art love"அங்க வர்றது பெருமாள் மாமாதானே?" ஒப்புக்குக் கேட்டான் கோலப்பன். நானும் ஐயப்பனும் திரும்பிப் பார்த்தோம். சைக்கிளை உருட்டிக்கொண்டு அணஞ்சபெருமாள் மாமா வந்து கொண்டிருந்தார். அவரது கறுப்பான உயரமான தோற்றம் சட்டென்று அடையாளம் காட்டிவிடும். ஜிப்பாவும் அல்லாத சட்டையும் அல்லாத மாதிரி வெள்ளைக் கதர் துணியில் ஒரு சட்டை.

மற்ற சைக்கிள்களைவிட பெருமாள் மாமாவின் சைக்கிளுக்கு தனி பளபளப்பு உண்டு. இவருக்கு எதுக்கு சைக்கிள்? வெறுமனே நடந்துபோனா, சைக்கிளை உருட்டுற வேலையாவது மிச்சம். எதுக்கு எங்கேயும் சைக்கிளையும் துணைக்குக் கூட்டிட்டுப் போறாரு? என்று என்னைப் போல ஊரில் அநேகம்பேர் நினைத்திருக்கக்கூடும்.

எழுபது வயதைத் தாண்டி இருக்கும். சின்ன வயசில் சைக்கிளைத் தலைகீழாக ஓட்டுவாராம். இப்போது மேடும் பள்ளமுமாக இருக்கும் செம்மண் சரல் பாதையில் அவரால் சைக்கிளை ஓட்ட முடியாது. ஆனாலும் எந்தக் காலத்திலோ வாங்கிய அட்லஸ் சைக்கிள் அவரோடு சேர்ந்தே பயணிக்கும். உருட்டிக்கொண்டு போகிற சைக்கிளையும் தினமும் மண்ணெண்ணெயும் தேங்காயெண்ணையும் போட்டுத் துடைத்து வைப்பார்.

பெருமாள் மாமாவுக்கு ரெண்டு மகள்கள். அந்தப் பெண்களைக் குறிவைத்து மாமாவின் வீட்டில் எதையேனும் காரணம் சொல்லி நுழைந்த விடலைப் பையன்கள் அதிகம். அந்தப் பெண்களுக்காகவே மாமாவின் தூரத்து அண்ணன் உறவுகளின் மகன்களும்கூட அவரை மாமா என்று கூப்பிட்டுக் கெரண்டிருந்தார்கள். ஆனால் இரு மகள்களின் அழகுக்காகவே நகையைப் போட்டுக் கல்யாணம் செய்து கொண்டு பேரனார்கள். ரெண்டு மாப்பிள்ளைகளும் படித்த வசதியான உத்தியோகஸ்தர்கள். ஊரில் எல்லோரும் இலவு காத்த கிளிகளானோம்.

"மாமா... எங்கே போய்ட்டு வாரேரு?" -ஐயப்பன் கேட்டுவிட்டு கோலப்பனைப் பார்த்துக் கண்ணடித்தான்.

"மழைல புறக்கடைச் சுவரு விழுந்து மூணு மாசம் ஆச்சு. எழுப்பிக் கட்டணும். இன்னும் கொஞ்சம் மராமத்து வேலையும் இருக்கு. புன்னவிளையில செங்கல் அறுக்கிறானுகல்ல. செங்கல்லுக்குச் சொல்லிட்டு வாரேன்..." -முகத்தைச் சலிப்பாய் வைத்துக் கொண்டு சொன்னார் மாமா.

கோலப்பன் கையிலிருந்த பீடியை கடைசியாய் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தரையில் போட்டு காலால்  நசுக்கினான்.

"ஏலேய்... இன்னும் பீடிதான் குடிச்சுட்டு இருக்கீங்களா. ஏம்ல... பஞ்சு வெச்ச சிகரெட்டு வாங்கிக் குடிக்கப்படாதால்ல..." மாமா மூக்கைத் தடவிக் கொண்டார்.

பெருமாள் மாமா அப்படித்தான். இளவட்டப் பசங்க எந்தக் கெட்டப் பழக்கம் செய்தாலும் அதைத் தப்பு என்று சொல்லமாட்டார். அது  உடம்பைப் பாதிக்காத மாதிரி செய்யலாமே என்பார். பெருமாள் மாமாவும் எல்லா கெட்டப் பழக்கங்களையும் தொட்டுப் பார்த்தவர்தான். பிறகு ஒவ்வொன்றாகக் கைவிட்டு வெற்றிலை மட்டும் போடுவதில் வந்து  நின்றிருந்தார்.

