சாதி ஒழிப்பு என்று அரசியல் சட்டத்தைத் திருத்த வலியுறுத்தி கருவறை நுழைவுப் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. பக்தர்கள் எல்லோரும் கோவிலில் சென்று வழிபட முடிகிறது. அப்படியிருக்க கோவிலில் எங்கே இருக்கிறது சாதி? என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இன்றுள்ள கோவில்கள் நிலைமையைப் பார்த்து இவர்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், இன்றும் எத்தனையோ கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாமல் இருக்கிறது. இவர்கள் குறிப்பிடும் கோவில்களிலும் கருவறைக்கு உள்ளே நுழைய முடியாமல் இந்த மண்ணின் சொந்தக் காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

இன்று எல்லா சாதியினரும் கோவில்களுக்குள் சென்று வழிபட முடிகிறதென்றால் இதற்கு யார் காரணம்? இந்த உரிமையை இவர்களுக்குப் பெற்றுத் தந்தவர்கள் யார்? அதற்காக யார் யார் உழைத்திருக்கிறார்கள் என்ற வரலாற்றை மறந்து விட்டார்கள்.

கோவில்கள் இந்துமத வர்ணாசிரமத்தைப் பாதுகாக்கும் அரணாகவே இருந்து வந்திருக் கிறது. வழிபடுகிற பக்தன் இந்துவாகவே இருந்தாலும் அதில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு நீதியை - தர்மத்தைப் போதிக்கும் மனுதர்மத்தின் கட்டளையை நிறை வேற்றும்முகமாக கோவில்கள் விளங்கி யிருக்கின்றன. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்கிற சாதி வித்தியாசத்தை பலப்படுத்தும் பணியில் கோவில்கள் முக்கியமாக திகழ்ந்திருக் கின்றன. வர்ணாசிரமத்தைக் கட்டுப் பாடாகக் கடைபிடிக்கும் இடமாகத் தான் கோயில்கள் இருந்தன. வர்ணா சிரம தத்துவத்தை - நால்வருண பேதத்தை பரப்பக் கூடிய - விளக்கக்கூடிய கண்காட்சியாகத்தான் கோவில்கள் இருந்தன.

கோவில் கருவறை வரை செல்லக்கூடிய ஒரு சாதி, கோவில் உட்பிரகாரம் வரை செல்லக்கூடிய ஒரு சாதி, கோவில் கொடி மரம் வரை செல்லக் கூடிய ஒரு சாதி, கோவில் சுற்றுச் சுவருக்கு வெளியே வரை செல்லக் கூடிய ஒரு சாதி என்று சாதிக் கொடுமைகளுக்கு எல்லை வகுத்து, அதை உயிரைவிட அதிகமாகப் பேணிக் காத்து வந்தவைதான் கோவில்கள்.

இந்த எல்லைகளை மீறிய நந்தன் தீயில் பொசுக்கப் பட்ட்டான். இன்னும் வரலாற்றில் பதியாமல் பல உரிமைப் போராளிகள் புதைக்கப்பட்டிருப் பார்கள். இந்த எல்லைகளில் இன்னும் மிச்சமிருக்கிற வற்றைக் காப்பாற்றத்தான் இந்துத்துவா வெறி யர்கள் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'' என்று இன்றும் காது கிழியக் கத்திக் கொண்டிருக் கிறார்கள். இதன் பொருள் என்ன? கோயிலுக்கு வெளியே இருந்து நீ வழிபட்டாலே போதும், கோவிலுக்குள் நுழையத் தேவையில்லை என்று வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் வளர்க்கச் செய்கிற சூழ்ச்சியாகும்.

இந்து மதத்தின் - மத வெறியர்களின் - பார்ப்பனர்களின் நோக்கமெல்லாம் கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் - வர்ணாசிரம தர்மத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறது. ஏனென்றால், கடவுளின் பெயரால் எதைக் கூறினாலும் தமிழர்கள் எதுவும் கேட்காமல் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் பிரதமர் முதல் முதல்வர் வரை அனைத்து அரசுகளும் அதிகாரி களும் வந்து மண்டியிடும் இடம் கோவில் ஒன்றுதானே! ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் கோவிலில் பார்ப்பான் தான் உயர்ந்தவன். மற்றவர்கள் எல்லாம் கீழ்சாதிகள் தானே! இந்த இழிவைப் போக்கத்தான் கழகம் கருவறையை நோக்கித் திரள்கிறது.

