சென்னையில் சனவரி 5, 2013 அன்று தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் நடத்திய சிந்தனையைத் தூண்டும் உணர்வூட்டுகின்ற கூட்டத்துடன் 2013 புத்தாண்டு துவங்கியிருக்கிறது. வாகன உற்பத்தி, இஞ்சினிரிங், உற்பத்தி, ஆகாய விமானப் போக்குவரத்து, மருத்துவமனை, இரயில்வே, பேரூராட்சி, பஞ்சாயத்து, ஆடைகள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், தொழிலாளர் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். தங்களுடைய உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் தீவிரமாக தாக்கப்படுவதை எதிர்த்து அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் உடனடியாக ஒன்றுபட வேண்டிய தேவையைத் தொழிலாளர்கள் உணர்ந்து வரும் சூழ்நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

cgpi_meeting_500

தொழிலாளர்களுடைய நிலைமை குறித்தும், அதிகரித்துவரும் சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கான தொழிலாளி வர்க்கத்தின் திட்டம் குறித்தும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் தோழர் பாஸ்கர் ஒரு விழிப்புணர்வைத் தூண்டும் படங்களும், புள்ளி விவரங்களும் நிறைந்த படக்காட்சி விளக்கத்தை முன்வைத்தார். இப்படக் காட்சி விளக்கமானது, இந்தியாவெங்கிலும் நடைபெறும் போராட்டங்களை எடுத்துக் காட்டியது. படங்கள் தில்லியிலும், சென்னையிலும் நடைபெற்ற மேதினப் பேரணிகளையும், மானேசரில் உள்ள மாருதி-சுசுகி, குர்கானில் உள்ள ஈஸ்டர்ன் மெடிகிட், சிரிபெரும்புதூரில் உள்ள உண்டாய் கார் கம்பெனி, மும்பையில் உள்ள வோல்டாசு ஆகிய போராட்டங்கள், மும்பை மற்றும் தில்லியில் ஏர் இந்தியா விமான ஓட்டிகளுடைய வேலை நிறுத்தப் போராட்டம், சென்னையில் நடைபெற்ற ஏர் இந்தியா தொழிலாளர்களுடைய ஆர்பாட்டம், சென்னையில் உள்ள அப்போலோ, வி.எச்.எஸ், மலர் ஃபோர்டிசு மருத்துவமனைகளைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களுடைய போராட்டங்கள், இரயில்வே இஞ்சின் ஓட்டுனர்களுடைய மாநாடு, கூட்டங்கள், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் தில்லியில் நடத்திய தொழிலாளி வர்க்கத்தின் கருத்தரங்கு, பாராளுமன்றத்தின் முன்னே தொழிலாளிகளின் ஆர்பாட்டங்கள், அனைத்திந்திய பொது வேலை நிறுத்தம், நவி மும்பையில் உள்ள சிண்டிகேட் வைப்பர்சு, வங்கி பணியாளர்களின் போராட்டங்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் பிற நிகழ்வுகளை எடுத்துக் காட்டியது. அண்மையில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் துணிவான போராட்டங்களைக் குறிப்பிட்ட பேச்சாளர், இந்தப் போராட்டங்களின் இன்றைய நிலையை விளக்கினார். தொழிலாளி வர்க்கத்தின் சட்ட ரீதியாக நன்கு நிறுவப்பட்ட உரிமைகளைக் கூட அனுமதிக்க முதலாளிகள் இன்று விரும்பவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். மானேசரில் உள்ள மாருதி-சுசுகியிலும், சென்னையில் உண்டாய் மற்றும் ஃபோர்டு கம்பெனிகளில் நாம் கண்டது போல், தொழிலாளர்களுக்கு எதிரான முதலாளிகளுடைய சட்டவிரோதமான அப்பட்டமான தாக்குதல்களுக்கு தொழிலாளர் துறையும், அரசாங்கமும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

