இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக்குழுவின் அறிக்கை, நவ 16, 2013

2014-இல் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கான தயாரிப்புகள் நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைக்கும், பயங்கரத்திற்கும் ஏற்கெனவே வழி வகுத்திருக்கிறது. மேற்கு உத்திர பிரதேசத்தில் ஓரிடத்தில் நடைபெற்ற மோதலை, எதிரெதிர் கட்சிகள் இந்துக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையிலான வகுப்புவாத வன்முறையாக ஊதிப் பெரிதாக்கியிருக்கின்றன. சாதிப் பேரணிகளும், குண்டு வெடிப்புக்களும், பழி வாங்குவதற்கான அழைப்புக்களும் இன்னும் வர இருக்கின்ற வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அடையாளமாகும். போட்டிக் கட்சிகள், தங்களுடைய வாக்கு வங்கிகளை எதிராளியைக் காட்டிலும் பெரிதாக உருவாக்கவும், விரிவுபடுத்தவும் முயற்சி செய்கையில், இந்த நிலைமையானது வருகின்ற வாரங்களிலும் மாதங்களிலும் மேலும் தீவிரமடையும்.

தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்காக, வகுப்புவாத வன்முறையும், சாதிச் சண்டைகளும், பழிவாங்கலும் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் முதலாளி வர்க்கத்தின் சமூக விரோத, தேச விரோத தாக்குதலுக்கு எதிரான மக்களுடைய ஐக்கியமான எதிர்ப்பு எந்த விலை கொடுத்தும் அழிக்கப்பட்டு, மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த வன்முறைக்கும், பயங்கரத்திற்கும் பாகிஸ்தான் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும், “முஸ்லீம் அடிப்படைவாதிகள்” மீதும், “கலிஸ்தானி பயங்கரவாதிகள்” மீதும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் பழிகூறி வருகிறார்கள். ஆனால், பாராளுமன்றத்தில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரசு மற்றும் பாஜக மத மற்றும் சாதி அடிப்படையில் வகுப்புவாத வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும், மக்களைப் படுகொலை செய்வதிலும் பின்னணி கொண்டவர்கள் என்ற நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மையை எதாலும் மறைக்க முடியாது. மேலும், மாநில கட்சிகளும், வாக்குகளுக்கான போட்டியில் சாதி மற்றும் வகுப்புவாத கணக்குகளை நம்பியிருக்கிறார்கள்.

தேர்தல் களத்திலிருக்கும் எல்லா கட்சிகளிலும், காங்கிரசும் பாஜகவும் ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய பெரு முதலாளி வர்க்கத்தின் அதிகபட்ச நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். இக் கட்சிகள், தாராளமயம் தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்திற்கு மாநில முதலாளி வர்க்கக் குழுக்களை ஆதரவைப் பெற கொள்கையற்ற பேரங்கள் மூலம் கூட்டணிகளைக் கட்டியமைப்பதில் தங்களுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்கள். குற்றவியலான பின்னணியைக் கொண்ட இக் கட்சிகள், மக்களுடைய கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகியிருந்தாலுங்கூட நம்பிக்கைக்குரிய இந்த இரு கட்சிகளில் ஒன்றை 2014-19 காலத்திற்கு ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டுமென்பதில் இந்திய பெரு முதலாளி வர்க்கமும், உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய சக்திகளும் முனைப்பாக இருக்கின்றனர்.