தந்தை பெரியாரின் பெரும் பணி கோவில் களிலிருந்த சாதி எல்லைகளைத் தகர்த்து எறிந்தது. கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு - சாதி எல்லை வகுத்த வர்ணாசிரமத்தை அடித்து விரட்டி உள்ளே நுழைந்தது கருஞ்சட்டைப் படை. அப்படியே கொடி மரம், உட்பிரகாரம் வரை சாதி - வகுத்த எல்லைகளை நொறுக்கியது. கடைசி யாக சாதி கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டுள்ளது. அதையும் வெளியேற்றவே கழகம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கோவிலில் குடியேறிய சாதியை ஒழிக்க பெரியாரும் அவரது இயக்கமும் செய்த போராட் டங்கள் ஏராளம். தானாக சாதி இழிவு ஒழிக்கப் படவில்லை. கழக முன்னோடிகள் தங்கள் ரத்தத்தைச் சிந்தி - பல வழக்குகளைச் சந்தித்து - கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகி - சொந்த வாழ்வைத் துறந்து இதைச் சாதித்திருக்கிறார்கள்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று காலமெல்லாம் முழங்கியவர்கள் தான் கடவுளை உண்டு என்று நம்பிய தமிழர்கள் மீது சுமத்தப் பட்ட இழிவுகளைத் துடைத்து உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள்.

அன்றைய கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள பாதையில் தாழ்த்தப்பட்டோரும், தீண்டத்தகாதவர்களும் நடக்கக் கூடாது. அவர்கள் அந்தப் பாதையில் நடந்தால் கோவில் தீட்டாகி விடும் என்ற சாதித் தீண்டாமை நிலவியது. அதை எதிர்த்து தந்தை பெரியார் போராடி சிறை சென்றார். அவரது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். சிறையில் கடும் சித்ரவதைக்கு உள்ளான போதிலும் வெளியே வந்ததும் மீண்டும் போராடி கோவிலைச் சுற்றியுள்ள பாதைகளில் அனைவரும் நடக்கலாம் என்கிற உரிமையைப் பெற்றுத் தந்தார் பெரியார்.

வைக்கம் போராட்டத்தின் வெற்றி சுசீந்திரத் தில் கோவில் நுழைவுப் போராட்டமாக 1925ஆம் ஆண்டு வெடித்தது. "வைக்கம் சத்தியாகிரகம் முடிவடைந்து வெகு நாட்களாகி விடவில்லை. அதற்குள்ளாக மற்றோரிடத்தில் சமத்துவத்தை நிலைநாட்டத் தோன்றியுள்ள சத்தியாகிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்க மெல்லாம் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கே யாகும்'' என்று தந்தை பெரியார் சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்தை ஆதரித்ததோடு, வைக்கம் போராட்டத்திற்கு தமிழ்நாடு துணை நின்றது போல இதற்கும் துணையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.

சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத் திற்குப் பின்னர் 1927ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டோர் என்பவர்களை உடன் அழைத்துக் கொண்டு கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்கள்.

1927ஆம் ஆண்டில் ஜே.என்.இராமநாதன் தலைமையில் திருச்சி தாயுமானவர் கோவிலில் நுழைவுப் போராட்டம் நடந்தது. அவர்கள் மலைக்குச் செல்ல படியேறிச் சென்றபோது பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரவுடிகளால் தாக்கப்பட்டு, அடித்துத் தள்ளப் பட்டு படிகளில் உருட்டி விடப்பட்டனர்.

ஜே.எஸ்.கண்ணப்பர் தலைமையில் திருவண்ணா மலை கோவிலில் நுழைந்த தோழர்களைக் கோவிலுக்கு உள்ளேயே வைத்துப் பூட்டி விட்டனர். அவர்கள் மீது வழக்கும் போடப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட அனைத்து சாதித் தோழர்களும் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை அறிந்த பார்ப்பனர்களும் அவரது அடிவருடிகளும் கோவில் நுழைவு வாயிலையும் கருவறையையும் பூட்டி விட்டனர். ஆனாலும் கோவிலின் பக்கவாட்டுக் கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் வெற்றிகரமாக நுழைந்தனர்.

1928ஆம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை யிலும், திருவானைக்காவலிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தோழர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுக் படுகாயமடைந்தனர்.

