பாராளுமன்றத்தில் இரயில் இஞ்சின் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

ஆல் இந்தியா ரன்னிங் ஸ்டாப் அசோசியோசனைச் (AILRSA) சேர்ந்த இரயில் இஞ்சின் ஓட்டுனர்கள் (லோகோ பைலட்டுகள்), இரயில்வே பாதுகாப்பை உயர்த்துவதற்காக பல்வேறு குழுக்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இஞ்சின் ஓட்டுனர்கள் மோராதாபாத், தில்லி, லக்நௌவ், அம்பாலா, பதான்கோட், அம்ரித்சர், ஜலந்தர், பைசாபாத், பேரலி, தேராதூன் மற்றும் பிற பிரிவுகளிலிருந்தும் வந்திருந்தனர்.

கூட்டத்தில், ஏஐஎல்ஆர்எஸ்ஏ-வின் துணைத் தலைவர் தோழர் ராம்சாரன், வடக்கு பிரிவிலிருந்து வந்திருந்த தோழர் பி.சி.ஜா, தில்லி பிரிவைச் சேர்ந்த திரு.பாடாம் சிங், துணைச் செயலாளர் மிலாப் சந், பிராந்திய செயலாளர் திரு.எஸ்.ஹான்டா மற்றும் பிறர் உரையாற்றினர்.

எல்லா செயல்வீரர்களும், அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர். ஆங்கிலேயர்களுடைய ஆட்சி காலத்தில் செய்ததைப் போலவே இன்றும் தொழிலாளர்கள் பிரித்தாளப்பட்டு வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நம்மோடு வாணிகம் செய்ய வந்தனர். ஆனால் அவர்கள் நம்மை அடிமைப் படுத்தினர். இதே பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

தொழிலாளி வர்க்கம் மீது அரசாங்கம் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து பேச்சாளர்கள் பேசினர். அரசாங்கத்தின் கணக்குப்படி, ஒரு நாளைக்கு ரூ 36 ஊதியம் பெற்றால் அவர்கள் பணக்காரர்கள். இந்தியாவில் எல்லா மக்களுக்கும் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் கிடைப்பதில்லை. முன்பு 17 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்த இரயில்வேயில் இன்று 11 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். ஒரு பக்கம் இரயில்வேயில் இலட்சக் கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இன்னொரு பக்கம் நாடெங்கிலும் கடுமையான வேலையில்லாமை இருக்கிறது. இரயில்வேவை விற்பதற்கு ஒரு முழு திட்டத்தை அரசாங்கம் போட்டு வைத்திருக்கிறது. இந்திய இரயில்வேவைக் காப்பதற்காக எல்லா மக்களும் ஒன்றுபட வேண்டுமென பேச்சாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

நம்முடைய உரிமைகளைத் தாக்குவதற்காக சட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்களை அவர்கள் கடுமையாகக் கண்டனம் செய்தனர். ஓய்வூதிய முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், குடும்ப ஓய்வூதியம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே, உழவர்களிடமிருந்து நிலத்தை வலுக்கட்டாயமாக பிடுங்குவதை எளிதாக ஆக்குவதற்காக, நில கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழிற் சங்கங்களை அமைக்கும் உரிமைகளை தொழிலாளர்களுக்கு மறுப்பது உட்பட பல்வேறு சட்ட மாற்றங்களை பல மாநிலங்கள் ஏற்கெனவே திருத்திவிட்டன.

கூட்டத்தில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் தோழர் சந்தோஷ், இரயில்வேவைத் தனியார்மயப்படுத்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். இரயில்வே வரவு செலவு திட்டத்தில் இதைத் தெளிவாகக் காணலாம். ஏற்கெனவே பல்வேறு சேவைகள் ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. மற்ற இரயில்வே சேவைகளையும் தனியார்மயப்படுத்த ஒரு திட்டமிருக்கிறது. கொண்டுவரப்படும் புதிய சேவைகள், முதலாளிகளுக்கு அதிக இலாபம் கொடுக்கக் கூடிய துறைகளில் இருக்கின்றன, தொலைதூரத்தில் வாழும் மக்களுடைய தேவைகளையொட்டியல்ல.

இலட்சக் கணக்கான மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் முக்கிய கடமையை லோகோ பைலட்டுகள் நிறைவேற்றி வருகின்றனர். அவர்கள் பல அபாயங்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களுடைய வேலை பளுவைக் குறைப்பது பற்றியோ, அவர்களுக்கு மனிதாபமான வேலை நிலைமைகளை உறுதி செய்வது குறித்தோ அரசாங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை.

எல்லா பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்பதே நம்முடைய ஒற்றுமைக்கு ஒரு அத்தாட்சியாகுமென நிறைவு உரையாற்றிய தோழர் பராம்ஜித் கூறினார். இரயில்வே அமைச்சரவையில் உள்ள பொது மேலாளரிடம் நம்முடைய கோரிக்கைகளைக் கொண்ட மனு ஒன்றை ஏஐஎல்ஆர்எஸ்ஏ வின் தூதுக் குழு அளித்திருக்கிறது என்பதை அவர் அறிவித்தார்.

முடிவில், வடக்கு பகுதியில் மே 4, 2015-இல் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு ஆர்பாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.