சனநாயகத்திற்கான போரில் தொழிலாளி வர்க்கம் வெற்றி பெற சோவியத் அனுபவங்களுடைய படிப்பினைகள் மிகவும் அவசியம்

1917, நவம்பர் 7 அன்று இரசியத் தொழிலாளி வர்க்கம், முதலாளிகள் மற்றும் பண்ணையார்களுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு, உழைக்கும் உழவர்களுடைய கூட்டணியோடு தன்னுடைய ஆட்சியை நிறுவியது. தொழிலாளிகள் - உழவர்களுடைய சோவியத்துக்கள் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வை நடத்திட இரசிய உழைக்கும் வர்க்கத்திற்கு போல்ஷவிக் கட்சி தலைமை அளித்தது.

இரசிய சோசலிச கூட்டாட்சியான சோவியத் குடியரசின் முதல் அரசியல் சட்டமானது, 1918-இல் ஐந்தாவது அனைத்து இரசிய சோவியத்துகளின் காங்கிரசில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது இரசியாவை, “தொழிலாளர்கள், படை வீரர்கள், மற்றும் உழவர்களுடைய சோவியத்து பிரதிநிதிகளுடைய குடியரசு என்றும், மத்திய மற்றும் வட்டாரத்தின் எல்லா அதிகாரங்களும் இந்த சோவியத்துகளுக்கே” என்றும் அறிவித்தது. அது, இரசிய சோவியத் குடியரசை, “சுதந்திர தேசங்களின் சுதந்திர ஒன்றியமாகவும், சுதந்திர தேசிய குடியரசுகளின் ஒரு கூட்டாட்சியாகவும்” அறிவித்தது. மனிதனை மனிதன் சுரண்டுவதைக் களையும் நோக்கத்தில் புரட்சிகர அரசாங்கம் தீர்மானித்த எல்லா ஆணைகளையும் இந்த அரசியல் சட்டம், சட்டரீதியாக ஆக்கியது.

இரசிய தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய எடுத்துக் காட்டினால் உணர்வூட்டப்பட்ட, சாரிச ஆட்சியினால் ஒடுக்கப்பட்ட பிற தேசங்கள் இந்த சுதந்திர தேசங்களுடைய சுதந்திர ஒன்றியத்தில் இணைந்து கொண்டனர். 1924 சோசலிச குடியரசுகளின் சோவியத் யூனியனுடைய அரசியல் சட்டம் இந்த உண்மையைப் பிரதிபலித்தது.

சோவியத் அரசானது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஒரு அமைப்பாகும். அதாவது அது, தன்னுடைய முன்னணிக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தால் வழி நடத்தப்படும் உழைக்கும் பெரும்பான்மையான மக்களுடைய ஆட்சியாகும். அது உழைக்கும் மக்களுடைய அரசியல் அதிகாரம். அது மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முடிவு கட்டுவதற்கும், வர்க்கங்களற்ற ஒரு கம்யூனிச சமுதாயத்திற்கு வழி வகுப்பதற்குமான ஒரு அதிகாரமாகும். யாரும் பிறருடைய உழைப்பைச் சுரண்டுவதற்கான “உரிமையை” அது மறுக்கின்ற அதே நேரத்தில், எல்லா உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் உத்திரவாதமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சனநாயகம், ஒரு புதிய வகையான சனநாயகமாகும்.

சனநாயகம் என்பது அரசியல் அதிகாரத்தின் ஒரு வடிவமாகும், வர்க்க ஆட்சியின் ஒரு வடிவம். இன்றைய காலகட்டத்தில் ஒன்று முதலாளி வர்க்க சனநாயகம் இருக்க முடியும் அல்லது பாட்டாளி வர்க்க சனநாயகம் இருக்க முடியும். பாட்டாளி வர்க்க சனநாயகத்தை நிறுவுவதற்கும், சோசலிசத்தைக் கட்டுவதற்கும் சோவியத் யூனியனுடைய தொழிலாளி வர்க்கத்தை போல்சவிக் கட்சி தலைமை தாங்கி நடத்தத் தொடங்கியதிலிருந்து, சோவியத் சனநாயகத்தையும், சோசலிச அமைப்பையும் பழிகூறுவதற்கு, எந்த கொடிய நஞ்சையும் பயன்படுத்த உலக ஏகாதிபத்திய முதலாளி வர்க்கம் தயங்கியதே இல்லை.