படக்காட்சியில் பிற பிரிவு மக்களுடைய போராட்டங்களைப் பற்றிய புகைப் படங்களும் இருந்தன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான அரியானா விவசாயிகளுடைய ஆர்பாட்டம், ஒடிசாவில் போஸ்கோ-விற்கு எதிரான மக்கள் போராட்டம், அணு உலைக்கு எதிராக கூடங்குளம் மக்களுடைய மாபெரும் ஆர்பாட்டங்கள், தனியார்மயத்தை எதிர்த்து தில்லியிலும், பஞ்சாபிலும் ஆர்பாட்டங்கள், உணவுப் பாதுகாப்பு கோரி ஆர்பாட்டம், மனித உரிமைகள் நாள் கூட்டங்கள் மற்றும் தில்லியில் ஒரு பெண் அண்மையில் கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டங்கள் பற்றிய படங்களும் விளக்கங்களும் இடம் பெற்றன. தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என மக்களின் பல்வேறு பிரிவினரும் தங்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்களுடைய வாழ்வாதாரங்கள் மீதும் அடிப்படை உரிமைகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்தும் போராடி வருகின்றனர் என்பதைப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் வாகன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களுடைய நிலைமை குறித்து படக்காட்சி விளக்கம் விரிவாக விவாதித்தது. இந்தியாவில் வாகனத் துறையின் நிலைமை குறித்து அவர் பல்வேறு புள்ளி விவரங்களையும், வரைபடங்களையும் முன்வைத்தார். கடந்த சில ஆண்டுகளில் வாகனத்துறை வேகமான வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தியாவில் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்துள்ள இந்திய மற்றும் அயல்நாட்டு ஏகபோக முதலாளிகள் தங்களுடைய இலாபத்தை மேலும் அதிகரிப்பதற்காக நம்முடைய தொழிலாளர்களைக் கடுமையாக சுரண்டி வருகிறார்கள். தொழிலாளர்களுடைய உற்பத்தித் திறன் 2000-01 இல் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 21 இலட்சம் ரூபாயாக இருந்தது, 2005-06 இல் அது 57 இலட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது 1993-04 விலைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். விற்பனைத் தொகைக்கும், வரி போக கிடைக்கும் இலாபத்திற்கும் உள்ள விகிதமான இலாப விகிதம், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் 6.07 ஆக 2004-05 இல் இருந்தது, 7.26 ஆக 2005-06 இல் அதிகரித்தது. அது 2006-07 இல் மேலும் உயர்ந்து 2006-07 இல் 8.95 ஆக ஆகியிருக்கிறது!

ஆனால், இந்தத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உண்மை ஊதியமானது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 2000-01இல் 80,000 ரூபாயாக இருந்த ஆண்டு உண்மை ஊதியம், 2009-10இல் ரூ 64,000-மாகக் குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் ஒவ்வொரு தொழிலாளியும் உற்பத்தி செய்யும் உபரி மதிப்பானது, ரூ 3,00,000 யிலிருந்து ரூ 7,30,000 மாக உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தொழிலாளர்களுடைய ஊதியம், அவர்கள் உற்பத்தி செய்யும் உபரி மதிப்பின் சதவிகிதமாக 28%-த்திலிருந்து 15.5%-மாக கடுமையான வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்களெல்லாம் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன என்பதைப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு, வாகன உற்பத்தித் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த ஏகபோக முதலாளிகளுடைய இலாபத்தைப் பெருக்க தங்களுடைய பங்கை அதிகரித்து வந்திருக்கின்ற அதே நேரத்தில், தங்களுடைய உண்மை ஊதியத்தை அதிக அளவில் இழந்து வந்திருக்கிறார்கள். மற்றத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமையும் ஏறத்தாழ இது போன்றதே ஆகும்.