மக்களுடைய கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில் இன்றுள்ள தேர்தல் அமைப்பிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது மீண்டும் தெளிவாகி வருகிறது. நமது நாட்டையும் உழைப்பையும் சுரண்டி கொள்ளையடிப்பவர்களுடைய விருப்பத்தைத் திணிப்பதற்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகமயம் என்ற பெயரில் நமது நாட்டினுடைய செல்வங்களையும், உழைப்பையும் அதிக ஏலம் கேட்பவர்களுக்கு விற்பதிலும், மக்களை திறமையாக முட்டாளாக்குவதிலும் கைதேர்ந்தவர்களை இந்திய மற்றும் அயல்நாட்டு பெரு முதலாளிகள் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் பரப்புரைகள் கருவிகளாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை அயல்நாட்டு மற்றும் இந்திய ஏகபோக மூலதனம் அதிகபட்சமாக சூறையாடுவதற்கு திறந்து விட்டிருப்பது, உள்நாட்டுக் கொள்கையிலும், அரசியல் பிரச்சனைகளிலும் அதிகரித்துவரும் அந்நிய தலையீட்டோடு இணைந்து வந்திருக்கிறது. தங்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பவர்கள் மட்டுமே எதிர்காலத் தலைவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக, ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் தலையிட்டு வருகின்றனர்.

போர் வெறி கொண்ட ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்தை பிரபலப்படுத்துவதில் பெயர் பெற்ற ஆப்கோ வேல்ட்வைடு (APCO Worldwide) என்ற ஒரு மக்கள் தொடர்பு – ஆதரவு சேர்க்கும் நிறுவனம், மோடியை மீண்டும் சந்தைப்படுத்துவதிலும், “குஜராத் சின்னத்தை” முன்னேற்றுவதிலும் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஆப்கோ, அமெரிக்க இராணுவ – தொழில் நிறுவனங்களோடும், வால் ஸ்டீட் நிதி நிறுவன பூதங்களோடும், பில்டர்பர்க் குழு என்ற உலக ஏகாதிபத்திய சதித்திட்டங்களைத் தீட்டும் நிறுவனத்தோடும் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது.

2002-இல் குஜராத் முஸ்லீம் மக்கள் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியவன் என்று சந்தேகிப்பதால் அமெரிக்காவிற்குள் நுழைய விசா மறுக்கப்பட்ட ஒரு மனிதனை இப்போது பிரதமராக ஆவதற்கு பொருத்தமானவரென முன்னேற்றப்பட்டு வருகிறார். அதே நேரத்தில், மோடி சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக நடக்கும் பெரும் சர்வதேச பரப்புரை, இந்தியாவை கொள்ளையடிப்பதை மேலும் தீவிரப்படுத்துவதற்காகக் பொறுமையின்றி காத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென மன்மோகன் சிங் அரசாங்கத்தின் மீது நெருக்குதலை உருவாக்குகிறது.

காங்கிரசு, பாஜக கட்சிகளுடைய சண்டையில் ஏதாவதொரு அணியின் பக்கம் நிற்க வேண்டுமென எல்லா இந்தியர்களையும் திரட்டுவதற்காக கொள்ளை கொள்ளையாக பணம் செலவழிக்கப்படுகிறது. இந்தக் கடுமையான நாய்ச் சண்டை, மக்களுடைய அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஒரு மோசமான அச்சுறுத்தலாக இருக்கிறது. அதிகாரத்திற்காக வெறியோடு போராடும் கட்சிகளுடைய ஏதாவதொரு கட்சியின் இலாபத்திற்காக வகுப்புவாத வன்முறைக்கு, மக்களின் எந்தப் பிரிவினரும் இலக்காகக் கூடும்.

பிரச்சனையின் ஆணிவேரும், தீர்வும்

பிரச்சனையின் ஆணிவேரானது, காங்கிரசு, பாஜக இருவருமே, தாங்கள் வைத்ததே சட்டம் என்பது போல செயல்பட்டு வருவது மட்டுமல்ல. ஆணிவேரானது, இந்திய அரசின் குணத்திலும், அதனுடைய நிறுவனங்களிலும், அதனுடைய அரசியல் சட்டத்திலும், அதனுடைய அரசியல் வழிமுறையிலும் புதைந்திருக்கிறது. இவையனைத்துமே காலனிய பாரம்பரியமாகும். அவை உள்ளாழம் வரை வகுப்புவாதமாக இருக்கின்றன. இந்த அமைப்பானது, இயல்பாகவே வகுப்புவாத, குற்றவியலான கட்சிகளை உருவாக்கி, செழிப்பூட்டி வளர்த்து வருகிறது.

