மக்களுடைய சொத்துக்களை விரைவாக கொள்ளையடிக்கவும், திருடவும் வழியமைக்கப்படுகிறது

நிலத்தைக் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிவற்றிற்கான உரிமை மற்றும் வெளிப்படத்தன்மை மசோதா, 2011 என்ற தலைப்பிடப்பட்டுள்ள புதிய நிலம் கையகப்படுத்தல் மசோதா மீது "அனைத்துக் கட்சிகளுடைய ஒருமித்த கருத்தை", ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கூறி வருகிறது. இது பாராளுமன்றத்தில் வரும் மழைக் கால கூட்டத்தொடரில் மசோதாவை அறிமுகப்படுத்த உதவும். இந்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை என்றால், ஒரு தனி ஆணை மூலம் அதை அமலுக்குக் கொண்டு வருவோமென அரசாங்கம் முன்னர் மிரட்டி வந்தது.

1894 காலனிய கால நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் இழிவான விதிகள் கீழ் காலனிய காலத்திலும் காலனியத்திற்குப் பிந்தைய காலத்திலும் இலட்சக்கணக்கான மக்களுடைய நிலங்கள் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டன. இப்படிக் கைப்பற்றப்பட்ட நிலங்கள், பொதுத் துறையிலும், தனியார் துறையிலும் தொழிற்சாலைகளை மலிவான விலையில் கட்டுவதற்காகவும், அணைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், சுரங்கங்கள் கட்டுவதற்கும், இராணுவப் படைகளுக்காகவும், நெடுஞ்சாலைகளுக்காகவும் முதலாளி வர்க்கமும், அதனுடைய அரசாங்கமும் பயன்படுத்தியது. பரந்துபட்ட "பொது நலன்" என்ற பெயரில் எண்ணற்ற குடும்பங்கள் வேரோடு பிடுங்கி ஆதவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த பயனையும் அடையவில்லை. இச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 1894 காலனிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு மாற்றாக இப்போதைய மசோதா இருக்குமென கருதப்படுகிறது.

தற்போதைய தனியார் மற்றும் தாராளமயமாக்கல் திட்டங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோக முதலாளி வர்க்கத்தின் நிலத்திற்கான தேவையை கடுமையாக அதிகரித்துள்ளது. சுரங்கத்திற்காகவும், தொழிற் "பேட்டைகளுக்காகவும்", தொழிற் "பூங்காக்களுக்காகவும்" பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகவும் விவசாய தொழில்களுக்காகவும் மற்றும் முற்றிலும் ஊக நில வர்த்தக வளர்ச்சிக்காகவும் நிலம் தேவைப்படுகிறது. அடுத்த 15-20 ஆண்டுகளில், 64 லட்சம் ஹெக்டேர் விவசாய தொழில்களுக்காகவும், 70 லட்சம் ஹெக்டேர் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும், 23 லட்சம் ஹெக்டேர் சுரங்க மற்றும் பிற பிரித்தெடுத்தல் திட்டங்களுக்காகவும் தேவைப்படுமென ஆய்வுகள் எதிர்பார்க்கின்றன.

தங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக, முழு கிராமங்களும், சமூகங்களும், ஆடவர், பெண்கள், சிறுவர்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வருகிறார்கள் என்பது கடந்த கால அனுபவம் ஆகும். இதன் விளைவாக இப்படி பேராசையோடு நிலம் கைப்பற்றப்படுவதற்கு எதிரான போராட்டமானது, நாட்டில் நடைபெறும் மிகக் கடுமையான போராட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போதைய மசோதா, பல்வேறு வரைவுகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு வரைவுக்கும், "பொதுத் தேவைகள்" என்ற திரையின் பின்னால் மக்களுடைய ஒப்புதலின்றி, நிலங்களைக் கையகப்படுத்த முடியாதென அறிவித்துள்ள நாடெங்கிலும் உள்ள விவசாயிகள், பழங்குடி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து இடைவிடாத பெருமளவிலான எதிர்ப்பு வந்திருக்கிறது. பெரும் நிறுவனங்கள் நிலத்தை அபகரிப்பதைச் சட்டரீதியாக ஆக்கவும், நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறையை மக்கள் போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தும் அபாயத்தைக் குறைக்கவும் இந்த புதிய சட்டத்தை உருவாக்குமாறு பெருகிவரும் மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றன.

