சென்னை மக்களுடைய மனித நேயத்தைப் போற்றுவோம்!

சென்னை நகரிலும், காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் நவம்பர் 30, மற்றும் டிசம்பர் 3 இல் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், வீடுகளை இழந்தும், அவர்கள் உழைத்துச் சேர்ந்த எல்லாவற்றையும் இழந்தும் துயரத்தில் வாடும் மக்களுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னையை கடந்த சில நாட்களாக உலுக்கிய இந்த பேரழிவுக்கும், கடுந்துயரங்களுக்கும் இடையேயும் சென்னை மக்களுடைய மனப்பான்மை உயர்ந்து நின்றது.

அனைத்தையும் சில மணி நேரங்களில் இழந்து பல்வேறு அத்தியாவசியத் தேவைகளில் வாடிய மக்களுக்கு, பிற சென்னை மக்கள் தங்களுடைய வீடுகளையும், இதயத்தையும் முழுவதுமாகத் திறந்து விட்டனர். தங்குவதற்கு இருப்பிடத்தையும், உணவையும் தேடிய எவருக்கும், தங்க இடமும், பிற தேவைகளையும், வெள்ளத்தால் அதிக பாதிப்படையாதவர்கள் சிறிதும் தயக்கமின்றி கொடுத்துக் காத்தனர்.

இந்த பேரழிவுக்கு முன்னர் பின்பின் அறியாதவர்கள், மீட்புக் குழுக்களை தம்மிடையே தன்னிச்சையாக அமைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்தனர். வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து நடுத் தெருவிலே நின்ற மக்களை, பெரிய வாகனங்களைக் கொண்டிருந்தவர்கள் கூட வெள்ள நீருக்கு இடையே ஓட்டிச் சென்று அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

வீடுகளுக்குச் சென்று சேர்வதற்காக பாய்ந்து செல்லும் வெள்ளத்தில் போராடி பல மையில்கள் தூரம் கடந்து சென்ற மக்களுக்கு, தன்னார்வலர்கள் இரவு முழுவதும் உணவு தயாரித்து உணவுப் பொட்டலங்களை பசித்த மக்களுக்கு வழங்கினார்கள்.

மருத்துவர்களும், செவிலியர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்களுடைய ஆம்புலன்சு வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்று, தங்கள் மருத்தவமனை வளாகத்தில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்கியிருக்கின்றனர். சென்னை மீனவர்கள் தங்களுடைய படகுகளை மணிக்கணக்கில் துடுப்பு போட்டுச் சென்று, வெள்ளத்தில் செல்ல வழியின்றித் தத்தளித்தவர்களைக் காப்பாற்றினார்கள்.

புற நகர்ப் பகுதிகளிலிருந்து, மீனவர்கள் தன்னார்வமாக தங்கள் படகுகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு சென்று ஒரு திட்டமிட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம், வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மக்களை அன்று காலையில் மீட்டிருக்கின்றனர்.

யாருக்கும் உதவி வேண்டுமா அல்லது தங்க இடம் வேண்டுமா என்று கேட்டு நூற்றுக் கணக்கானவர்கள் தங்களுடைய வீட்டு முகவரிகளை இணைய தளத்தின் மூலம் அறிவித்தனர். இணைய தளத்தோடு தொடர்பில் இருந்தவர்கள், கைபேசிகளில் பேசுவதற்கு மீதித் தொகையோ, மின்சாரமோ இல்லாதவர்களுக்கு ரிசார்ஞ் செய்து தர முன்வந்தனர்.

பெங்களூரு மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பல வெளி நாடுகளிலுள்ள மக்களிடமிருந்தும் அப்படிப்பட்ட உதவிகள் வந்துக் குவிந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடும்பங்களையும் நண்பர்களையும் தொடர்பு கொள்ளவும், உதவி வழங்கவும் வழி வகை செய்ய அவர்கள் தகவல் மையங்களாகச் செயல்பட்டனர். சரியான நேரத்தில் செய்யப்பட்ட இந்த உதவிகள் காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய உயிர்கள் காக்கப்பட்டன.

நாம் யாருக்கு உதவி செய்கிறோம், அவர் கிருத்துவரா, இந்துவா, முஸ்லீமா அல்லது எந்த சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் இந்த மக்கள் ஒரு நொடி கூடி சிந்திக்கவில்லை. துயரத்தில் வாடிய சக மக்களுக்கு சென்னை மக்கள் தங்கள் வீடுகளை முழுவதுமாகத் திறந்து விட்டனர்.

இந்த வெள்ளத்தின் போது மக்கள் ஆற்றிய நம்பமுடியாத பல வீரமான நிகழ்வுகள் வெளிவந்திருக்கின்றன.

இன்னொருவர் தேவையில் துடித்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு உதவுவது என்பது பெரும்பான்மையான நமது மக்களுக்கு இயற்கையான ஒன்று என்பதை சென்னையில் நம் கண் முன்னே நிகழ்ந்தவை காட்டுகின்றன. சாதி மத பிரிவுகளைக் கடந்த அளவில் நமது மக்கள் ஒன்றுபட்டிருப்பதை இது காட்டுகிறது.

இன்னொரு பக்கம், இந்தப் பேரழிவான வெள்ளம், அதிகாரத்திற்காக ஆலாய் பறக்கும் அரசியல் கட்சிகளுடைய சமூக விரோதத் தன்மையை முழுவதுமாக வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

முதலமைச்சருடைய படத்தை நிவாரணப் பொருட்கள் மீது ஒட்டுவதற்காக, பிற தன்னார்வ நிறுவனங்களும், கட்சிகளும் கொண்டுவரும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களுடைய வினியோகத்தை ஆளும் அதிமுக-வின் கட்சிக்காரர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தியதும், அவற்றைத் தரையில் கொட்டி அழித்ததும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பேரழிவான இந்தச் சூழ்நிலையில், தங்களுடைய வேறுபாடுகளை தள்ளிவைத்து விட்டு மக்களுக்கு உதவ வேண்டிய இந்தக் கட்டத்திலும் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் தங்களிடமுள்ள முக்கிய செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி, ஒருவருக்கு எதிராக ஒருவர் குறை கூறுவதிலேயே நேரத்தைச் செலவழித்துக் கொண்டுள்ளனர்.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படைக் கடமையைச் செய்வதற்கு அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் விருப்பமின்றியும், திறமையின்றியும் இருப்பதை நாம் தெளிவாகக் காண முடிந்தது. பெரும் கட்டுமான நிறுவனங்களுடைய நலனுக்காக, கட்டிட வரைமுறைகள் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதும், இயற்கை சுற்றுச் சூழல் தேவைகளை அரசாங்கமே உதாசீனப்படுத்தியிருப்பதும் இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான பேரழிவுக்கு சூழ்நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது.

பெரும் மழையின் போது, முக்கிய ஏரிகளிலிருந்து உபரி நீரைச் சரியான நேரத்தில் வெளியேற்ற திட்டமிடாததும், பெருமளவில் நீர் வெளியேற்றப்பட்ட போது, ஆறுகள் மற்றும் வடிகால்களை ஒட்டியுள்ள குடியிருப்புக்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காததும், பேரழிவான வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணமென்று கூறப்படுகிறது.

பேரழிவால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, நீங்களே பார்த்துக் கொள்ளுங்களென மக்கள் கைவிடப்பட்டனர். சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்களிலும், குடியிருப்புக்களிலும் எழுப்பப்படும் பொதுவான ஒரே குரலானது, அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் எங்கே என்பதுதான். அவர்களுடைய உதவி மிகவும் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில் அவர்களை எங்குமே காணாதது ஏன் என்பதாகும்.

பேரழிவுகளிலிருந்து மக்களுடைய உயிர்களைக் காப்பதற்காக அரசு இயந்திரம் உண்மையிலேயே செயல்பட்டிருக்குமானால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஒரு உண்மையான திட்டமிட்ட முயற்சிகளைக் கண்டிருப்பார்கள், இன்னும் பல உயிர்களைப் பாதுகாத்திருக்கவும்  முடியும்.

சென்னை வெள்ளமானது, இன்றைய அமைப்பில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. வெள்ள நீர் வடிவதற்கு இயற்கையாகவே அமைந்திருந்த கால்வாய்களை வேண்டுமென்றே அழித்ததற்கும் அல்லது வெள்ளத்தின் போது எவ்வித கவலையுமின்றி, திமிரோடு ஈவுஇரக்கமின்றி மக்களைப் புறக்கணித்ததற்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் எவரும் தண்டிக்கப்படப் போவதில்லை.

மாறாக, ஆளும் வகுப்பினருடைய கட்சிகளாக அதிகாரத்தில் இருக்கின்ற ஆளும் மற்றும் எதிர்க் கட்சியாக இருக்கின்றவர்கள், மக்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்காக மீண்டும் வெளி வருவார்கள். அரசியல் கட்சிகள், மதம், மொழி அல்லது சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த அவர்கள் முயற்சிப்பார்கள்.

அப்படிப்பட்ட முயற்சிகளை சென்னை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வெள்ளத்தின் போது காட்டிய அதே ஒற்றுமையையும் உணர்வையும் மேலும் வளர்த்து, இந்தப் பேரழிவின் பின்விளைவுகளை எதிர் கொள்ள ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

சென்னை வெள்ளமானது, மக்கள் ஒருவருக்கொருவர் மிகப் பெரிய அளவில் உதவிக் கொள்ளும் திறனைக் காட்டுகிறது. அதற்கு நேரெதிராக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்கவும், உதவி செய்யவும் அரசுக்கு ஆர்வமோ, திறனோ இல்லாததை முழுமையாகக் காட்டுகிறது.

சுயநலமின்றி தாராளமான மனம் கொண்ட சென்னை மக்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வணங்குகிறது.