9 பிப்ரவரி காலை, மிகவும் இரகசியமான முறையில், இந்திய அரசு முகமது அப்சல் குருவை தூக்கிலிட்டு, தில்லியிலுள்ள திகார் சிறையின் உள்ளேயே அவரை அடக்கம் செய்துள்ளது. அவரது குடும்பத்திற்கும் நாட்டின் ஏனைய மக்களுக்கும் உண்மை பின்னரே தெரிய வந்தது. அப்சல் குருவின் மரண தண்டனை, சட்டம் மற்றும் நீதி என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாத ஒரு கீழ்த்தரமான கோழைத்தனமான செயலாகும். மாறாக, அவரது வழக்கில் சட்டம் மற்றும் நீதி அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக சான்றுகள் காட்டுகின்றன.

டிசம்பர் 2001 இல் பாராளுமன்றத்தில் குண்டு வெடிப்புக்கு யார் உண்மையான காரணம், அதில் அப்சல் குருவை எப்படி சிக்க வைத்தனர், அதனால் எதை சாதிக்க முயற்சித்தனர் என்பது போன்ற பல கேள்விகளை முடிவு கட்டுவதற்காகவே அப்சல் குருவைத் தூக்கிலிட்டிருக்கின்றனர். இந்த கேள்விகளுக்கு அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை, ஆனால் அதற்கு பதிலாக அப்சல் குருவை ஒரு பலியாடாக ஆக்கியிருக்கின்றனர்.

அப்சல் குருவை 7 ஆண்டுகளாக மரண வரிசையில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த சமயத்தில் அனைத்து வகையான பிற்போக்கு சக்திகளும் அவரது ரத்தத்திற்கு வேட்டையாடிக் கொண்டிருந்தனர். இத்தனைக்கும் பிறகு அவர் தூக்கிலிடப்பட்டது, திட்டவட்டமான அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட முழுக்க முழுக்க அரசியல் செயலாகும். இன்று இந்திய மக்கள் எதிர்கொள்ளும் பிரதான எதிரி ”பயங்கரவாதம்” என்ற இந்திய அரசின் பிரச்சாரத்தை மேலும் அதிகரிப்பதற்காகவும், இந்த அரசு மக்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடிப்பதாகவும் அவர்களுடைய காப்பாளர் என்றும் காட்டிக் கொள்வதற்காகவும் இது நடத்தப்பட்டது. ”மக்கள் விரோதிகள்” என்று ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்படுபவர்கள் மீது இனவாதப் பிளவுகளை ஆழப்படுத்தவும் அவர்கள் மீதான இரத்த வெறியை மேலும் தூண்டி விடுவதற்காகவும் இது நடத்தப்பட்டது. ஏற்கனவே தாங்க முடியாத அழுத்ததிலுள்ள காஷ்மீர் மக்கள், முஸ்லீம் நம்பிக்கை உள்ளவர்கள், குறிப்பாக இளைஞர்கள் மீது இது மேலும் நெருக்குதலை அதிகரிக்கும்.

உண்மை என்னவென்றால் அப்சல் குரு, காவல்துறையின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் காஷ்மீரில் ”சரணடைந்த ஒரு போராளி”. டிசம்பர் 2001 நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு என கூறப்படும் ஒரு மர்மமான சதித்திட்டத்தில், மற்றவர்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிய பாத்திரத்தில் பகடைக்காயாக உபயோகப்படுத்தப்பட்டவரே அப்சல் குரு. இந்தச் சதி திட்டத்தை தீட்டியவர்கள் யார்? என்ன நோக்கங்களுக்காக? யாரெல்லாம் அதில் ஈடுபட்டிருந்தார்கள்? பதினோரு ஆண்டுகள் கழித்தும் கூட இந்த கேள்விகளுக்கான பதில்கள் வெளியே வர அனுமதிக்கவில்லை. இந்த நிகழ்வில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கில் மூன்று பேருடைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்க முடியாத அளவிற்கு போலியாக இருந்தன. அப்சலைப் பொருத்தவரை, அவர் சித்திரவதை செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலங்களையும் முரண்பாடான அறிக்கைகளையும் கொடுக்க கட்டாயம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாக உள்ளது.

நீதிமன்றங்களே இவற்றை பலவீனமான ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரங்களென தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த பெயரளவிலான "ஒப்புதல் வாக்குமூலங்களின்" அடிப்படையில் சந்தேகப்படத்தக்க அறியப்படாத சதித்திட்டத்தின் விவரங்களை விசாரணை செய்யப்படாமலேயே, அவருக்கு முக்கியமான விசாரணை கட்டத்திலும் சரியான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த போதிலும், பெருநிறுவன செய்தி ஊடகத்தின் உதவியுடன் கவனம் அனைத்தையும் அவற்றிலிருந்து திசை திருப்பி, அதற்கு பதிலாக, அப்சலின் ”குற்றத்தின்” மீது முழு கவனத்தையும் திருப்பி விட்டனர். இன்று பல்வேறு பொது நபர்கள் பயபக்தியோடு "சட்டம் அதன் கடமையைச் செய்துள்ளது" என அறிவித்து வருகிறார்கள். ஆனால், அப்சல் வழக்கில் நடந்த சட்டத்தின் உண்மையான போக்கு இது தான்.

