அனைத்து உழவர் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரி தமிழக உழவர்கள் போராட்டம்

போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக உழவர்கள், தில்லி ஜன்தர் மன்தரில் 100 நாட்கள் தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை 14-3-2017 முதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எலிக்கறியை உண்ணுவது, பாம்புக் கறியை உண்ணுவது, மண் சோறு சாப்பிடுவது, சாட்டையடி வாங்குவது, அம்மணமாகப் போராடுவது எனத் தமிழக உழவர்களின் அவலமான சூழ்நிலைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் உள்ள உழவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நகரங்களிலும், பேரூர்களிலும் மத்திய, மாநில அரசின் அலுவலகங்களுக்கு முன்பாகவும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் கூட பல இடங்களில் பங்கேற்று உழவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். புது தில்லியில் கடுமையாகக் கொளுத்தும் வெயிலையும், மற்ற பிரச்சனைகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வரும் உழவர்களை பல்வேறு மாநில உழவர் அமைப்புக்களும், மக்கள் இயக்கங்களும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். (கட்சி சார்பற்ற) தமிழக விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவராகிய திரு சரவண முத்துவேல் அவர்களும் அவரைச் சார்ந்த பிறரும் தில்லியில் ஜன்தர் மன்தரில் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றுவரும் உழவர்களை நேரடியாகச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்ததோடு, இந்த நியாயமானக் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்துவரும் இந்திய அரசைக் கடுமையாக சாடினர். தமிழக மக்களிடையே இந்த உழவர்களுடைய போராட்டத்திற்கு பரந்துபட்ட பொது மக்களும் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர்.

தில்லியில் தமிழக உழவர்களுடைய போராட்டம் பல வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்றிருந்துங்கூட, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கவோ, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவோ இல்லை. மாறாக தில்லியிலும், தமிழ்நாட்டிலும் போராடி வரும் இந்த உழவர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக முன்வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் காவல் துறை பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தியாவை ஆளும் பெரு முதலாளி வகுப்பினர் மற்றும் அவர்களுடைய அரசியல் கட்சிகளுடைய கொடூரமான உழவர் விரோத, மக்கள் விரோத சிந்தனைகளையும், போக்கையும் இது காட்டுகிறது.

உழவர்களுடைய நியாயமானக் கோரிக்கைகளையும், அவர்களுடைய போராட்டத்தையும் தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தோழமையோடு ஆதரிக்கிறது.