தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்கள், சூன் 16 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பேரூர்களிலும் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டங்களை நடத்தினர். 

மாநிலம் முழுவதிலும், 96,000 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென ஆசிரியர்கள் கோருகின்றனர். எல்லா நிலைகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆறாவது ஊதியக் குழுவின் பயன்கள் கிடைக்க வகை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்கின்றனர். ஓய்வூதியத் திட்டம், முப்பது மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் போன்றவை அவர்களுடைய பிற கோரிக்கைகளாகும். 10 பள்ளிகளுக்கு ஒரு மன வள அறிவுரையாளர் என்ற அடிப்படையில் அவர்களை நியமனம் செய்ய வேண்டும். தரமான கல்வியை அளிப்பதற்காக, கல்வித் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதும் அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்றாகும்.