இன்றைய தினம் அரசியலிலே இருக்கிற அயோக்கியர்கள், அரசியல் சட்டம் செய்த காலத்திலே, நம்மை யெல்லாம் தாசிமக்கள் என்று அதில் எழுதினார்கள். இதற்கு மேலே என்ன வேணும் - கடவுள் நம்பிக்கைக் காரர்கள் அயோக்கியப் பயல்கள் என்று சொல்லுதற்கு? சட்டம் எழுதி இருக்கிறார்கள் - தமிழ்நாட்டில் உள்ள மக்கள், நண்பர் வீரமணி சொன்னாற்போல, கிறித்தவன், முசுலீம், பார்சி தவிர மற்றவன் எல்லாம் இந்து. இந்துவிலே 100க்கு 23/4 பயல்களாய் இருக்கிற பார்ப்பான் தவிர பாக்கி 97 சில்லரைப் பேர் தேவடியாள் மக்கள் - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் (என்று) சட்டத்திலே எழுதி வைத்திருக் கிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம்; அவர்களைக் கண்டிக்காத காரணம். பார்ப்பானைக் கண்டால், "வாப்பா, தேவடியாள் மகனே! எப்போது வந்தாய்?'' என்று கேட்கணும். "ஏண்டா அப்படிக் கேட்கிறாய்?'' என்றால் "நீ எழுதி வைத்தாயடா, என்னைத் தேவடியாள் மகன் என்று! நான் நிஜமாகவே சொல்லுகிறேன், நீ தேவடியாள் மகன் என்று! (என்று கூறணும்) இதில் என்ன தப்பு?

நம் பெண்டுகளிடத்திலே போய்ச் சொல்லணும் - "அம்மா, விளக்குமாறு எடுத்துக் கொள், இந்த அரசியல் சட்டத்தை எடுத்துக்கொள், தெருவிலே வை; போடு சீவகட்டையாலே - அதைக் குத்திக் குத்தி'' என்று. ''ஏனம்மா, அரசியல் சட்டத்தை விளக்கு மாற்றாலே போடுகிறாய்?'' என்று கேட்டால் - "அதை எழுதின அயோக்கியப் பயல்கள், என்னைப் பார்ப்பானுக்குத் தேவடியாள் என்று எழுதி இருக்கிறான்; பின்னே என்ன, அதனைக் கொஞ்சட்டுமா?'' என்று கேட்கச் சொல்லுகிறேன்,

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், இந்த மாதிரியான - பதிலுக்குப் பதிலான முறையை நாம் எடுக்காததனாலே, நாதி இல்லை நம்மைப் பற்றிப் பேசுகிறதற்கு; கேள்வி இல்லை நம்மைப் பற்றிப் பேசுகிறதற்கு. நாளைக்குக் கூட நம் ஆள் சிரித்துக்கிட்டுப் போவான் - 'நேற்று வந்தான்; நாலு அடி அடித்தான்; நன்றாகப் பேசினான்' என்று அவ்வளவோடுதான் நின்று கொள் வான். பார்ப்பான் சொல்லுவான், 'நேற்று வந்தான் பார்த்தாயா, நாயக்கன், அவன் என்னென்ன சொன்னான்; நான், என்ன பண்ணு வேன்?' என்று கவலைப்படுவான்; பெண்டாட்டிக்கிட்டே சொல்லிக் கிட்டு அழுவான். நமக்கு மான ஈனம் ஒன்றும் இல்லை; நாம் சிரித்துக்கிட்டுப் போய்விடுவோம்.

ஏன் சொல்கிறேன் என்றால், பழக்கத்திலே நம்மை ஈனசாதி என்கிறான்; 'ஏனடா' என்றால், நீ கோயிலுக்குள்ளே வரவேண்டாம்; நீ வந்தால் சாமி தீட்டாய்ப் போய் விடும்' என்கிறான். என்ன அர்த்தம்? 'கல்லைத் தொட்டால் தீட்டாகி விடும்' என்றால், நம்மை எவ்வளவு கீழ்ச்சாதி என்கிறான்! சாஸ்திரத்திலே, தேவடியாள் மகன் என்கிறான்; பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்கிறான்; சூத்திரனுக்குப் பெண்டாட்டியே கிடையாது என்கிறான்; சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான். (இதை எல்லாம்) யார் கவனிக்கிறார்கள்? இன்னும் அதே மாதிரி பல ஆதாரங்கள்.

