புரட்சிகர பாதையில் அணிவகுக்க தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் உறுதியேற்பு

வீரத்தியாகி பகத் சிங்கினுடைய 109-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அரியானா குருஷேத்திராவில் நடைபெற்ற ஒரு மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பேரார்வத்தோடு பங்கேற்றனர். பங்கேற்றவர்கள் அரியானாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். அணி வகுத்துச் சென்ற அவர்கள், வீரத்தியாகி பகத் சிங்கினுடைய வாழ்க்கையையும், பணிகளையும் போற்றி முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிச புரட்சிகர மாற்றத்தை நிறைவேற்றுவதில் தங்களுடைய அசைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்தினர். பேரணி நடைபெற்ற வளாகம் முழுவதும் வீரத்தியாகி பகத் சிங் மற்றும் பிற புரட்சியாளர்களுடைய உணர்வூட்டும் முழக்கங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Bhagavita singhபேரணியை வீரத்தியாகி பகத் சிங் திஷா அறக் கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. 18 அடி உயர வெண்கலத்தாலான பகத் சிங்கினுடைய சிலையை ஜன் சங்கர்ஷ் மன்ச், அரியானாவின் தலைவர் திரு பூல் சிங் கௌதமால் திறந்து வைத்தார். குருஷேத்திரா இரயில் நிலையத்தின் அருகிலேயே பகத் சிங்கின் சிலை நிறுவப்பட்டிருப்பது, முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சியும் சோசலிசமும் வெற்றி பெறுவதற்காக நமது நாட்டு உழைக்கும் மக்களைத் திரட்டுவதில் வீரத்தியாகி பகத் சிங் திஷா அறக் கட்டளை கொண்டுள்ள உறுதியைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

பேரணியைத் தொடர்ந்து ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஜன் சங்கர்ஷ் மன்ச்னுடைய துணைத் தலைவர் தோழர் சுதேஷ் குமாரி நிகழ்ச்சிகளை நடத்தினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்க டாக்டர்.சி.டி.சர்மா அவர்களை அவர் அழைத்தார்.

பின்னர் அவர், வீரத்தியாகி பகத் சிங் திஷா அறக் கட்டளையின் தலைவர் தோழர் ஷியாம் சுந்தர், ஜன் சங்கர்ஷ் மன்ச் அரியானாவின் மாநிலத் தலைவர் திரு பூல் சிங் கௌதம், இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தோழர் பிரகாஷ் ராவ், கிரான்திகாரி நௌஜவான் சபாவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி, இன்குலாபி மஸ்தூர் கேந்திரா-வின் துணைத் தலைவர் நாகேந்தர், புரோகிரசிவ் ஆர்கனெய்சேசன்ஸ் ஆப் பீப்பிள்-னுடைய தலைவர் பட்டானி சீனிவாச ராவ், தில்லி புரோகிரசிவ் போரத்தின் பேராசிரியர் நாரேந்திர் நாவட், மஸ்தூர் ஷியோக் கேந்திரா-வின் திரு ராம்நிவாஸ் குஷ், ஷிரம்ஜீவி சங்கர்ஷ் மோர்ச்சா-வின் தலைவர் திரு பால் சிங், நிர்மான் காரிய மஸ்தூர் - மிஸ்திரி யூனியனின் பொதுச் செயலாளர் திரு பகவத் சுரூப் சர்மா, சாம்தாமுலக் மகிலா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சுனிதா வீரத்தியாகி, ஸ்டுடன்ட்ஸ் ஆர்கனெஸ்சேசன் பார் சோசலிச டெமாகிரசி ஒருங்கிணைப்பாளர் கவிதா வித்ரோகி மற்றும் நேஷ்னல் கன்பெடரேஷன் ஆப் தலித் ஆர்கனைசேஷன்ஸ்-இன் தலைவர் திரு சுரேஷ் டானக் ஆகியோரை மேடையில் வந்து அமருமாறு அழைத்தார்.

