மே 18, 2013 அன்று தோழர் சர்மா அவர்கள் நினைவாக ஒரு கூட்டத்தை தில்லி ஏஐடியுசி ஏற்பாடு செய்திருந்தது. அரங்கத்தில் ஏஐடியுசி கீழ் இணைந்துள்ள தொழிற் சங்கங்கள், சிபிஐ-னுடைய உறுப்பினர்கள், மற்றும் பிற கட்சிகளுடைய தொழிற் சங்கங்கள் நிறைந்திருந்தனர். தோழர் சர்மா அவர்களுடைய நண்பர்களும், குடும்பத்தினரும் அங்கு வந்திருந்தனர். இக்கூட்டத்தில் கம்யூனிஸ்டு கெதர் கட்சினுடைய பிரதிநிதிக் குழு பங்கேற்றது. ஏஐசிசிடியு மற்றும் ஏஐயுடியுசி-யின் பிரதிநிதிகளும் வந்திருந்தனர். முனிசிபல் கார்பரேசன் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராம்ராஜ் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஏஐடியுசி தில்லி செயலாளர் தோழர் டி.சர்மா கூட்டத்தை நடத்தினார். தோழர் சர்மாவின் வாழ்க்கையில் தாங்கள் அறிந்த உண்மைகளைப் பற்றி தொழிற் சங்கத்திலிருந்த நண்பர்கள், அவரோடு சேர்ந்து நின்றுப் போராடிய தோழர்கள், நலம் விரும்பிகள் மற்றும் கட்சியின் தோழர்கள் என பல்வேறு பேச்சாளர்களும் எடுத்துரைத்தனர்.

கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் சார்பிலும், தொழிலாளர் ஒற்றுமைக் குழுவின் சார்பிலும் தோழர் பிரகாஷ் ராவ் தோழர் சர்மாவின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களை வலுப்படுத்த தொழிற் சங்கங்களுடைய கூட்டு முன்னணியைத் திரட்டுவதற்காக தோழர் சர்மா மேற்கொண்ட முயற்சிகள் நாம் நினைவில் எப்போதுமே இருக்குமென அவர் கூறினார். தில்லியில் தொழிலாளர் அமைப்புகளுடைய கூட்டு செயற்குழுவின் மிகவும் திறமை வாய்ந்த தலைவராகவும், அதன் அமைப்பாளராகவும் தோழர் சர்மா கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்திருக்கிறார்.

இக் குழுவின் வேலைக்குத் தலைமை தாங்கி நடத்தி வருகையில் தோழர் சர்மா அவர்கள் அதில் குறுகிய அல்லது குறுங்குழுவாத கண்ணோட்டத்திற்கு இடந்தராமல் செயல்பட்டார். கூட்டு நடவடிக்கைகளில், தத்துவார்த்த வேறுபாடுகள் தொழிலாளர்களுடைய அமைப்புக்களின் ஒற்றுமையை பாதிக்க அவர் அனுமதிக்கவில்லை.

தோழர் சர்மா அவர்களுடைய தலைமையில் தில்லி தொழிற் சங்கங்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகள் காரணமாகவே தில்லி அரசாங்கம் பஞ்சப் படியை ஆண்டுக்கு இருமுறை தர நிர்பந்திக்கப்பட்டது என்பதை சிபிஐ-யின் அனுபவம் வாய்ந்த தலைவர் தோழர் எம்.எம்.கோப் எடுத்துக் கூறினார். சிபிஐ மற்றும் ஏஐடியுசி-னுடைய செயலாளர் அமரதீப் கௌவுர் தோழர் சர்மாவின் வேலைகளையும் அவருடைய பண்புகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் யுவா மோர்ச்சா-வைச் சேர்ந்த மகேஷ் ராத்தி, என்எப்ஐடபிள்யூ -வைச் சேர்ந்த பிலோமினா ஜான், ஓட்டல் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சீதாராம் மிஸ்ரா, அரசு பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜி.எல்.தார், ஏஐசிசிடியு-வைச் சேர்ந்த சங்கரன், ஏஐயுடியுசி-வைச் சேர்ந்த அரிஷ் தியாகி, மருத்துவமனைப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த டீக்கா ராம் சர்மா ஆகியோரும் மற்றும் பலரும் கூட்டத்தில் பேசினர். தோழர் சர்மா அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு கூட்டம் முடிவுற்றது.