எத்தனை வருடமாக இது இருக் கிறது? 2,000 வருடமாக இருக்கிறது. மேலேயே சொல்லலாம்; நாசமாய்ப் போகட்டும். சுயராஜ்யம் என்கிறார் களே, இதிலே சட்டத்திலே இருக்கிறது - அரசியல் சட்டத்திலே இருக்கிறது, நம்மைத் தேவடியாள் மகன் என்கிறது. அப்புறம், நமக்கு என்னதான் கதி? நாம் எப்போதுதான் மனுஷராகிறது? நாடு நம் நாடு; பார்ப்பான் எல்லாம் பிழைக்க வந்தவன் இங்கே! இந்த இழிவிலே இருக்கிற இவ்வளவு பெரிய சமுதாயம், இந்த 1973இலே, சட்டப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - அனுபவத்திலே ஈனசாதி, நாலாஞ்சாதி, தீண்டாத சாதி என்று இருந்தால் - யார்தான் இதற்குப் பரிகாரம் (தேடுவது)? வேறே நாட்டான் நம்மைப் பற்றி என்ன சொல்லுவான் - நம் சங்கதியைச் சொன்னால்?

நண்பர்கள் சொன்னார்களே, அதுபோல, 50 வருடமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும், எதிரிலே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான்; வீட்டிலே எல்லாம் பேசுவான் - 'இந்தச் சூத்திரப் பயல்கள்' என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும்.

ஏதோ சட்டம், சமத்துவம், கடவுள் என்று சொன்னால் ஏதோ அதை உதைக்கிறோம்; கடவுளை நாளைக்குச் செருப்பாலே அடிக்கச் சொல்கிறோம், பலதடவை நன்றாக அடித்தாயிற்று, நாளைக்கும் அடிக்கச் சொல் கிறோம், நம் தாய்மார்களையும் விளக்குமாற்றாலே போடச் சொல்கிறோம். சட்டத்திலே இருக் கிறதை என்ன பண்ணுறது? ஏதோ நாங்கள் கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம்; இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கிறான். நாளைக்குக் காங்கிரசுக்காரன் வந்து விட்டான் என்றால்? நாளை மறுநாள், பார்ப்பான் வந்து விட்டான் என்றால்? இல்லை, இந்த கம்யூனிஸ்டே வந்து விட்டான் என்றால் - அவன் காசுக்கு என்றால் என்ன வேணுமானாலும் பண்ணுவானே - அவனல்லவா சத்தம் போடணும் எனக்குப் பதிலாக? எங்களைத் தவிர, நாதி இல்லையே இந்த நாட்டிலே! எத்தனை நாளைக்கு, நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்?

எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு இங்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போ, எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக - மறைவாகப் பேசுகிற பேச்சை, நாளைக்கு வெளிப்படையாகப் பேசுவான்; பேசுகிறவனைப் பார்ப் பான் மாலைபோட்டு வரவேற்கிறான், அவனுக்கு விளம்பரம் கொடுக் கிறான். எனவே, தோழர்களே! நம் முடைய நிலைமை உலகத்திலேயே பெரிய மானக்கேடான நிலைமை; இரண்டாயிரம் வருடமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட, இந்தச் சட்டத்திலே இருக்கிறதே - 'இந்து லா'விலேயும், மற்ற அரசியல் சட்டத்திலேயும் - அது பெரிய முட்டாள்தனம். அதைவிட, இதைச் சொல்லி மாற்றச் செய்யாமல் இந்த ஆட்சியிலேயே நாம் குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா மானங்கெட்டத்தனம். பொறுக்கித் தின்கிறவனுக்கு இந்த ஆட்சி வேணும் - வேண்டாம் என்று சொல்லவில்லை. மானத்தோடு பிழைக்கிறவனுக்கு இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆகணும்! 'என்னடா? என்றால், 'உன்னாட்டம் நான், என்னாட்டம் நீ; என்னை நீ தேவடியாள் மகன் என்று சொல்கிறாய்; இதை மாற்று கிறாயா? (அல்லது) மூட்டை கட்டுகிறாயா? என்று கேட்டுத் தானே ஆகணும். இல்லாவிட்டால், விதி? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறது? இப்படியே இருப்போம் என்றுதான், என்ன நிச்சயம்? நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றி விடுகிறான் - மாற்றினானே!

நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், 'கல்தான்; யார் வேண்டுமானாலும் பூசை பண்ணலாம்; ஆனால் முறைப்படி செய்யணும்' என்று யாவருக்குமே அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட் - சுப்ரீம் கோர்ட் என்றால் பார்ப்பான் கோர்ட் என்று பேர், சிரிக்காதீர்கள், அதிலே தமிழனுக்கு இடமே இல்லை; (அப்படிப்) போனாலும் அவனுடைய அடிமைதான் போவான்; அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புப் பண்ணுவான். சொல்லிப் போட்டானே - 'கோயிலுக்குள்ளே போகிறது தப்பு - சாஸ்திர விரோதம்' என்று! அட முட்டாள்களா! சாஸ்திரம் என்றால் எது? எப்போது எழுதினது? எவன் எழுதினான்? எவனாவது சொல்லட்டும்! 'ஆகமத்தின்படி' என்று எழுதினான், ஒரு அய்க்கோர்ட் ஜட்ஜ் - ஒருவனோ, இரண்டு மூன்று பேரோ அவர்கள், பார்ப்பான் ஆதிக்கம் உள்ளது, பார்ப்பனத்தியாலே நியமிக்கப் பட்டவர்கள். என்றைக்கு எழுதினான், ஆகமம்? ஒரு அக்கிரமம், ஒரு அயோக்கியத்தனம் இதற்கு மேலே உலகத்திலே உண்டா? என்றைக்கோ, எவனோ பேர்தெரியாத அனாம தேயம் - எவனாலேயும் சொல்ல முடியாது. ஆகமத்தை எழுதினவன் எவனடா என்றால், அவன் சொல்லு வான், 'வசிஷ்டன் எழுதினான், நாரதன் எழுதினான், யக்ஞவல்கியர் எழுதினான், மனு எழுதினான், வெங்காயம் எழுதினான்' என்று. இந்தப் பயல்களுக்கு வயது என்ன?