"சரி... மாமா! உம்மக்கிட்டே கதை கேட்டு ரெம்ப நாளாச்சு ஒண்ணு சொல்லுமேம்..." கோலப்பன்தான் ஆரம்பித்தான்.

"எனக்கு நிறைய வேலை கிடக்குலே.... எல்லாந்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே..." என்று இழுத்தார். அப்படி ஒன்றும் அவருக்குப் பெரிய வேலை இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் தான் வெட்டியா இருக்கிறேன் என்று காட்டிக்கமாட்டார்.

"என்ன வேலை மாமா? எதுவானாலும் எங்கக்கிட்டே சொல்லும்... நாளைக்கே வந்து நாங்க முடிச்சுத் தாறோம்.." என்றேன்.

"போங்கலே... நீங்க வந்து முடிச்சுத் தந்துட்டுத்தான் மறுவேலை பாப்பீங்க. என் புள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் என் வீட்டைத் தேடித்தேடி வந்த பயலுக நீங்க. இப்பம்லாம் எட்டியே பார்க்கிறதில்லையே..."

"அப்படில்லாம் இல்லை மாமா. யாருக்கு எங்கேன்னு எழுதி வெச்சிருக்கும்ல. சரி, அதை விடும். கதை ஏதாவது சொல்லுமேம். ஊர்ல உம்ம அளவுக்கு உலக அனுபவம் யாருக்கு இருக்கு? அதனால கேட்குறோம். கேட்டு எவ்வளவு நாளாச்சு..." -ஐயப்பன் அழுத்தம் கொடுத்தான்.

உலக அனுபவசாலி என்று தன்னை யாரேனும் சொன்னால் மாமாவுக்கு உச்சி குளிர்ந்து போய்விடும். அது அவரது பலவீனமும்கூட.

"ம்ம்! எல்லாவனும் குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிட்டு இருந்தானுக. எனக்கு அப்பன் போய்ட்டான். குடும்பத்தைக் காப்பாத்தணும், கூடப் பொறந்த ரெண்டு பொம்பளைப் புள்ளைகளைக் கரையேத்தணும். ஊர் ஊராத் திரிய வேண்டியதாச்சு.." என்ற பெருமாள் மாமா சைக்கிளை அங்கேயே ஸ்டான்ட் போட்டுவிட்டு, நாங்கள் அமர்ந்திருந்த மரத்தடி திண்டில் உட்கார்ந்தார். இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்த சுருக்குப் பையை எடுத்து ஒரு துண்டு பாக்கை எடுத்து வாய்க்குள் போட்டுவிட்டு, ஒரு வெற்றிலையை எடுத்து காம்பு கிள்ளினார்.

"மாமா... இந்த கும்பகோணம் வெத்தலைன்னு சொல்றாங்களே. அதெல்லாம் வாங்கமாட்டீரோ?" -கோலப்பன் கேட்டதும்...

"நம்ம ஊர்ல அதெல்லாம் எங்கலே கெடைக்கும்? நம்ம ஊர் வெத்தலைக்கு காரமும் உறைப்பும் அதிகம் தெரியுமா? கும்பகோணம் வெத்தலை நாலு போடுறதுக்கு நம்ம ஊர் வெத்தலை பாதி போட்டாப் போதும். ஆமா, நீங்க எதுக்குலே இந்த பேயடிக்கிற நேரத்துல மரத்தடியில இருக்கீங்க?" என்றபடியே வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவி வாய்க்குள் திணித்துக் கொண்டார்.

"சும்மாதான்… நீரு பேய்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது, ஏதாவது பேய்க்கதை சொல்லுமேம்..." -ஐயப்பன் மாமாவை உசுப்பேத்தினான்.

மாமா லேசான யோசனையில் ஆழ்ந்துவிட்டு, "லேய்...இது கதையில்ல... உண்மையான சம்பவமாக்கும். அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்தது..." என்றபடி தொண்டையைச் செருமினார்.

"பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும் எனக்கு. நாடார் கடையில வேலைக்கு நின்னேன். ஏதாவது நல்ல வேலைக்குச் சேர்த்து விடுதேன்னு எங்க ஒண்ணுவிட்ட சித்தப்பாதான் என்னை ஓசூருக்குக் கூட்டிட்டுப் போனாரு. ஒரு உரக் கம்பெனியில வேலைக்குச் சேர்த்துவிட்டார். எல்பர் வேலைதான். சும்மா மூட்டை தூக்கிப் போடுற வேலை..."

