காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் 2007 பிப்ரவரி 5, தீர்ப்பு இறுதியில் உச்ச நீதி மன்றம் விதித்த கெடு முடிவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் 2013 பிப்ரவரி 19 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

கர்நாடகாவில் தேர்தல் நடப்பதற்கு இரு மாதங்களே உள்ள நிலையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இது, இந்த நேரத்தில் எல்லா பக்கங்களிலும் உணர்வுகளைத் தூண்டிவிட வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்வதில் கர்நாடகாவிற்கும், தமிழ் நாட்டிற்கு இடையில் இருந்து வரும் இந்த வெகுநாளைய பிரச்சனைக்குத் எந்த நியாயமான தீர்வும் கிடைக்கக் கூடாதென்பதை உறுதி செய்வதற்கும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

நாகரிகத்தின் பிறப்பிடமாக நதிகள் இருக்கின்றன. அவைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்குடியினருக்கும், தேசிய இனங்களுக்கும், தேசங்களுக்கும் பிறப்பளித்திருக்கின்றன. தங்களுக்கு வாழ்வளித்திருக்கும் நதிகளைப் போற்றி தேசங்களும் மக்களும் அவற்றிற்கு மதிப்பளிக்கின்றனர். முதலாளித்துவம் தன்னுடைய கடைசி கட்டமாகிய ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற்றிருக்கின்ற நிலையில், எல்லாமே ஒரு தனிப்பட்ட சொத்தாகவும் அதிகபட்ச ஏகபோக இலாபத்திற்கான ஆதாரமாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இது உலகெங்கிலும் நதி நீரைப் பயன்படுத்துவதில் எண்ணெற்ற பூசல்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இடையே எண்ணெற்ற நதி நீர் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்திய அரசாங்கமும், தன்னுடைய அண்டை நாடுகளுடன் - ஜெலும் நதி தொடர்பாக பாகிஸ்தானுடனும்,  டீஸ்டா நதி தொடர்பாக வங்காளதேசத்துடனும், பல்வேறு நதிகள் தொடர்பாக நேபாளத்துடனும் மற்றும் பிரம்பபுத்திரா நதி தொடர்பாக சீனாவுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகிறது. காவிரி நதி நீர்ப் பிரச்சனையானது வெகுகாலமாக தொடருகின்ற, கடுமையான பூசல்கள் நிறைந்த பிரச்சனையாக இந்தியாவிற்குள் இருக்கிறது.

கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் காவிரி நதி ஒரு முக்கிய நதியாகும். இவ்விரு மாநிலங்களிலும் விவசாயத்திற்கான உயிரோட்டமாக காவிரி இருந்து வருகிறது. கேரளாவும், புதுச்சேரியும் கூட இந்தப் பிரச்சனையில் அங்கம் வகிக்கின்றனர். காவிரி முழுமையாக பயன்படுத்தப்பட்டு வரும் நதியாகும். எனவே, மேல் நதிப்படுகை மாநிலமாக இருக்கும் கர்நாடகா தன்னிச்சையாக அதிக நீரைக் கைப்பற்ற முடிவெடுக்குமானால், அது கீழ் நதிப்படுகை மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவைக் குறைக்கும். இது தமிழ் நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ் மெட்ராஸ் மாகாணமும், மைசூர் சிற்றரசும் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து 1892 இலும், 1924 இலிலும் ஒப்பந்தங்களை நிறைவேற்றியிருக்கின்றன. பிரிட்டிஷ் காலனியர்கள் தங்களுடைய மேலாதிக்க நிலையையும், மைசூர் ஒரு சிறிய நாடு என்பதையும் பயன்படுத்திக் கொண்டு, மைசூர் மக்களுடைய நலன்களுக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தைத் திணித்திருக்கிறது. அரசியல் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ வளர்ச்சி பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இந்திய அரசாங்கம் ஒரு கொள்கை அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. ஒரு மாநிலத்தை மற்றொன்றிற்கு எதிராகத் தூண்டிவிட்டு, பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்குமாறு அது செய்து வந்திருக்கிறது. பல்வேறு முதலாளித்துவ கட்சிகளும், தங்களுடைய குறுகிய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிரச்சனையைச் சூழ்ச்சியாகக் கையாண்டு, மக்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டு வந்திருக்கின்றனர்.

1924 காவிரி ஒப்பந்தமானது, 1974 இல் முடிவடைய வேண்டியதாகும். மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சனைகள் சட்டம் 1968, பிரிவு 3-இன் கீழ், காவிரி நதி நீர்ப் பிரச்சனையை இந்திய அரசு ஒரு தீர்ப்பாயத்திற்கு அனுப்ப வேண்டுமென தமிழ்நாடு தன்னுடைய கோரிக்கையை முறைப்படி கேட்டுக்கொண்டது. அந்த நேரத்தில் காங்கிரசு அல்லாத முதல் அரசாங்கம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. கர்நாடகாவானது காங்கிரசு கட்சியால் ஆளப்பட்டு வந்தது. மத்தியில் ஐக்கிய முன்னணிகளுடைய காலம் 1996-இல் துவங்கும்வரை, புது தில்லியில் தமிழகத்திற்கு செல்வாக்கு இருக்கவில்லை. காவிரியில் கர்நாடகா பல்வேறு அணைகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு மறைமுகமாக அனுமதி அளித்து வந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு கணிசமாகக் குறைந்தது.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் காரணமாக சூன் 1990-இல், ஒரு தீர்ப்பாயமானது மத்திய அரசால் அமைக்கப்பட்டது. 1991-இல் இந்தத் தீர்ப்பாயம் தன் முதல் ஆணையைப் பிறப்பித்தது. உடனடியாக காங்கிரசு கட்சியும், சில வட்டார முதலாளித்துவக் கட்சிகளும் தலைநகரமான பெங்களூரு உட்பட கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல்களையும் படுகொலைகளையும் திட்டமிட்டு நடத்தினர். தமிழர்களுக்குச் சொந்தமான பல கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர்களால் கொல்லப்பட்டனர். தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். பல தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. தொழிற்பேட்டைகளில் தமிழர்களுக்குச் சொந்தமான பல தொழிற்கூடங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. தமிழ் மக்களுடைய 15,000 குடிசைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த நேரத்தில் ஏறத்தாழ 2 இலட்சம் தமிழ்த் தொழிலாளர்கள் கர்நாடகாவை விட்டு ஓட வேண்டியதாகியது.

காவிரி தீர்ப்பாயம் தன்னுடைய முடிவை 2007-இல் வெளியிட்டது. நிலைமையை மாற்றமின்றித் தொடர வேண்டுமென்பதை அது வலியுறுத்தியது. தீர்ப்பாயத்தின் இந்தப் பரிந்துரைகள் மேல் எவ்வித நடவடிக்கையும் இன்றி, ஐமுகூ அரசாங்கம் ஆறு ஆண்டுகளுக்குக் கிடப்பில் போட்டது.

காவிரி நதி நீர் தீர்ப்பாயம் அமைப்பதைத் தீர்மானிப்பதற்கு 22 ஆண்டுகள் ஆகின. இந்தத் தீர்ப்பாயம் தன்னுடைய முடிவை வெளியிட 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த முடிவை அரசிதழில் வெளியிட மத்திய அரசிற்கு 6 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன!

நம்முடைய நாட்டின் ஆட்சியாளர்களுக்குக் காவிரி பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்ற எந்த நோக்கமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மாறாக, இந்தப் பிரச்சனையை எந்த நிலைக்கும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஏதாவதொரு பிரிவு மக்களுக்கு எதிராக குறுங்குழுவாத வன்முறையை திட்டமிட்டு நடத்துவதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு சேர பயனளிக்கக் கூடிய ஒரு தீர்வை மக்கள் உருவாக்குவதற்கு அவர்கள் தடையாக நிற்கிறார்கள்.

காங்கிரசு, பாஜக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல்வேறு வட்டார முதலாளித்துவக் கட்சிகளும் இந்த நேரத்தில் விவசாயிகளுடைய பாதுகாப்பற்ற நிலையில் குளிர்காய்ந்து ஆதாயம் தேடி வருகிறார்கள். பிரச்சனையை ஊதித் தீவிரப்படுத்தி அதன் மூலம் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயன்று வருகிறார்கள்.

முதலாளி வர்க்கமும், அவர்களுடைய கட்சிகளும் விரித்திருக்கும் வலையில் கர்நாடக - தமிழக விவசாயிகளும், தொழிலாளர்களும் வீழ்ந்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். காவிரி நதி நீர்ப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய ஒற்றுமையைக் கட்டுவதும், இந்த இரு மாநில மக்களிடையே ஐக்கியத்தை வலுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும்.

இன்றிருக்கும் இந்தியக் குடியரசு, காலனிய பாரம்பரியத்தைக் கொண்டதாகவும் ஏகாதிபத்தியமாகவும் இருக்கிறது. அது மிகப் பெரிய முதலாளித்துவ ஏகபோகங்களின் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறது. பல்வேறு தேசங்களின் நலன்களை ஒன்றுடன் ஒன்றும், சமுதாயத்தின் பொதுவான நலன்களோடும் இணக்கப்படுத்தும் ஒரு தொழிலாளர்கள் விவசாயிகளுடைய தன்னார்வ குடியரசை நிறுவும் நோக்கத்தோடு நாம் போராட வேண்டும்.