தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்தும் வேலை நேரத்தை நீட்டித்தும், தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து எடுக்கப்படும் உபரி மதிப்பை அதிகப்படுத்தும், மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான அன்றாட போராட்டத்தில் முதலாளி வர்க்கம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை அதிகரிக்க முயற்சிக்கிறது. வேலை நாள் நேரத்தைக் குறைக்கவும் ஊதிய உயர்வு கேட்டும் தொழிலாளி வர்க்கத்தால் நடத்தப்படும் போராட்டம் அதன் சுரண்டலை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் மரியாதையான மனித வாழ்க்கை வாழ்வதற்கான சரியான தேவைகளுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை விதிகளை உருவாக்குமாறும், நுகர்வோர் விலை குறியீட்டெண்ணோடு இணைத்து குறைந்தபட்ச ஊதியத்தைத் தொடர்ந்து திருத்தம் செய்ய வேண்டுமென்றும், அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவதற்கான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் முழு தொழிலாளி வர்க்கத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் போராட்டம் ஆகும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தை முழுவதுமாக எடுத்து கொண்டோமானால் அது, தொழிலாளி வர்க்கத்தின் முழுவதிலிருந்தும் உபரி மதிப்பைப் பிடுங்கி முதலாளி வர்க்கத்தின் பைகளில் கொண்டு செல்வதாகும். பணவீக்கமும், குறிப்பாக பெரும்பான்மையான மக்கள் நுகரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தொழிலாளி வர்க்கத்திடமிருந்தும் உழைக்கும் மக்களிடமிருந்தும் செல்வத்தை மேலும் முதலாளி வர்க்கத்திற்கு மாற்ற வழிவகுக்கிறது. இப்படி கொண்டு செல்லப்படும் செல்வம், பல்வேறு தொழில் கிளைகள் மற்றும் சேவைகளின் முதலாளிகள் மத்தியில், சமனற்ற முறையில் பிரித்துக் கொள்ளப்படுகிறது என்பது இரண்டாம் தரப் பிரச்சினையாகும். பணவீக்கத்தின் விளைவாக, நகரம் மற்றும் கிராமத்திலுள்ள பெரும்பான்மையான தொழிலாளர்களின் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து போகிறது என்பதே முதன்மையான பிரச்சினையாகும்.

தொழிலாளர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு முதலாளி வர்க்கம் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது. நம் நாட்டில் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) என்று கூறப்படும் வகை நிறுவனங்களில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். தொழிலாளர் அமைச்சகத்தின் படி, இப்படிப்பட்ட பிரிவிலுள்ள, தொழில் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து உள்ள 2.61 கோடி நிறுவனங்களில் 5.97 கோடி தொழிலாளர்களை வேலை செய்கின்றனர். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என வகைப்படுத்தல் முதலீடு மூலதனத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும். வேலையில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. தொழிற் தகராறுகள் சட்டத்தின் கீழோ அல்லது தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழோ குறிப்பிட்டுள்ள வரம்பை விட குறைவான எண்ணிக்கை தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்களிலே தான் இந்தத் தொழிலாளர்களில் பெரும் பகுதி தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அவர்கள் சட்டப்படி பெயரளவுக்கு இருந்தாலும், நடைமுறையில் அதை உண்மையில் அவர்களுக்கு கிடைக்க செய்ய சட்ட வழி முறைகள் எதுவும் இல்லை. இந்த நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் பெரிய அளவிலான நிறுவனங்களிலுள்ள ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களும் இப்படி முற்றிலும் முதலாளிகளின் தயவினாலேயே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் எந்தவித சமூக பாதுகாப்புமின்றி, நீண்ட நேரத்திற்கும், மிக குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய வேண்டியுள்ளது. தங்கள் ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை மாற்றுவதற்குப் போராடுவதற்காக, தொழிற்சங்கங்களில் தங்களை அணிதிரட்டிக் கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை.

பெரிய அளவிலான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களின் சில உரிமைகளை பெயரளவுக்காவது பெற்றிருப்பவர்கள், உட்பட்ட எல்லா துறைத் தொழிலாளர்களின் ஊதியத்திலும் அவர்கள் உழைக்கும் நிலைமைகளிலும் நெருக்குதல் கொடுப்பதற்கு, வேலையற்றவர்களுடைய ஒரு பெரிய படை இருப்பது, இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ ஏகபோகங்களுக்கு உதவியாக இருக்கிறது.