சனநாயகம் பற்றிய கேள்வியில் முதலாளி வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் ஒரு கடுமையான மோதல் இன்று இருந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் மையமாக – சமுதாயத்தின் போக்கை யார் அல்லது எந்த வர்க்கம் தீர்மானிக்க வேண்டும் என்ற கேள்வி இருந்து வருகிறது. அது, சிறுபான்மையான சுரண்டல்காரர்களுடைய தலைமையில் இருப்பவர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு தலைமை தாங்கி நடத்திச் செல்லும் ஒரு வர்க்கமாக இருக்க வேண்டுமா?

முதலாளி வர்க்கம் சமுதாயத்தின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்த போது, அது பாராளுமன்ற சனநாயகம் உட்பட பல்வேறு வடிவங்களைக் கொண்ட அதிகாரத்தை நிறுவியது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையிடம் உயர்ந்தபட்ச தீர்மானிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, முதலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரும் அவர்களுக்கான அரசியல் கட்சிகளை உருவாக்கிக் கொண்டு ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொள்கின்றனர். இந்த பிரதிநிதித்துவ சனநாயகத்தின் வழிமுறையிலிருந்து பெரும்பான்மையான தொழிலாளர்களும் பாடுபடும் உழவர்களும் முழுவதுமாக வெளியே தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாளி வர்க்கம் வளர வளர, அதோடு தொழிலாளி வர்க்கத்தின் அளவும் வலிமையும் வளர்ச்சி பெற்றன. முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக ஐக்கியமான போராட்டத்தைத் தொடுக்க வேண்டிய தேவை, தான் ஒரு அணிதிரட்டப்பட்ட சக்தியாக வளரவும், வேலை செய்யுமிடங்களில் தங்களுடைய சங்கங்களை அமைக்கவும், காலாவட்டத்தில் தன்னுடைய சொந்த அரசியல் கட்சிகளை நிறுவவும், பிரதிநிதித்துவ முறை உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டுமென கோருவதற்கும் தொழிலாளி வர்க்கத்தைத் தூண்டியது.

20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டுமென்ற கோரிக்கையானது தொழிலாளி வர்க்கம் மற்றும் பெண்கள் இயக்கத்தின் முற்போக்கான கோரிக்கையாகும். அன்று அது எங்கும் நிறைவேற்றப்பட வில்லை. அமெரிக்காவில் சொத்தில்லாதவர்களுக்கும், கருப்பர்களுக்கும், அல்லது பெண்பாலினருக்கும் வாக்களிக்கவோ, தேர்தலுக்கு நிற்கவோ உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இரசியாவில் போல்சவிக் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட புரட்சிகர போராட்டங்களில் தொழிலாளர்கள், உழவர்கள், படைவீரர்களுடைய சோவியத்களின் பிரதிநிதிகள் தோன்றினர். சாரிச ஆட்சிக்கு எதிராக வர்க்கப் போராட்ட அமைப்புக்களாக அவை வெளிப்பட்டன. உருவாகின. சாரிச ஆட்சியைத் தூக்கியெறியும் போராட்டத்தின் முன்னணியில் அவர்கள் இருந்தனர். சாரிச ஆட்சியைத் தூக்கியெறிந்த பின்னர், சோவியத்துக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது அதிகாரத்தை ஒரு முதலாளி வர்க்க பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

சோவியத்துக்களில் இருந்த போல்சவிக்குகள், சோவியத்துக்கள் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டுமென வாதிட்டனர். மென்சவிக்குகளும், சோசலிச புரட்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களும் இந்தப் போக்கை எதிர்த்தனர். எல்லா அதிகாரமும் சோவியத்துகளுக்கே! என்ற முழக்கத்தை பெரும்பான்மையான தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் போர்வீரர்களுக்கு விளக்கி அதற்கு ஆதரவாக அவர்களைக் கொண்டுவருவதில் போல்சவிக்குகள் வெற்றி பெற்றனர். அக்டோபர் புரட்சியில் தொழிலாளி வர்க்கமும், அதனுடைய இராணுவமும் பனிக்கால அரண்மனையைக் கைப்பற்றியபோது இந்த முழக்கத்தை பொருளாதாய உண்மையாக மாற்றினர்.

