தாராளமயம் தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, கடந்த சில வாரங்களாக பல கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்நிய முதலீடுகள், நம் நாட்டின் உழைப்பையும் வளங்களையும் கொள்ளை அடிப்பதற்காக, நாட்டின் கதவுகள் மேலும் அகலமாக திறந்து விடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய முதலாளிகள் மேலும் அதிக இலாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதை அந்நிய மூலதனத்தோடு பகிர்ந்து கொள்வதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது பற்றி இந்திய முதலாளிகள் மிகவும் களிப்படைந்துள்ளனர்.

நவம்பர் 10-ஆம் தேதி தேசகூ அரசாங்கம் இராணுவம், விமான துறை, ஒலி, ஒளி பரப்பு, கட்டுமானம், வங்கி மற்றும் தோட்டங்கள் உள்ளிட்ட 15 துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் சலுகைகளை அறிவித்தது. (விவரங்களுக்கு கட்டத்தில் பார்க்கவும்)

இதற்கு முந்தைய நாள், 9 நவம்பர் அன்று தான் இந்திய இரயில்வே இரண்டு ஒப்பந்தங்களை அமெரிக்காவின் ஜெனரல் எலக்டிரிக் கம்பெனிக்கும், பிரான்சின் அல்ஸ்டாம் கம்பெனிக்கும் பீகாரில் முறையே டிசல் மற்றும் மின்சார லோகோமோடிவ் தொழிற்சாலைகளை நிறுவுவதற்குக் கொடுத்தது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் 10 வருடத்தில் சுமார் 40,000 கோடி ரூபாய்கள் செலவிடப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் இரயில்வே உள்கட்டுமானத்தில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசாங்கத்தின் முடிவின்படி கையெழுத்திடப்பட்டுள்ளன.

பாஜக தலைமையிலான தேசகூ அரசாங்கம், இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள் இந்த நாட்டில் அதிகபட்ச இலாபங்களை ஈட்டுவதற்கு எல்லா வழிகளையும் எளிதாக ஆக்குவதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மூலதனத்தின் நலன்களுக்காக, புதிய நிறுவனங்களை அமைப்பதற்கும், இருக்கும் நிறுவனங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக மூடுவதற்கும் உள்ள ஒப்புதல்களை கணிசமாகக் குறைப்பதாகவும், தற்போதுள்ள கட்டுப்பாடுகளை முழுவதுமாக தூக்கி எறிவதாகவும் அது அறிவித்துள்ளது.

உலக வங்கியும் தொழிற்சாலை கொள்கை மற்றும் ஊக்கமூட்டும் துறையும் கூட்டாக, இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் ‘தொழில்கள் செயல்படுவதற்கு சுலபமாக இருப்பது’ என்ற குறியீட்டில் இந்த வருடம் முதல் முறையாக வரிசைப்படுத்தி அதை வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த குறியீட்டில் இந்தியா, 189 நாடுகளில் 130-ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டில் இந்தியாவின் இந்த தரவரிசையைக் கணிசமாக உயர்த்துவோமென்ற எண்ணத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. (கட்டத்தை பார்க்கவும்)

மாநிலங்களுக்கு இடையேயான போட்டியைத் தூண்டி விட்டு அதனால் முதலாளிகளுக்கு அதிகபட்ச இலாபம் ஈட்டும் நிலைமைகளை உருவாக்கும் நோக்கத்தோடு, இந்தியாவின் மாநிலங்களை வரிசைப் படுத்துவது செய்யப்பட்டுள்ளது. முதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றும் போட்டியில் இராஜஸ்தான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவது சுலபமாக்கப்பட்டுள்ளது.