1929ஆம் ஆண்டு "ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடத் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்'' என்று ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் தேவஸ்தான கமிட்டித் தலைவராக இருந்த தந்தை பெரியார் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.

தீர்மானம் நிறைவேறிய அடுத்த நாளே ஈரோட்டில் இருந்து தந்தை பெரியார் கோவைக்கு வேலையாகச் சென்று விடுகிறார்.

தேவஸ்தான கமிட்டியின் தீர்மானத்தை அமுல்படுத்தத் துணிந்தார் குத்தூசி குருசாமி. தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மை யாரின் துணையோடு பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சை மேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர் களுக்கு திருநீறு பூசச் செய்து தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டோடு ஈரோட்டின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோட்டை ஈசுவரன் கோவிலுக்குள் நுழைந்து விட்டார்.

குத்தூசி குருசாமி தனது தோழர் களுடன் கோவிலுக்குள் நுழைந்ததும் பார்ப்பனர்கள் செய்தியை ஊருக்குள் பரப்பி பெரும் கூட்டத்தைக் கூட்டி தோழர்களை கோவிலுக்கு உள்ளேயே வைத்து வெளிக் கதவை இழுத்துப் பூட்டி விட்டனர்.

கோவைக்குச் சென்ற தந்தை பெரியார் இரண்டு நாட்கள் கழித்தே ஈரோட்டிற்கு வந்தார். அந்த இரண்டு நாட்களும் பூட்டிய கோவிலுக்கு உள்ளேயே தோழர்கள் இருந்தனர். அந்த இரண்டு நாளும் ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதே பேச்சுதான்.

பூட்டிய கோவிலுக்குள் இருந்த தோழர் களுக்கு இரண்டு நாளும் உணவை அனுப்பி அவர்களுக்குத் துணையாக நாகம்மையார் இருந்தார். இதைப் பற்றிக் கூறும்போது "அந்த இரண்டு நாட்களும் நாங்கள் அன்னை நாகம்மை யார் அளித்த உணவு உண்டு பசியாறினோம். ஆனால் கடவுளான ஈசுவரன்தான் பட்டினி கிடக்க நேரிட்டது'' என்று வழக்கம் போல கிண்டலாகக் குறிப்பிட்டார் குத்தூசி குருசாமி.

இதையட்டி தோழர்கள் மேல் போடப் பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்தக் காலக் கட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் பொதுக் கூட்டங்கள் எங்கு நடந் தாலும் பொதுக் கூட்டம் முடிந்து தோழர்கள் தங்கள் வீடு சென்று சேரும்வரை அவ்வூரின் கோவில்கள் பூட்டப்பட்டிருக்கும். சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தாழ்த்தப்பட்டோரைக் கோவிலுக்குள் அழைத்துக்கொண்டு வந்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே கோவில்கள் பூட்டப்பட்டன.

கழகத் தோழர்களின் போராட்டத்திற்கு சர்வ சக்தி வாய்ந்த கடவுளும், உலகமே தங்களுக்குக் கட்டுப்பட்டது என்கிற பார்ப்பனர்களும் அஞ்சி நடுங்கினர்.

பயபக்தியோடு கடவுளை வணங்கும் ஆத்திகனின் இழிவை கடவுள் மறுப்பு இயக்கத்தின் நாத்திகர்கள் தான் துடைத்துள்ளனர். ஆனாலும், எந்தத் தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாமல் கருவறைக்குள் தீண்டாமை வெளிப்படையாக தலைவிரித்தாடுகிறது. மத சம்பந்தமான விவகாரங் களில் தீண்டாமை கடைப்பிடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே இதற்குத் துணையாக இருக்கிறது. மத அனுஷ்டானத்தில் அரசு தலையிடாது என்ற காரணத்தைக் கூறி தப்பித்துக் கொள்கிறது.

மத சாஸ்திரத்தாலும் அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றத்தாலும் சாதி தீண்டாமை கோவில் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களைத் தேவடியாள் மகன் என்று இழிவு படுத்தி கருவறைக்கு வெளியில் நிறுத்தும் கொடுமை இன்றும் தொடர்கிறது. ஆகவே, சாதி ஒழிப்பை அரசியல் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் தேர்ந்தெடுத்த இடமான கோவில் கருவறை மிகமிகச் சரியானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.