தந்தை பெரியார் 1957ஆம் ஆண்டு சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தபோது அதில் கலந்துகொண்டு சட்டம் எரித்து 6 மாதம் சிறை சென்ற கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திருமூர்த்தி அவர்கள் தனது 96 வயதில் 03-12-12 திங்கள் காலை 4.30 மணிக்கு மரணமடைந் தார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்த ஆனைமலை நரசிம்மன் அவர்களோடு உற்ற துணைவராகச் செயல்பட்ட திருமூர்த்தி அவர்கள் பெரியார் அறிவித்த பல்வேறு போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவராவார். கழகத்தின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் தஞ்சையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டிலும் மறைந்த ஆனைமலை திருமூர்த்தி அவர்களுக்குச் சிறப்புச் செய்யப் பட்டது. தனது இறுதி நாட்கள் வரை தந்தை பெரியாரின் கொள்கை வழி நடந்தவர் ஆனைமலை திருமூர்த்தி அவர்கள். அவருடைய மறைவுக்கு கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

சென்னை ராயப்பேட்டை கழகத்தின் சார்பில் 25.11.2012 அன்று இரவு 12 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட தோழர்களும் பொதுமக்களும் இணைந்து பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் உணவு வழங்கி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வை. இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பாளர் எ. கேசவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் குமரன், மாவட்டச் செயலாளர் டிங்கர் குமரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி. ஜனார்த்தனன், காஞ்சி மாவட்டத் தலைவர் பரந்தாமன் ஆகியோருடன் ராயப்பேட்டைப் பகுதி கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் 26.11.2012 அன்று காலை 10 மணியளவில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப் பட்டது.

போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியைக் கண்டு இனிப்பு பெற்றுச் சென்றனர்.

கழக மாவட்டச் செயலாளர் குமரகுருபரன், ஜெயகுமார், பாண்டியன், கு. மாது உட்பட பல கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். 

எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள் நிகழ்வு

தமிழீழ போரில் வீர மரணம் அடைந்த போராளிகள் நினைவாக மாவீரர் நாள் நிகழ்ச்சி நவம்பர் 27 அன்று கோவை காந்திபுரம் கழக அலுவலகமான தந்தை பெரியார் படிப்பகத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவீரர் களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எரிவாயு மூலம் மாவீரர் நாள் ஜோதி எரிக்கப்பட்டது. நிகழ் விற்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமை வகித்தார். கழகத் தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத் தோழர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். கழகச் செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, கோவை தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, பொருளாளர் அகில் குமரவேல், கோவை வடக்கு மாவட்டத் தலைவர் து.இராமசாமி, அமைப்பாளர் ம.சண்முகசுந்தரம், கோவை மாநகரத் தலைவர் வே. கோபால், செயலாளர் இ.மு.சாஜித், பொருளாளர் இரா.இரஞ்சித் பிரபு, துணைத் தலைவர் ந. தண்டபானி, அலுவலகப் பொறுப்பாளர் சா. கதிரவன், வழக்கறிஞர்கள் ப. ஜீவா, மதுசூதனன், டென்னிஸ், பிரகாசு, கோவை மாநகர நிர்வாகிகள் சிங்கை மனோகரன், அர.இராசன், தி.க.சம்பத், கணபதி கிருட்டிண மூர்த்தி, தம்பு, லலிதா, பிரவீன், செல்வம், தங்கதுரை, ஜீவா, பு.வே.ரா, இரகுநாத், பெரியார் மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் சீனிவாசன், மணிகண்டன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்கள், தமிழீ, பாண்டியராசன், கவிஞர் இரகுபதி மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்கள். முடிவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சுசி.கலையரசன், வழக்கறிஞர் சி. முருகேசன் உரைக்குப் பின்னர் கழகப் பொதுச் செயலாளர் மாவீரர்களை நினைவு கூர்ந்து பேசினார். ஏராளமான பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டை மேட்டில் மாவீரர் நாள் நிகழ்வு 27.11.2012 அன்று மாலை 6 மணிக்கு நடந்தது. கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன், மாநிலத் தலைவர் வீர. மோகன் மற்றும் 200க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மாவீரர்களின் தியாகங்களை விளக்கிக் கூறினர். சுரேசு, தீனா, பெருமாள், இளங்கோ மற்றும் கிராமப்புற மக்கள் கூட்டமைப்பு சந்திரசேகர் ஆகியோரும் உரையாற்றினர். அரியாங்குப்பம் மாதா கோவிலுக்கு அருகிலிருந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி பெரியார் சிலை வரை சென்று மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்ட பெரியார் மாணவர் கழகத்தின் சார்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி 27.11.2012 அன்று திருச்செங்கோடு பெரியார் சிலை அருகே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர் கழக அமைப்பாளர் தாமரைக் கண்ணன் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் பூபதி, கார்த்தி, சந்துரு, சுப்பு, சுகன், சிலம்பு, மாணிக்கம் உள்ளிட்ட கழகத் தோழர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் 134ஆவது பிறந்தநாள் விழா கோவை காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் 14.10.2012 ஞாயிறன்று குருதிக் கொடை முகாமுடன் தொடங்கியது. அலுவலகப் பொறுப்பாளர் சா. கதிரவன் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் குருதிக் கொடை முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கழகப் பொதுச் செயலாளரின் ஓயாத உழைப்பையும், கழகத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை யும் பாராட்டிப் பேசினார். கடந்த 10 மாதத்தில் பெரியார் படிப்பகத்தில் 160 திருமணங்கள் நடந்துள்ளன. ஒரு திருமண மண்டபத்தில்கூட இவ்வளவு திருமணங்கள் நடந்ததில்லை என்று வியந்து பேசினார். விழாவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே. சிவஞானம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசி.கலையரசன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் ரவிக்குமார், கழக செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, கவிஞர் குடியாத்தம் குமணன், கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம. சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். தமிழரசன் நன்றி கூறினார். மதியம் வரை நடந்த குருதிக் கொடை முகாமில் 75 தோழர்கள் குருதிக் கொடையளித்தார்கள். கோவை அரசு மருத்துவ மனை குருதி வங்கி மருத்துவக் குழுவினர் குருதிகளை சேகரித்துச் சென்றார்கள். பின்னர் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

