினையைக் காரணம் காட்டி சீனாவிற்கு எதிராகவோ, இராணுவத்தினர் கொல்லப்பட்டதை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு எதிராகவோ, சில ஏகபோக ஊடகப் பிரிவுகள், பதற்றத்தை தூண்டிவிட கடந்த பல மாதங்களாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதை அலட்சியம் செய்ய முடியாது. ஆளும் வர்க்கமும் அதன் முக்கிய அரசியல் கட்சிகளும் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள தொழிலாளர்களிடையிலும் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மத்தியிலும் வெகுவாக நம்பிக்கை இழந்து உள்ளனர். அத்தகைய நிலையில், தனது ஆட்சியை உறுதிப்படுத்தவும் எதிர்ப்பை நசுக்கவும் ஆளும் வர்க்கங்கள் ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து, அண்டை நாடுகளுடன் நமது உடன்பிறப்புக்களுக்கு எதிரான போரில் நமது மக்களை ஈடுபடுத்தத் தீர்மானிக்கலாம்.

பொருளாதார நெருக்கடியான காலங்களில் முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்கத்தினை நசுக்கவும், வெளிநாடுகளில் தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுத்துச் செல்லவும், பாசிசத்தையும் போரையும் நாடுவது தெரிந்ததே. இதைத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று செய்கிறது, இதைத்தான் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளும் செய்கின்றன. இந்தப் போக்கையே இந்திய ஆளும் வர்க்கங்களும் தொடர விரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் நாட்டின் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும், அமைதியை விரும்பும் அரசியல் சக்திகளையும் ஆளும் வர்க்கத்தின் போர் திட்டங்களைத் தடுப்பதற்காக ஒன்றுதிரட்டுவது கம்யூனிஸ்டுகளின் கைகளில் உள்ளது. நம் நாட்டின் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் அமைதியை விரும்பும் அரசியல் சக்திகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தீவிரமான போர் எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பிற்போக்கான போருக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட்டு கெதர் கட்சி அறைகூவல் விடுக்கிறது.