தோழர் சுதேஷ் தன்னுடைய துவக்கவுரையில், ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர், முதலாளிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்களேயானால், உழைக்கும் மக்களுடைய வாழ்க்கை நரகமாகிவிடுமென பகத் சிங் தெளிந்த சிந்தனையோடும், தொலை நோக்குப் பார்வையோடும் நம்முடைய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததை நினைவு கூர்ந்தார்.

ஒரு மதிப்புள்ள வாழ்க்கை நடத்துவதற்கு ஒருவருக்கு ரூ 10,000 தேவைப்படுகையில் ரூ 2000 மட்டுமே ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. இரவு 8 மணிக்குப் பிறகு பெண்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். தேர்தல் பரப்புரைகளுக்காக கட்சிகள் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் அதை உழைக்கும் மக்களிடமிருந்து கரந்துவிடுகின்றனர்.

மருத்துவம் பெறுவதற்காக ஒருவர் காலையிலிருந்து மாலை வரை அரசு மருத்துவமனைகளில் காத்திருந்து நேரத்தைக் கழிக்க வேண்டும், அல்லது தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று நமது பணம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும். மக்களைத் தாக்குவதற்கு வகுப்புவாத வன்முறை பயன்படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து மீளவதற்கு ஒரே வழி புரட்சிக்கு வேலை செய்வதாகும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய வீரத்தியாகி பகத் சிங் திஷா அறக்கட்டளையின் தலைவர் தோழர் ஷியாம் சுந்தர் வீரத்தியாகி பகத் சிங்கினுடைய சிலையை வைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்துஸ்தானி கெதர் கட்சியின் வீரத்தியாகி கர்தார் சிங் சாராபா-வின் உருவப் படத்தை தன் பையில் பகத் சிங் எப்போதும் வைத்திருந்த போதிலும். பகத் சிங் சிலை வழிபாட்டின் ஆதரவாளர்கள் அல்ல. நிலைமையை மாற்றமின்றி அப்படியே நீடிக்க விரும்புபவர்கள், புரட்சியாளர்களை சிலைகளாக்கி அவர்களுக்கு பூசை செய்வதோடு திருப்தியடைகிறார்கள். வீரத்தியாகி பகத் சிங்கினுடைய நினைவகமானது நமக்கு புரட்சிக்கான ஒரு அடையாளமாகும்.

இப்படிப்பட்ட அடையாளங்கள் வகுப்புப் போராட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், லெனின், ஸ்டாலினுடைய சிலைகள் உடைக்கப்பட்டது, முதலாளி வகுப்பு பாட்டாளிகளுக்கு எதிராக நடத்திய வகுப்புப் போராட்டத்தின் வெளிப்பாடாகும். பகத் சிங்கினுடைய சிலை, புரட்சிக்காக செயல்படுவதில் உறுதியாக இருக்க வேண்டுமென சக்திவாய்ந்த அழைப்பாக நமக்கு இருக்கிறது. பகத் சிங்கினுடைய பணிகளைப் பற்றி படித்தறிய வேண்டுமென இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் அறைகூவலாகும் அது. பகத் சிங் தூக்கிலிடப்பட்ட அன்று கூட அவர் லெனினுடைய புத்தகத்தைத் தான் படித்துக் கொண்டிருந்தார். அவர் சோசலிச புரட்சிப் போராட்டத்திற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வத்தை உற்பத்தி செய்பவர்கள் என்றும், இந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள் என்றும் இரண்டு வகுப்புகளாக நமது சமுதாயம், பிளவுண்டு இருப்பதை தோழர் சியாம் சுந்தர் விளக்கிக் கூறினார். கொள்ளையடிப்பவர்கள் தான் இன்று ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அட்டையைப் போல இரத்தம் உறிஞ்சிகளாக இருக்கிறார்கள். நம்முடைய மோசமான நிலைமைகளுக்கு, நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவு என்றும், நம்முடைய அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பியிருக்க வேண்டுமெனவும் அவர்கள் விரும்புகிறார்கள். தொழிலாளர்கள் தங்களுடைய மோசமான நிலைமைகளுக்கு கடவுளைக் குறை கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லையெனவும், இதற்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களே காரணமெனவும் பகத் சிங் தொழிலாளர்களை எச்சரித்தார். பகத் சிங் வானத்திலிருந்து வந்துவிட வில்லை. நாம் அனைவருமே பகத் சிங்குகளாக மாற முடியும். அவருடைய வாழ்க்கையிலிருந்தும், உயர்வான சிந்தனையிலிருந்தும் நாம் புத்துணர்வு பெற வேண்டும். பகத் சிங்கினுடைய வேலைகளை முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான புகழுரையாக இருக்கும்.