அடிமாட்டு விலைக்கு, பொது மக்களுடைய செல்வங்களைத் தனியார் கைகளுக்கு மாற்றுவதே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் தனியார்மயப் போக்காக இருந்துள்ளது. கோல் இந்தியாவின் மேலும் 10% பங்குகளை 21,000 கோடி ரூபாய்களுக்கு விற்பதற்கும், கொச்சின் கப்பல் களத்தினுடைய பங்குகளை விற்பதற்கும் நவம்பர் 18-இல் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

தாராளமயத்தையும் தனியார்மயத்தையும் நியாயப்படுத்தும் வாதம்

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அந்நிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான் கொடுத்துவிடவில்லை என்றும், 49% பங்குகளை மட்டுமே அவர்கள் வைத்திருக்க அனுமதிப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இது மக்களை முட்டாளாக்கும் வேலை, ஏனென்றால் 49% பங்குகளை தன்னிடம் வைத்துக் கொண்டாலே, அந்நிய முதலாளி பெருவாரியான நிறுவனங்களில் அதிகபட்ச பங்குகளைக் கொண்டவர்களாக ஆகிவிடுவார்கள், ஏனென்றால் எஞ்சிய பங்குகள் இந்திய வங்கிகளிடையேயும் காப்பீட்டு நிறுவனங்களிடையேயும் நூற்றுக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட மற்ற முதலீட்டாளர்களிடையேயும் பரவிக் கிடக்கும்.

பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காகவே தாராளமயமும் தனியார்மயமும் செய்யப்படுகிறது என்று கடந்த காலத்தைப் போலவே, நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் மந்தமடைந்ததற்கும் பல லட்சம் வேலைகள் இழக்கப்படுவதற்கும் காரணம், புதிய உற்பத்தி சக்திகளையும் சேவைகளையும் உருவாக்குவதற்கும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் மூலதனம் இல்லாததனால் தான், என்று மக்களிடம் கூறப்படுகிறது.

இந்திய மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு அதிகபட்ச சலுகைகளையும் ஈர்ப்புகளையும் கொடுப்பதை நியாயப்படுத்துவதற்காகவே இந்தக் காரணம் கூறப்படுகிறது.

“மந்தமடைவதைத் தடுப்பதற்காக” கணக்கிலடங்காத சலுகைகள் முதலாளி வர்க்கத்திற்கு கொடுக்கப்படுகிறது. இதில் மிக சமீபத்தையது 17-நவம்பரில் அறிவிக்கப்பட்ட ஏற்றுமதியில் 1-ஏப்ரல்-2015-இலிருந்து துவங்கி 5 ஆண்டுகள் வரை 3% வட்டித் தள்ளுபடியாகும். இப்பொழுதுள்ள ஏற்றுமதி அளவைக் கொண்டு பார்த்தால், இதனால் ஒட்டுமொத்தத் தள்ளுபடி ஓராண்டிற்கு 2500 முதல் 2700 கோடி ரூபாய்கள் வரை இருக்கும்.

தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றும் என்ற தோற்றத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த நடவடிக்கைகள் ‘சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அறிவிக்கப்படுகிறது. "நாட்டிற்குள் வரும் அந்நிய முதலீடுகளை மேலும் எளிதாக்குவதும், மேலும் மேலும் வரும் அன்னிய நேரடி முதலீடுகளை முதலீட்டாளர்களின் நேரத்தையும் முயற்சிகளையும் வீணாக்கும் அரசாங்க பாதையில் கொண்டு செல்வதற்கு பதிலாக தன்னிச்சையான பாதையில் கொண்டு செல்லுவதும் தான் இந்தச் சீர்திருத்தங்களின் முக்கிய அம்சம்" என்று வரைமுறைகளைத் தளர்த்தி இந்த அறிவிப்பை கொடுத்ததிலிருந்து அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விண்ணைத் தொடும் விலை ஏற்றத்தினால், நாட்டின் தொழிலாளர்களும் உழவர்களும் உழைக்கும் மக்களும் இன்று தங்கள் தினசரித் தேவைகளை வாங்குவதற்குக் கூட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை அரசாங்கம் மறைக்கிறது.

உழவர்கள் செய்யும் உற்பத்திக்கு அவர்களுக்கு இலாபகரமான விலைகள் கிடைப்பதில்லை. மேலும் மேலும் தொழிலாளர்கள் எந்தவித வேலை நிரந்திரமும் இல்லாத, குறைவான கூலியை கொடுக்கும் ஒப்பந்த வேலைகளில் வேலை செய்யுமாறு நிர்பந்திக்கப் படுகிறார்கள். சந்தை முழுவதும் பொருட்கள் குவிந்து கிடக்கையில், தொழிலாளர்களிடத்திலும் உழவர்களிடத்திலும் அதை வாங்குவதற்கு பணமே இல்லை. பொருளாதாரம் மந்தமடைவதற்கு இதுவே காரணமாகும்.

