tank operators 552

தமிழகத்தில் பணிபுரியும் கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்களும், துப்புரவுப் பணியாளர்களும் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்னர் பிப்ரவரி 10, 2015 அன்று ஆர்பாட்டம் நடத்தினர். தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த கிராம பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போர்க்குணமிக்க ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். தீவுத்திடல் குதிரை வீரன் சிலை அருகிலிருந்து கோட்டையை நோக்கிப் புறப்பட்ட இப் பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்பாட்டமாக நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டம், இச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் இ.வி.கே.சண்முகம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தோழர் இ.வி.கே.சண்முகம், உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மாமன்றத்தின் தோழர். ஆர்.சம்பத் அவர்களும், ஈரோடு மக்கள் மன்றத்தின் தலைவர். தோழர் செல்லப்பன் அவர்களும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் கபிலன் அவர்களும், தியாகி வ.உ.சிதம்பரனார் மனிதநேய பண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு. சி.அன்பு ராமஜெயம் அவர்களும் மற்றும் பல முன்னணித் தோழர்களும் உரையாற்றினர்.

குடிநீர்த் தேவையையும், துப்புரவுப் பணிகளையும் இரவு பகலாக மேற்கொள்ளும் இப் பணியாளர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பகுதிநேரப் பணியாளர்கள் என்று அழைக்கப்பட்டாலும், நேர வரையறையின்றி அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களுடைய குறைந்தபட்ச ஊதியத்தை, மாதத்திற்கு பத்தாயிரமாக உயர்த்த வேண்டும், மாதச் சம்பளத்தை காலந்தாழ்த்தாமல் தமிழக அரசே அரசு கருவூலம் மூலமாக வழங்க வேண்டும், அவர்களுடைய ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்திட வேண்டும், அவர்களுக்கு பணிக் கொடையும், ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும். தொழிற் சட்டங்களுக்குப் புறம்பாகவும், மனித உரிமையை காலில் போட்டு மிதித்தும், பெரும் எண்ணிக்கையில் இவர்களைப் பல்லாண்டு காலமாக தாற்காலிகத் தொழிலாளர்களாக அரசாங்கமே வைத்திருக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். எல்லா தாற்காலிகப் பணியாளர்களையும் இரண்டாண்டு பணி நிறைவு பெற்ற நாளிலிருந்து பணிநிரந்தரம் செய்து, ஊதியமும், பிற பயன்களையும் அளிக்க வேண்டும். மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் முழக்கங்களில் ஈடுபட்டனர்.

சுத்தமான இந்தியா என்று நமது அரசியல்வாதிகள் உருகுவது, வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்கும், நாட்டைச் சுத்தம் செய்வது என்ற பெயரில் ஒப்பந்தக்காரர்களுக்கும் பல உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மக்கள் வரிப் பணத்தை வாரி வழங்குவதற்கும் தான். சுத்தமான இந்தியா வேண்டுமென மேடையில் கொக்கரிக்கும் மோடி, சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் இந்தத் தொழிலாளர்களுடைய உரிமைகளை காலில் போட்டு நசுக்கி வருவதும், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூடப் புறக்கணிப்பதும், அவர்களுக்கு வேலை நிரந்தரமின்றி பல்லாண்டுகளாக வைத்திருப்பதும், மத்திய அரசும், தமிழக அரசும் உண்மையில் தூய்மையான இந்தியாவை விரும்பவில்லை என்பதையும் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற விரும்பவில்லை என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறது. இந்த நிலைமைக்குத் தொழிலாளர்கள் முடிவு கட்ட வேண்டும். தங்களுடைய ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமென்பதை தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வலியுறுத்துகிறது.