1894 சட்டம் போலன்றி இந்த மசோதா நில உடமையாளர்களுக்கும், அந்த நிலத்தின் மீது வாழ்வாதாரத்தை கொண்டுள்ள மற்றும் சிலருக்கும் கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த புதிய மசோதா ஒரு "வெற்றியென" அரசாங்கத்தால் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் புதிய மசோதாவும், பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான மக்களுடைய வாழ்வாதாரத்திற்கான உரிமையை காலில் போட்டு நசுக்கி, நிலங்களை எளிதாகவும், மிகக் குறைந்த விலையிலும் முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் அதே நோக்கத்தைக் கொண்டதாகும்.

பெருகி வருகின்ற மக்கள் தொகைக்குப் போதுமான உணவை உறுதி செய்யவும் கிராமப்புற மக்களுடைய வாழ்க்கைத் தரம் நிலையாக உயர்வதை உறுதி செய்யவும், வேளாண்மை ஒரு பக்கமும், தொழில்களும் சேவைகளும் மறு பக்கமும் இணக்கதோடு வளர்ச்சி பெறும் தேவையையும் இந்த மசோதா முழுவதுமாக புறக்கணிக்கிறது. முதலாளித்துவ ஏகபோகங்கள் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதற்காக அவர்களுக்குத் தேவையான நிலங்களைக் கைப்பற்றுவதை உறுதி செய்வதே இந்தப் புதிய மசோதாவின் பின்னணியில் உள்ள நோக்கமாகும்.

தனியார் திட்டங்களுக்கு 80% மக்களுடைய ஒப்புதல் வேண்டும் என்வும், பொது - தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு 70% மக்களுடைய ஒப்புதல் வேண்டுமெனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ள வழிவகை குறித்து அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் திட்டங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பொதுத் துறை உள்கட்டுமானத் திட்டங்களுக்கு எந்த ஒப்புதலும் முன்கூட்டிப் பெற வேண்டிய அவசியம் இல்லை.

அது போலவே, நில உடமையாளர்களும், சில சந்தர்ப்பங்களில் வாடகை இருப்பவர்களும் மற்றவர்களும் கூட சட்டரீதியான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள் என்பதும் பெரிதுபடுத்திப் பேசப்படுகிறது. ஆனால் கைப்பற்றப்படுவதில் மிகப் பெரிய பங்கானது பொதுவான நிலங்களாகும். அதற்கு எந்த “உடைமையாளரும்“ இல்லை. இதில் “பயனற்ற கரம்பு நிலங்கள்“, மேய்ச்சல் நிலங்கள், காடுகள், தண்ணீர் நிலைகள் மற்றும் கிராமங்கள் அடங்கும். இந்தப் பொது நிலங்களைச் சார்ந்து இலட்சக்கணக்கான மக்கள் நம் நாட்டில் உயிர் பிழைத்து வருகின்றனர். இப்போது நடைபெற்றுவரும் கடுமையான போராட்டங்களில் பல, மக்கள் தங்களுடைய பாரம்பரிய பொது நிலங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதற்கு எதிராக நடைபெற்று வருகின்றன. மக்களுடைய பொது நிலங்களைப் பாதுகாக்க இந்த மசோதாவில் எதுவும் கூறப்படவில்லை.

அணுசக்தி சட்டம் 1962, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956, சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் 2005 போன்ற 16 சட்டங்களை இந்தப் புதிய மசோதா தன் வரையரையிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. ஏப்ரல் 2007-இல் ஐமுகூ அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியதன் காரணமாக, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயிகள், உழைக்கும் குடும்பங்களுடைய கைகளில் இருந்து பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் கைகளுக்கு மாறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தின் கீழ் நிலம் அபகரிக்கப்படுவது முன் போலவே தொடரும். இந்த மசோதா சட்டமானால், அணுசக்தித் திட்டங்களுக்காகவும், நெடுஞ்சாலைகளுக்காகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் தங்களுடைய நிலம் முறையற்று கைப்பற்றப்படுவதை எதிர்த்துப் போராடிவரும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது. அதாவது, பெரும் எண்ணிக்கையில் அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் சட்டரீதியாக எதுவும் கிடைக்க முடியாது.

நிலத்தைக் கைப்பற்றுவது பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னர், நடத்தப்பட வேண்டிய சமூக பாதிப்பு பற்றிய கணிப்பில் கிராம சபைகளை ஈடுபடுத்துவது பற்றி இந்த மசோதா பேசுகிறது. இப்போது இருப்பது போல, பல்வேறு தரப்பினரின் ஆலோசனையை கேட்கவோ அல்லது கேட்காமலோ போகலாம். ஆனால் ஒப்புதலுக்கான இறுதி முடிவானது மக்களால் அல்ல, அதிகாரிகளால் தான் கொடுக்கப்படுகிறது.

வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு மட்டுமின்றி, அவர்கள் அந்தத் திட்டங்களின் மூலம் நேரடியாகப் பயனடைய வேண்டுமென்றும், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் முன்னைப் போலவோ அல்லது முன்னைக் காட்டிலும் உயர்வானதாகவோ இருக்க வேண்டுமென்ற நோக்கம் வாயளவில் பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட இலட்சக் கணக்கான மக்களுடைய அனுபவமோ நேரெதிரானதாகும். இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணங்கள், மசோதாவின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள கொள்கை நோக்கத்தோடு நிறுத்தப்பட்டுவிடுகிறது. இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு வழிமுறைகளோ, அவை நிறைவேற்றப்படாவிடில் பதில் சொல்ல அதிகாரிகளை கடமைப் பட்டவர்களாகவோ கூறப்படவில்லை. இப்படிப்பட்ட வழிமுறைகள் இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுடைய மறுவாழ்வு பிரச்சனை இத்தனை ஆண்டுகள் இருந்து வந்தது போலவே தீர்வு இன்றி மேலும் தொடரும்.

இந்த மசோதா, நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறையை நீடிக்கும் எனவும் கையகப்படுத்துவதற்கு முன்பைக் காட்டிலும் அதிகம் செலவாகுமெனவும் முதலாளி வர்க்கம் குறை கூறியிருக்கிறார்கள். இந்த மசோதா கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பில், நாடெங்கிலும் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நில முதலைகளாலும், இலாபமடிப்பவர்களாலும், ஊகக்காரர்களாலும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளும், அவர்களுடைய முகவர்களும் குடும்பத்தினரும் ஆவர். மசோதாவின் இறுதி வடிவத்திற்குப் பொறுப்பாளியான அமைச்சர் - ஜெய்ராம் ரமேஷ் தெளிவாகக் கூறியிருக்கிறார் - “இந்த புதிய மசோதா, நாம் முதலீட்டாளர்களுடைய எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதில் கவனம் செலுத்துகிறது“. மக்களுடைய நிலங்கள் கைப்பற்றப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கமும், முதலாளி வர்க்கமும் “வளர்ச்சிக்கு இது அவசியமென்ற“ பல்லவியைச் சேர்ந்து பாடி, இதை நியாயப்படுத்துகின்றனர். தங்களுடைய பாரம்பரிய நிலங்களிலிருந்து மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கும், அவர்கள் மாட்டு மந்தைகளைப் போல விரட்டியடிக்கப் படுவதற்கும், தொழிற்சாலைகளிலும், கட்டுமானப் பணிகளிலும், சுரங்கங்களிலும் கூலித் தொழிலாளர்களாக அல்லது வேலையற்ற பெரிய படையில் ஒரு அங்கமாக தங்கள் வாழ்நாட்களைக் கடத்தத் தள்ளப்படுவதற்கும் மாற்று இல்லையென அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த மசோதாவானது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். காலனிய 1894 நில கையகப்படுத்தும் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். இச் சட்டத்தின் கீழ் நிலம் வாங்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தைப் பயன்படுத்தும் பல்வேறு பயனாளிகளுடைய நலன்களை ஒன்றோடு ஒன்றையும், சமுதாயத்தின் பொது நலன்களோடும் இணக்கப்படுத்துவதாக புதிய நிலச் சட்டம் அமைய வேண்டும். நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழும் விவசாயிகள் மற்றும் பிறருடைய வாழ்வாதாரத்திற்கான உரிமை மிகவும் முக்கியமானதென்பதை புதிய சட்டம் அங்கீகரிக்க வேண்டும். அது உழவர்கள், காட்டில் வாழும் மக்கள், பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக நிலத்தைப் பயன்படுத்துவோருடைய உரிமைகளை சட்டம் பாதுகாக்க வேண்டும்.

பேராசை கொண்ட முதலாளித்துவ நலன்களுக்குத் தடையிடுவோமானால், பல்வேறு பிரிவு மக்களுடைய நலன்களை இணக்கப்படுத்த முடியும். தனிப்பட்ட இலாபம் சம்பாதிப்பவர்களையும் ஊகக்காரர்களையும் திருப்திபடுத்துவதற்காகச் செயல்படுவதற்கு பதிலாக, பொருளாதாரமானது எல்லா உழைக்கும் மக்களுடைய தேவைகளையும், அதிர்ச்சிகளும் நெருக்கடிகளும் இல்லாமல் சமுதாயத்தின் தொடர்ந்த மறுஉற்பத்தித் தேவைகளையும் நிறைவு செய்வதற்காக மாற்றியமைக்கப்பட வேண்டும்.