மே நாளில் பிலிப்பைன்ஸ் மணிலாவில் அதிபர் மாளிகையை நோக்கித் தொழிலாளர்கள் நடத்தியப் பேரணி தங்களுடைய உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக உலகெங்கிலுமுள்ள பரந்துபட்ட மக்களுடைய எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில் 2017 மே நாள் இருந்தது. மே 1 அன்று உலகெங்கிலும் நகர வீதிகளில் உழைக்கும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர்.

may func 600எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் குறைவான ஊதியம், தாற்காலிகத் தொழிலாளர் எண்ணிக்கை பெருகி வருதல், பயன்களும், ஓய்வூதியங்களும் வெட்டிக் குறைக்கப்படுதல், அதிகரிக்கும் இராணுவச் செலவினங்கள் ஆகியன உலகெங்கிலும் தொழிலாளி வகுப்பினரை எதிர் கொண்டுள்ள பொதுவான முக்கியப் போராட்டங்களாக இருந்து வருகின்றன. உலக அளவிலான முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிக்கு பதிலாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மேலும் மோசமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருகின்றன.

ஆர்பாட்டங்களை எதிர்பார்த்து பல நகரங்களில் மிகப் பெரிய அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் கூடுவதற்கு எதிராக அரசாங்கம் கொடுத்திருந்த ஆணையை தொழிலாளர்கள் தீரத்தோடு மீறியதால் மோதல்கள் நடைபெற்றன. துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் ஆர்பாட்டக்காரர்கள் மீது காவல் துறை, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், இரப்பர் புல்லட்டுகளால் தாக்கியும், 200-க்கு மேற்பட்டவர்களைக் கைது செய்தும் இருக்கிறது. பிரான்சில் காவல் துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, ஆர்பாட்டக்காரர்களை விரட்டிப் பிடித்து, தடியடி நடத்தியிருக்கின்றனர்.

may celebrations 600

வங்க தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆடைத் தொழிலாளர்கள் ஒன்று கூடி, ஊதிய உயர்வையும், நல்ல வீட்டு வசதியையும், சுகாதாரப் பயன்களையும், தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி வசதிகளையும் கோரினர். கம்போடியாவில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தின் தடை ஆணையை மீறி குறைந்த பட்ச ஊதியத்தையும், பரந்துபட்ட சனநாயக உரிமைகளையும் கோரி மனு அளித்தனர். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டுமென்று கோரியும், வெளியே கொடுத்து செய்யும் வேலையைக் குறைக்குமாறும், நல்ல சுகாதார வசதிகளையும், வேலை நிலைமைகளைக் கோரியும் இந்தோனேசியா – ஜகார்த்தாவில் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிபர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தினர்.

தாய்வானின் தலைநகரான தாய்பெய்-யில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மிகவும் குறைவான ஊதியம், மோசமான வேலை நிலைமைகள், அடிப்படையான ஓய்வூதியம் நீக்கப்படுவது ஆகியவற்றிற்கு எதிராகப் பேரணி நடத்தினர். சட்ட ரீதியாக கொடுப்பட வேண்டிய ஊதியத்தையும், பயன்களையும் தவிற்பதற்காக தற்காலிகத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதையும், தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டுமென்று கோரி சியோலில் கொரிய நாட்டுத் தொழிலாளர்கள் ஆர்பட்டம் நடத்தினர்.

பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் பெரும் பேரணிகள் நடைபெற்றன. ஏதென்சு, தெசாலோனிகி மற்றும் பிற கிரேக்க நகரங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேரணியில் பங்கேற்றனர். பல தொழிற் சங்கங்களும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு  அழைப்பு விடுத்திருந்தனர். பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், போலந்து மற்றும் கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் பல அணிவகுப்புக்கள் நடத்தப்பட்டன.

may greece 600மே 1, 2017 அன்று, கிரீசில் உள்ள ஏதென்சு நகரில் கிரீக்க பாராளுமன்றத்தின் முன்னர் செவ்வண்ணத் தலைக் கவசம் அணிந்த போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் பங்கேற்றனர்.