1991 இலிருந்து 2011 வரையிலான 20 ஆண்டுகளில் இந்திய ஏகபோக முதலாளிகளுடைய விற்பனையின் மொத்த வருவாய் 40 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக முகேஷ் அம்பானி 87 மடங்கும், மித்தல் 1500 மடங்கும் வளர்ச்சி பெற்றிருக்கின்றனர். தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவதன் மூலமும், வேலையை ஒப்பந்த முறையிலும், வெளியில் கொடுத்துச் செய்வதன் மூலமும், தொழிலாளியின் வேலை பளுவை அதிகப்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பு விதிகளை மீறுவதன் மூலமும் தொழிலாளர்களிடமிருந்து அதிகபட்ச உபரி மதிப்பை கரப்பதன் வாயிலாக முதலாளிகள் தங்களுடைய சொத்துக்களைப் பன்மடங்கு பெருக்கியிருக்கின்றனர். ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல், தில்லி ஜால் போர்டு போன்று மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களை முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக அரசாங்கம், முதலாளிகளுக்கு தாரை வார்த்து வருகிறார்கள்.

2006க்கும், 2011-க்கும் இடையே நகரங்களில் சராசரி கூலி அல்லது வருவாய் 38% அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 72% உயர்ந்துள்ளன. அடிப்படையில் உழைக்கும் மக்கள் இந்தக் காலக்கட்டத்தில் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை இழந்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. 2012 டிசம்பர் கடைசி வாரத்தில் ஐ.எல்.ஓ எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களும் இதே கருத்திற்கு வலிமை சேர்க்கிறது. அந்த அறிக்கையின் படி, 2008க்கும் 2011க்கும் இடையில் இந்தியாவின் உண்மை ஊதியமானது 1% வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றும், அதே நேரத்தில் தொழிலாளர்களுடைய உற்பத்தித் திறனானது 7.6% அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது!

முதலாளிகளுடைய சுரண்டலை எதிர்க்கவும், நம்முடைய உரிமைகளைக் கோரவும் நாம் ஒன்றுபட வேண்டும். ஒப்பந்தத் தொழில் முறையை ஒழிக்கவும், தொழிலாளர்களுக்கு விரோதமான எல்லா நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டவும் நாம் போராட வேண்டும். எல்லா தொழிற் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், தொழிலாளர்களுடைய எல்லா உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தொழிற் சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டு நாம் போராட வேண்டும். எல்லா அமைப்பு சார்ந்த மற்றும் சாராத அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென நாம் உறுதியாகக் கேட்க வேண்டும்.

விலைவாசி உயர்வு தொழிலாளர்களைக் கடுமையாக பாதித்து வருகிறது. அண்மைக் காலத்தில் விலைவாசியும் பணவீக்கமும் நம்முடைய உண்மை ஊதியத்தைக் கடுமையாக வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. விலைவாசி உயர்வினாலும், பணவீக்கத்தாலும் ஆளும் முதலாளி வர்க்கம் பயனடைகிறது. உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்த போதிலும், விவசாயிகளுக்குக் கிடைக்கும் விலை அதிகரிக்கவில்லை. விவசாயம் கட்டுபடியாகக் கூடிய வகையில் இல்லை யென்பதால் பெரும்பாலான விவசாயிகள் அதை விட்டுவிட்டு வேறு வேலைகளைத் தேடிச் செல்கின்றனர். பொது வினியோக அமைப்பு முறையை அரசாங்கம் எல்லா மக்களுக்கும் விரிவு படுத்த வேண்டும், எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் பொது வினியோக அமைப்பு முறையின் கீழ் கொண்டுவர வேண்டும், அயல்நாட்டு வாணிகத்தையும் உள்நாட்டு மொத்த வர்த்தகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், ஊக வாணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டும், இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளிகளுக்கு சீரான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்ய முடியும் என்று நாம் கேட்கிறோம். நம்முடைய இந்த நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்து, அரசாங்கம் முதலாளிகளுடைய கொள்ளை இலாபத்தை அதிகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