அப்சல் வழக்கில் மரண தண்டனையை சரியென உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிரான ஆதாரம் முற்றிலும் சம்பவத்துடன் நேரடி தொடர்பில்லாதது என்பதை தன் தீர்ப்பில் ஒப்பு கொண்டுள்ளது. ஒரு மனிதன் முற்றிலும் சம்பவத்துடன் நேரடி தொடர்பில்லாத ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தூக்கிலப்பட்டது ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை. எனினும், உச்ச நீதி மன்றம் அப்சலுக்கு குறைந்த பட்சமாக தூக்கு தண்டனை கொடுத்தால்தான் "கூட்டு மனசாட்சி" திருப்தியடையும் என்று கூறி தன்னுடைய தீர்ப்பை நியாயப்படுத்தியது. அப்சல் குருவின் இரத்தத்தைக் கோரிய இந்த "கூட்டு மனசாட்சி" தான் என்ன? பொய்களை பயன்படுத்தியும் திட்டமிட்ட முறையில் உண்மையை மறைத்து செய்தியைப் பரப்பியும், அச்சத்தைத் தூண்டிவிட்டும், பழிவாங்கும் தாகத்தை கிளறிவிட்டும் மற்ற இழிவான முறைகளையும் கொண்டு ஊடகங்களின் கட்டுக்கதைப் பிரச்சாரத்தால் ஆளும் வர்க்கத்தினாலும் அரசினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயங்கரமான உருவாக்கமே இதுவாகும்.

எந்தவொரு பிரிவு மக்களின் உரிமைகள் மீது பெரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட போதும் அல்லது போருக்கு முன்னரும் பொதுமக்களிடம் வெறியை கிளப்ப, இப்படிப்பட்ட முறைகளையே அவர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஏனெனில், இதை ”மக்களுடைய விருப்பமாக” போலியாக சித்தரித்து வருகின்றனர்.  அப்சலின் வழக்கும், இத்தனை ஆண்டுகளாக அவர் தூக்கிலிடப்பட வேண்டுமா வேண்டாமா என்ற மிகவும் பிரபலப்படுத்து நடத்தப்பட்ட விவாதமும், ”பயங்கரவாதம்” என்ற பூச்சாண்டியை பொதுமக்கள் கவனத்தில் முதன்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கும் மக்கள் எதிர்கொள்ளும் மற்ற இன்றியமையாத பிரச்சினைகளில் இருந்து அவர்கள் கவனத்தை திசை திருப்பவும் பயன்படுத்தப்பட்டது.

அப்சலின் மரண தண்டனை ஒரு "வலிமையான செய்தியை" அனுப்பும் என்று அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் இப்போது வெற்றி களிப்புடன் அறிவித்து வருகின்றனர். இதே "வலுவான செய்தியே" நவம்பர் 1984 இலும் தரப்பட்டது, மீண்டும் டிசம்பர் 1992 இல் பாபர் மசூதி தகர்ப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட இரத்தப் படுகொலைகளிலும் இதே செய்தி தரப்பட்டது, மீண்டும் 2002-இல் குஜராத் வன்முறையின் போதும் இதே செய்தி தரப்பட்டது. அரசும் ஆளும் வர்க்கங்களும் அதன் அரசியல் தலைவர்களும் தங்களுடைய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்தவோ, பயங்கரவாத மற்றும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கவோ தயங்க மாட்டார்கள் என்பதே அந்தச் செய்தியாகும். அப்சல் தூக்கிலடப்பட்டதை நாட்டிற்கு அறிவிப்பதற்கு முன்பாகவே காஷ்மீர் முழுவதும் கைபேசி இணைப்பையும் இணையதள இணைப்பையும் ஏன் தொலைக்காட்சியையும் கூட துண்டிக்கும் தீவிர நடவடிக்கை எடுத்ததும் அங்கு அனைத்து பகுதி மக்களையும் தங்களின் வீடுகளுக்கு உள்ளே இருக்கும்படி கட்டாயப்படுத்துவதும் நடத்தப்பட்டது. இது "இந்திய சனநாயகத்தின்" உண்மையான முகத்தைக் காட்டுகிறது!

இந்திய அரசின் இந்த கொடூரமான செயலுக்கு தொழிலாளர் ஒற்றுமை குரல் தனது கோபத்தையும் வலுவான கண்டனத்தையும் தெரிவிக்கிறது.