 

மே நாளுக்கு இரு நாட்களுக்கு முன்னர் பிரேசிலின் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பொது வேலை நிறுத்தம் அங்கு நடைபெற்றது. அதில் 3 கோடியே 50 இலட்சம் மக்கள் பங்கேற்றனர். அங்கு மிகப் பெரிய அளவில் 1 கோடியே 30 இலட்சம் மக்கள் வேலையின்றி இருக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில் வாகன உற்பத்தி, பெட்ரோலியம், பள்ளிகள், அஞ்சல் மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த தொழிற் சங்கங்களும், தொழிலாளர்களும் நாட்டின் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தினர். ஓய்வூதியத்தை வெட்டிக் குறைத்தல், தொழிற் சட்டங்களை பலவீனப்படுத்துதல் போன்றன உள்ளிட்ட அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. நெடுஞ்சாலைகளில் கூடியிருந்த மக்களைக் கலைப்பதற்கு காவல் துறை கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். ஆனால் பேருந்துப் போக்குவரத்து, மெட்ரோ மற்றும் இரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் தலைநகரமே செயலிழந்தது.
அரசாங்கம் கொண்டுவந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மே நாள் வேலை நிறுத்தம் போர்ட்டோ ரிகோ-வை செயல்படாமல் நிறுத்தி வைத்தது. நிர்வாகத்தை மேற்பார்வையிடும் அமெரிக்க நிதிக் கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டனம் செய்த ஆர்பாட்டக்காரர்கள் பொது வேலை நிறுத்தத்திற்காக சாலைப் போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கினர்.

குடியேறியத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகவும், தென்னமெரிக்கர்கள், முஸ்லீம்கள் மற்றும் பிற குடியேறிய மக்கள் மீது டிரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்களை எதிர்ப்பதற்காகவும் அமெரிக்காவின் எல்லா முக்கிய நகரங்களிலும் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ் மற்றும் ஓக்லெண்ட் போன்ற கலிபோர்னிய நகரங்களில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. லாங்ஷோர்மென் வெளிநடப்பும், குடியேறிய மக்களுக்கு ஆதரவான ஆர்பாட்டங்களும் கூட்டாக துறைமுகங்களை மூடிவிட்டன. ஹூஸ்டனில் பெரும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. சிகாகோ, மில்வாகி, பிலடெல்பியா, நியூயார்க் நகரம், வாஷிங்டன் டிசி மற்றும் அட்லாண்டாவில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. போர்ட்லெண்டு, சியாடில், பினிக்ஸ், லாஸ் வெகாஸ், இன்டியானாபோலிஸ், பிட்ஸ்பர்க், மயாமி, பாஸ்டன், புராவிடென்சு, ரோடே ஐலாண்ட் மற்றும் பிற நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பல நகரங்களில் பொதுப் பள்ளி ஆசிரியர்களும், பிற ஊழியர்களும் வேலைக்குச் செல்லவில்லை. குடியேறியவர்கள் உரிமைகள் பேரணியில் பங்கேற்பதற்காகவும், எந்த ஊதிய உயர்வுமின்றி அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்த புதிய ஒப்பந்தமும் இல்லாமல் போக வேண்டியிருப்பதை எதிர்ப்பதற்காகவும் அவர்கள் தனிப்பட்ட விடுப்பு எடுத்துக் கொண்டு ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சேர்ந்த மருத்துவமனைத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவமும், சுகாதாரமும் தனியார்மயப்படுத்தப்படுவதை எதிர்த்து வான்குவார், சுர்ரி, நியூ வெஸ்ட்மினிஸ்டர் மற்றும் பிற நகரங்களிலும் ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர். இன்டர்நேஷ்னல் லாங்ஷோர் மற்றும் வேர்ஹவுஸ் சங்கம், பிசி பெரி மற்றும் மெரைன் தொழிற் சங்கம் உள்ளிட்ட கப்பல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மே நாளில் வான்குவாரில் பேரணி நடத்தினர்.

