தொழிலாளர் ஒற்றுமை குரல், ஏர்போர்ட் அதாரிடி ஆப் இந்தியா எம்பிளாயிஸ் யூனியனுடைய

பிராந்தியச் செயலர் தோழர் எல். ஜார்ஜ் அவர்களை சந்தித்து அவர்களுடைய போராட்டம் பற்றி நேர்முகம் கண்டனர். அதன் அறிக்கை பின்வருமாறு.

தொழிலாளர் ஒற்றுமை குரல் (தொ.ஒ.கு) – ஏர்போர்ட் அதாரிடி ஆப் இந்தியாவின் (ஏஏஐ) தொழிலாளர்கள், விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வருகிறீர்கள். உங்களுடைய போராட்டத்தை விவரித்துக் கூற முடியுமா?

தோழர் எல். ஜார்ஜ் – சென்னை, கொல்கத்தா, லக்நௌ, அகமதாபாத், ஜெய்பூர் மற்றும் கொகாத்தி விமான நிலையங்களை இயக்கி, மேலாண்மை செய்ய தனிப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் இந்திய அரசாங்கம் அண்மையில் கேட்டிருக்கிறது. இது இந்திய மக்களுக்கோ, ஏஏஐ-யின் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கோ நல்லதல்ல. 2006-இல் தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட போது அதை நாங்கள் எதிர்த்தோம். இந்த தேச விரோத நடவடிக்கையை பெரும்பான்மையான மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் கூட எதிர்த்தனர். இருந்துங்கூட மும்பை, தில்லி விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுத்துவிட்டது. ஏஏஐ-னுடைய மொத்த வருவாயில் இந்த இரண்டு விமான நிலையங்கள் மட்டுமே 60 சதவிகித்ததிற்கு மேல் வருவாயை ஈட்டிக்கொண்டிருந்தன. இப்படி, அதிகாரத்தில் இருந்தவர்கள், மிகவும் இலாபகரமாக இருந்த சேவைகளை முதலாளிகளுக்கு வாரி வழங்கி விட்டனர். இது மட்டுமின்றி, அதிக வருவாய் ஈட்டி வந்த பெங்களூரு மற்றும் ஐதிராபாத் விமான நிலையங்களையும் அரசாங்கம் தனியாரிடம் ஒப்படைத்தது. இந்த விமான நிலையங்கள் தனியார் மயப்படுத்தியது, விமானத் தொழிலாளர்களைக் கடுமையாக பாதித்தது. எனவே இதே நிலை சென்னை, கொல்கத்தா, லக்நௌ மற்றும் பிற ஏஏஐ தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடாதென நாங்கள் தீர்மானித்தோம். எனவே நாங்கள் இந்த தனியார்மயப்படுத்தும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

தொ.ஒ.கு – இந்த தனியார்மயத்தின் பின்னணி என்ன?

தோழர் எல். ஜார்ஜ் – தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டபோது, ஏஏஐ தொழிலாளர்களுடைய கடுமையான எதிர்ப்பின் காரணமாக, இந்தப் பிரச்சனையை ஆய்வதற்காக பிப்ரவரி 2006-இல் அரசாங்கம் ஒரு முத்தரப்புக் குழுவை நியமித்தது. இக் குழுவில் நிர்வாகம், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்தனர். இக்குழு 3 ஆண்டுகளுக்கு விவாதங்களை நடத்தியது. இறுதியில் இக்குழு, மீதமுள்ள 123 விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தக் கூடாதெனவும், இந்த விமான நிலையங்களை நவீனமயப்படுத்துவதும், அவற்றை இயக்குவதும் ஏஏஐ-ஆல் மட்டுமே செயல்படுத்துப்பட வேண்டுமென பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகளை அரசாங்கம் சூலை 2009-இல் முழுமையாக ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி, இந்த ஆறு விமான நிலையங்களையும் தனியார்மயப்படுத்த அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதில் அவர்கள் வெற்றி பெற்றால் மீதமுள்ள விமான நிலையங்களையும் பெரு முதலாளிகளின் தேவைக்கேற்ப படிப்படியாக தனியார் மயப்படுத்துவார்கள்.

