அண்மை ஆண்டுகளில் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கும், அதனுடைய ஊழியர்களுக்கும் இடையே கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியார்மயப்படுத்துவதற்கு முதல் கட்டமாக, மத்திய அரசாங்கமும், ஏர் இந்தியாவின் நிர்வாகமும் ஏர் இந்தியாவை சீர்குலைக்கும் போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், தொழிற் சங்கங்கள் இந்த சீரழிவு நடவடிக்கைகளையும், தனியார்மயப்படுத்தும் முயற்சிகளையும் விடாப்பிடியாக எதிர்த்து வருகின்றன.

அரசாங்கமும், நிர்வாகமும் மேற் கொண்டுவரும் ஏர் இந்தியாவை சீர்குலைக்கும் செயல்பாடுகளின் விளைவாக, ஏர் இந்தியா அழிக்கப்பட்டு வருவது மட்டுமின்றி, பயணம் செய்யும் பொது மக்களுடைய பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த அபாயகரமான பிரச்சனைகளை வலியுறுத்துவதற்காக ஏர் இந்தியாவின் தொழிலாளர்கள் மேற் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் ஏர் இந்தியாவின் பெயருக்கு களங்கத்தை உருவாக்குவதாகக் கூறி நிர்வாகம் அவர்களைத் தாக்கி வருகிறது.

தொழிலாளர் ஒற்றுமைக் குரலில் முன்னர் கூறப்பட்டது போல், ஏர் இந்தியாவின் விமானிகளுக்கும் பிற ஊழியர்களுக்கும் எதிராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகங்கள் மூலம் ஒரு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அதிக சம்பளம் வாங்குவதாகவும், அதிகமாக வேலை செய்வதில்லை என்றும் ஏர் இந்தியாவை இழப்பில் ஆழ்த்தியதற்கு இவர்களே காரணமென்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்குத் தீர்வாக தனியார்மயம் முன்வைக்கப்படுகிறது. இத்துடன் ஏர் இந்தியத் தொழிலாளர்களுடைய உரிமைகள் ஈவுஇரக்கமின்றி தாக்கப்படுகின்றன.

இதே காலகட்டத்தில் முக்கிய விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஏர்போர்ட் அதாரிடி ஆப் இந்தியா தொழிலாளர்களுடைய விடாப்பிடியான தீவிர போராட்டங்கள் காரணமாக சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை தனியார்மயப்படுத்த முந்தைய ஐமுகூ அரசாங்கத்தின் தீர்மானத்தை கைவிடுமாறு தற்போதைய தேசகூ அரசாங்கத்தை நிர்பந்தித்தன. இதற்கிடையில் தரைச் செயல்பாடுகளில் இலாபகரமான பிரிவுகள் பிரிக்கப்பட்டு எஸ்ஏடிஎஸ் (SATS) என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

இந்தப் பின்னணியில்தான், ஏர் இந்தியா நிர்வாகம் ஏர் இந்தியா விமானப் பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஒய்.வி.ராஜு வின் வேலை நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதி மன்றம் செப்டெம்பர் மாதத்தில் கொடுத்தத் தீர்ப்பினை நாம் பார்க்க வேண்டும். மே 2010-இல் ஏர் இந்தியாவின் ஊழியர்களுடைய ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி அதில் பங்கேற்றதற்காக நிர்வாகத்தால் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்ட தலைவர்களில் ராஜுவும் ஒருவர் ஆவார்.

ஏர் இந்தியா ஊழியர்கள் மே 2010இல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?

மே 22, 2010 இல் ஒரு ஏர் இந்தியா விமானம் மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது மோதி அதில் இருந்த 158 பேரும் இறந்த துயரமான விபத்து பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த விபத்தைத் தொடர்ந்து, விபத்தின் பல்வேறு காரணிகளையும், சூழ்நிலையையும் மறைத்து, விபத்து பற்றிய ஆய்வு தொடங்குவதற்கு முன்னரே ஏர் இந்தியாவின் நிர்வாகம் விபத்தின் பின்னணியிலுள்ள பல்வேறு உண்மையான காரணங்களை மூடி மறைப்பதற்காக விமானியின் தவறு பற்றி குறைகூறத் தொடங்கியது.

அந்த நேரத்தில், ஏர் இந்தியாவின் பொறியாளர்கள் சங்கம் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்கள் மங்களூர் விபத்தின் காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி ஊடகங்களிடமும், பொது மக்களிடமும் விவாதித்தனர். விமான நிலைய அமைப்புக்களும், ஒடுதளங்கள், விமானங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு குறித்த பிரச்சனைகளையும், இலாபத்தை அதிகரிப்பதற்காக ஏர் இந்தியா நிர்வாகத்தின் நெருக்குதல் காரணமாக எப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் விமானிகள் விமானத்தை ஒட்டுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து உடனடியாக, நிறுவனத்தின் "உள் பிரச்சனை"களைப் பற்றிப் பேசுவதற்கு தொழிற் சங்கங்களுக்கு உரிமை இல்லையென அறிவித்து ஒரு ஆணையை ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டது. மேலும் இதைத் தொடர்ந்து, தொழிற் சங்கத் தலைவர்களுக்கு எதிராக ஒரு விளக்கம் கேட்டுத் தாக்குதலான அறிக்கை ஒன்றையும் அனுப்பியது. இது தொழிலாளர்கள் மீது ஒரு திடீர் வேலை நிறுத்தத்தைத் திணித்தது. இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு உடனடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டியதாகியது.