இந்தத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த மக்கள் வகுப்புவாதிகளோ, குறுகிய எண்ணம் கொண்டவர்களோ இல்லையென்ற தெள்ளத் தெளிவான ஆதாரத்தை 1857 அளித்திருக்கிறது. வெறுக்கப்பட்ட ஆங்கிலேய அரசைத் தூக்கியெறிவதற்காக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக அவர்கள் ஒன்றுபட்டனர். அந்த மாபெரும் விடுதலைப் போர் காட்டுமிராண்டித்தனமாக நசுக்கப்பட்ட பின்னர், அப்போது கவர்னர் ஜன்ரலாக இருந்த லார்டு கேனிங், “இந்தியாவில் ஆங்கில காலனியத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒரே வழி, கிளர்ச்சியில் இந்தியர்கள் காட்டிய ஐக்கியத்தை உடைத்து, அவர்களுக்கிடையே வெறுப்பை உருவாக்குவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்தாள்வதே “இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக” இருக்க வேண்டுமென ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1822-இலேயே, குறிப்பிட்டுள்ளனர். 1857-விடுதலைப் போரைத் தொடர்ந்து இந்தக் கொள்கையை வலுப்படுத்துவதற்காக அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

காலனிய அரசில் பல்வேறு சமூகங்களிலுள்ள குறிப்பிட்ட மேல்தட்டு மக்களுக்கு இடமளிப்பதற்காக, தேர்தல் தொகுதிகளை மத, சாதி அடிப்படைகளில் ஒதுக்கீடு செய்வதை ஆங்கில அரசாங்கம் கொண்டுவந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மத, சாதி அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் வந்த ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் சாதிகளுடைய எண்ணிக்கைகள் சரமாரியாக அதிகரித்தன.

எல்லா மத நம்பிக்கைகளையும் “சகித்து”க் கொள்ள வேண்டுமென்பதை காலனிய ஆட்சியாளர்கள் போதித்தனர். பல்வேறு மத கும்பல்களிலிருந்து, அவர்கள் துரோகிகளை பொறுக்கி எடுத்து, அவர்களை சமூகத் தலைவர்களென முன்னேற்றினர். தலைவர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள், வகுப்புவாத வெறுப்பை மக்களிடையே பரப்புவதற்கு ஆங்கிலேயர்களுக்குத் திருட்டுத் தனமாக உதவினர். பழிவாங்கும் கொலைகளைத் தூண்டிவிடுவதற்காக, காவல்துறை பொய்யான வதந்திகளை பரப்புவது வழக்கம். வகுப்புவாத வன்முறையைத் திருட்டுத் தனமாக தூண்டிவிட்ட பின்னர், ஆங்கிலேய எசமானர்கள், தங்களை “வகுப்புவாத ஒற்றுமையை மீட்பதற்காக ஆர்வம் கொண்ட சார்பற்ற நடுநிலையாளர்களைப் போலத் தங்களை காட்டிக் கொண்டனர்.

இந்தியா மதச்சார்பற்றது என்ற அதிகாரபூர்வமான கோட்பாட்டின் உட்கருவானது, “சகித்துக் கொள்வது” என்ற கருத்தாகும். இதற்குப் பொருள், எல்லா வகையான பிற்போக்கான குழப்பல் வாதக் கருத்துக்களும் பழக்க வழக்கங்களும், அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, இரகசியமாக முன்னேற்றப்படும். அதே நேரத்தில், வேற்றுமைகளைக் கடந்த அளவில் எழுந்து புரட்சிக்காகப் போராடுபவர்களை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆங்கிலேயர்களுடைய அகராதியில் “கெதர் (எழுச்சி)”, “புரட்சி” ஆகிய சொற்கள் மிகவும் அச்சப்படும்படியான சொற்களாகும்.

