nurses 350தமிழக அரசின் மருத்துவமனைகள் மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி நவம்பர் 5 அன்று உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. பணி நிரந்தரம் மற்றும், இந்திய மெடிக்கல் கவுன்சிலின் பரிந்துரையின்படி போதுமான செவிலியர்களை வேலைக்கு அமர்த்தவும் கோரி தொழிலாளர்கள் போராடினர்.

தமிழ்நாட்டில் சுமார் 3500 நர்சுகள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். இரண்டு வருடங்களில் நிரந்தரம் செய்யப்படும் என அரசு வாக்குறுதி தந்தும் அவர்கள் ஏறக்குறைய 5-7 வருடங்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாதம் ரூ 7000-8000 ஊதியத்தில் மட்டுமே வேலை செய்கின்றனர்.

அதிக வேலை பளு மட்டுமின்றி, ஆள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சிப்டு வேலையையும் அவர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இதற்காக அவர்களுக்கு ஓவர்டைம் ஊதியமும் கிடையாது. எனவே, சுகாதார மையங்களில் செவிலியர்கள் எண்ணிக்கையை 3 லிருந்து 6 ஆக உயர்த்தக் கோருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 450 செவிலியர்கள் இதே கோரிக்கைகளோடு ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நவம்பர் 5 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். சேப்பாக்கில் நடந்த இந்த போராட்டத்திற்கு காவல்துறை 5 மணிக்குப் பின்னர் அனுமதி மறுத்த போதிலும் தொடர்ந்து போராட அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், போராட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, செவிலியர்களுடைய வேலையை நிரந்தரப்படுத்த வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர்களுடைய போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.