வாக்காளர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களை எப்போது வேண்டுமானாலும் திருப்பியழைக்கும் உரிமையை 1918 அரசியல் சட்டம் சட்டரீதியான உத்திரவாதத்தை அளித்தது. இன்றுவரை எந்த முதலாளித்துவ நாடும் இதைச் செய்யவில்லை. வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும், மற்ற எல்லா உரிமைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

வர்க்கப் போராட்டத்தை வெற்றிகரமாக வழி நடத்துவதன் மூலம், போல்சவிக் கட்சி, சோசலிச தொழில்துறையை விரைவாக வளர்ப்பதன் மூலமும், வேளாண்மையை தொகுப்பதன் மூலமும் சோசலிசப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை முழுமையாகக் கட்டியமைப்பதில் வெற்றி பெற்றது. எவ்வித இடையூறும், எந்த வகையான நெருக்கடியும் இன்றி, சமூக, மனித வளத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றிகள் சாதிக்கப்பட்டன. முப்பதுகளில், சமூக உற்பத்திக் கருவிகளில் எந்த தனியார் சொத்துக்களும் இல்லை என்ற நிலையும், எனவே, வர்க்கச் சுரண்டலுக்கு பொருளாதார அடித்தளமும் இல்லை என்று ஆக்கப்பட்டது.

1918 அரசியல் சட்டம் சுரண்டும் வர்கங்களுடைய உறுப்பினர்களுக்கு வாக்குரிமையை மறுத்திருந்தது. 1936-இல் சோவியத் யூனியனுடைய மக்கள் விரிவாக விவாதித்து ஒரு புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டனர். அது அந்த நாட்டில் எந்த சுரண்டும் வர்க்கங்களும் இனியும் இல்லை என்பதை அங்கீகரித்தது. தொழிலாளர்கள், கூட்டுறவு உழவர்கள் என்னும் நட்புறவான வர்க்கங்களும், மக்கள் சிந்தனையாளர்கள் என்ற பிரிவினர் மட்டுமே அங்கிருந்தனர். வர்க்கப் பின்னணியின் அடிப்படையில் எவ்வித வேறுபாடுமின்றி, எல்லா வயதுவந்த குடிமக்களுக்கும் அரசியல் உரிமைகளை புதிய அரசியல் சட்டம் விரிவு படுத்தியது.

1936 சோவியத் அரசியல் சட்டம் ஒரு அரசியல் வழிமுறைக்கான அடிப்படையைக் கொண்டுவந்தது. அதில் வேட்பாளர்கள், வாக்காளர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். சட்டமன்றங்களுக்கு தேர்தலில் நிற்பதற்கு கம்யூனிஸ்டு கட்சியின் வட்டக் கிளை, தொழிலாளர்களுடைய சங்கம், உழவர்களுடைய அமைப்பு, பெண்களுடைய அமைப்பு, மாணவர் குழு, இளைஞர் மன்றம் என தொகுதியில் உள்ள எல்லா வகையான மக்கள் அமைப்புக்களும் தங்களுடைய பிரதிநிதிகளை முன்னிறுத்தலாம். இப்படி முன்னிறுத்தப்பட்டவர்களெல்லாம் ஒரு நீண்ட விரிவான தேர்வு முறையை சந்தித்தாக வேண்டும். அதில் வாக்காளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும், உரிமைகளை நிலைநாட்டவும் வழிவகுக்கப்படும். இந்தத் தேர்வு முறையின் இறுதியில் வாக்காளர்கள் அங்கீகரித்த இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்படும். இதற்குப் பின்னரே, மக்கள் முடிவு செய்த வேட்பாளர்கள் மீது இறுதி வாக்கெடுப்பு நடைபெரும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் சட்ட மன்றமாக இருப்பார்கள். ஆளும் மற்றும் எதிர்க் குழுக்கள் என்ற எந்தப் பிளவும் இன்றி, அது கூட்டு முடிவெடுக்கும், அதிகாரத்தை செயல்படுத்தும். செயலாட்சி அதிகாரத்திற்கு சட்டமன்றத்தின் முடிவுகளை நிறைவேற்றும் கடமை இருக்கும். அது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய கடமையும், சட்டமன்றத்தால் திரும்பியழைக்கக் கூடியதாகவும் இருக்கும். அது போலவே, சட்டமன்றத்தின் உறுப்பினர்களும், அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களால் மீண்டும் திருப்பியழைக்கப்படக் கூடியவர்கள் ஆவர்.