காலனிய பாரம்பரியம் 1947-இல் முடிவு பெறாத காரணத்தால், பிரித்தாள்வது என்பது காலனியத்திற்கு பிந்தைய இந்தியாவில் நடைமுறைக் கொள்கையாக தொடர்ந்து இருந்து வருகிறது. பெரு முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்டு, புரட்சிகர நோக்கத்திற்கு துரோகமிழைத்தது.

பஞ்சாப், வங்காளம், காசுமீரம் ஆகியவற்றை உடைத்த இரத்த பிளவுபடுத்தல், வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் மக்கள் திரள் குடிபெயர்வதற்கு வழி வகுத்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் இந்தியக் குடியரசு உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டம், காலனிய அமைப்பு அரசு அதிகாரத்திற்கும், பொருளாதாரக் கொள்ளைக்கும் முடிவு கட்டவில்லை.

இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அழைக்கப்பட்டாலும், பல்வேறு தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களைக் கொண்டதாக இந்திய அரசியலை அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. இந்திய அரசியலை, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மத சமூகங்களைக் கொண்டதாகக் கூறும் காலனிய கருத்தை அது ஏற்றுக் கொள்கிறது. 1950 அரசியல் சட்டத்தைத் தயாரித்து அதை ஏற்றுக் கொண்ட அரசியல் சட்ட நிர்ணய அவையே, ஆங்கிலேய காலனிய மேற்பார்வையின் கீழ் வகுப்புவாத தொகுதிகளின் அடிப்படையில் ஒரு வரையறுக்கப்பட்ட வாக்குரிமை பெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.

அரசியல் சட்டமானது ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்திரவாதமளிக்கவில்லை. சீக்கியர்கள், இந்துகளின் ஒரு அங்கத்தினரென அறிவிப்பதன் மூலம் அவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது கொல்லவும் படுகிறார்கள். தத்துவார்த்த நம்பிக்கைகளுக்காக மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை வெளியிட்ட காரணத்திற்காக அவர்கள் தேச துரோகமிழைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். ஒருவர் இந்துவா, முஸ்லீமா அல்லது கிருத்துவரா என்பதைப் பொறுத்து வெவ்வேறு குடிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. எந்த கடவுள் மீதும் நம்பிக்கையற்ற ஒரு நாத்திகரை மதச்சார்பற்ற குடியரசு என்றழைக்கப்படும் நமது நாடு அங்கீகரிப்பதில்லை. அப்படியொரு பிரிவே அதிகாரபூர்வமான கணக்கெடுப்பில் இல்லை.

பெரும்பான்மையான சமூகம், சிறுபான்மையினரை சகித்துக் கொள்ள வேண்டும்” என்ற கருத்து, மதச் சார்பாற்ற தன்மையின் அதிகாரபூர்வமான தத்துவமாக ஆகியிருக்கிறது. இது, மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அளவில் எல்லா குடிமக்களையும் அரசு காக்க வேண்டிய கடமை இருக்கிறதென நமது மக்கள் பல நூற்றாண்டுகளாக நம்பிவந்த இராஜ தர்ம கொள்கைக்கு எதிரானதாகும்.

தேர்தல் தொகுதிகளை சாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்து வைத்திருப்பதன் மூலம் அரசியலானது பிளவுபடுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரசு கட்சியும், அதைப் போலவே உருவாக்கப்பட்ட எண்ணெற்ற பிற முதலாளி வர்க்கக் கட்சிகளும் காலனிய காலத்திலிருந்து அவர்கள் ஏற்றுக் கொண்ட வகுப்புவாத கண்ணேட்டத்திலே சிக்கியிருக்கின்றன. அவர்கள் இந்து, முஸ்லீம் அல்லது மதச்சார்பற்றது என எந்தப் பெயரில் பேசினாலும், அவர்கள் வாக்காளர்களை வகுப்புவாத, சாதி அடிப்படையிலே தான் பார்க்கிறார்கள்.