கவனிக்கணும் தோழர்களே! நாரதன் 5 கோடி வருடத்துக்கு முன்னே பிடித்து இருக்கிறான்.

5 கோடி வருடம் - ஒவ்வொரு கற்பத்திலேயும்! ஒரு கற்பம் என்றால் 3 கோடி, 4 கோடி, 5 கோடி வயதாம். அப்படி

10 கற்பம் - அப்போதெல்லாம் இருக்கிறான் நாரதன்! அப்படி என்று ஒருவன் இருந்தானா? இருக்க முடியுமா? அதை வைத்துத் தீர்ப்புப் பண்ணுகிறானே, கோர்ட்டிலே, அதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் எத்தனை அயோக்கியர்கள்; ஆளப்படுகிற வர்கள் எத்தனை மானங்கெட்ட பதர்கள்' (என்பது தானே)? இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இதை எல்லாம்விட அக்கிரமம், அய்யா வீரமணி இப்போது சொன்னாரே, 'இந்து' என்கிறானே, அது.

யார் இந்து? 'இந்து' என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு, 'இந்து' வந்தான்? நம்முடைய தமிழர்க்கு இலக்கியம் என்னென்னவோ இருக்கிறதே; எவ்வளவோ இலக் கியம் இருக்கிறது, பார்ப்பானுடைய இலக்கியங்களே ஏராளமாக இருக் கின்றன - இராமாயணம், பாரதம், விஷ்ணுபுராணம், கந்தபுராணம், அந்த புராணம், இந்த புராணம் என்று. நம் புலவர்களுக்கும் ஏராள மாய் இருக்கிறது - பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது, இது என்று. எதிலேயாவது 'இந்து' என்கிற வார்த்தை இருக்கிறதா? நம் நாட்டிலே எந்தப் புத்தகத்திலே யாவது உண்டா? 'இந்து' என்கிறவன் எப்படி வந்தான் என்கிறதற்கு அவன் சொல்லுகிற கதையே அசிங்கமாய் இருக்கிறதே - சிந்து நதியின் காரணமாக 'இந்து' ஆகி - 'இந்து' என அழைக்கப்பட்டான் என்று.

சிந்து நதிக்கும் நமக்கும் எப்போது சம்பந்தம்? ஆரியன் வந்தபோது தானே, சிந்துநதி என்கிறது. அதை, இந்தநாட்டுப் பழங்குடி மக்களுக்கு, 'இந்து' என்று பேர் என்றால், சொல்லிவிட்டு மரியாதையாக வாவது போகலையே! 'இந்து என்றால் இரண்டு சாதி; அதிலே ஒருவன் பார்ப்பான், ஒருவன் சூத்திரன்; பார்ப்பான் எல்லாம் மேல்சாதி, சூத்திரன் என்றால் கீழ்ச்சாதி; சூத்திரன் பெண்டாட்டி என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே - சாஸ்திரத்திலே - பழக்கத்திலே' என்று சொன்னால், கத்தியை எடுத்துக் கொள்கிறான் - இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்கிறான் - ஒரு பயலுக்கும் மானம் இல்லை என்றால்?

மானம் இருந்தால் இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இருக்க முடியுமா? ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரிலே வருவானா? 'என்னடா அர்த்தம், இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறது; ஏ அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்? நீ பிராமணன், நான் சூத்திரன் என்று அர்த்தம்; அப்படி என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு உன்னைச் செருப்பாலே' - அப்படி என்று ஆத்திரமல்லவா வரும் - நமக்கு மானம் இருந்தால்? இன்னொருவன்? சொன்னால்?

நாதி இல்லையே; சொல்கிறதற்கு ஆள் இல்லையே; சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக் கிறானே - ஓட்டு வாங்குகிறதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே! முன்னேற்றக் கழகத்துக் காரன் மற்றவனை எல்லாம் - என்னை எல்லாம் வைவான் 'இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு; இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்?' என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது; அவன் பெண்டாட்டி, பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், வழக்கத்திலேயே வந்து விடும் - பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து ஓட்டு வாங்குகிறார்போல, ஏனென் றால் அந்த உத்தியோகமும், அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போய்விட்டன.

(தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை)