nature blackகற்க கசடறக் கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக

இது வள்ளுவனின் குறளில் அனைவரின் வாழ்வோடும் தொடர்புடைய ஒரு குறளாகும். நம்முடைய வாழ்க்கை பல்வேறு புறத்தூண்டல்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. உண்மையில் நாம் கற்ற கல்வியும் அனுபவமும் நம்முடைய வளர்ச்சியை இன்னும் நெட்டித் தள்ளுகிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத வாதமும் ஆகும். இந்த உலகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக நன்மையும் தீமையும் கலந்தே பயணிக்கின்றன என்றால் அது மிகையாகாது. நம்முடைய வளர்ச்சி எல்லாம் நன்மையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். இன்னமும் நம்முடைய எண்ணத்தில்  எதிர்மறையான விஷயங்கள் எல்லாம் எளிதாக பதிந்துவிடுகிறது. நேர்மறைகள் அத்தனை எளிதாக பதிவதும் இல்லை.

பூக்கள் மலர்வது யாருக்கும் தெரிவதில்லை  

வெடிகுண்டுகள் சத்தமே எல்லோருக்கும் கேட்கும்

எங்கோ எப்போதோ படித்த வரிகள். இதுவே நடைமுறையில் உண்மையும் கூட. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் எல்லாம் நமக்கும் நம்மைத் தொடர்பவர்களுக்கும் வழிகாட்டுவதாக அமைகிறது. உண்மையில் நம்முள் இருக்கும் நல்ல மனமே நம்மை சிறந்த முறையில் வழிநடத்தும். ஆக்கம் எப்போதும் அமைதியாகவே நிகழும். அது மலர்வதைப்போல அத்தனை எளிதாக யாருக்கும் தெரியாது. நிச்சயமாக நம்முடைய எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் அதிர்வை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும். அனைவருக்கும். அந்த பாதிப்பு கேட்கும்.

சமீபத்தில் சென்னை மவுலிவாக்கத்தில் இடிக்கப்பட்ட அந்த அடுக்கு மாடிக் கட்டடம். 3 விநாடிகளில் தரைமட்டமாகியது. அதே கட்டடம் இரவுபகலாக வேலை பார்த்தாலும் 3 மாதங்கள் பிடிக்கும். நம்முடைய தமிழ் மரபில் பெண்ணிற்குரிய நான்கு குணங்களாக கூறுவனவற்றில் நான்காவதாக கூறப்படுவது பயிர்ப்பு என்பதாகும். நான்கும் அடிமைத்தனத்தின் எச்சமே என்று பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துவிடாதீர்கள். நான் அதை நியாயப்படுத்த வரவில்லை. உண்மையில் பயிர்ப்பு என்றால் பயிரை வளர்க்கும் முறைகள் போலவே பெண்ணின் வளர்ப்பிற்கும் சில முறைகள் இருப்பதாக சொல்வார்கள். உண்மையில் உங்கள் மனதிலே இப்போது வரை பதிந்து இருப்பது இதுவரை உங்கள் மனதில் பதிந்த எண்ணங்களின் தொகுப்பே என்றால் அது மிகையாகாது

அரிச்சந்திரா நாடகம் பார்த்த நாள்முதல் மகாத்மா காந்தி வாய்மைக்கு மாறியதும், ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டபின் தன்னை ஷெல்லிதாசன் என்று பாரதி தன்னை அறிவித்துக் கொண்டதும் இங்கே உருவாக்கம் பெற்ற நடப்பு உண்மைகளே ஆகும். எதைப்பார்த்து கற்றுக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே நம்முடைய தரம் உயரும்

சில நல்ல மனிதர்கள்

நம்மையும் மீறி

நம்முள் ஊடுருவி விடுகிறார்கள்

- சதா பாரதி

ஒவ்வொரு முறையும் நாம் படித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள், கேள்விப்பட்ட செய்திகள் ஏதாவது ஒரு வகையிலே நம்முடைய மனதிலே ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. அவை நம்மையும் அறியாமல் நம்முடைய செயல்களிலும் ஊடுருவி விடுகின்றன. நிச்சயமாக அது நல்லவகையில் பாதித்தால் இந்த சமூகம் மிகச் சிறந்த மனிதர்களைச் சந்திக்கும். இல்லையெனில் நமக்குள் பிறக்கும் தீய எண்ணங்கள் நம்மை மட்டுமின்றி நம்மைச் சூழ்ந்த அனைவரையும் பாதித்துவிடும்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி. ஓவ்வொரு சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் நான் காலைல இருந்து விரதம் இருப்பேன். நமக்காக பட்டினியோடு போராடி இதை வாங்கிக் கொடுத்திருகாக. இதுல என்ன தப்பு?”

என் நெற்றிப் பொட்டில் அறைந்ததைப் போன்ற ஒரு நிகழ்வு கடந்த குடியரசு தினம் அன்று கிடைத்தது. தினமலரில் என்னுடைய கட்டுரை ஒன்று அன்று வெளியாகியிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து வந்த அழைப்பு. மதுரை பேருந்து நிலையத்தில் பூ கட்டி வியாபாரம் செய்து வரும் பாட்டிதான் அழைத்து மேலே சொன்னதை என்னிடம் சொல்லி வாழ்த்தியது. இன்னொரு அதிசயதக்க உண்மை என்ன என்றால் அந்த பாட்டிக்கு படிக்க தெரியாது போல. ஓவ்வொரு நாளும் தன்னுடைய பேரன் வந்தவுடன் இதுபோன்ற கட்டுரைகளோ செய்திகளோ வந்தால் வாசிக்கச் சொல்லி கேட்பாராம். எனது அலைபேசி எண் வாங்கி பேசி வாழ்த்திவிட்டு இந்த தகவலையும் சொன்னபோது உண்மையிலே நெகிழ்ந்தே போனேன். அந்த பாட்டியிடம் நன்றி தெரிவித்துவிட்டு, பேரனிடம் பேசி பாட்டிக்கு என் சார்பாக ஒரு முத்தமும் வழங்கச் சொன்னேன். அந்த பாட்டியின் தந்தை ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவராம்.

உண்மையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைத்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது. தன்னுடைய உணர்வுகளை எவ்வித சூழலாக இருந்தாலும் சமரசம் இன்றி வெளிப்படுத்துவது என்பது எல்லோராலும் அத்தனை எளிதாக முடியாது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தான் பெற்ற அனுபவத்தையும் தனது வறுமையையும் தாண்டி தேசத்தை நேசிக்கும் அந்த பாட்டியைப் போல ஏராளமானவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே நாம் அறிந்த உண்மையாகும். நம்மில் பலருக்கும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சூழலையும் கூட இருப்பவர்களின் நேர்மையற்ற செயலையும் காரணம்காட்டி அவற்றை தவிர்த்து விடுகிறோம். நாம் பெற்ற கல்வியும் அனுபவமும் நமக்கு மட்டுமல்ல நமக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கும் வழிகாட்டும் என்பதை மனதிலே ஏற்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இந்த சமூகத்தின் மீது ஏராளமான குறைகளையும், கோபத்தையும் வைக்கிறோம். ஆனால் உண்மையிலே அதே சமுதாயத்தில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம்

“நீயெல்லாம் படிச்சவன்தானே?”

இந்தக் கேள்வியை நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்திலே எதிர்கொண்டிருப்போம். அந்த நிமிடம் நாம் படித்த படிப்புகள் எல்லாம் நம் கண்முன் வந்து அசிங்கமாக திட்டுவதைப் போல இருக்கும். காரணம் படித்தவனிடம் இந்த சமூகம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத நிலையிலோ அதை ஒரு பொதுவெளியில் கடைபிடிக்காத நிலையிலோ இந்த கேள்வியை நாம் எதிர்கொண்டிருப்போம். இந்த கல்வி நமக்கு நிறைய அறிவினை கொடுப்பதாக ஒப்புக் கொண்டாலும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளதா என்று கேள்வி கேட்டால் நிச்சயமாக இல்லை என்ற பதிலே பெரும்பான்மை வரும். காரணம் நாம் நடந்து கொள்ளும் முறை. பள்ளி, கல்லூரி, வீடு ஆகியவற்றில் அவர்களுக்கு சொல்லித்தரக்கூடிய கல்வியானது வெறும் தேர்வுக்கான ஒன்றாகவே மாறியிருக்கிறது.

உடற்கல்வி வகுப்பு, யோகாசன வகுப்பு, ஓவிய வகுப்பு, வாய்ப்பாடு வகுப்பு என்பதையெல்லாம் வாழ்க்கைக் கல்வி என்று சொல்வார்கள். ஆனால் இந்த பாடவேளைகள் பெரும்பாலான கல்வி நிலையங்களில் இருக்கும். ஆனாலும் அந்த பாடவேளைகளிலும் வேறு பாடங்களை எடுத்து எப்படியாவது அவர்களை மாநிலத்தில் முதல் மாணவனாக மாற்றும் குரளி வித்தைகளை பல நிறுவனங்கள் கல்வி என்ற போர்வையில் நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களும் மனப்பாடம் செய்து மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று கொண்டாடப்படுகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் மறக்கப்படுகிறார்கள். ஏன் சில நாட்களிலே மறக்கவும் படுகிறார்கள். இதைவிட பெரிய அதிர்ச்சி அதே மாணவர்கள் (மனப்பாடம் மட்டுமே செய்து படித்தவர்கள்) தற்கொலை என்ற ஒரு கேவலமான நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்தால் கல்வி என்பது வாழ்க்கையைக் கற்றுத்தர வில்லை. வாழ்க்கை கல்வியும் கற்றுத் தரவில்லை. நிச்சயமாக ஏதோ ஒரு வெறுப்பையும் மனபாரத்தையும் இந்த குழந்தைகள் மேலே ஏற்படுத்திவிடுகிறோம்.

தெனாலிராமன், பரமார்த்த குரு, மரியாதைராமன் போன்ற கதைகளையும் அம்புலி மாமாவையும் இன்றைய குந்தைகளுக்கும் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உண்மையாக நம்முடைய குழந்தைகள் வருங்காலத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக வேண்டும் என்றால் அதற்கான விதைகள் அவர்களுக்கு இளமையிலே ஊட்டப்பட வேண்டும். தாத்தா, பாட்டிகளின் மடியிலே படுத்துக்கொண்டு கதை கேட்டுக்கொண்டே உறங்கிப்போகும் சுகங்களை எந்த பெரிய பணமோ வசதிகளோ தந்துவிடுவதில்லை. நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் வரும். நம்மைச் சுற்றி இருப்பவர்களோ நம்முடைய குழந்தைகளோ நமது பாதிப்பு இல்லாமல் நிச்சயமாக இயங்க முடியாது அந்த பாதிப்பு அவர்களுக்கு நன்மை வழங்குவதாக இருத்தல் அவசியமாகிறது

பாதகம் செய்பவரைக்கண்டால் - நீ

பயங்கொள்ள லாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா

இந்த வரிகள் பாரதி பாப்பாக்களுக்கு மட்டும் பாடி விடவில்லை. இந்த சமூகத்தை பொறுப்போடு நேசிக்கும் ஒவ்வொருவருக்குமான வார்த்தைகள் இவை. குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். அல்லது குழந்தைகளாக இருக்கும்போது சொல்ல வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாகவும் இருந்தது. தனது குழந்தையான சாகுந்தலாவுக்கு அறிவுரையாக அவன் சொன்னது இன்று உலக குழந்தைகள் அனைத்திற்குமான பாடலாக உள்ளங்கள் தோறும் நம்முடைய இல்லங்கள் தோறும் பாடப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயமாக இது மனப்பாட பாடலாகவே இன்றுவரை, தேர்வுக்காக படிக்கும் பாடலாகவே நின்றுவிட்டது என்பதே வருத்தமான ஒன்று. ஆனால் நிச்சயமாக நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சில நல்லவற்றை கடத்தும்போது அது செயல்களாக மாற வேண்டும். ஆயிரம் அறிவுரைகளை விட மேலானது ஒரு செயல் என்பதே எனது வாதமாகும்

அறம் செய விரும்பு

ஓளைவையின் அறமொழி. உண்மையிலேயே உலக இலக்கியங்களிலே தலைசிறந்த பல அற இலக்கியங்கள் நிரம்பியது நமது தமிழ் இலக்கியமே ஆகும். ஒவ்வொரு இலக்கியமும் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதாகவே இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் இன்றளவும் அதனுடைய சுவையும், வளமும் குன்றாமல் போற்றப்படுகிறது என்றால் அது காலம் தாண்டிய கருத்துக்களை நம்மிடையே விதைத்துள்ளது என்பதே நாம் அனைவரும் அறிய வேண்டியதாகும். இருப்பது வேறு வாழ்வது வேறு என்பதை உணர்ந்து கொண்டு வாழ்பவனால்தான் இந்த உலகத்தில் நிலையான மகிழ்ச்சியைப் பெற முடியும். உலகம் முழுவதும் காட்டுமிராண்டிகளாக திரிந்த போதே நாம் இங்கே அரசியலை நடத்திக் கொணடிருந்தோம் என்பதை ஆய்வுகளும் சொல்லி வருகின்றன.

வெறும் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை. அது வேண்டுமானால் அப்போதைக்கு நம்முடைய மனதிற்கு இதமாக இருக்கலாம். ஆனால் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாத எந்த உயிரும் இங்கே நிலைத்திருப்பதில்லை. நமது இலக்கியங்களும் நாம் சந்திக்கும் அனுபவங்களும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்து கொண்டிருக்கின்றன என்பதே உண்மையுமாகும். நாமோ அவற்றையெல்லாம் ஒரு கடமைக்கு மட்டுமே படித்துவிட்டு கடந்து போய்விடுகிறோம். நாம் படித்தவற்றை நமது வாழ்க்கைக்காக மாற்றும்போதுதான் வாழ்வு நிலைபெறுகிறது.

“சார் ரொம்ப நன்றி . இப்பதான் எனக்கு புரிகிறது.”

பல நேரங்களில் என்னுடைய மாணவர்கள் படித்துமுடித்துவிட்டு சில ஆண்டுகளில் வேலைக்கு சேர்ந்த பின்னரோ அல்லது நேர்முகத் தேர்வு முடிந்த பின்னரோ அழைப்பார்கள். காரணம் வேறொன்றுமில்லை. நிச்சயமாக வகுப்பறையிலோ அல்லது பொது மேடைகளிலே நாம் சொல்லும் சிறுசிறு விஷயங்கள் அவர்களுக்கு அந்த சூழலில் கைகொடுத்து இருக்கும். புன்னகையோடு பேசுதல், நம்பிக்கையோடு நடத்தல் அல்லது வாசிப்பு அனுபவம் என்று ஏதாவது ஒன்று அவர்களுக்கு கை கொடுத்திருக்கும். அப்போதே அவர்கள் அதை நினைத்துப் பார்த்து அழைப்பார்கள். உண்மை என்ன என்றால் சில விஷயங்களை நாம் தொடர்ந்து செய்துவந்தால் அது அனிச்சை செயலாகவோ அல்லது பழக்கமாகவோ மாறிவிடும். தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஏதேனும் நல்ல காரியங்களை செய்திடப் பழகுங்கள். பெரிய அளவில் என்று கூட வேண்டாம். அடுத்தவருக்கு உதவி செய்தல், மாதமோ அல்லது உங்கள் பிறந்த நாளிலோ அருகிலே இருக்கும் முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள். சில நாட்களுக்குப்பின்னர் சில வாரங்களுக்கு பின்னர் அதுவே நம்முடைய வாழ்க்கைக்கான நெறிமுறையாக மாறிவிடுகிறது.

குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை

கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்

சமீபத்தில் இணையத்தில் நான் வாசித்த வாசகங்கள். நீங்களும் இதை கேட்டிருப்பீர்கள் அல்லது வாசித்திருப்பீர்கள். எத்தனை அழகிய உண்மை. சில நேரங்களில் நம்மை நமக்கே அறிமுகம் செய்யும் உண்மையும் கூட. நமக்குள் இருக்கும் நல்லவற்றை நமக்கு அறிமுகம் செய்பவைகள் நமது செயல்களும் சொற்களுமே. நம்மை பின்தொடர்பவர்கள் அனைவரும் நாம் சொல்லும் விஷயங்கள்  பற்றி பேசுவதில்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கவனிக்கிறார்கள். நாம் செய்பவற்றை கவனிக்கிறார்கள். அதுவே பல நேரங்களில் அவர்கள் வாழ்வைத் தொடர்ந்து நடத்தவும் உதவுகிறது.

உங்களை பின் தொடர்பவர்கள்

பெரும்பாலும்

உங்கள் கருத்துக்களை தொடர்வதில்லை

உங்கள் செயல்களையே தொடர்கிறார்கள்

- சதா பாரதி

நல்லவற்றைக் கற்றுக்கொள்வதை விட முக்கியம் அதை நம் வாழ்விலே கடைபிடிப்பது என்பதே ஆகும். இன்றைய சூழலில் நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. எதிர்கால தலைவர்களை நாம் நமது வீட்டிலே உருவாக்கி கொண்டிருக்கிறோம். அவர்கள் நம்முடைய அறிவுரைகளைக் கேட்பதில்லை மாறாக நம்முடைய நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள். நம்மைப் போலவே நடக்க முயற்சி செய்கிறார்கள். நாம் சரியாக நடந்து கொண்டாலே போதும் நம் நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் சிறப்பாக வழிநடத்தி விடுவார்கள்.                            

- சங்கரராம பாரதி