நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 5% பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டுமென்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களுடைய எல்லா சங்கங்களும் சூலை 3 ஆம் தேதியிலிருந்து முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்கள், அத்தியாவசிய சேவைப் பிரிவுத் தொழிலாளர்களுமாக 27,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த இரு வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார பிரச்சனைகளைப் பற்றிய மத்திய அமைச்சரவைக் குழு சூன் 21 அன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டுமென அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த முடிவை எதிர்த்து எல்லா தொழிற் சங்கங்களும் கூட்டாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சூலை 13-ஆம் தேதியிலிருந்து இந் நிறுவனத் தொழிலாளர்கள், காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டுமென்ற மத்திய அரசாங்கத்தின் முடிவை தொழிற்சங்கங்களுடைய பெரிய எதிர்ப்பு காரணமாக 2002-இலும், 2006-இலும் அரசாங்கம் பின்வாங்கிக் கொள்ள வேண்டியிருந்ததை நாம் நினைவு கூறலாம். இந்தக் கடுமையான எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்க்க வேண்டியதாகியது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒரு இலாபம் ஈட்டிவரும் நிறுவனம் என்பதைத் தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 1977-இலிருந்து அது இலாபம் ஈட்டிவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் பங்காதாயத் தொகையை அது அளித்திருக்கிறது. இத்துடன் ஒப்பிடுகையில், 5 % பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் அரசாங்கத்திற்கு 466 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்த வேண்டுமென்ற நீண்டகால திட்டத்தை அரசாங்கம் பின்பற்றுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அரசாங்கம் 5 % பங்குகளை விற்பது என்பது துவக்கமாக மட்டுமே இருக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன. “இதை இப்போது நாம் எதிர்க்காவிடில், படிப்படியாக இது 43 % வரை செல்லும். நாம் நம்முடைய உரிமைகளையும், ஊதியப் படிகளையும், வேலையையும், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம். இப்படி நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது“ என நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களின் ஒரு முக்கியத் தொழிற்சங்கத் தலைவர் கூறினார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒரு அரசு நிறுவனமாக, நிலக்கரியைக் கொண்டு நுகர்வோருக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் மின்சாரத்தை அளிக்க முடிகிறது. ஆனால் இது தங்களுக்கு அதிகபட்ச இலாபத்தை ஈட்டுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள தனியார் கைகளுக்குச் செல்லுமானால், நிலைமை மாறிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டே இந்தத் தொழிலாளர்கள் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து வருகின்றனர் என்பதையும் சங்கங்கள் சுட்டிக்காட்டினர்.

என்எல்சி நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்று தொழிலாளர்களுடைய இந்தப் போராட்டம், சட்டத்திற்கு புறம்பானதென அறிவிக்கச் செய்தனர். நீதி மன்றம் இந்த 17 தொழிற் சங்கங்களையும், ஆபீசர்ஸ் அசேசியேசன்களையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதென தடை உத்திரவைப் பிறப்பித்தது. ஆனால் இந்த நீதி மன்ற தீர்ப்பையும் மீறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எல்சியின் இஞ்சினியர்கள் உட்பட சில ஆபீசர்ஸ் அசோசியேசன்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர். அவர்களுக்கு தொழிற் தகராறுகள் சட்டத்தின் பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் வேலையிலிருந்து தூக்கி எறியப்படலாமெனவும் கருதி அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர். 2002, 2006 இல் மத்திய அரசு என்எல்சி-யின் பங்குவிலக்கலுக்கு முயற்சி செய்த போது, தொழிலாளர் சங்கங்களும், ஆபீசர்ஸ் அசோசியேசன்களும் சேர்ந்து தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராடினர்.

தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக, நெய்வேலி நகரமெங்கும், அதன் சுற்று வட்டாரங்களிலும் பெரிய அளவில் காவல்துறையினர் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து காவல் துறையினர் திரட்டி நெய்வேலியில் குவிக்கப்பட்டனர். சுரங்கங்களிலும், அனல் மின்சார நிலையங்களிலும், அலுவலக வளாகங்களிலும், தொழிற் சங்க அலுவலகங்களிலும் சிஐஎஸ்எப் காவலர் குவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு பல்வேறு வழிகளிலும் அரசாங்கமும், காவல்துறையும் நிர்வாகமும் வேலை நிறுத்தத்தை உடைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இந்த எல்லா முயற்சிகளையும் முறியடித்துத் தொழிலாளர்கள் ஒற்றுமையோடும், விழிப்புணர்வோடும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த வேலை நிறுத்தம் தமிழ்நாட்டின் மின்சாரத் தட்டுபாட்டை மேலும் தீவிரமடையச் செய்தது. மக்களுடைய சொத்துக்கள் தனியாரால் கொள்ளையடிக்க இடந்தரக்கூடாதென்ற நோக்கத்திற்காகவும், தொழிலாளர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்காகவும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும், உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்களுடைய போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற் சங்கங்களும், மக்கள் அமைப்புக்களும், பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நெய்வேலி நகர வணிகர்களும் பொது மக்களும் முழு கதவடைப்பை மேற் கொண்டனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு நாள் கதவடைப்புப் போராட்டத்திற்கும் திட்டமிட்டு வந்தனர்.

தொழிலாளர்களுடைய போராட்ட எதிர்ப்பின் காரணமாக, தமிழக முதலமைச்சர் இந்த 5 % பங்குகளை தமிழக அரசின் நிறுவனங்களுக்கு வழங்கலாமென கருத்து தெரிவித்திருக்கிறார். இது வருகின்ற காலங்களில் தனியார்மயப்படுத்த வழிவகுக்கும் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். தனியார்மயப்படுத்தும் எல்லா முயற்சிகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களுடைய ஒன்றுபட்ட கோரிக்கையாகும். எனினும் மத்திய அரசு 5 % பங்குகளை தமிழக அரசின் நிறுவனங்களுக்கு வழங்க முன் வந்த காரணத்தால், தொழிலாளர்கள் தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தையும் உண்ணாவிரதத்தையும் பின்வாங்கிக் கொண்டனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டுமென்ற மக்கள் விரோதமான மத்திய அரசின் திட்டம் தொழிலாளர்களின் ஒற்றுமையின் காரணமாகவும், கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் எல்லாத் தொழிற் சங்கங்களும் ஒன்றுபட்டு மேற்கொண்ட தீவிரப் போராட்டத்தின் காரணமாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தனியார்மயத் தாராளமயத் திட்டங்களை எதிர்த்து முழுமையாக முறியடிக்கும் வரை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களுடைய இந்தப் போராட்ட வெற்றியைத் தற்காலிக வெற்றியாக மட்டுமே கருத முடியும். ஆட்சியாளர்களும், முதலாளிகளும் மேற்கொள்ளும் திசை திருப்பல்களுக்கு பலியாகிவிடாமல் தனியார்மய தாராளமயத் திட்டங்களை எதிர்த்தப் போராட்டங்களைத் தொழிலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும். 

தொழிலாளர்கள் மேற் கொண்ட ஒற்றுமையும், வீரமான போராட்டமும் மற்ற எல்லாத் தொழிலாளர்களும் பின்பற்றக் கூடிய எடுத்துக்காட்டாகும். முற்றிலும் நியாயமான கோரிக்கைக்காக சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபட்டு போராட்டத்தை மேற் கொண்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களை தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் மனதாரப் பாராட்டுகிறது.

Pin It