நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் அவசர சட்டத்தை கொண்டு வந்த மோதி தலைமையிலான அரசாங்கத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னை, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருவாரூர், கோவில்பட்டி, கடலூர், திண்டுக்கல், பழநி, நாகர்கோவில், தக்கலை, திருப்பூர், கும்முடிப்பூண்டி, ராசபாளையம், புதுக்கோட்டை, நீட்டாமங்கலம், சேலம், ஆத்தூர், கும்பகோணம், திருப்புரைப்பூண்டி, மற்றும் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தைத் தவிர மற்றும் பல உழவர்கள் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இந்த போராட்டங்களில் பங்குபெற்றன.

இந்த நாட்டு உழவர்கள் மற்றும் மக்களின் நிலங்களையும் வளங்களையும் பெரிய முதலாளிகள் அபகரிப்பதற்காக வெட்கமின்றி வெளிப்படையாக வக்காலத்து வாங்கும் மோதி அரசாங்கத்தை பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த உழவர்கள் கண்டனம் செய்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னாலும், ரயில் நிலையங்கள், மத்திய அரசாங்கத்தின் மற்ற அலுவலகங்களின் முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய அரசாங்கத்தை எதிர்த்தும் பெரிய முதலாளிகளை எதிர்த்தும் தங்கள் நிலங்களின் மீதுள்ள உரிமையை பாதுகாக்கவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த அவரச சட்டத்தின் நகலை அவர்கள் தீ வைத்து எரித்தனர். காவல் துறை அதை ஒடி வந்து அணைத்தனர். தமிழ்நாடு முழுவதும் பெருந்திரளான உழவர்களும் மற்ற செயல் வீரர்களும் கைது செய்யப் பட்டனர்.

பாஜக, அ.இ.அ.தி.மு.க வை தவிர எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இந்த அப்பட்டமான காட்டுமிராண்டித்தனமான அவசர சட்டத்தை கண்டித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் தோழர் நல்லசாமியும் விவசாயிகளின் மற்ற பல செயல் வீரர்களும் பெரிய முதலாளிகளின் பேராசையை பாதுகாக்கும் அரசாங்கத்தின் இந்த செயலை எதிர்த்தனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவரான, தோழர் சரவணன், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன்  நடந்த கூட்டத்தில் உழவர்களுக்கு எதிரான இந்த  தாக்குதலை எதிர்த்துப் பேசினார். மத்திய அரசாங்கம் இந்த அவசர சட்டத்தை திரும்பப் பெரும் வரை போராடுமாறு அவர்கள் எல்லா உழவர்களிடமும் மக்களிடமும் கேட்டுக் கொண்டனர். 

Pin It