இந்தக் குடியரசும், அதனுடைய அரசியல் சட்டமும், வகுப்புவாத பிளவுகள், சாதி படிநிலையை நீடிப்பது, மேல் தட்டு மக்களுக்கு இடமளித்து சேர்த்துக் கொள்வது உட்பட காலனிய பாரம்பரியத்தை நீடிப்பதற்கும் அதை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் கருவிகளாக இருக்கின்றன.

ஒரு தீவிரமான சமூகப் புரட்சி மட்டுமே, உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் ஆட்சி நடத்தும் ஒரு புதிய குடியரசிற்கு அடித்தளம் அமைப்பதன் மூலம், வகுப்புவாதத்தையும், சாதி படிநிலைகளுக்கும் முடிவுகட்டும்.

அடிக்கடி நிகழும் வகுப்புவாத வன்முறைக்கும், அரசு பயங்கரவாதம் அதிகரித்துவரும் பிரச்சனைக்கும் தீர்வானது, ஒரு புதிய அரசை, ஒரு புதிய அரசியல் அதிகாரத்தை நிறுவதில் இருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், எல்லா குடிமக்களுக்கும் சாதி, பால், மத நம்பிக்கை அல்லது வேறு எந்த அடிப்படைகளையும் கடந்த அளவில் உரிமைகளுக்கு உத்திரவாதமளிக்கும் ஒரு புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அது அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு, இந்த உரிமைகளை மீறும் எவருக்கும் மிகக் கடுமையான தண்டனை கொடுக்கும்.

புதிய அரசியல் சட்டம், ஒவ்வொரு தேசத்திற்கும், தேசிய இனத்திற்கும், பழங்குடி மக்களுக்கும் சுய நிர்ணய உரிமைக்கு உத்திரவாதமளிக்கும். மாநில அரசாங்கங்கள் மீது மேலாதிக்க அதிகாரம் கொண்ட, காலனிய முறையில் உள்ள இந்திய ஒன்றியம், வன்முறையால் திணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது போலன்றி தன்னார்வ அடிப்படையில் அமைந்த ஒரு புதிய ஒன்றியத்தால் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தன்னார்வ ஒன்றியம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கோட்டையாகவும், தெற்காசியாவிலும், உலக அளவிலும் அமைதிக்கான ஒரு காரணியாகவும் இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு ஆழமான தீவிரப் புரட்சியை, இந்திய மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே தலைமை தாங்கி நடத்த முடியும். அது மிகவும் அணி திரட்டப்பட்டதாகவும் மிகவும் சக்திவாய்ந்த புரட்சிகர சக்தியாக இருக்கக் கூடிய திறமை பெற்றதாகவும், எல்லா சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை வழி நடத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

நிலவுடமை மிச்சங்களையும் சாதி உயர்வு தாழ்வுகளையும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நடத்தப்படும் புரட்சி துடைத்து எறிந்துவிடும். மேல் தட்டு மக்களை சேர்த்துக் கொள்வது, தேசிய ஒடுக்கு முறை, பிரித்தாளும் சூழ்ச்சி உட்பட ஒட்டுமொத்த காலனிய பாரம்பரியத்திற்கும் முதலாளித்துவ சுரண்டல், ஏகாதிபத்திய கொள்ளைக்கும் அது முடிவு கட்டும். முலதனத்தின் இருண்டகால ஆட்சிக்கு முடிவு கட்டுவதன் மூலம் எல்லா பக்க முன்னேற்றத்திற்கும் அது பாதையைத் திறந்துவிடும். அப்போது தொழிலாளி வர்க்கம் தங்களுடைய கூட்டு உழைப்பின் பயன்களை அனுபவிப்பார்கள். எல்லா மக்களுடைய வளமைக்கும், பாதுகாப்பிற்கும் உத்திரவாதமளிக்கப்படும்.