மூலதனத்தை மையமாகக் கொண்ட கொள்கை

அரசாங்கத்தின் கொள்கை அறிவிப்புகளை பிக்கி (FICCI) மற்றும் சிஐஐ (CII) போன்ற இந்திய முதலாளிகளுடைய குழுக்கள் வரவேற்றுள்ளன. இந்திய பங்குச் சந்தையும் இந்த அறிவிப்புகளுக்கு சாதகமாக வினை புரிந்துள்ளது, ஏனெனில் அது அவற்றை தேசகூ அரசாங்கத்தின் மூலதனத்திற்கு சாதகமான கொள்கைகள் தொடரும் என்பதற்கான உறுதியாக எடுத்துக் கொண்டது.

நிதி மூலதனத்தின் கட்டளையின்படி கடந்த 25 ஆண்டுகளாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பின்பற்றி வந்த உலகமயமாக்கும் பாதையில் தேசகூ அரசாங்கமும் தீவிரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த, தேசத்திற்கு எதிரான சமுதாயத்திற்கு எதிரான போக்கிற்கு தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் உழவர்களும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருவதை அது வெறுப்புடன் புறக்கணித்து வருகிறது.

தாராளமயமாக்கப்பட்ட சூழ்நிலைமைக்கு  வாக்குறுதி கொடுத்து இந்தியாவில் மூலதனத்தை முதலீடு செய்யுமாறு அழைக்கும் அழைப்பிதழையே, பிரதமர் தான் சென்று வந்த எல்லா நாடுகளுக்கும் கொண்டு சென்றிருக்கிறார். செப்டம்பரில் அமெரிக்கா செல்லும் முன், தனது அரசாங்கம் ஒப்பந்தங்களின் ஒப்புதல்களைத் தாமதப்படுத்தாது என்ற சமிஞ்சையை அனுப்புவதற்காக, அமெரிக்காவிடமிருந்து இரண்டு பெரிய ராணுவ வாங்குதல்களை அவர் அமெரிக்காவிற்கு கிளம்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

இந்த எலிகாப்டர்களின் வாங்குதலுக்கான முடிவுகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. ஆனால் இப்போது உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இந்திய ராணுவ படைகளுக்கு 37 எலிகாப்டர்கள் 20000 கோடி ரூபாய்கள் (3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) விலை கொடுத்து அமெரிக்க போயிங் கம்பெனியிடமிருந்து வாங்கப்படும்.

இந்த வாங்கும் ஒப்பந்தத்தில் அதன் மதிப்பில் 30% மானது  இந்தியாவிலேயே வாங்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதனால் டாடா, மகேந்திரா, அம்பானி போன்ற இந்திய முதலாளிகளும் அமெரிக்க முதலாளிகளோடு சேர்ந்து இந்த வாங்குதல்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு நிர்பந்தித்து வந்தனர். இந்த ஒப்பந்தங்கள் வருங்காலத்தில் மேலும் 15 எலிகாப்டர்கள் வாங்குவதற்கு வசதி அளிக்கின்றன.

இதுவரை அறிவிக்கப்பட்ட கொள்கை மாற்றங்களினால் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் திருப்தி அடையவில்லை. இந்திய சந்தையும் வளங்களும் உழைப்பும் கட்டுப்பாடற்ற உடமையும்,  இலாபங்களும் எல்லா துறைகளிலும் அவர்களுக்கு வேண்டும்.

அதனால் தான் இதுவரை பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தும், இந்தியாவிற்குள் வந்த அன்னிய நேரடி முதலீடு இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் வெறும் 15% மட்டுமே உயர்ந்து 20.5 பில்லியன் டாலர்களாகவே (133,000 கோடி ரூபாய்கள்) உள்ளது. பெருவாரியான இந்த முதலீடுகள் சேவை, கட்டுமானம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் மட்டுமே செய்யப்பட்டவையாகும், உற்பத்தித் துறையில் அல்ல.

மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே அந்நிய மூலதனத்தை அழைப்பதாக அரசாங்கம் மக்களிடம் கூறி வருகிறது.. ஆனால் பெருவாரியான இந்தியாவிற்குள் வரும் அன்னிய முதலீடு, இங்கு ஏற்கெனவே இருக்கின்ற நிறுவனங்களை வாங்கத் தான் உபயோகப்படுத்தப்படுகின்றது. இது புதிய வேலைகளை உருவாக்கவில்லை.

‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற திட்டம் உழைக்கும் மக்களையும் நாட்டின் வளங்களையும் மேலும் சுரண்டுவதற்கு மட்டுமே வழி வகுக்கும். எந்தக் கட்சி அல்லது கூட்டணி அதிகாரத்தில் இருந்தாலும் பெருமுதலாளி வர்க்கத்தின் திட்டம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று நம் நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் மக்களின் வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது. இது பெரு முதலாளி வர்க்கத்தின் அரசாகும், வெவ்வேறு அரசியல் கட்சிகளும் இதை அவ்வப்போது நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மக்களுக்கு எதிரான தாராளமயம் தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை உறுதியாக எதிர்க்க வேண்டும். இந்தத் திட்டத்தை எதிர்ப்பது என்றால் தொழிலாளி வர்க்கத்தையும் உழவர்களையும் மற்ற உழைக்கும் மக்களையும் ஒன்றுபடுத்தி இன்றுள்ள முதலாளிவர்க்க அரசிற்கு மாற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதாகும்.

மாருதி கொடுத்திருக்கும் காப்புரிமைக்கான உரிமைப் பங்கு கட்டணத் தொகைகள்

அயல்நாட்டு மூலதனம், அரசாங்கத்தின் உதவியோடு இலாபத்தை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது. இலாபத்திலிருந்து கொடுக்கப்படும் ஈவுத் தொகைக்கும் மேலாக, இந்திய நிறுவனம் தன்னுடைய அயல்நாட்டு தாய் நிறுவனத்திற்கு காப்புரிமைக்கான உரிமைப் பங்குத் தொகையை செலுத்துவது அப்படிப்பட்ட வழிகளில் ஒன்றாகும். தலைமை நிறுவனத்திற்கு செலுத்தப்படும் இந்த காப்புரிமைக்கான உரிமைப் பங்கானது, அயல்நாட்டு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கும், தாய் நிறுவனத்தின் தொழில் நுட்ப, மேலாண்மை உதவிக்கும், தொழில் நுணுக்கத்தை வழங்குவதற்கும், இன்ன பிறவற்றிற்கும் ஒரு ஈடு என்று கூறி நியாயப்படுத்தப்படுகிறது.

மாருதி நிறுவனம், நாட்டின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளராகும். இது சப்பான் நாட்டினுடைய சுசூகி நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். நிறுவனத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மாருதியின் தொழிலாளர்கள் பல்லாண்டுகளாக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வேலை செய்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குத் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்.

இவர்களுக்கு நிரந்தரத் தொழிலாளிக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், மாருதி நிறுவனம் தன்னுடைய தாய் நிறுவனமாகிய சுசூகிக்கு கொடுக்கும் தொகை, 2005-06 இல் வரி மற்றும் உரிமைப் பங்குத் தொகையை கழிப்பதற்கு முன்னுள்ள இலாபத்தில் 13 சதவிகிதமாக இருந்ததிலிருந்து, 2014-15 இல் 36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2014-15 இல் மாருதி, தன் தாய் நிறுவனமாகிய சுசூகிக்கு கொடுத்த உரிமைப் பங்குத் தொகை ரூ 2,767.7 கோடியாகும். கடந்த ஐந்தாண்டுகளில் மாருதி சுசூகி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட மொத்த தொகையானது ரூ 11,870 கோடியாகும்.

இதே காலத்தில் ஐந்தாண்டு காலத்தில் நிறுவனத்தின் வரியைக் கழிப்பதற்கு முந்தைய மொத்த இலாபமானது ரூ 16,770 கோடிகளாகும்.