சென்னை விமான நிலையத்தில் விமானம் பறப்பது தொடர்பான வேலைகளையும், புதிய பயணிகள் முனைய கட்டிட வேலைகளையும் ஏர்போர்ட் அதாரிடி அண்மையில் முடித்திருக்கிறார்கள். 5000 கோடி ரூ-க்கும் அதிகமான மக்கள் வரிப்பணத்தில் சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் நவீனமயப்படுத்தப்பட்டன. இந்த வேலை முடிந்தவுடன் இப்போது இந்த விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. நவீன தொழில்நுட்பம், உள்கட்டுமானம், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மட்டுமின்றி, இந்த விமான நிலையங்களுக்கு மிகவும் விலைமதிப்புள்ள பரந்துபட்ட நிலங்களும் இருக்கின்றன. இவற்றின் மீது முதலாளிகளுக்கு கண்ணிருக்கிறது. சென்னை விமான நிலையத்திற்கு 2000 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்கள் தனிப்பட்ட முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படும். இந்த நிலங்களை ஐந்து நட்சத்திர விடுதிகளுக்குக் கொடுத்து அதிலிருந்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் இலாபம் சம்பாதிக்க முடியும். இந்த நிலங்கள் தான் முன்னர் ஏழை விவசாயிகளிடமிருந்து, “பொதுத் தேவைக்கு” என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றிவிட்டு கையகப்படுத்தப்பட்டவையாகும்!

தொ.ஒ.கு – கடந்தகால தனியார்மயங்கள் பற்றி உங்களுடைய தொகுப்பு என்ன?

தோழர் எல். ஜார்ஜ் – தொழிலாளர்கள் மற்றும் மக்களுடைய விருப்பங்களுக்கு மாறாக, அரசாங்கம் தில்லி, மும்பை விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்தது. தில்லியில் 2723 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை தனிப்பட்ட முதலாளிக்கு ஆண்டிற்கு ரூ100 வாடகை என கொடுத்து விட்டது. அரசாங்கத்தின் உயர் தணிக்கை அதிகாரியின் (CAG) மிகவும் குறைவான மதிப்பீட்டின் படி, தில்லியில் கொடுக்கப்பட்ட நிலங்களில் வெறும் 240 ஏக்கர் நிலம் மட்டுமே தனிப்பட்ட முதலாளிகளுக்கு 1,63,557 கோடி ரூபாய் இலாபத்தைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு மக்களுடைய சொத்துக்களை அரசாங்கம் தனிப்பட்டவர்களுக்கு தாரை வார்த்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. மும்பை விமான நிலையத்தை ஒட்டியுள்ள கலினா பகுதியிலுள்ள பெரும் நிலங்களும் விமான நிலையத்தை எடுத்துக் கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன!

நாம் யதார்த்த அடிப்படையில் இந்த தனியார்மயப்படுத்தப்பட்ட விமான நிலையங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் மற்றும் வருவாயோடு அவர்கள் அளிக்கும் சேவைகளை ஒப்பிட்டால், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை நாம் அறியலாம். பயணம் செய்யும் பொது மக்களையும், இந்திய மக்களையும் விலையாகக் கொடுத்து, இந்திய அரசாங்கம் இந்த முதலாளிகளைக் கொழுக்க வைத்து வருகிறார்கள்.

மாடர்ன் புட், பால்கோ போன்று பிற துறைகளில் நடைபெற்ற தனியார்மயம், முதலாளிகளுடைய பேராசையையும், அங்கிருந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலையையும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, சென்னை, கொல்கத்தா மற்றும் பிற விமான நிலையங்களை விற்பதற்கு நாம் அனுமதித்தால், நமது தொழிலாளர்களுடைய நிலைமையும் வேறுபட்டதாக இருக்காது. பொதுமக்களுக்கு இதன் பாதிப்பும் தில்லி, மும்பை மற்றும் பிற விமானநிலையங்களில் ஏற்பட்டது போலவே இருக்கும்.

தொ.ஒ.கு – தொழிலாளர்கள் மீது பாதிப்பு எப்படி இருக்கிறது?

தோழர் எல். ஜார்ஜ் – மும்பை, தில்லி, பெங்களூரு, ஐதிராபாத் விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டபோது புதிதாக வரும் தனியார் நிறுவனங்கள் அங்கிருந்த தொழிலாளர்களில் 60 சதவிகிதத்தினரை எடுத்துக் கொள்வார்களென்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதை செய்ய வேண்டுமென அரசாங்கமோ, ஏஏஐ-யோ புதிய நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தவில்லை. இதன் காரணமாக, வேலையின்றி சும்மா இருக்கும் 5000-க்கும் மேற்பட்ட இந்தத் தொழிலாளர்களுக்கு ஏஏஐ ஊதியம் கொடுத்து வருகிறது. மக்களுடைய வரிப்பணத்தைப் பயன்படுத்தி, முதலாளிகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்க அரசாங்கம் வேலை செய்து வருகிறது.

விமான நிலையங்களை நடத்தும் முதலாளிகள், அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக, இளைஞர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையிலோ, தாற்காலிகத் தொழிலாளர்களாகவோ நியமித்து வேலை வாங்கி வருகிறார்கள். அவர்களுக்கு எவ்வித பணி நிரந்திரமும் பாதுகாப்பும் இல்லை. இந்த “நவீனகால விமான நிலையங்கள்”, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் உட்பட எல்லா உரிமைகளையும் மறுத்து கற்கால அடிப்படையில் சுரண்டி வருகிறார்கள்!

இந்தியாவெங்கும் இந்த 123 விமான நிலையங்களில் ஏஏஐ-யின் கீழ் 21,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சென்னை, கொல்கத்தா மற்றும் பிற விமான நிலையங்களை தனியாரிடம் தாரை வார்க்க முயற்சிப்பதன் மூலம், இந்த விமானநிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுடைய தலைவிதியும், எதிர்காலமும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஆட்சியாளர்கள், இந்தியாவை 21-ஆம் நூற்றாண்டிற்கு கொண்டு செல்வதாகப் பேசி வருகிறார்கள். ஆனால் 21-ஆம் நூற்றாண்டு பற்றிய அவர்களுடைய பார்வையானது, சிறுபான்மையான இரத்தம் உறிஞ்சிகளையும், குற்றவாளிகளையும் கொழுக்க வைப்பதற்காக, பெரும்பான்மையான இந்திய மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்குவதாகும். இதற்குப் பெயர் தான் நவீனமயமா? தொழிலாளர்கள் நாங்கள் சொல்கிறோம் - இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏஏஐ தொழிலாளர்கள் நாங்கள் இக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம். ஒரு சிலருடைய சுயநலத்திற்காக, வேலைக்கான எங்களுடைய உரிமையையும், பாதுகாப்பையும், முறையான வாழ்க்கைக்கான உரிமையையும், முன்னேற்றத்தையும் காலில் போட்டு நசுக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பொறாமைப்படுகின்ற அளவிற்கு செல்வங்களையும், சொத்துக்களைக் கொண்டதாக நீங்கள் பார்க்கும் இந்த விமான நிலையங்களை எங்களுடைய கடின உழைப்பினாலும் வியர்வையினாலும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இதை சில குற்றவியலான புல்லர்கள் கொள்ளையடித்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தொ.ஒ.கு – தனியார்மயப்படுத்துவது பயணிகளுக்கு பயனளிக்கும் என்றும், சேவைகளின் தரத்தைக் கூட்டுமென்றும் ஒரு கருத்து இருக்கிறது. தனியார்மயப்படுத்துவதனால் பயணம் செய்யும் பொது மக்களுக்கு பாதிப்பு எப்படி இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

தோழர் எல். ஜார்ஜ் – அரசாங்கம் 2008-இல் விமான நிலையங்கள் பொருளாதார முறைப்படுத்தும் ஆணையத்தை (AERA) உருவாக்கினார்கள். இது விமான நிலையத்தைப் பயன்படுத்துவோருடைய பயன்பாட்டுக் கட்டணங்களையும், பிற கட்டணங்களையும், இந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் தனியாருக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்யும் ஒரே நோக்கத்தோடு தீர்மானிப்பதற்காகச் செயல்படுகிறது. தனிப்பட்ட நிறுவனங்கள், பயன்பாட்டு வளர்ச்சிக் கட்டணம் என்றும், விமான நிலைய வளர்ச்சிக் கட்டணமென்றும் பல்வேறு பெயர்களில் பயணிகளிடமிருந்து கட்டணங்களை வசூலிப்பதை ஏஇஆர்ஏ அங்கீகரித்து சட்டரீதியாக ஆக்கியிருக்கிறது.

எடுத்துக் காட்டாக, தில்லி விமான நிலையம், உள்நாட்டிலே பயணம் செய்பவர்களுக்கு ரூ 860-உம், வெளிநாட்டிற்குச் செல்லும் பயணிகளிடமிருந்து ரூ 2000-க்கும் அதிகமாகவும் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கின்றனர். தில்லி வந்து சேரும் பயணிகளிடமிருந்தும் பணத்தைக் கறக்கிறார்கள். உள்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு ரூ 466-உம், வெளிநாட்டிலிருந்து வந்து சேருபவர்களுக்கு ரூ 990-உம் கட்டணங்களாகும். மும்பையில் உள்நாட்டுப் பயணிகளுக்கு ரூ 618-உம், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரூ 1453-உம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பகற்கொள்ளையோடு ஒப்பிட்டால் ஏஏஐ-யின் கீழுள்ள விமான நிலையங்களில் கட்டணங்கள் ஒன்றுமில்லை என்று கூறலாம்.

இந்த ஆறு விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டால், ஏற்கெனவே தனியார் மயப்படுத்தப்பட்ட தில்லி, மும்பை, பெங்களூரு, ஐதிராபாத் விமான நிலையங்களில் இருப்பது போல, இங்கும் விமான நிலையத்தை நடத்தும் நிறுவனங்களுடைய இலாபத்தை உயர்த்துவதற்காக, பயணிகள் மிக அதிகமான பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இது போலவே, விமான நிறுவனங்கள் விமானங்களைத் தரையிறக்குவதற்கும், நிறுத்துவதற்கும் பிற சேவைகளுக்கும் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஐஏடிஏ (IATA) -வின் படி, உலகில் மிகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிலையங்களில் ஒன்றாக தில்லி விமான நிலையம் இருக்கிறது. விமான நிறுவனங்கள் மீது போடப்படும் இக் கட்டணங்களை, அதிக பயணச் சீட்டுக் கட்டணமாக அவர்கள் பயணிகள் மீது சுமத்துகிறார்கள். எனவே இந்தக் கட்டணங்களும் பயணிகளின் தலையில் தான் விழுகின்றன. நவீன, சர்வதேச தர சேவைகள் என்ற பெயரில் பயணிகள் இந்தக் கட்டணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

சேவைகளை உயர்த்துவது என்ற பெயரில், விமான நிலையங்களை இயக்கும் தனியார் நிறுவனங்களைக்  கொழுக்க வைப்பதற்காக, மக்களைக் கசக்கிப் பிழிகிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுடைய பணத்தில் தான் உருவாக்கப்பட்டன. கடந்த பல ஆண்டுகளில் இத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களுடைய உழைப்பின் மூலம் மிகப் பெரிய அளவில் வளங்களையும், சொத்துக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இந்தச் செல்வங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள். நம்முடைய சொந்த சொத்துக்களை நாம் குற்றவாளிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் எப்படிப் பாதுகாப்போமோ அது போலவே, இந்திய மக்கள் விழித்தெழுந்து தங்களுடைய பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். மக்கள் திரண்டெழுந்து இந்தக் குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் எதிர் வரும் காலங்களில் மக்களுக்குச் சேவை செய்வதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தொ.ஒ.கு – நீங்கள் என்னென்ன போராட்டங்களை நடத்திவருகிறீர்கள்?

தோழர் எல். ஜார்ஜ் – ஆட்சியாளர்களுடைய தொழிலாளர் விரோத, தேச விரோத முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன்களுடைய கூட்டு அமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்தத் தனியார்மயத்திற்கு எதிராக எல்லா முக்கிய விமான நிலையங்களிலும் உள்ள எங்களுடைய வளாகங்களில் வாயிற் கூட்டங்களையும், நண்பகல் ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகிறோம். கருப்புப் பட்டையணிந்து பெரும் எண்ணிக்கையில் ஏஏஐ-யின் தொழிலாளர்களும், அதிகாரிகளும் இந்த ஆர்பாட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தை எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ள ஜிஎம்ஆர், ஜிவிகே, கொச்சின் இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் லிமி, ஃபிராபோர்ட், லார்சன் & டியூம்ரோ, ரிலையன்சு மற்றும் துருக்கியிலிருந்து செலிபி ஓல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அக்டோபர் 8 அன்று விமான நிலைய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்த சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தின் வளங்களையும், செயல்பாடுகளையும் பார்வையிட அவர்கள் வந்து போது, நாள் முழுவதும் நாங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம். உள்நாட்டு வருகை முனையத்தில் நுழைந்து நாங்கள் காலை 9 மணியிலிருந்தே ஆர்பாட்டத்தை நடத்தினோம். ஒலி பெருக்கிகளை ஏந்தி, கருப்புக் கொடிகளை வீசி, மத்திய தொழற் பாதுகாப்புப் படையோடு சண்டையிட்டு முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம். 1500-க்கும் மேற்பட்ட எங்கள் ஊழியர்களும் தொழிலாளர்களும் இதில் பங்கேற்றனர். வந்திருந்த இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு, அவர்கள் வளாகத்தைப் பார்வையிடுவதைத் தடுத்து நிறுத்தினோம். அவர்களோடு கூட்டம் கூட நடத்த இயலாத நிலையில் நிர்வாகம் அவர்களை விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் சென்று கூட்டத்தை நடத்தினார்கள்.

அக்டோபர் 22 ஆம் தேதியிலிருந்து நாங்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். அக்டோபர் 25 அன்று எங்களுடைய எல்லா வளாகங்களிலும் மெழுகுவர்த்தி அணிவகுப்பை நடத்தினோம். இந்தப் பேரணியில் தொழிலாளர்களும், ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். விரைவில் எல்லா விமான நிலையங்களிலும் உள்ள விமான நிலையப் பொறுப்பாளரை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நியாயமான போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள், தொழிலாளி வர்க்கக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களிலிருந்து எங்களுக்கு பெரும் ஆதரவு வந்திருக்கிறது. தொழிலாளர்களுடைய நலன்களையும், எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காகவும், விமான நிலையங்களையும் அதன் வளங்களையும் சுயநலக் கிருமிகள் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தொ.ஒ.கு – ஏஏஐ ஊழியர்களுடைய இந்தப் போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். தொழிலாளர் ஒற்றுமை குரல் தனியார்மயத்தை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. மாடர்ன் புட் இன்டஸ்டிரிஸ், பால்கோ, ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் மற்றும் பிற நிறுவனங்கள் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தப் போராட்டத்தை நாங்கள் வீரத்தோடு ஆதரித்து வந்துள்ளோம். தொழிலாளர்கள் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். நன்றி