பிறந்த நேரம், ஊர், சூரிய உதயம் இவற்றை வைத்துக் கணிக்கப்படுவதுதான் ஜாதகம். இதில் 27 நட்சத்திரங்களும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் முதல் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என்று நான்கு பாதங்களும் இருக்கின்றன. ஒரு வினாடி மாறினால்கூட ஜாதகம் மாறி விடும் என்கிறார்கள். ஒரு குழந்தை ஒரு நொடியில் பிறந்து விடாது. சுமார் 10 நிமிடங்களாவது ஆகும். இந்த 10 நிமிடத்தில் எந்த வினாடியை எடுத்துக் கொள்வது? தலை வரும்போதா? கழுத்து, மார்பு வரும் போதா? அல்லது மீதமுள்ள பகுதி வரும் நேரத்தையா?

ஒரு பிரபல ஜாதகம் பார்க்கும் சோதிடரிடம் கேட்டபோது தலை வரும் நேரம் என்று சொன்னார். தலை என்றால் உச்சந்தலையா? கழுத்துக்கு மேலுள்ள பாகம் முழுவதுமா? இதில் எந்தப் பகுதியும் ஒரு நொடியில் வந்து விடாதே!

சரி, உச்சந்தலை வரும் நேரம் என்றே வைத்துக் கொள்வோம், பிரசவம் பார்க்கும் டாக்டரின் கையில் கடிகாரம் இருக்கும். நர்ஸிடமும் மருத்துவமனை சுவரிலும் பிறந்த குழந்தை யின் உறவினர்களிடமும் உள்ள எல்லாக் கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டுமா? கண்டிப்பாக 4 கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்ட முடியாது. இதில் எந்தக் கடிகாரம் காட்டும் நேரத்தை எடுத்துக் கொள்வது? ஒரு வினாடி மாறினால் கூட எல்லாம் மாறிவிடுமாம்! பிறகு எதை வைத்துக் கணிக்கிறார்கள்?

மேலும் சிசேரியன், ஆபரேஷன் செய்து எடுக்கும் குழந்தைகளுக்கு எந்த நேரத்தைக் கொண்டு ஜாதகம் எழுதுவது? ஏமாறு பவர்கள் உள்ள வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இனி பிரபல சோதிடர்களைச் சோதித்துப் பார்த்து கண்ட உண்மைகள்... இதோ.

சென்னையில் ஒரு பிரபல சோதிடரைப் பற்றி என்னிடம் பலபேர் பெருமையாகச் சொன்னார்கள். அவரிடம் ஜாதகம் கொடுத் தால் மிகவும் துல்லியமாகச் சொல்லிவிடுவார். நீங்கள் ஜாதகம் சோதிடம் எல்லாம் பொய் என்கிறீர்கள்! ஒரு முறை அவரிடம் உங்கள் ஜாதகத் துடன் போய்ப் பாருங்கள் என்றனர். நானும் சோதிடரைப் பாராட்டிப் பேசிய

4 பேர்களுடன் என்னுடைய பையன் என்று ஒரு பொய்யான ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போனேன். முதலில் 300 ரூபாய் பணத்தை வைக்கச் சொன்னார்.

ஜோஸியர் இது யாருடைய ஜாதகம்? என்று கேட்டார். என்ன விஷயமாக ஜாதகம் பார்க்க வந்தீர்கள்? என்று கேட்டார். நான் அது என் பையன் ஜாதகம். அவன் வீட்டில் கோபித்துக் கொண்டு ஓடிப்போய் விட்டான் என்று கூறினேன். ஜோஸியர் ஒரு பேப்பரை எடுத்து அதில் கட்டங்கள் போட்டு சில கணக்கெல்லாம் போட்டு "உன் பையனுக்கு 24 வயதாகிறது. சனி திசை நடக்குது. அஷ்டமத்துச் சனி, ஏழரை ஆண்டுகளில் நாலரை ஆண்டுகள் முடிஞ்சு போச்சு. இன்னும் 3 வருஷம் கடுமை யாகச் சனி இருப்பான். மூன்றாண்டுகள் கழித்து மனைவி குழந்தைகளுடன் வந்து விடுவான். நீங்கள் கோபித்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போனால் வெளிநாட்டிற்குப் போய் நிறைய பணம் சம்பாதித்துத் திரும்பி வருவான்'' என்று சொன்னார்.

நான் அவரிடம் நன்றி சொல்லிவிட்டு தட்டில் வைத்த 300 ரூபாயை எடுத்துக் கொண்டு புறப் பட்டேன். அவர் ஏன் எனக்கு வைத்த பணத்தை எடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அப்போது தான் நான் உண்மையை சொன்னேன். எனக்குத் திருமணமே ஆகவில்லை. 22 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு வயதில் இறந்து போன எங்கள் அக்காள் மகனுடைய ஜாதகம் தான் இது என்று.

ஜோஸியர் அசடு வழியச் சொன்னார், "நான் அப்போதே நினைத்தேன் இது இறந்துபோன ஜாதகமாக இருக்கணுமே என்று அதைச் சொல்ல வேதனைப்பட்டு மறைத்து விட்டேன்'' என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தார். என்னுடன் வந்த நான்கு பேரும் நான் சொன்னதை நம்பாமல் என்னுடன் ஊருக்கு வந்து என் அக்காள் சொன்ன பிறகுதான் நம்பினார்கள்.

நீங்களும் அண்ணன் தங்கை ஜாதகத்தைக் கொடுத்து திருமணப் பொருத்தம் பார்க்கச் சொல்லுங்கள். ஏழு பொருத்தமும் சரியாக இருக்கிறது. திருமணம் செய்து வைத்தால் வளமாக வாழ்வார்கள் என்றுதான் சொல்லு வார். உண்மையான ஜோஸியரென்றால் இது அண்ணன் தங்கையுடைய ஜாதகம். திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் ஜோஸியர் எத்தனை பேர்? உங்களுக்குத் தெரிந்து சரியாகச் சொல்லும் சோதிடர் எங்காவது இருந்தால் சொல்லுங்கள், நாமெல்லாம் சேர்ந்தே போய் டெஸ்ட் பார்க்கலாமே?