1936-இல் இந்த அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், இந்த வழிமுறையைப் பின்பற்றி சோவியத் யூனியனில் தேர்தல்கள் உண்மையில் நடைபெற்றன. மக்கள் திரளுடைய விழிப்புணர்வை உயர்த்துவதன் மூலமும், சோவியத் கட்சியிலும், அரசிலும் இருந்த தனிநலன்கள் மாற்றத்திற்கு கொண்டுவந்த எதிர்ப்பைத் தோற்கடித்தும், புதிய அரசியல் வழிமுறையை நிறுவுவதற்கும் நிலைநாட்டுவதற்கும் ஆன போராட்டத்தை போல்சவிக் கட்சி வழி நடத்தியது. இந்தப் போராட்டமானது, 1930-இல் எழுந்த இரண்டாம் உலகப்போரால் இடைமறிக்கப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர், பொருளாதாரமும், உள்கட்டமைப்பும் மீண்டும் கட்டியமைக்கப்பட்ட பின்னர், புதிய அரசியல் வழிமுறையை உறுதிப்படுத்தும் திட்டம் கட்சியின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். ஆனால், தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குருச்சேவிச திருத்தல்வாதிகள் இந்தத் திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டனர். இந்தத் திட்டத்தை அவர்கள் உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தை மறுத்து, தீர்மானிக்கின்ற அதிகாரத்தை திருத்தல்வாத கட்சியின் தலைமையில் குவித்து வைத்துக் கொள்ளும் நோக்கம் கொண்ட ஒரு மாற்றுத் திட்டத்தைக் கொண்டு மாற்றியமைத்தனர்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பொருளாதார அடித்தளத்தில் முதலாளித்துவ அமைப்பு மீட்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் அரசியல் மேல் கட்டுமானம் சோவியத் அதிகார தோற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டது. உண்மையில், எல்லா அதிகாரமும் புதிய திருத்தல்வாத முதலாளி வர்க்கத்தின் கைகளில் குவிக்கப்பட்டது. பொதுப் பிரச்சனைகளில் எவ்வித பங்கும் மறுக்கப்படும் அரசியல் வழிமுறை மீது மக்களிடையே பெருகி எழுந்த அதிருப்தியை முதலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினர் சூழ்ச்சியாகக் கையாண்டு சோசலிசத்தின் எல்லா மிச்ச மீதங்களையும் சுத்தமாக அகற்றிவிட்டனர். வெளிப்படைத் தன்மை மற்றும் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கார்பெச்சவ் முதலாளித்துவ சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டான். பின்னர் இது, யெல்ஸ்டின் சோவியத் அரசை முழுமையாக தகர்த்துவிட்டு அதனிடத்தில் ஒரு கலப்படமற்ற முதலாளித்துவ சனநாயகத்தை நிறுவ வழி வகுத்தது.

சோவியத் சனநாயகத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியின் அனுபவத்தைத் தொகுப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு நவீன சனநாயகமானது, இறையாண்மையை ஒட்டுமொத்த மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். அது சமுதாயத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் உரிமைக்கு உத்திரவாதமளிக்க வேண்டும். அதாவது, வேட்பாளர்களைத் முடிவு செய்வதில் வாக்காளர்களுக்கு ஒரு தீர்மானகரமான பங்கு இருக்க வேண்டும். செயலாட்சி அதிகாரமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கும், சட்டமன்றம் வாக்காளர்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருப்பதை அது உறுதி செய்ய வேண்டும்.