கம்யூனிஸ்டுகளுடைய பங்கு

கம்யூனிஸ்டுகளுடைய பங்கானது, தொழிலாளி வர்க்கத்தைத் தயாரித்து, கம்யூனிசத்தின் முதல் கட்டமும், சமுதாயத்தின் அடுத்த கட்டமும் ஆகிய சோசலிசத்திற்கு சமுதாயத்தைக் கொண்டு செல்லும் அதனுடைய வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்கு வழிவகை செய்வதாகும்.

வர்க்கத்தைத் தயாரிப்பது என்றால், இன்றுள்ள இந்தியக் குடியரசின் வகுப்புவாத அடித்தளம் பற்றிய உண்மையை தொழிலாளர்களுக்கு எடுத்துக் கூறி, புரட்சிக்கான தேவையை உணரச் செய்வதாகும். முதலாளித்துவச் சுரண்டலுக்கும், பாசிச பயங்கரம், மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் மீதும் உரிமைகள் மீதும் நடத்தப்படும் எல்லா வகையான தாக்குதல்களுக்கும் எதிராக நாள் தோறும் நடத்தப்படும் போராட்டத்தினூடே தொழிலாளர்களுக்கு இந்த விழிப்புணர்வை கம்யூனிஸ்டுகள் அளிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்திற்கு கம்யூனிஸ்டுகள் ஒரு உடனடித் திட்டத்தைக் கொடுக்க வேண்டும். அத் திட்டத்தையொட்டி முதலாளி வர்க்கத்திற்கும் அதனுடைய தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் சமூக விரோதத் திட்டத்திற்கும் எதிராக அரசியல் ஒற்றுமையைக் கட்ட முடியும்.

முதலாளி வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் தாக்குதல்களுக்கு எதிராக நாள்தோறும் நடத்தப்படும் போராட்டத்தினூடே, தொழிலாளி வர்க்கத்தின் மாற்றுத் திட்டத்தையொட்டி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் ஒற்றுமைக் கட்டுவதற்கு பிற கம்யூனிஸ்டு மற்றும் முற்போக்கு இயக்கங்களோடு கம்யூனிஸ்டு கெதர் கட்சி முயன்று வருகிறது. இந்திய மறுமலர்ச்சிக்காகப் போராடுவதற்காக நாங்கள் தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி வருகிறோம்.

மறுமலர்ச்சி என்றால், காலனிய பாரம்பரியத்திலிருந்து முழுவதுமாக பிரிந்து வந்து நமது சமுதாயம் நாகரிக பாதையில் பீடுநடை போடுவதற்கு புதிய அடித்தளங்களை அமைப்பது என்று பொருள். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் கதவுகளைத் திறந்து விடுவது என்று பொருள்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற, தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரெதிரான சைகைகளை அனுப்பும் பல்வேறு கட்சிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலுள்ள பிளவுகளுக்கு முடிவு கட்ட வேண்டுமென கம்யூனிஸ்டு கெதர் கட்சி உறுதியாக நம்புகிறது. ஒரு ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் தலைமையாக இந்திய கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையை ஒரு கட்சியில் மீட்டு அமைக்க நாங்கள் வேலை செய்கிறோம். இந்த உயரிய நோக்கத்தோடு, வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அரசியல் மேடையில் ஒரு தொழிலாளி வர்க்க முன்னணியைக் கட்டி உறுதிப்படுத்த வேண்டிய தேவை குறித்து எல்லா கம்யூனிஸ்டுகளோடும், முற்போக்கு சக்திகளோடும் நாம் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற அடித்தளங்களைப் பாதுகாப்பது, வகுப்புவாத சக்திகளை முறியடிப்பது என்ற நிலைப்பாட்டினை ஒட்டி பல்வேறு பிராந்திய முதலாளித்துவ கட்சிகளைக் கொண்டுவரும் முயற்சியில் பாராளுமன்றத்தில் உள்ள இடதுசாரி கட்சிகள் அண்மையில் ஈடுபட்டுள்ளன.

