நடப்பு பருவ கால நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1450 என்றும், சதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1410 என்றும் மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இத்துடன் மாநில அரசின் ஊக்கத்தொகை சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 70-உம், சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 50-உம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருட காலத்தில் வேளாண்மை உற்பத்தி செலவுகள் பல மடங்கு கடுமையாக அதிகரித்துள்ள நிலைமையில் மத்திய அரசின் கொள்முதல் விலை அறிவிப்பும், மாநில அரசின் ஊக்கத் தொகையும் அர்த்தமற்ற கண்துடைப்பு நடவடிக்கையே ஆகும்.

சென்ற வருடத்தைவிட உரம், பூச்சி மருந்து, நெல் நடவு எந்திரத்தின் வாடகை, தொழிலாளர்களின் சம்பளம் ஆகிய அனைத்தும் அதிகரித்துள்ளன. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு போக நெல் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு தேவைப்படும் உழைப்பு அனைத்தையும் மத்திய அரசும், மாநில அரசும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் பரிசீலிக்கவில்லை.

உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் கூடுதலாக கணக்கிட்டு கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற தேசிய விவசாயிகள் ஆணையப் பரிந்துரையை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. பல்வேறு விசயங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் தமிழக முதல்வர் செயலலிதா நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு அதிகரிக்க கோரி கடிதம் கூட அனுப்பாதது ஏன்? பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த ஒரு வருட காலத்தில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய் சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு இந்திய விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை.

மத்திய - மாநில அரசின் நெல் கொள்முதல் விலை அறிவிப்பை கண்டு நம்பிக்கை இழந்துவிடாமல் விவசாயிகள் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருப்பதை போராட்டத்தின் மூலமாக அரசுக்கு புரிய வைக்க வேண்டும்.

விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு கட்டுபடியாகக் கூடிய கொள்முதல் விலையை மத்திய அரசும் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் விலை ரூ. 3000 என்று நிர்ணயம் செய்திட வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) வலியுறுத்துகிறது.