நம்முடைய கோரிக்கைகளை அடைய வேண்டுமானால் நாமே இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நடத்த வேண்டும். இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையாக தொழிலாளர்கள் நாம் இருக்கும் போது, இந்த நாட்டினுடைய எல்லா செல்வங்களையும் நாம் உற்பத்தி செய்யும் போது, நாம் ஏன் இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக இருக்கக் கூடாது? ஆம், நாம் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். ஆனால் நாம் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு, இன்றுள்ள அரசியல் வழிமுறை மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. பெரும்பான்மையான நாம் இந்த சமுதாயத்தில் நியாயமான இடத்தை அடைவதிலிருந்து நம்மைத் தடுத்து அரசியல் வழிமுறை நம்மை ஓரத்தில் ஒதுக்கித் தள்ளுகிறது. இந்த அரசியல் வழிமுறையை மாற்றுவதற்காகவும் நாம் போராட வேண்டும். வேட்பாளர்களைத் தீர்மானிக்கவும், தேர்ந்தெடுக்கவும், தேர்தல்களில் பணபலமும், குண்டர்பலமும் பங்கு வகிப்பதற்கு முடிவு கட்டவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நம் கட்டுப்பாட்டின் கீழ் எல்லா நேரத்திலும் வைத்திருக்கவும், அவர்களைத் திருப்பியழைக்கும் உரிமைக்காகவும் நாம் போராட வேண்டும். இன்றைய அரசியல் வழிமுறையை சீர்திருத்துவதற்காக ஆர்வம் கொண்டுள்ள பிற மக்களோடு சேர்ந்து நாம் இந்தப் போராட்டத்தை மேற் கொள்ள வேண்டும்.

உண்மைகள், புள்ளி விவரங்கள் மற்றும் விவாதத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் தொழிற்சாலை, தொழில் துறை, கட்சி அடிப்படைகளைக் கடந்த அளவில் தொழிலாளர்கள் தங்களுடைய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டுமென தொழிலாளர்களை தோழர் பாஸ்கர் கேட்டுக் கொண்டார். இப்படிப்பட்ட ஐக்கியத்தையும், விழிப்புணர்வையும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கமானது கட்டி வலுப்படுத்த வேலை செய்து வருகிறது. நம்முடைய உரிமைகளுக்காகவும், அரசியல் அதிகாரத்திற்காகவும் நாம் போராடவேண்டும்.

செறிவான, உணர்வூட்டும் இந்தப் படக்காட்சி விளக்கத்தைத் தொடர்ந்து, பல தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை வழங்கினர்.

ஏ.ஐ.டி.யு.சி-னுடைய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ஆர்.இரவீந்திரன் முன்வைக்கப்பட்ட படக்காட்சி விளக்கத்தை பெரிதும் வரவேற்றார். இன்றைய நிலைமை குறித்து தொழிலாளர்களுக்கு தெளிவூட்ட இந்த படக்காட்சி விளக்கத்தை பல்வேறு பிரிவு தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென அவர் கூறினார். சில்லறை வணிகத்திலும், ஊடகத்துறையிலும், மற்றும் பிற துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தன் காரணமாக நமது நாட்டினுடைய தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் ஏற்படும் மோசமான பாதிப்பை அவர் விளக்கினார். தங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, நமது தொழிலாளர்களுடைய விழிப்புணர்வை உயர்த்த வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார்.

வி.எச்.எஸ். மருத்துவமனை தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.மணிதாசன், உழைக்கும் மக்களுடைய இன்றைய மோசமான நிலைமைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். ஆங்கிலேய காலனியர்களை எதிர்த்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்கள் தான் முன்னணியில் இருந்தனர். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, இன்னொரு விடுதலைப் போராட்டத்திற்கு தயாராக வேண்டுமென இன்றைய சூழ்நிலை கேட்கிறது. முதலாளிகள் மற்றும் அவர்களுடைய அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து எல்லாத் தொழிலாளர்களுடைய போராட்ட ஒற்றுமையை இன்றைய நிலைமை கோருகிறது. எனவே தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டுவதற்கு இதுவே சரியான நேரமென தோழர் மணிதாசன் உறுதிபடக் கூறினார்.