டொரான்டோ-வில் இந்தியத் தொழிலாளர்கள் மே நாளைக் கொண்டாடினர்

சர்வ தேச தொழிலாளி வகுப்பின் நாளாகிய மே நாளை 2017 மே 1 அன்று டொரான்டோவில் உள்ள கெதர் பாரம்பரியம் மற்றும் உதவும் கரத்தினர் பேரார்வத்தோடும், மிகுந்த போர்க் குணத்தோடும் நடத்தினர்.

மே நாளின் புகழ்மிக்க வரலாற்றையும், 1886-இல் சிகாகோவின் தொழிலாளர்கள் தடைகளை மீறி மேற் கொண்ட போராட்டங்களையும் பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர். உழைக்கும் மக்களுடைய நினைவிலிருந்து மே நாளை முற்றிலும் அழித்தொழிப்பதற்காக செப்டம்பர் மாதத்தில் ஒரு உழைப்பாளர் நாள் விடுமுறையை வேண்டுமென்றே அமெரிக்க அரசு அறிவித்திருந்த போதிலும், மே 1 அன்று கனடா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களில் வீதிகளில் அணி திரண்ட தொழிலாளர்களையும், உழைக்கும் மக்களையும் அவர்கள் போற்றினர். முதலாளி வகுப்பிடமிருந்து போராட்டங்கள் மூலமாகவே சில சலுகைகளைத் தொழிலாளி வகுப்பால் பெற முடிந்தது என்பதைப் பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினர்.

உழைக்கும் வகுப்பினருடைய இன்றைய நிலைமையை பேச்சாளர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். 8 மணி நேர வேலைக்கான உரிமையைப் பெற்றிருந்துங்கூட, பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 16-20 மணி நேரம் வேலை செய்து வருகிறார்கள். இதில் வாடகை கார் மற்றும் டிரக் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர். பெரும்பாலான வேலைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. தொழிலாளர்களை பகுதி நேர வேலைக்கு ஒப்பந்த முறையில் எடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த நாளிலும் நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. வெளியே கொடுத்து செய்யப்படும் வேலை முறையாலும், ஒப்பந்த முறையில் வேலைகள் செய்யப்படுவதாலும் தொழிலாளி வகுப்பினர் சிதறடிக்கப்பட்டு வருகின்றனர்.

தொழில் நுட்ப, அறிவியல் புரட்சியால் தொழிலாளர்களுடைய உற்பத்தித் திறன் பலமடங்கு உயர்ந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினர். இருந்துங்கூட வாழ்க்கை நடத்துவதற்காகவே அவர்கள் பல மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதையும், அது அவர்களுடைய உடல் நலத்தையும் குடும்ப வாழ்க்கையும் பாதிப்பதையும் எடுத்துக் கூறினர். தொழிலாளர்களுடைய முதுகெலும்பை முறிக்கும் கடுமையான உழைப்பையும், மனிதாபிமானமற்ற வேலை நிலைமைகளையும் குறைப்பதற்கு பதிலாக, அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி முதலாளிகள் தங்களுடைய இலாபத்தை அதிகரித்து வருகின்றனர்.

தொழிலாளி வகுப்பு ஒன்றுபட்டு, ஆளும் வகுப்பாக மாறுவதற்குத் தயாரிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு கூட்டம் நிறைவு பெற்றது. இந்த அழுகி நாற்றமடிக்கும் இந்த அமைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, தொழிலாளி வகுப்பு தன்னுடைய கைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒடுக்குமுறையான இந்த சுரண்டல் அமைப்பு முழுவதையும் தூக்கியெறிய வேண்டும். முதலாளித்துவ நெருக்கடிக்கு முடிவு கட்டவும், மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும், இதுவே ஒரே வழியாகும்.