நம்முடைய மாபெரும் தியாகிக்கு அவருடைய பிறந்தநாளில் மிகவும் பொருத்தமான புகழஞ்சலியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதற்கு, வீரத்தியாகி பகத் சிங் திஷா அறக்கட்டளையைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தோழர் பிரகாஷ் ராவ் தன்னுடைய உரையைத் துவக்கினார். ஆங்கிலேய ஆட்சிக் காலம் முழுவதும் இரண்டு போக்குகள் இருந்தன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அவை ஆங்கிலேய காலனி ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக சமரசமின்றிப் போராடியவர்களுடைய பாதை ஒன்றாகவும், காலனிய ஆட்சியோடு ஒத்துழைத்து சமரசம் செய்து கொண்டவர்களுடைய போக்கு இன்னொன்றாகவும் இருந்தன.

1857 மாபெரும் கெதர் எழுச்சி முதல் பாதைக்கு உரியதாகும். இந்த எழுச்சியில் கிளர்ந்தெழுந்தவர்கள், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அளவில் ஒரே தட்டியின் கீழ் ஒன்று திரண்டு, நம்முடைய முதல் கடமையானது அன்னிய ஆக்கிரமிப்பாளர்களை தூக்கியெறிவதும், அதற்குப் பின்னர் எப்படிப்பட்ட இந்தியா நமக்கு வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதும் ஆகுமென அறிவித்தனர். "நாமே இந்தியா, நாமே இந்தியாவின் மன்னர்கள்" என்ற அறைகூவலையொட்டி அவர்கள் திரண்டெழுந்தனர். இன்னொரு போக்கானது ஆங்கிலேயர்களோடு துரோகத்தனமாக ஒத்துழைத்த டாடாக்கள், பிர்லாக்கள், நேருக்கள், காந்திகள், குவாலியர், பட்டியாலா மன்னர்கள் மற்றும் பிறருடைய போக்காகும்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் புரட்சியாளர்கள் இந்துஸ்தானி கெதர் கட்சியை உருவாக்கினர். கர்தார் சிங் சாராபா, விஷ்னு கணேஷ் பிங்லே, சச்சிந்திர நாத் சன்யால் மற்றும் எண்ணெற்ற புரட்சியாளர்கள் இந்தப் புரட்சிகர இயக்கத்தில் அங்கம் வகித்தனர். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் காலனியர்கள் காந்தியை இந்தியாவிற்கு வரவேற்று, காந்தியையும், காலனிய ஆட்சியோடு அவருடைய சமரசப் பாதையையும் புரட்சிகர பாதைக்கு ஒரு மாற்றாக அவர்கள் முன்னேற்றவும், பரப்புரை செய்யவும் தொடங்கினர்.

பின்னர் இந்துஸ்தான் ரிப்பளிகன் அசோசியேசன் போன்ற அமைப்புக்களை புரட்சியாளர்கள் அமைத்தனர். சோவியத் யூனியனில் புரட்சியின் வெற்றியால் ஆர்வமுற்று வீரத்தியாகி பகத் சிங், இந்துஸ்தான் ரிப்பளிகன் அசோசியோசனை இந்துஸ்தான் சோசலிச ரிப்பளிகன் அசோசியோசனாக மாற்றியமைத்தார். இன்னொரு பக்கம், காலனியர்கள் கட்சிகளையும், அமைப்புக்களையும் உருவாக்கி, செழிப்பூட்டினார்கள். அவை ஆங்கிலேய மணி மகுடத்திற்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தனர்.