‘கட்சி ஆட்சி’ – வாக்குகள் மூலம் வந்தாலும், அல்லது தோட்டாக்கள் மூலம் வந்தாலும், ஒரு கட்சியினதாக இருந்தாலும் அல்லது பல்வேறு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதாக இருந்தாலும், அந்தக் கருத்தியலையும், நடைமுறையையும் கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்க வேண்டும். கட்சி ஆட்சியென்பது, முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை அதிகாரத்தின் உள்ளடக்கமாகத் தொடர சேவை செய்யும் ஒரு வடிவமாகும் என வரலாறு காட்டியிருக்கிறது.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சி அல்லது கூட்டணியின் கைகளில் உயர்ந்த பட்ச அதிகாரத்தைக் கொடுப்பதும், மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒரு ‘எதிரணி’யாக செயல்படுவது என்ற ஒரு அரசு வடிவமும், தேர்தல் வழிமுறையும், இயற்கையாகவே எதிரெதிர் முகாம்களாக பிளவுண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஏற்றதாகும். ஆனால் தொழிலாளி வர்க்கமோ, வர்க்க நலன்கள் ஒன்றுபட்டதாகவும், எல்லா வகையான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட வேண்டுமென்ற தன் வர்க்க நோக்கத்தில் ஒன்றுபட்டும் இருக்கிறது. அதனுடைய ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றம் ஆளும் மற்றும் எதிரணி என்ற பிளவின்றி, ஒட்டுமொத்தமாக அதனுடைய தீர்மானங்களுக்கும், நடைமுறைக்கும் வாக்காளர்களுக்கு பொறுப்புள்ளவர்களாகவும், பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது அவசியம். வாக்காளர்கள் தங்களுடைய உயர்ந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுக்கு பொறுப்புள்ளவர்களாக இருப்பதற்கு வழிவகுப்பதாக பங்கை ஒரு அரசியல் கட்சி செய்ய வேண்டியுள்ளது.

அரசியல் அதிகாரத்தின் மையக் கேள்வியானது, இறையாண்மை எனப்படும் உயர்ந்தபட்ச தீர்மானிக்கும் அதிகாரம் எங்கிருக்கிறது என்பதாகும். பாராளுமன்ற சனநாயகம் போன்ற அதிகாரத்தின் பழைய வடிவங்கள், ஒரு சிறுபான்மையான சுரண்டல்காரர்களுடைய சர்வாதிகாரத்திற்கு சேவை செய்யும் பழைய உள்ளடக்கத்தை கொண்டுள்ளன. உழைக்கும் பெரும்பான்மை மக்களுடைய ஆட்சியாகிய பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற புதிய உள்ளடக்கத்திற்கு ஒரு புது வகையான பிரதிநிதித்துவம் தேவைப்படுகிறது. இறையாண்மையை, ஒரு கட்சி அல்லது கூட்டணி கட்சிகளுடைய கைகளில் கொடுக்காமல், தேர்ந்தெடுக்கவும், தேர்ந்தெடுக்கப்படவும் உரிமை கொண்ட சமுதாயத்தின் எல்லா வயதுவந்த உறுப்பினர்களுடைய கைகளில் கொண்டு சேர்க்கும் நவீன நிறுவனங்களும், ஒரு அரசியல் வழிமுறையும் அதற்குத் தேவை.

இவையே, சோவியத் சனநாயகத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியின் அனுபவத்தைத் தொகுப்பதன் மூலம் எழுகின்ற முடிவுகளாகும்.

பல கட்சி சனநாயகத்திற்கு வேறு மாற்று இல்லையென்ற ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளி வர்க்கத்தின் வாதத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்க்க வேண்டும். பாட்டாளி வர்க்க சனநாயகத்தையும், இறையாண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அரசியல் சட்டத்தையும் கொண்டு வருவதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.