தயாராகுங்கள் தோழர்களே!

டிசம்பர் 24ஆம் தேதி சென்னை கபாலீசுவரர் கோவில் 'கருவறை நுழைவுப் போராட்டத்தைக்' கழகம் அறிவித்தது முதல் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் குறித்து சுவர்களில் விளம்பரம் செய்துவருகிறார்கள். சென்னையில் கழகத் தோழர்களுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரும் ஓவியருமான தோழர் பரந்தாமன் அவர்கள் கருத்துப் படங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமாக சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளார். இது பார்ப்பனர்களை கதிகலங்கச் செய்துள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கருவறை நுழைவுப் போராட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று பேசியுள்ளார். இது 27-11-2012 தினத்தந்தி நாளிதழில் மூன்று கால தலைப்புச் செய்தியாக வந்துள்ளது. தோழர்களின் உழைப்பு வீண் போகவில்லை, செய்தி எட்ட வேண்டிய இடத்துக்கு எட்டி விட்டது.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் பார்ப்பான் பின்புத்திக்காரன் என்று, இது எக்காலத்துக்கும் பொருந்தும். 1973ஆம் ஆண்டு அய்யா அவர்கள் அறிவித்த இன இழிவு ஒழிப்பு மாநாட்டிற்குப் போதுமான விளம்பரம் இல்லாமல் இருந்தது. தோழர்கள் அய்யா அவர்களிடம் சென்று மாநாட்டிற்கு விளம்பரம் இல்லை. இன்னும் கொஞ்சம் சுவரொட்டி அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அய்யா பொறுங்கள் பொறுங்கள் பார்ப்பனர்கள் நமக்கு விளம்பரம் கொடுப்பார்கள் என்றார். அய்யா சொன்னது போல மாநாடு நடக்க ஒரு வாரம் இருந்த நிலையில் மாநாட்டைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் பெரியாருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று பார்ப்பனர்கள் அறிவித்தார்கள். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பத்திரிகை களிலும் வெளிவந்தது. பெரியாருக்கு கருப்பு கொடியா? என்று அனைத்து கழகத் தோழர் களும் குடும்பம் குடும்பமாக சென்னைக்கு வந்துவிட்டார்கள். கோவில் கருவறையே பார்ப்பனர்களின் சாதி நிலைகொண்டுள்ள இடம் என்பதாலும் சாதி ஒழிக்கப்பட்டது என்று அரசியல் சட்டம் திருத்தப்பட்டால் மொத்த ஆதிக்கமும் தகர்ந்துபோய்விடும் என்பதாலும் இப்போது இராம.கோபாலன் துடிக்கிறார்.

தருமபுரியில் நூற்றுக்கணக்கான ஒடுக்கப் பட்ட மக்கள் (இவர்களும் இந்துக்கள்தான்) ஆதிக்கச் சாதியினரால் (வன்னியர்களால்) கொடூரமாகத் தாக்கப்பட்டபோது பேசாத இந்த இராமகோபாலன், கருவறையை மட்டும் காக்கத் துடிக்கிறார். தருமபுரியில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர்களின் வீடு களின் முகப்புச் சுவர்களில் இந்துக் கடவுள் களின் படங்களைத்தான் பதித்து வைத்திருக் கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் (வன்னியர்கள்) கடவுள் படங்களையும் சேர்த்தே கொளுத்தி யிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இந்துக்களுக் காகவும் பேசவில்லை, இந்து கடவுள்களின் படங்கள், சிலைகள் கொளுத்தப்பட்டதற்காக வும் பேசவில்லை, இதனைக் கண்டிக்காத இராமகோபால அய்யர் பார்ப்பனர்களின் கருவறையை காக்கப் போகிறாராம்...

தர்ப்பைப் புல் ஏந்திய பார்ப்பனர் கூட்டம் பெரியாரின் கருஞ்சிறுத்தைகளைத் தடுக்குமாம். கருஞ்சட்டைப் படையே களம் காண திரண்டு வா டிசம்பர் 24 சென்னைக்கு.

இத... இத... இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்!

கழகத்தின் போராட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு இந்து மகா சபா மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சியும் தமிழ்நாடு இந்து மகா சபாவும் அனைத்து இந்துக்களையும் கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று கருவறைக்கு வெளியே நின்று பூஜை செய்யாமல், கருவறைக்கு உள்ளே சென்று பூஜை செய்யுங்கள். அந்த உரிமைக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.

கடவுள் இல்லை என்று சொல்கிற எங்களை விட கடவுள் உண்டு என்று சொல்கிற நீங்களே கருவறைக்குள் நுழையுங்கள். நாங்கள் அதை வரவேற்போம். அதுதான் எங்கள் போராட்டத்திற் கான வெற்றி.