கழகத்தின் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக குருதிக் கொடை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதும், கோவையிலுள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் குருதிக் கொடையளிப்பதில் கழகம் முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கவை. விழாவில் கோவை மாநகரத் தலைவர் வே. கோபால், மாநகரச் செயலாளர் இ.மு.சாஜித், பொருளாளர் இரஞ்சித்பிரபு, தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, வடக்கு மாவட்டத் தலைவர் து. இராமசாமி, பொருளாளர் அகில் குமரவேல், தோழர்கள் வழக்கறிஞர் ப.ஜீவா, லலிதா, மனோன்மணி, உமா, பரமேசுவரி, சசி, சிங்கை மனோகரன், தி.க. சம்பத், டென்னிசு, குமணன், வழக்கறிஞர் பாலச்சந்தர், அர. இராசன், தம்பு, பிரவீன், மணிகண்டன், பிரபாகரன், பிரகாசு, விஜி, ஜீவா, பத்ரன், ஞானவேல், பல்லடம் திருமூர்த்தி, ராமசாமி, தண்டபாணி மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். 

சேலத்தில் கருவறை நுழைவுப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்

சேலம் நகர கழகத்தின் சார்பாக 14.10.2012 ஞாயிறன்று மாலை 7 மணிக்கு ஜாகீர் அம்மாபாளையம் மெயின் ரோடு, தரும நகர் ஜங்ஷனில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவும் கருவறை நுழைவுப் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டமும் பெரும் மக்கள் திரளோடு நடத்தப்பட்டது. சேலம் மாவட்டக் கழக அமைப்பாளர் தங்கராசு தலைமையில் இளங்கோ முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மேற்கு மண்டல அமைப்பாளர் கா.சு. நாகராசு, செயற் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, வழக்கறிஞர் இளங்கோவன் உரையாற்றினார்கள். கழகப் பிரச்சாரச் செயலாளர் சிற்பி இராசன் நடத்திய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி பொது மக்களைப் பெரிதும் ஈர்த்தது. பொதுக் கூட்டத் திடல் முழுவதும் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்திடையே கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், கழகத் துணைத் தலைவர் வழக்கறிஞர் துரைசாமி, கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் வீரமணி நன்றி கூறினார்.

மிகச் சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெரும் மக்கள் கூட்டத்தைத் திரட்டும் வகையில் விளம்பரமும் செய்து எழுச்சியான நிகழ்ச்சி ஒன்றை கழகத் தோழர்கள் தங்கராசு, இளங்கோ, வீரமணி ஆகியோர் செய்திருந்தனர்.