ரானே இஞ்சின் வால்வ்-சின் தொழிற் சங்கத் தலைவரான தோழர் பி.இரவிச்சந்திரன் தொழிலாளர்களின் விழிப்புணர்வை உயர்த்தும் இந்த முயற்சியை வரவேற்றார். படக்காட்சி விளக்கத்தில் முன்வைக்கப்பட்ட தொழிலாளர்களுடைய நிலை குறித்த தெளிவூட்டும் புள்ளி விவரங்களையும், தகவல்களையும் தான் இதற்கு முன்னர் கண்டதில்லை என்றார். இப்படிப்பட்ட ஆய்வு அறிக்கை மற்ற பிற முக்கிய தொழில்துறைகளில் நடத்தப்பட்டால், அது அந்தத் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுடைய போராட்டங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார் அவர். தொழிலாளர்கள் நாம் பொருளாதார கோரிக்கைகளுக்கும் அப்பாற் சென்று, இந்த ஒட்டு மொத்த முழு சமுதாயத்தின் கோரிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென இந்தப் படக்காட்சி விளக்கம் தெளிவு படுத்துவதை அவர் எடுத்துக் கூறினார்.

ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசனுடைய வட்டார செயலாளர் தோழர். பாலசந்திரன், இந்திய இரயில்வேயில் இஞ்சின் ஓட்டுனர்களுடைய வேலையின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார். பல போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் அவர்கள் மேற்கொண்ட போதிலும், சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்று வரை அவர்களுடைய வேலை நிலைமைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 1974-இல் எல்லா இரயில்வே தொழிலாளர்களும் தீவிரமான வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். அதற்குப் பின்னர் அப்படிப்பட்ட போராட்டங்கள் நடைபெறவில்லை. போராட்டமின்றி தொழிலாளி வர்க்கத்தின் எந்தக் கோரிக்கையையும் நாம் வெற்றி பெற முடியாதென்பது நம்முடைய அனுபவமாகும். தொழிலாளர்களுடைய ஒற்றுமையைக் கட்டும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் உயரிய நோக்கத்திற்கு தன்னுடைய அமைப்பு முழு ஆதரவை அளிக்குமென அவர் உறுதியளித்தார்.

தமிழ் நாடு சனநாயக கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ஆப்ரகாம், ஆட்குறைப்பின் காரணமாகவும், கதவடைப்பின் காரணமாகவும் தங்களுடைய வேலைகளிலிருந்து தூக்கி எறியப்படும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும், பெரிய நிறுவனங்களும் வங்கிகளும் வேளாண்மை மீது ஆதிக்கம் செலுத்துவதால் விவசாயம் கட்டுபடியாகக்கூடிய நிலையிலும் தொடர்ந்து நடத்தக்கூடிய வகையிலும் இல்லையென்ற நிலைமையில் பிழைப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் விவசாயிகளும் கட்டுமானத் தொழிலாளர்களாக ஆகி வருகின்றனர். இந்தியாவிலுள்ள சனநாயக மற்றும் அரசியல் அமைப்பானது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு பதிலாக நமது மக்களைக் கொள்ளையடிக்கவும், சுரண்டவும் இந்திய மற்றும் அயல்நாட்டு ஏகபோகங்களின் "உரிமையை" உண்மையில் பாதுகாத்து வருகிறார்கள் என்றார் அவர்.