அவர்கள் மக்களைப் பிளவுபடுத்தி, காலனிய ஆட்சியைத் தூக்கியெறியும் புரட்சிகர பாதையிலிருந்து அவர்களைத் திசை திருப்பினர். இன்று இந்த இரு போக்குகளும், உழைப்பாளர்களுடைய சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட விரும்புபவர்கள் ஒரு போக்காகவும், இன்றுள்ள அமைப்பையும், அரசையும் வலுப்படுத்தி, அதை அலங்கரித்து மக்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் தொடர விரும்புபவர்கள் இன்னொரு போக்காகவும் இருக்கின்றன.

தொழிலாளி வகுப்பினரும், உழைக்கும் மக்களும் அரசாங்கத்தையும், அரசையும் வேறுபடுத்திக் காண்பது மிகவும் அவசியமென தோழர் பிரகாஷ் ராவ் சுட்டிக் காட்டினார். தேர்தல்கள் மூலம் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கங்கள், ஆளும் முதலாளி வகுப்பின் மேலாண்மைக் (மேனேஜ்மென்ட்) குழு என்பதன்றி வேறு எதுவும் இல்லை. தங்களுடைய நிகழ்ச்சி நிரலை மேலும் திறமையாக நடைமுறைப்படுத்துவதற்காக, முதலாளிகள் தங்களுடைய மேலாண்மைக் குழுக்களை அவ்வப்போது மாற்றுகிறார்கள். சரியான கட்சியை அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த அமைப்பிலேயே மக்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்ற மாயையை அவர்கள் உருவாக்குகிறார்கள். அரசாங்கங்களை மாற்றுவது, அதிகாரத்தில் இருக்கும் வகுப்பை மாற்றுவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட, சுரண்டுபவர்கள் மற்றும் ஒடுக்குபவர்களுடைய அரசை நாம் அகற்ற வேண்டும். இங்கு கூடியுள்ளவர்கள் அனைவருமே பகத் சிங் பங்கேற்ற அதே புரட்சிகரப் போக்கின் அங்கமாவோம். புரட்சியின் மகத்தான பணியின் வெற்றிக்கு நம்மை நாமே அர்பணித்துக் கொள்ளுவோமென்று கூறி தோழர் பிரகாஷ் ராவ் உரையை முடித்துக் கொண்டார்.

ஆங்கிலேயர்களோடு கூடிக் குலாவியர்களுக்கு எதிராக வீரத்தியாகி பகத் சிங் போராடினார் என தோழர் அமித் சக்கரவர்த்தி கூறினார். முன்னேற்றத்திற்கான பாதையானது கடந்த காலத்திலிருந்து அடிப்படையில் உடைத்துக் கொண்டு வரும் புரட்சி மற்றும் சோசலிசப் பாதையே என்பதில் பகத் சிங் தெளிவாக இருந்தார். நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புதிய அமைப்பிற்கான ஒரு அடையாளமாக பகத் சிங்கினுடைய சிலை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். புரட்சி என்ற இலக்கை அடைவதற்காக பகத் சிங் போல நாம் உறுதியாகவும், சமரசமின்றியும் போராடவேண்டுமென்று கூறி உரையை முடித்துக் கொண்டார்.

திரு நாகேந்திர சிங், நம்முடைய மக்களுடைய இதயத்தில் பகத் சிங் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார். தற்போதைய பாகிஸ்தானில் லாகூரில் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட இடத்திற்கு பகத் சிங் சௌக் என்று பெயரிட வேண்டுமென்றும் அவருடைய சிலையை அங்கு நிறுவ வேண்டுமென்றும் அங்குள்ள மக்கள் கேட்டு வருகிறார்கள். இது புரட்சியின் அடையாளமாக இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் பகத் சிங் இருந்து வருகிறார் என்பதைக் காட்டுகிறது. பகத் சிங் தன்னுடைய தந்தைக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில், தான் ஒவ்வொரு நாள் காலையிலும் செவ்வானமாக உதிப்பேனென்று குறிப்பிட்டிருந்ததை அவர் எடுத்துக் கூறினார். எல்லா சுரண்டலுக்கும், பாகுபாடுகளுக்கும் முடிவு கட்ட வேண்டுமென்றும் ஒரு புதிய மனிதனை உருவாக்க வேண்டுமென்றும் வீரத்தியாகி பகத் சிங் கொண்டிருந்த கருத்துக்கள் காலை செவ்வானத்தைப் போல எல்லா இடங்களுக்கும் பரவி வருகிறதென திரு நாகேந்திர சிங் குறிப்பிட்டார்.

மக்களுக்கு எடுத்துக் காட்டவும், ஆர்வமூட்டவும் மிகச் சிறந்த அடையாளம் தான் வீரத்தியாகி பகத் சிங் என பேராசிரியர் நரேந்தர் சிங் ராவட் கூறினார். சோசலிசத்திற்கான கோரிக்கைதான் இக் காலத்தின் தேவையாகும் என்றார். நாம் மக்களோடு வேலை செய்து, நம்முடைய உரிமைகளுக்காகப் போராடி, மக்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்றார்.

ஆந்திர பிரதேச புரோகிரசிவ் ஆர்கெனெய்சேசன்ஸ் ஆப் பீப்பீள்-ஐ சார்ந்த திரு பாட்டினி சீனிவாசராவ், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு பதிலாக இந்திய முதலாளி வகுப்பின் பிரதிநிதிகள் ஆட்சியாளர்களாக மாறுவார்களேயானால் மக்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லையென பகத் சிங் தெளிவாகக் கூறியதை நினைவு கூர்ந்தார். அமைப்பை மாற்ற வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மக்களுடைய சிறப்பான பண்புகளையும், செயல்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு புரட்சிகர அமைப்பின் முக்கியத்துவத்தை திரு பூல் சிங் கௌதம் வலியுறுத்தினார். பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபட்டுப் போராட தொழிலாளி வகுப்பு முன்வர வேண்டுமென அவர் கூறினார்.

பகத் சிங்கை பூசை செய்வதற்கான ஒரு சிலையாக மாற்றி விட்டால், அதனால் முதலாளிகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பகத் சிங் எதற்காகப் போராடினாரோ அதை நீங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கினால், அரசின் எல்லா நிறுவனங்களும் குர்காவூனில் மாருதி தொழிலாளர்களை ஒடுக்குவது போல உங்களையும் ஒடுக்க முயற்சிப்பார்கள் என்றார்.

ஆளும் வகுப்பினரின் தாக்குதல்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு சரியான பதிலடியென திரு பகவத் சொரூப் சர்மா கூறினார். சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அகற்றுவதற்கான போராட்டத்தின் ஒரு அடையாளம் தான் வீரத்தியாகி பகத் சிங்கினுடைய இந்தச் சிலையாகும் என்றார் அவர். நாங்கள் போராடவும், ஒற்றுமையோடு புரட்சியைக் கொண்டுவரவும் தயாரென அவர் அறிவித்தார். ஒடுக்கப்பட்ட எல்லா பிரிவு மக்களும் புரட்சிக்காக ஒரு மாபெரும் சக்தியாக எழ வேண்டுமென்ற ஒரு கவிதையோடு அவர் தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார்.

பொது மக்களிடையே வீரத்தியாகி பகத் சிங்கினுடைய சிந்தனைகளைப் பரப்பிவதற்காக அமைப்புக்களுக்கு திரு சுரேஷ் தான்க் வணக்கம் கூறினார். இந்த அமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக வேலை செய்கின்றன. மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, அவை சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தியும், இளைஞர்களுடைய சக்திகளைச் சுரண்டியும், அல்லது அவர்களை போதைக்கு அடிமையாக்கி சீரழிக்கவும் செய்கின்றன என்றார் அவர்.

டாக்டர் சுனிதா தியாகி, மகளிர் மீது ஆளும் வகுப்பினருடைய தாக்குதல்களைக் குறிப்பிட்டார். ஆளும் வகுப்பின் ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் குறிப்பிட்ட அவர், ஆடவரை மகிழ்விப்பதற்கான பொருட்களாக பெண்களை அவர்கள் நினைக்கிறார்கள் என்றார். பெண்களைப் பற்றிய பகத் சிங்கின் அணுகு முறையோடு அவர் இதை ஒப்பிட்டார். ஆயிரக் கணக்கான பகத் சிங்குகளை நம்மிடையே நாம் உற்பத்தி செய்ய வேண்டுமென அவர் உறுதி கூறினார்.

உழைப்பாளர்களின் விடுதலைக்கு வீரத்தியாகி பகத் சிங் காட்டிய வகுப்புப் போராட்டப் பாதையே ஒரே வழியென்று கூறி, தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டுமென திரு பால் சிங் கேட்டுக் கொண்டார்.

வீரத்தியாகி பகத் சிங்கைப் போலவே, கவிதா வித்ரேகியும் பகத் சிங்கினுடைய வேலையை முன்னெடுத்துச் செல்லும் தோழர்களே தன்னுடைய உண்மையான உறவினர்களென தான் உணர்வதாக கூறினார். போர் தொடர்கிறது என்றும், சுரண்டல் முடிவுக்கு வரும் வரை அது தொடர்ந்து கொண்டே இருக்குமெனவும் பகத் சிங் கூறியதை நினைவூட்டி அவர் தன் உரையை முடித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் நேரத்தை ஒதுக்கி வந்து பங்கேற்ற அனைவரையும் டாக்டர் சி.டி.சர்மா வாழ்த்தினார். பாசிசம் வளர்ந்து வருவது, சோசலிச புரட்சி நெருங்கி வருவதைக் காட்டுகிறது என்றார் அவர். வீரத்தியாகி பகத் சிங்கினுடைய புரட்சிகர பண்புகளை வெளிக் கொண்டு வருவதற்காக செய்யப்பட்ட வேலையை அவர் பாராட்டினார். ஒரே ஆண்டில் சுய ஆட்சியை அடைவோமென்ற காந்தியின் வாக்குறுதி முழுவதுமாக தோல்வியடைந்த பின்னர், எங்கும் விரக்தி நிலவி வந்த நிலையில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பொது மக்களுடைய எதிர்ப்பை பகத் சிங்தான் மீண்டும் தட்டி எழுப்பினார்.

கெதர் இயக்கத்தின் சுயநலமற்ற வேலையிலிருந்து ஆர்வத்தையும், மகத்தான அக்டோபர் புரட்சியிலிருந்து புரட்சிக்குப் பாதையை காட்டும் மார்க்சிச-லெனினிச அறிவியலையும் பகத் சிங் கற்றுக் கொண்டார். அவர் ஆரம்பித்த அந்த முக்கிய படிப்பு, அவருடைய வாழ்க்கையின் கடைசி நாள் வரை தொடர்ந்தது. வன்முறை கலாச்சாரத்திலிருந்து பகத் சிங் தன்னை தெளிவாக விலக்கிக் கொண்டார். வரலாற்றின் சில குறிப்பிட்ட சந்திப்புகளில் மட்டுமே வன்முறைக்கு ஒரு பங்கு இருக்கிறதென அவர் கூறினார்.

கருத்தியல் மற்றும் நடைமுறை வேலையின் பெரும் முக்கியத்துவத்தை அவர் நன்றாக புரிந்து வைத்திருந்தார். சமூக மாற்றத்திற்காகவும், பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிரள வேண்டுமென பகத் சிங் கூறியதாக அவர் கூறினார். இது, 1915 கெதர் எழுச்சியினுடைய நூற்றாண்டாகும், இன்னும் இரண்டாண்டுகளில் மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுவோமென டாக்டர்.சர்மா கூறினார். எல்லா புரட்சிகர சக்திகளுடைய போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்தி, போராட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டுமென அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

வீரத்தியாகி பகத் சிங்கினுடைய வாழ்க்கையையும், பணிகளையும் போற்றி முழக்கங்கள் எழுப்பியும், அனைவரையும் ஒன்றுபடுத்தி அணிதிரட்டி பகத் சிங்கினுடைய கனவுகளை நனவாக்க வேண்டுமென ஒவ்வொருவருடைய இதயத்தில் உறுதியோடும், பேரார்வத்தோடும் கூட்டம் நிறைவு பெற்றது.