இதனால் குறைந்தபட்ச ஊதியத்தை வரையறை செய்வது என்பது, நம் நாட்டின் முழு தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எந்த தொழிலாளியோ உழைக்கும் மனிதனோ குறைந்தபட்ச ஊதியத்திற்கும் கீழே வாழும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படாமல் இருக்கும்படி, இது முழு சமுதாயத்திற்குமான ஒரு வரைமுறையை அமைக்கிறது.

அதிகாரபூர்வமான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் இருக்க வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முதலாளி வர்க்கமும் அதன் அரசாங்கமும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதை மிகக் குறைந்த அளவில் வைப்பதை, நியாயப்படுத்தும் காரணங்களை அவர்கள் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் முக்கிய வாதம், குறைந்தபட்ச ஊதியத்தை எப்படி நிர்ணயம் செய்வது என்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 1970(C131) அறிவுரையை அடிப்படையாகக் கொண்டதாகும். "பொருளாதார வளர்ச்சித் தேவைகள், உற்பத்தித் திறன், அதிக வேலைவாய்ப்பை அடைவதற்காகவும் அதை நீடிக்க வைப்பதற்கும் நோக்கம் உள்ளிட்ட பொருளாதாரக் காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு நாட்டின் குறைந்தபட்ச ஊதியத்தை வரையறுக்க வேண்டும்" என்று அந்த வழிகாட்டும் கூறுகளில் ஒன்று 3(b) பிரிவில் கூறுகிறது.

வாழ்வதற்கான ஊதியத்தையும் சமூகப் பாதுகாப்பு நலன்களையும் தொழிலாளர்களுக்கு கொடுத்தால் அது "பொருளாதார வளர்ச்சியை" பாதித்து வேலை வாய்ப்பை குறைக்க வழிவகுக்கும் என்று வாதிடவும்,  குறைந்தபட்ச ஊதியத்தை எவ்வளவு குறைவாக வைக்க முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்து, முதலாளி வர்க்கம் அதிகபட்ச இலாபங்கள் ஈட்டுவதை நியாயப்படுத்தவும், பிரிவு விதி 3 (ஆ)-வை முதலாளி வர்க்கம் பயன்படுத்துகிறது.

இது மிகப் பெரிய பொய்யாகும். அதிகபட்ச இலாபங்களை ஈட்டுவதற்காக முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை தொடர்ந்து கீழே தள்ளிக் கொண்டே செல்கிறது. முதலாளித்துவ அமைப்பு ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடியில் சிக்கி வருவதற்கான காரணங்களில் ஒன்று, அது மிகை உற்பத்தி நெருக்கடியில் பிடிபட்டுக் கொண்டே இருப்பதாகும். சந்தையில் பொருட்கள் அதிகமாக உள்ள போதும் சுரண்டப்பட்டு ஓட்டாண்டியாகிவிட்ட தொழிலாளர்களிடத்திலும் உழைக்கும் மக்களிடத்திலும் இன்றியமையாத தேவைகளைக் கூட வாங்க பணம் இல்லாத நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் வரையறுத்தலின் வரலாறு

1943, 1944 ல் தொழிலாளர் நிலைக் குழுவின் மூன்றாவது மற்றும் நான்காவது கூட்டங்கள் நடத்தப்பட்டு அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து முறையே 1943, 1944 மற்றும் 1945 இல் முத்தரப்பு தொழிலாளர் மாநாடுகளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் தேவை விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 1946 அன்று, ஒரு குறைந்தபட்ச ஊதிய மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மார்ச் 1948-இல் ஒரு சட்டமாக ஆக்கப்பட்டது.

நவம்பர், 1948-இல், நியாயமான ஊதியத்திற்காக, அரசாங்கம் ஒரு முத்தரப்புக் குழுவை நியமனம் செய்தது. அக்குழு, முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் அரசின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. உழைப்பிற்கான நியாயமான ஊதியத்தைப் பற்றி விசாரித்து அறிக்கையை தயாரிப்பதுதான் அவர்களின் பணியாகத் தரப்பட்டது.