ஏர் இந்தியா ஐக்கியத் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னணி செயல்வீரர்களில் ஒருவரான தோழர் யாதவ்ராஜ், ஏர் இந்தியாவில் நிலவிவரும் நிலைமைகள் குறித்தும், தொழிலாளர்கள் அண்மையில் மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். இந்திய மக்களுடைய செல்வத்தில் நடத்தப்படும் இந்த நிறுவனம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் எண்ணிக்கையிலான அதன் தொழிலாளர்களை தற்காலிகத் தொழிலாளர்களாக சட்டத்திற்கு விரோதமாகவும், நியாயமற்ற முறையிலும் வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றுள்ள அரசியல் அமைப்பும், நீதித் துறையும் இந்த அநியாயமான, குற்றவியலான நடத்தைக்குத் துணையாக இருக்கிறார்கள். ஏர் இந்தியா தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு எல்லா அமைப்புக்களும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான தோழர். லீலாவதி, நாடெங்கிலும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமையைக் குறிப்பிட்டார். இந்திய சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காகவும், பிற நன்மைகளுக்காகவும் கடந்த காலத்தில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களை அவர் நினைவு கூர்ந்தார். உலகமயமாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், தங்கள் வென்ற சிறிய உரிமைகளையும், பயன்களையும் கூட தொழிலாளர்கள் இன்று இழந்து வருகிறார்கள். தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பு கடுமையான எதிரியாக இருந்து வருகிறார்கள். தொழிலாளர்களுடைய ஒற்றுமையை கட்டியமைத்து, இந்தப் போக்கை எதிர்த்து எவ்வித சமரசமுமின்றி நாம் போராட வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

சென்னை ஏற்றுமதி வளாகத்தில் வேலை செய்யும் ஆடை தயாரிக்கும் தொழிலாளர்கள் சார்பாக தோழர் டி.சம்பத் உரையாற்றினார். இந்தத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுடைய நிலமையை அவர் விளக்கினார். ஒவ்வொரு மணிநேரமும் ஆயிரக்கணக்கான ஆடைகளைத் தொழிலாளிகள் தயாரித்து அளிக்கிறார்கள். அவர்கள் தயாரிக்கும் ஆடைகள் ஒவ்வொன்றும் குறைந்த பட்சமாக ரூ 2000-க்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 10-12 மணி நேரமும், மாத த்திற்கு 25 நாட்களும் முதுகெலும்பு உடைய உழைக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக ஒரு மாதத்திற்கு ரூ 4000 மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது அவர்கள் தயாரிக்கும் 2 ஆடைகளின் விலையாகும்! இவ்வாறு இந்தத் தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்படுகிறார்கள். இந்தத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கட்டுவதன் மூலமும், அவர்களுடைய விழிப்புணர்வை உயர்த்துவதன் மூலமும் இந்த நிலைமையை எதிர்த்து பிற தொழிலாளி வர்க்க அமைப்புக்களின் ஆதரவோடு போராட வேண்டும் என்று அவர் கூறினார்.

அனுபவம் வாய்ந்த கம்யூனிஸ்டும், தொழிலாளி வர்க்க அமைப்பாளருமான தோழர். எஸ்.கே.ஜி.ஏகாம்பரம் தொழிலாளி வர்க்கத்தின் விழிப்புணர்வை வளர்த்து, எல்லாத் தொழிலாளர்களின் போராட்ட ஒற்றுமையைக் கட்டியமைத்து, முதலாளிகளையும் சுரண்டலதிபர்களின் நலன்களைக் கட்டிக்காக்கும் அரசாங்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்  என்று கூறினார். தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு நாம் அடிக்கடி சந்திக்க வேண்டுமென்று அவர் கருத்து தெரிவித்தார். இந்த நாட்டை ஆள்பவர்களிடம், நம்முடைய பிரச்சனைகளை எழுப்பவும், தீர்வு காணவும் எல்லாத் தொழிலாளர்களும், அவர்களுடைய அமைப்புக்களும் திட்டமிட்டு பிப்ரவரி 20, 21 வேலை நிறுத்தப் போராட்டத்தில் துணிவோடு பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார். இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொழிலாளர்களுடைய ஒற்றுமையைக் கட்டி வலுப்படுத்துவதெனவும், தங்களுடைய எல்லா கோரிக்கைகளையும் வெல்வதற்கு 2013 புத்தாண்டில் போராட்டங்களைத் தீவிரப் படுத்துவதெனவும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளி வர்க்கத் தலைவர்களின் உறுதியோடு இக்கூட்டம் நிறைவு பெற்றது.

Pin It