வளர்ந்து வருகின்ற பாசிச, வகுப்புவாத பயங்கரத்தை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அது, இன்றுள்ள அரசின் “மதச்சார்பற்ற அடித்தளங்களை”ச் சார்ந்து நின்றும், அல்லது பாராளுமன்ற கட்சிகளுடைய “மதச்சார்பற்ற முன்னணியை” உருவாக்குவதன் மூலமும் இதைச் செய்யமுடியுமென்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை.

இந்தியக் குடியரசு மதச் சார்பற்றது, வகுப்புவாத அபாயம் முக்கியமாக பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளிடமிருந்தும் வருகிறது என்ற எண்ணம் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பெரிய பாதிப்பை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறது. தொழிலாளி வர்க்கம் உண்மையை புரிந்து கொள்வதிலிருந்து இந்தத் தவறான எண்ணம் அதைத் தடுத்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு புரட்சிகர தீர்வு காணும் பாதையை அது தடுத்து வருகிறது.

ஏகாதிபத்தியமும், இந்திய பெரு முதலாளி வர்க்கமும் தங்களுடைய ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு பாசிச தாக்குதலைத் தொடுத்து, அதிகபட்ச கொள்ளை மற்றும் சூறையாடல் என்ற அவர்களுடைய திட்டத்தை முன்னோக்கித் தள்ளி வருகின்றனர். இந்த நேரத்தில், வகுப்புவாதத்திலிருந்தும், பாசிச வன்முறையிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முதலாளி வர்க்கத்தின் ஏதோவொரு பிரிவினரை சார்ந்திருக்குமாறு மக்களை மீண்டும் கேட்கிறார்கள். இது போன்ற யுக்தியே 1996-இல் பின்பற்றப்பட்டது. அப்போது, தேவ கவுடா தலைமையிலான ஒரு மூன்றாவது முன்னணி அரசாங்கம் உருவாக்கப்படுவதை பாராளுமன்றத்திலிருந்த இடதுசாரி கட்சிகள் ஆதரித்தன. 2004-இல், வகுப்புவாத சக்திகளை வெளியே தள்ளிவைப்பது என்ற பெயரில் காங்கிரசு கட்சி அரசாங்கத்தை அமைக்க உதவுவதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) முன்வந்தனர். அப்படிப்பட்ட யுக்திகள், தொழிலாளி வர்க்கத்தையும் மக்களையும் வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்புவதன் மூலம் முதலாளி வர்க்க ஆட்சியைக் காப்பதற்காக மட்டுமே சேவை செய்திருக்கிறது.

பாசிசம் என்றால், முதலாளி வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான, மிருகத்தனமான பிரிவினருடைய அப்பட்டமான காட்டிமிராண்டித்தனமான ஆட்சியென்று பொருள். இந்துத்துவாவை போதிக்கும் பாஜக, மதச்சார்பற்ற தன்மையின் பெயரால் சூளுரைக்கும் காங்கிரசு கட்சி ஆகிய இரண்டுமே இந்திய மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்த, மிகவும் பிற்போக்கான ஏகாதிபத்திய முதலாளி வர்க்கப் பிரிவின் கருவிகள் ஆவர். வகுப்புவாத பாசிச பயங்கரத்தை எதிர்த்தப் போராட்டமும், தனியார்மயம் தாராளமயத்தை எதிர்த்தப் போராட்டமும், முதலாளி வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டவும், அதைத் தொழிலாளி – உழவர்கள் ஆட்சியைக் கொண்டு மாற்றியமைக்கவும் நடைபெறும் போராட்டத்தின் அங்கமாகும்.

போராட்டத்தின் முக்கிய உள்ளடக்கமானது மதச்சார்பற்றதற்கும் வகுப்புவாதத்திற்கும் இடையிலானதென்று கூறுவது, புரட்சித் திட்டத்தை நிரந்தரமாக தள்ளிவைப்பதற்கு ஒப்பானதாகும். இது தொழிலாளி வர்க்கத்திற்கும், கம்யூனிச நோக்கத்திற்கும் துரோகமிழைப்பதாகும்.