நியாய ஊதியக் குழு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஊதியங்களை வரையறுத்தது. அதாவது; (i) வாழ்வதற்கான ஊதியம் (ii) நியாயமான ஊதியம் (iii) குறைந்தபட்ச ஊதியம்.

சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் என்பது, 1948-இல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின், தகுந்த செயல்முறை விதிகளின் படி நிர்ணயிக்கப்படுகிறது. அது எந்தெந்த வேலைகளுக்கு பொருந்தும் என்பது அந்த சட்டத்தின் அட்டவணையில்  பட்டியலிடப்பட்டுள்ளது.

வாழ்வதற்கான ஊதியம், நியாயமான ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம்

குழுவைப் பொறுத்தவரை, தொழிலாளி தானும் தனது குடும்பத்தினரும் வாழும் வகையில், வெறும் அத்தியாவசிய உணவு, உடை, தங்குமிடம் என்பது மட்டுமில்லாமல், அடிப்படைத் தேவைகளான குழந்தைகளுக்கு கல்வி, உடல் நலமின்மைக்கான பாதுகாப்பு, அத்தியாவசிய சமூக தேவைகள், முதிய வயது உட்பட்ட முக்கிய எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கும் காப்பீடு கொண்டதாக மிக உயர்ந்த மட்டத்திலான ஊதியமே வாழுவதற்கான ஊதியம் என்பதாகும். ஆனால், தேசிய வருமானத்தையும் சம்பந்தப்பட்ட தொழில் துறையின் ஊதியம் கொடுக்கக்கூடிய திறனையும் கருத்தில் கொண்டே, அப்படிப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், என்று குழு கருதியது. மேலும், வாழ்வதற்கான ஊதியம் என்பது இறுதி நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் இந்த குழு கருதியது.

அப்படிப்பட்ட ஊதியத்திற்கு அரசு உத்தரவாதம் தருவதற்கு பதிலாக அதை ஒரு கொள்கை நோக்கமாக மாற்றி வைத்திருக்கின்றனர். அதாவது இதைக் கொண்டு வருவதற்கு எந்தவொரு நடைமுறை நடவடிக்கைகள் செய்யப்படாமலும் காலக்கெடு இல்லாத நிலையிலும், அரசாங்கம் இதைச் செயல்படுத்துமென தொழிலாளி வர்க்கத்தையும் மக்களையும் நம்ப வைத்து வருகிறார்கள். இது ஒரு கொள்கை குறிக்கோளாகவே இருந்துவிட்டது என்பதை, சுதந்திரத்திற்கு பிறகு 66 ஆண்டுகள் ஆகியும், நகரத்திலும் கிராமப்புறங்களிலும் பெரும்பான்மையான நமது மக்கள் வாழ்க்கையை, பயங்கரமான வறுமையில் வாழ்கிறார்கள் என்ற உண்மையால் அறியலாம். நமது தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பாலான குடும்பங்கள், அடிப்படையான அத்தியாவசிய உணவும் உறைவிடமும் கூட இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கல்வியைப் பற்றியும் சுகாதாரத்தைப் பற்றியும் கேள்வியே இல்லை.

"குறிக்கோளானது, சாராம்சத்தில்,  வெறுமனே நியாயமான ஊதியங்களை தீர்மானிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கள் தற்போதுள்ள நிலையில் வைக்கப்பட வேண்டும், முடிந்தால் அதிகரிக்கப் படவேண்டும். ஊதியங்களின் அளவுகள், உற்பத்தியை நல்ல தொழில் திறனோடு தக்க வைக்க தொழிற்சாலைகளுக்கு சாத்தியமாக்க வேண்டும், என்பது இந்தக் கண்ணோட்டத்தில் தெளிவாகும். எனவே இந்த மிக முக்கியமான கருத்தை கவனத்தில் கொண்டு, தொழிற்துறையின் ஊதியம் கொடுக்கும் திறனை ஊதிய வாரியங்கள் மதிப்பிடப்பட வேண்டும்." என்று நியாய ஊதியங்கள் குழு கூறுகிறது. இப்படியாக இந்தக் குழு "தொழிற்துறையின் ஊதியம் கொடுக்கும் திறன்" க்கு முக்கியத்துவம் கொடுத்தது, அதாவது, நியாயமான ஊதியங்களை வரையறுப்பதில், அதிகபட்ச இலாபம் வேண்டுமென்ற முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு, எந்தவித ஊறும் விளைந்துவிட கூடாதென்ற நிலைப்பாட்டை எடுத்தது.

