தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் மிகவும் கடுமையான நிலைமைகளைச் சந்தித்து வருகின்ற ஒரு நேரத்தில் இத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. மிகவும் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்துள்ளன. “எங்களுடைய கட்சிக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டுவந்தால்” இந்த எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமென கூறி காங்கிரசு கட்சியும், பாஜகவும் தங்கள் தேர்தல் பரப்புரையை நடத்தி வருகின்றனர்!

மற்ற ஒவ்வொரு மாநிலத்தையும் போலவே, தில்லி மக்களும் தங்களுடைய நிலமைகளை சீர் செய்யக் கூடிய மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் தேர்தல்களால் அத்தகைய ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. மக்களுடைய நல்வாழ்வை விலையாகக் கொடுத்து தங்களை செழிப்பாக்கிக் கொள்ளும் இந்திய மற்றும் அயல்நாட்டு ஏகபோகங்கள் மற்றும் நிதி முதலாளிகள், மிகப்பெரிய நில உடமையாளர்கள், ஊகக்காரர்கள் மற்றும் பதுக்கல்காரர்கள் ஆகியோருடைய நலன்களுக்காக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பிற்குள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிலைமை இப்படியே தான் இருக்கும்.

தங்களுடைய குரலுக்கு செவிசாய்க்காத இந்த அமைப்பின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த அமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்திற்கான தேவையை அவர்கள் மென்மேலும் உணர்ந்து வருகிறார்கள். தங்கள் பெயரால் ஆட்சி செய்து கொண்டு, ஆனால் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே வேலை செய்து வரும் கட்சிகளுடைய இரண்டு முகங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர். தாங்களே ஆட்சியாளர்களாக ஆக வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் உண்மையிலேயே ஆட்சியாளர்களாக ஆகக்கூடிய முழுமையானதொரு மாற்றத்திற்கான ஒரு திட்டத்தையொட்டி மக்களுடைய ஒற்றுமையைக் கட்டுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி வேலை செய்து வருகிறது.

பிளவுவாத அரசியலையும், திசைதிருப்பலான பிரச்சனைகளையும் மக்கள் மீது திணிப்பதற்காக, தேர்தல்களை இன்று ஆளும் வர்க்கம் பயன்படுத்துகின்றன. இதற்கு மாறாக, தொழிலாளி வர்க்கமும், அதனுடைய கட்சியும், அவர்கள் வாழ்விடத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் பொதுவான நலன்களையொட்டி உழைக்கும் மக்களுடைய ஒற்றுமையைக் கட்டுவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் தேர்தல் களத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அரசியல் வழிமுறையிலுள்ள குறைகளை வெட்டவெளிச்சமாக்கவும், அடிப்படையான மாற்றங்களுக்காகப் போராடவும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தேர்தல்களில் பங்கேற்கிறது. இப்படி வெட்ட வெளிச்சமாக்குவதை நம்முடைய தொடர்ந்த வேலையின் ஒரு அங்கமாக நாம் வைத்திருக்கிறோம். உயர்ந்த பட்ச அதிகாரத்தை எந்த அரசியல் கட்சியிடமோ, அல்லது கட்சிகளுடைய கூட்டணியிடமோ இல்லாமல், மக்களுடைய கைகளில் கொண்டு சேர்ப்பதற்காக அரசியல் வழிமுறையில் ஆழ்ந்த மாற்றங்களுக்காக நாம் போராடி வருகிறோம். பெரும்பான்மையான மக்களுடைய அக்கறையில் வேலை செய்யக்கூடிய நமது நாட்டினுடைய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை மக்கள் கொண்டுவருவதற்கு வழிவகுக்கக் கூடிய ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க ஒரு புதிய அரசியல் சட்ட நிர்ணய அவையை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாதென்ற கேள்வியை நாம் எழுப்பியிருக்கிறோம்.

முந்தைய தேர்தல்கள் போலவே, தில்லி தேர்தல்களையும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் திட்டத்தை மக்களிடம் விரிவுபடுத்த கம்யூனிஸ்டு கெதர் கட்சி பயன்படுத்தும். தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நாம் இந்தத் தேர்தல் களத்தை, இந்திய சமுதாயத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றும் அதைத் தீர்க்க என்ன செய்ய வேண்டுமென்றும் நம்முடைய ஆய்வை முன்வைக்கப் பயன்படுத்துவோம். இன்றையத் தேவையானது முதலாளித்துவ தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதும், சனநாயக அமைப்பைப் புதுப்பிப்பதும் அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தைத் மாற்றியமைப்பதும் ஆகும் என்ற கருத்தை பரப்புகின்ற தேர்தல் பரப்புரைகளை நாம் ஆதரிப்போம். தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்தும், அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதை உறுதி செய்யும் ஒரு திட்டத்திற்காகவும் சமரசமின்றிப் போராடுகின்ற தொழிலாளி வர்க்க, விவசாய அரசியல்வாதிகளுக்கு நாம் முழு ஆதரவளிப்போம்.

தில்லியின் பல்வேறு தொகுதிகளில் மக்களாட்சி இயக்கத்தின் ஆதரவுடன் தேர்தலில் நிற்கும் ஐந்து வேட்பாளர்களுடைய முயற்சிகளுக்கு கம்யூனிஸ்டு கெதர் கட்சி தன் முழு ஆதரவையும் அளிக்கும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம். மக்களுடைய கைகளில் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் உறுதியாக உள்ள ஒரு அரசியல் அமைப்புதான் மக்களாட்சி இயக்கமாகும். அது அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஒரு மக்கள் திட்டத்தை முன்வைத்து, அதற்காக அது உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே போராடி வருகிறது.

Pin It