நமது நாட்டிலுள்ள மோசமான சூழ்நிலையானது, இந்தியாவிற்கு ஒரு புதிய அடித்தளம் தேவைப்படுகிறது என்பதையும், ஒரு புதிய துவக்கமும், இந்த நூற்றாண்டிற்குப் பொறுத்தமான ஒரு நவீன அரசியல் சட்டமும்  தேவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. 1947-இலும், 1950-இலும் கடந்த காலத்திலிருந்து முழுவதுமாக விடுபட்டு வராததை, இந்த நேரத்தில் நாம் அடையமுடியும், அடைய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை ஒரு அரசியல் சட்ட நிர்ணய அவையைக் கூட்டுவதற்கு ஒரு யதார்த்தத் தேவை இருக்கிறது. அது ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு தேசிய அங்கத்தினரின் உரிமைகளையும், ஒவ்வொரு குடிமகன் மற்றும் மனிதனுடைய உரிமைகளையும் அங்கீகரித்து அவற்றிற்கு உத்திரவாதமளிக்கும்  ஒரு புதிய அரசியல் சட்டத்தை வகுத்து அதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக ஆகும். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காக பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் வாயிலாக, ஏகாதிபத்தியமும், பிற்போக்குத்தனமான முதலாளி வர்க்கமும் ஒரு மாயையான உலகம் உருவாக்கி உயிரோடு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாயையான உலகின் கருவாக, இந்திய குடியரசு ஒரு மதச் சார்பற்ற, சனநாயக மற்றும் சோசலிச நாடு என்ற கட்டுக் கதையும், இந்த 1950 அரசியல் சட்டம் வரும் எல்லா காலங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

தொழிலாளி வர்க்கம் மற்றும் பெருந்திரளான மக்களுடைய அரசியல் விழிப்புணர்வை உயர்த்துவதற்கு தேர்தல் பரப்புரைகள் கம்யூனிஸ்டுகளுக்கு நல்ல வாய்ப்பாகும். மக்களிடையே பிளவுகளை தீவிரப்படுத்தவும், அவர்களை உண்மையான தீர்விலிருந்து திசை திருப்பவும் முதலாளி வர்க்கமும்  அதனுடைய கட்சிகளும் நடத்தும் பாதகமான பரப்புரைகளை வெட்ட வெளிச்சமாக்க இது ஒரு நல்ல சூழ்நிலையாகும்.

அரசியல் விவாதங்களை நடத்துவதற்கும், அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்காக தொழிலாளி வர்க்கத்தை தயாரிப்பதற்கும் தேர்தல் களத்தைப் பயன்படுத்தும் போது, கம்யூனிஸ்டு கெதர் கட்சி, இன்றுள்ள அமைப்பில் தேர்தல்கள் “மக்களுடைய விருப்பத்தை” பிரதிபலிப்பதாக எந்த மாயையும் கொண்டிருப்பதோ, பரப்புவதோ இல்லை. இந்த அமைப்பு, அரசியல் அதிகாரத்தை முதலாளி வர்க்கத்தின் உடும்புப்பிடியில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்டது என்ற உண்மையை நாம் விடாமல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம்.

எல்லா கம்யூனிஸ்டுகளும் அரசியல் களத்தில் மும்முரமாக பங்கேற்று, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி, புரட்சிக்கான அவசியத்தை தொழிலாளி வர்க்கமும், மக்களும் புரிந்து கொள்ள வைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுகிறது.

முதலாளித்துவ-ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக வகுப்புவாத பாசிச பயங்கரத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும், அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு புதிய அரசியல் சட்டத்திற்காகவும், ஒரு புதிய அரசு மற்றும் பொருளாதார அமைப்பிற்காகவும் நாம் போராட வேண்டும்!

Pin It