இந்திய நிறுவனங்கள் அவற்றின் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு செலுத்தும் உரிமைப் பங்குத் தொகைக்கு இருந்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் 2009-இல் நீக்கியது. இந்தியாவை "மூதலீட்டாளர்களுக்கு சாதகமாக" மாற்றுவது என்ற பெயரில் இது செய்யப்பட்டது.

2009-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் செயல்பட்டுவரும் 50 பன்னாட்டு நிறுவனங்கள் அவர்கள் செலுத்தும் மொத்த உரிமைப் பங்குத் தொகை ஆண்டிற்கு 34 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

ஆனால் அதே கால கட்டத்தில் அவர்களுடைய இலாபம் 7 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. நாட்டிற்கு எவ்வித வரியையும் கட்டாமல், இலாபத்தை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்வதற்கு உரிமைப் பங்குத் தொகை இன்னொரு வழியாகும்.

மாருதி சுசூகி தன் தாய் நிறுவனத்திற்குச் செலுத்திய காப்புரிமைக் கட்டணம் - கோடி

maruthi royality payment 600 

அறிவிக்கப்பட்ட முக்கிய அன்னிய நேரடி மூலதனத்திற்கான தளர்த்துதல்களும் அவற்றின் தாக்கமும்

1. அரசாங்கத்திடம் அனுமதி கேட்காமலேயே பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அன்னிய உற்பத்தியாளர்கள் அன்னிய உடமையை 49 சதவிகிதத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம். ஏகாதிபத்திய பேராசைகளில் ஒரு அங்கமாக, உலகில் தான் ஒரு பெரும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியாளராக ஆக வேண்டுமென இந்திய அரசு விரும்புகிறது. அதிக இலாபகரமான இந்தத் துறை தங்களுக்குத் திறக்கப்பட வேண்டுமென இந்திய முதலாளிகள் விரும்புகின்றனர்.

2. தனியார் வங்கிகளில் 74 சதவிகிதம் வரை அன்னிய மூலதனம் இருக்கலாம். இது தனியார் வங்கிகள் மேலும் பெரிதாக வளரவும், இறுதியில் பொதுத் துறை வங்கிகளைக் கைப்பற்றவும் அனுமதிக்கும்.

3. தோட்டங்கள் துறையில் இதுவரை 100 சதவிகித அன்னிய மூலதனம் தேயிலைத் தோட்டங்களில் மட்டுமே இருந்து வந்தது. தற்போது அரசாங்கத்தின் அனுமதி பெறாமலேயே 100 சதவிகித அன்னிய நேரடி முதலீடானது இரப்பர், பாம் ஆயில், காபி, ஏலக்காய் போன்ற தோட்டங்களிலும் அனுமதிக்கப்படுகிறது. இப்போதுள்ள தோட்டங்களை அன்னிய மூலதனம் எடுத்துக் கொள்வதன் மூலம், நாட்டில் பல்வேறு விளை பொருட்களை உற்பத்தி செய்யும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்ற முடியும்.

தாராளமயக் கொள்கையின் காரணமாக பிற நாடுகளிலிருந்து மலிவான இரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விளைவாக நமது நாட்டிலுள்ள பல இரப்பர் தோட்டங்கள் உற்பத்தியின்றி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்தத் தோட்டங்கள் அவற்றின் நிலங்களோடு அடிமாட்டு விலைக்கு அன்னிய மூலதனத்தால் இப்போது கைப்பற்றப்படும்.

4. அன்னிய நேரடி மூலதனத்திற்கு ஒலி, ஒளி பரப்புத் துறை திறந்து விடப்பட்டுள்ளது. நேரடியாக வீட்டிற்கு வரும் தொலைக் காட்சி (DTH TV), கேபிள் வலைப் பின்னல்கள், செய்திகள் அல்லாத தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் 100 சதவிகிதம் வரையிலும், பண்பலை வானொலி, செய்தி தொலைக் காட்சி நிறுவனங்களில் 49 சதவிகிதம் வரையிலும் அன்னிய நேரடி முதலீடு இப்போது அனுமதிக்கப்படுகிறது. இந்த தளர்த்துதல் காரணமாக நமது நாட்டு ஊடகங்கள் மீது ஏகாதிபத்தியத்தின் பிடி மேலும் இறுகும்.