நியாயமான ஊதியம், தொழிலாளர் உற்பத்தித் திறனோடு தொடர்ப்புடையதாக இருக்க வேண்டும் என்று நியாய ஊதியங்கள் குழு பரிந்துரைத்தது. நியாயமான ஊதியத்தை நிர்ணயிக்கும் கருவியாக ஊதிய வாரியங்கள் அமைப்பதை குழு ஆதரித்தது. தனிப்பட்ட உறுப்பினர்களையும், முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் பிரதிநிதிகளையும் சம எண்ணிக்கையில் கொண்டதாக மாநில வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. மாநில வாரியம் மட்டுமின்றி, ஊதியத்தை முறைப்படுத்த ஒவ்வொரு தொழில் துறைக்கும் ஒரு வட்டார வாரியம் இருக்க வேண்டும்.

நியாய ஊதியங்கள் குழு, குறைந்தபட்ச ஊதியத்தையும் வாழுவதற்கான ஊதியத்தையும், வேறுபடுத்திப் பார்த்தது. நியாய ஊதியமானது, குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாகவும் வாழுவதற்கான ஊதியத்தைவிட குறைவாகவும் இருக்க வேண்டுமென குழு பரிந்துரைத்தது.

பொருளாதாரத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய துறைகளில், எங்கெல்லாம் இப்படிப்பட்ட ஊதிய வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம்,

அரசாங்கம், முதலாளிகள், மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட முத்தரப்பு ஊதிய வாரியங்களினால் முடிவுசெய்யப்பட்டதே இந்த "நியாயமான ஊதியங்கள்" ஆகும்.

"வாழ்க்கையை வெறுமெனே நீடிப்பதற்காக மட்டுமல்லாமல் தொழிலாளியின் திறனை பாதுகாப்பதற்காகவும்" தகுந்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற பார்வையை இந்தக் குழு கொண்டிருந்தது. எனவே, குறைந்தபட்ச ஊதியம் ஓரளவிற்காவது கல்வி, மருத்துவ தேவைகளையும் பிற வசதிகளையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தங்களது சொந்த அட்டவணையை உருவாக்கிக் கொண்டன. இந்த அட்டவணையை உருவாக்கியதன் மூலம், முதலாளி வர்க்கமும் அதன் அரசாங்கங்களும் இந்த சட்டத்தின் வரையறையிலிருந்து பெரும் பகுதி தொழிலாளர்களை ஒதுக்கி வெளியே தள்ளி வைத்திருக்கின்றனர். எனவே குறைந்தபட்ச ஊதிய சட்டம் எவ்வித விதிவிலக்கு இல்லாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் இருக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்கம் கோரி வருகிறது.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் அடுத்த மைல்கல், ஜூலை 1957 ல் புது தில்லியில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வு ஆகும். குறைந்தபட்ச ஊதியம், தேவை அடிப்படையிலானதும் அது தொழிற்சாலைத் தொழிலாளிக்கு குறைந்தபட்ச மனிதத் தேவைகளை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும் என்னும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலாளி வர்க்கமும் காங்கிரஸ் கட்சியும் "சோசலிச பாணி சமுதாயத்தை" ஊக்குவித்து வந்த நேரத்திலும், போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயப் பிரிவினரின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்த அந்த நேரத்திலும் தான் இந்த இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வு நடத்தப்பட்டது. ஒரு சமூக புரட்சி இல்லாமல் பாராளுமன்றம் மூலம் அமைதியாக சோசலிசத்தை அடையலாம் என்ற மாயையைக்கு கம்யூனிஸ்ட் கட்சி பலியாகி, "முதலாளித்துவம் அல்லாத" வளர்ச்சிப் பாதை என்ற பிரச்சாரத்தை அது பரப்பத் தொடங்கியிருந்த காலமாகும் அது.

இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வின் குறைந்தபட்ச ஊதியம் மீதான தீர்மானம் 56 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை நிறைவேற்றப் படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டில் முதலாளித்துவம் பன்மடங்கு வளர்ந்துவிட்டது. சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைகள் மாறிவிட்டன. 56 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வில் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தால், நவீன தொழிலாளியின் மனிதத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. உண்மையில், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வு தீர்மானத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் வரும் தொகையைக் காட்டிலும், இன்றுள்ள குறைந்தபட்ச ஊதியம் மிகவும் குறைவாகவே உள்ளது.

குறைந்த பட்ச ஊதியம் பற்றிய வரையறை - 15-ஆவது இந்தியத் தொழிலாளர் கருத்தரங்கு

குறைந்த பட்ச ஊதியக் குழுக்கள், ஊதிய வாரியங்கள் மற்றும் நீதிபதிகள் போன்றவை உட்பட ஊதியத்தை தீர்மானிக்கும் எல்லா அதிகார அமைப்புக்களும் கீழ்க் கண்ட நியதிகளை ஒரு வழிகாட்டியாக ஒப்புக் கொண்டனர்.

1. குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதில், ஒரு சராசரி குடும்பத்தில், சம்பாதிக்கும் ஒருவரைச் சார்ந்து மூவர் நுகர்வோர்கள் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு குடும்பமானது கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் வருவாயைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

2. டாக்டர் அக்ராய்டின் பரிந்துரைப்படி, மிதமான வேலை செய்யும் ஒரு வயது வந்த சராசரி இந்தியருக்கு ஒரு நாளைக்கு 2700 கலோரிகள் உணவு தேவைப்படும் என்ற அடிப்படையில் குறைந்த பட்ச உணவுத் தேவைகள் கணக்கிடப்பட வேண்டும்.

3. ஆடைத் தேவைகள், ஒருவருக்கு ஓராண்டிற்கு 18 கஜம் என்ற அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் நான்கு பேர் கொண்ட ஒரு சராசரி தொழிலாளியின் குடும்பத்திற்கு 72 கஜம் துணி தேவைப்படும்.

4. குடியிருப்பைப் பொருத்த மட்டிலும், எந்த ஒரு பகுதியிலும், குறைந்தபட்ச ஊதியப் பிரிவினருக்கு அரசாங்கத்தின் மலிவான தொழிற்சாலை வீட்டுத் திட்டத்தில் வாங்கப்படும் குறைந்தபட்ச வாடகையை நியமாகக் கொள்ள வேண்டும்.

5. எரிபொருள், விளக்கு மற்றும் பிற செலவினத் தேவைகள் மொத்த குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகிகமாக இருக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட விதிமுறை பரிந்துரைகளை மீறி குறைந்தபட்ச ஊதியத்தை குறைவாக வைத்துள்ள இடங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன காரணங்களினால் மேற்கூறப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளனர் என தீர்மானம் கூறுகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு சாக்குகளைக் கூறி மேற் கூறப்பட்ட வழிமுறைகளுக்கும் கீழே குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

தில்லியில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வின் தீர்மானத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குமாறு தொழிலாளர்கள் சார்பில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கோரினர். அப்போது, அக்குழுவிடம் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறிய கருத்துக்களிலிருந்து முதலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசாங்களின் தொழிலாளர்கள் மீதான அணுகுமுறையைக் காணலாம். தொழிற்சங்க தலைவர்கள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 15-ஆவது அமர்வின் தீர்மானத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 15,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கும் போது, திருமதி தீட்சித் கூறினார் "தொழிலாளர்கள் இறைச்சி, முட்டையெல்லாம் சாப்பிடுவதில்லை, மேலும் அவர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள். ஆகையினால், அரசாங்கங்களின் 'குறைந்த செலவிலான வீடுகள் திட்டங்களின்' படி வீட்டுச் செலவுகளை அவர்கள் கேட்க முடியாது."!

குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள், திருவிழாக்களும் சடங்குகளும் உள்ளிட்ட குறைந்தபட்ச பொழுதுபோக்கு, முதுமைக்கான ஒதுக்கீடு, திருமணத்திற்கான ஒதுக்கீடு போன்றவற்றிற்காக மேலும் 25 சதவீதம் இருக்கும்படியாக குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்த அரசாங்கங்களும் இந்த தீர்ப்பை மிகவும் அப்பட்டமாகவே மீறி வருகின்றனர்.

தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது, முதலாளி வர்க்கமும் அதன் அரசாங்கங்களும் தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது. 1992-இல் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 30-ஆவது அமர்வில், "நடைமுறைக்கு ஒப்பாத வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிக அளவில்" நிர்ணயிக்கும் போக்கு உள்ளதாக அவர்கள் பேசியிருக்கிறார்கள். சமுதாயத்திலும் தொழிலாளர்களிடமும் உள்ள வளர்ச்சியையும் மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு குறைந்தபட்ச ஊதிய வரையறையை திருத்தி மாற்றங்கள் செய்யப்படவில்லை. திட்டமிட்ட முறையில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் தாக்கப்பட்டு வருகிறது.

இந்த காலக் கட்டத்தில், அரசாங்கம் "தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதியம்" என்ற கோட்பாட்டை வெளியிட்டது. நாட்டின் எந்த பகுதியிலுமுள்ள எந்த நிறுவனமும் ஒப்புக்கொள்ளும் அடிமட்ட குறைந்தபட்ச ஊதியமென இது வரையறுக்கப்பட்டது. இந்தக் கருத்தானது தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மேலும் குறைப்பதற்காகவே முன்வைக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு குறைந்த பட்ச தரம் இருக்க வேண்டும் என்ற பெயரில் இது  முன்வைக்கப்பட்டது. இன்று கிராமப்புற வேலை உத்திரவாத சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் தான் "தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதியமாக" இருக்கிறது. ஜூன் 2013 ல் 45 வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் பேசிய பிரதமர், "தேசிய தரைமட்ட குறைந்தபட்ச ஊதிய"-த்தை கொண்டு வருவதற்காக குறைந்தபட்ச ஊதிய சட்டத்தைத் திருத்தப்போவதாகக் கூறினார். குறைந்தபட்ச ஊதியமாக என்ன இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு புதிய வரையறையைக் கோரும் தொழிலாளி வர்க்கத்தின் கவனத்தை திசை திருப்புவதே இதன் நோக்கமாகும்.

முடிவுரை 

குறைந்தபட்ச ஊதியத்தை வரையறுப்பது பற்றியும் அதன் மதிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும், தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் ஒரு புறத்திலும், முதலாளி வர்க்கமும் அதன் அரசாங்கமும் கொண்ட மறுபுறத்திற்கும் இடையிலான போராட்டம், தொழிலாளி வர்க்கத்தின் ஒரு மிக முக்கியமான அரசியல் போராட்டம் ஆகும்.

இன்றைய நிலையில் மனித வாழ்க்கைக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை தொழிலாளி வர்க்கம் தீர்மானித்துக் கொள்ள  வேண்டும். அது பால், இறைச்சி, முட்டை, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதை 2700 கலோரிகளை உடைய அரிசியாகவோ கோதுமையாகவோ குறைத்து விட முடியாது. கழிப்பறைகளோ குடிநீரோ இல்லாமல், சுகாதாரமற்ற மிகுதியான கூட்ட நெரிசலுடைய சேரிகளில் தாங்கள் வாழுவதையும், அதே நேரத்தில் நம் நாட்டு முதலாளிகள் உலக பணக்காரர்களின் வரிசை பட்டியலில் சேர்ந்து வருவதையும், தொழிலாளி வர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. தரமான கல்வியும் மருத்துவ பராமரிப்பும், விபத்துக்கள் உடல் நலக் கேடு மற்றும் முதுமை இவற்றிற்கான சமூக பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளோடு சேர்ந்து இந்த நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களாக இருக்கும் எங்களுக்கே, தேசிய செல்வத்தில் முதல் உரிமை இருக்க வேண்டும். ஏகபோக முதலாளிகளும் நிதிக் குழுக்களும் அதிகபட்ச இலாபம் சம்பாதிப்பதற்காக எங்களுடைய உரிமைகளை பலியிடுவதை அனுமதிக்க முடியாது.