வேலை நிறுத்தத்திற்கு, ஏர் கார்பரேசன் எம்பிளாயிஸ் யூனியனும் (ACEU), ஆல் இந்தியா ஏர்கிராப்ட் இஞ்சினியர்கள் அசேசியேசன் (AIAEA) கூட்டாக அழைப்பு விடுத்திருந்தனர். மே 25 காலை துவங்கிய இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், 20,000-க்கு மேற்பட்ட ஏர் இந்தியாவின் பொறியாளர்களும், தரை ஊழியர்களும், கேபின் கிரூவினரும் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டம் ஏர் இந்தியாவின் உள்நாட்டு சேவைகள் அனைத்தையும் முழுவதுமாக முடக்கியதோடு, சில சர்வதேச சேவைகளையும் பாதித்தது. இது ஏர் இந்தியா பணியாளர் தங்கள் நிர்வாகத்தின் மீது கொண்டிருந்த கோபத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. தில்லி உயர் நீதி மன்றம் இந்த வேலை நிறுத்தத்தை சட்டத்திற்குப் புறம்பானதென அறிவித்த பின்னர், மே 26 அன்றே வேலை நிறுத்தம் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.

தொழிலாளர்கள் எழுப்பிய பிரச்சனைகளை விமானகளின் செயல்பாடுகள் குறித்த உட்பிரச்சனையென்று கூறிவிட முடியாது. இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் இலட்சக் கணக்கான பயணிகளுடைய பாதுகாப்பு மீது நேரடியான தாக்கத்தைக் கொண்ட பிரச்சனைகளாகும் அவை. தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தத்தை நசுக்குவதைப் பொறுத்த மட்டிலும், தொழிலாளர்களுடைய செயல்பாடே பயணம் செய்யும் பொது மக்களுடைய பிரச்சனைகளுக்குக் காரணமென நிர்வாகமும், அரசாங்கமும் கூறி பொது மக்களுடைய ஆதரவைத் திரட்ட முயற்சிக்கின்றனர்.

மங்களூர் விபத்திற்கு வழி வகுத்த சீரழிக்கும் நடவடிக்கைகளை வெட்ட வெளிச்சமாக்கிய காரணத்திற்காக ஏர் இந்தியா நிர்வாகமும், அரசாங்கமும் தொழிற் சங்கத்தை ஒழிப்பதென தீர்மானித்தனர். வேலை நிறுத்தம் பின் வாங்கப்பட்ட உடனே ஏர் இந்தியாவின் தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது - "எந்த நடவடிக்கையை மேற் கொண்டாலும் நாம் அதை முழுமையாக மேற் கொள்ள வேண்டும். (தொழிற் சங்கங்களுக்கு எதிராக) நாம் இரும்புக் கரம் கொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பின்பலத்தோடு பேசிய விமானத் துறை அமைச்சர் பிரபூல் படேல், "ஏர் இந்தியாவின் நிர்வாகம் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நிர்வாகம் உறுதியாக செயல்பட வேண்டும்" என்றார்.

2010 மே 26 அன்று மாலையே ஏர் இந்தியாவின் தலைவன், ஏசிஇயு மற்றும் ஏஐஏஇஏ வைச் சேர்ந்த 17 தொழிற் சங்கத் தலைவர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்வாகம் இந்த இரு சங்கங்களின் அங்கீகாரங்களையும் நீக்கியது. மே 27 அன்று மாலைக்குள் 58 தொழிற்  சங்கத் தலைவர்களும், தொழிலாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டதுடன், மேலும் 24 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நாடெங்கிலும் இந்த தொழிற் சங்கங்களின் அலுவகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. சங்கத்தின் ஆவணங்கள் அனைத்தும் நிர்வாகத்தால் கொண்டு செல்லப்பட்டன.

ஒரு நீண்ட போராட்டத்தின் மூலம் வேலை நீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் தொழிலாளர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக, நிர்வாகம் ஏஐஏஇஏ வின் பொதுச் செயலாளர் ராஜு அவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது.

தன்னை மீண்டும் வேலையில் வைக்க வேண்டுமென இராஜு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதி, உச்ச நீதி மன்றங்கள், "நம்முடைய பொதுத் துறை நிறுவனங்களில் இப்படி (பொது நலனுக்கு எதிராக செயல்படும்) பொறுப்பற்ற, மனிதாபிமானமற்ற ஊழியர்களுக்கு குறைவில்லை. எல்லா வகையான நலன்களையும் அனுபவித்துக் கொண்டே, அதே நேரத்தில் அவர்களுடைய நிறுவனங்களைக் அவமதித்து, அவப்பெயரைக் கொண்டுவருவதற்கு எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடுவதேயில்லை" என்று கூறியிருக்கின்றன.

வேறு வார்த்தைகளில் சொன்னால், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், அவர்களுடைய தலைவர்களும் பொது நலன் கருதி குரலெழுப்பினால் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டுமாம்! இப்படி நீதிமன்றங்கள் தொழிலாளர்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பதிலாக, ஆளும் வர்க்கங்களின் ஒரு ஒடுக்கும் கருவியாக செயல்படுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

தொழிலாளர்கள் தங்களுக்காக தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும், சமுதாயத்தின் பொது நலன்களைப் பாதுகாக்கவும், தொழிற் சங்கங்கள் அமைத்துக் கொள்ளும் உரிமைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்டு வருகின்றன. பொறியாளர்களுடைய சங்கத்தை அழிப்பதற்காக அரசாங்கமும், ஏர் இந்தியா நிர்வாகமும் மேற்கொள்ளும் முயற்சிகள் இதைத் தான் காட்டுகின்றன.

ஏர் இந்தியாவால் பழிவாங்கப்பட்ட எல்லா தொழிற் சங்க செயல் வீரர்கள் மற்றும் ஊழியர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முழு தொழிலாளி வர்க்கமும் ஒன்றுபட்டு பாதுகாத்துப் போராட வேண்டுமென நிலைமை கோருகிறது.