5. ஒற்றை நிறுவனப் பொருட்கள் சில்லறைத் துறையில் ஏற்கெனவே 100 சதவிகித அன்னிய உடமை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய சரக்குகளின் தேவைகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை உள்நாட்டிலிருந்தே வாங்க வேண்டுமென கட்டுப்பாடு இருக்கிறது. தற்போது இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. உயர் தொழில் நுட்பப் பொருட்களில் இந்தக் கட்டுப்பாடுகள் அறவே நீக்கப்பட்டு விட்டன.

இந்திய முதலாளிகள் நிறுவிய சில்லறை சங்கிலிகள் ஏற்கெனவே இலட்சக் கணக்கான மக்களுடைய வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்திருக்கின்றன. பன்னாட்டு சில்லறை சங்கிலிகள், மொத்த விலை சங்கிலியில் 100 சதவிகிதத்தைக் கொண்டிருக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்த்துதல்கள் மேலும் பலருடைய வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

6. அன்னிய மூதலதனத்தைப் பெருக்கும் வாரியத்தின் நிதி அதிகாரம் உயர்த்தப்பட்டுள்ளது. அது ஒற்றைச் சாளர முறையில் திட்டங்களுக்கு அனுமதியளிக்க முன்பிருந்த 3000 கோடி ரூபாய் முதலீட்டு வரம்பை 5000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில் செய்வதை எளிதாக்குவதில் இன்னொரு நடவடிக்கையெனக் கூறப்படுகிறது.

இந்திய உழைப்பையும், வளங்களையும் அன்னிய முதலாளிகளுக்கு விற்பது மோடியின் இலட்சியம்

இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென அயல்நாட்டு முதலாளிகளை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காக பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறார். மிகப் பெரிய இந்தியச் சந்தையின் மூலமாகவும், நமது நாட்டின் இளமையான தொழிலாளி வகுப்பினரைச் சுரண்டியும் அதிக இலாபம் சம்பாதிப்பதற்கு தன்னுடைய அரசாங்கம் முழு ஆதரவளிக்கும் என்று அவர்களுக்கு உறுதி கூறி வருகிறார்.

இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென சப்பானிய முதலாளிகளை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி சப்பான் சென்றிருந்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ 2 இலட்சம் கோடி (35 பில்லியன் டாலர்கள்) க்கும் மேல் பொதுத் துறை மற்றும் தனியார் முதலீடுகளும், கடன்களும் கொடுக்கப்படுமென சப்பானிய பிரதமரும் முதலாளிகளும் உறுதியளித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை சப்பானின் மொத்த முதலீடு ரூ 80,000 கோடி (12 பில்லியன் டாலர்கள்) ஆகும்.

மோடி தன்னுடைய அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் மிகப் பெரிய 50 முதலாளிகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் சந்தித்தார். அவர்களிடம், மிகப் பெரிய அளவில் இலாபம் சம்பாதிக்க இந்தியா எப்படி ஒரு சிறப்பான நாடென்றும், அவர்களுடைய பொருட்களுக்கு இங்கு எப்படிப் பெரிய சந்தை இருக்கிறதென்றும், இந்தியத் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு எப்படி இந்திய அரசு முழு சுதந்திரத்தை உறுதி செய்யுமென்றும் அவர் கூறினார். அமெரிக்க முதலாளிகள் அவருடைய அழைப்பை சிந்தித்துப் பார்ப்பதாகக் கூறினாலும், அவர்கள் எந்த பெரிய முதலீட்டையும் செய்ய முன்வரவில்லை.

பிரிட்டனுக்கு நவம்பர் 2015 இல் அவர் மேற்கொண்ட பயணத்தில், காப்பீடு, தொலை தொடர்பு, மருத்துவம் மற்றும் எரிசக்தித் துறைகளில் 10 பில்லியன் டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கின்றனர்.

அன்னிய மூலதனத்தைக் கவர வேண்டுமென்ற அதே நோக்கத்தோடு, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கும் மோடி அண்மையில் சென்று வந்திருக்கிறார்.