"ஏன் மாமா.. நீரு அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சிதானே? அப்ப இந்தப் படிப்புக்கு கிளார்க் வேலையே கிடைக்குமே. நீங்க ஏன் ஹெல்பர் வேலைக்குப் போனீரு?" -ஐயப்பன் இடைமறிக்க, மாமா முறைத்தார்.

"கதையைக் கேளாம்ல... குறுக்கே பேசிட்டு..." -முகத்தைச் சுருக்கிக் கெரண்டார் மாமா.

"சரி மாமா... நீரு கதையைச் சொல்லும்..." -கோலப்பன் சொன்னான்.

"ஆங்... கம்பெனி ரெண்டு ஷிப்ட் ஓடும். காலைல ஏழு மணிக்குப் போனா மதியம் நாலு மணிக்கு வரலாம். அப்புறம் அஞ்சு மணிக்குப் போனா ஒருமணி வரைக்கு வரலாம். நடுராத்திரி எவன் வெளியே வருவான். அப்பல்லாம் சுத்தி ஒரே காடு. ஓசூர் தெரியும்ல... பொட்டல் காடு. அங்கங்கே பாறைமேல பாறையை தூக்கிவெச்சால இருக்கும். இருட்டுல பாறையைப் பார்த்தா ஆளு இருக்கிற மாதிரி இருக்கும். ஆளைப் பார்த்தா பாறை இருக்கிற மாதிரி இருக்கும். செடியெல்லாம் ஒண்ணுக்கும் ஒதவாத முள்ளு. வெறகுக்குத்தான் வெட்டிட்டுப் போவாங்க. வேலையை முடிச்சுட்டு கம்பெனிக்குள்ளேயே படுத்துட்டு விடிஞ்ச பொறவுதான் எல்லவனும் வெளியே வருவான்.  அன்னிக்கு நானும் வேலையை முடிச்சுட்டு படுத்தேன். கொஞ்சநேரத்துல முழிப்பு தட்டுச்சு. விடியுற நேரமாக்கும்னு நேரா வெளியே வந்து சைக்கிளை எடுத்துட்டேன்..."

"அப்ப விடியலயா மாமா?" -நான் கேட்டேன்.

"அதைத்தான்ல சொல்லுதேன். மணி மூணு இருக்கும்னு நினைக்கேன். கம்பெனிக்கும் நான் தங்கியிருந்த இடத்துக்கும் அஞ்சு கிலோ மீட்டராவது இருக்கும். சைக்கிளை மிறிச்சுட்டே வந்தேன். அப்பல்லா ரோட்டுல லைட்டு ஏது? அம்மாசி முடிஞ்சு அஞ்சாறு நாள் இருக்கும். லேசா நெலா வெளிச்சம்….” இதுவரை சாதாரணக் குரலில் பேசிய மாமா திடீரென்று முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டு குரலைத் தாழ்த்தினார்.

“பாரு... ரோட்டுல  இருவது வயசு இருக்கும் ஒரு புள்ளை. வெள்ளை சேலை கெட்டிக்கிட்டு நிக்குறா. நான் கிட்ட போனதும் கையைக் காட்டி என்னை நிப்பாட்டுனா. நல்ல சுந்தரியா இருந்தா. அந்தப் பக்கம்லாம் தெலுங்குக்காரங்க அதிகம். எல்லாம் மூக்கும் முழியுமா நல்லாத்தான் இருக்கும். என்ன வேணும்னு கேட்டேன். வாயைத் தொறந்து எதுவும் சொல்லமாட்டேங்கிறா. நான் போற வழியைப் பார்த்துக் கையைக் காட்டினா. சரி, சைக்கிள்ல கூட்டிக் கொண்டு விடணும்னு கேட்குறான்னு புரிஞ்சுக்கிட்டேன். கேரியல்ல ஏறி இருன்னு சொன்னேன். ஆனா ஏற மாட்டேங்கிறா."

"ஏன் மாமா?" -எதுவும் புரியாத மாதிரி ஐயப்பன் கேட்டான்.

"சைக்கிள் இரும்புல்லால்ல. அது இரும்பை எப்படி தொடும்? அப்ப எனக்கு அது புரியல்ல. நானும் கேரியல் கம்பி குத்தும்போலன்னு நினைச்சுட்டு குளிருக்கா வேண்டி கழுத்துல போட்டிருந்த மப்ளர் துணியை எடுத்து கேரியல்ல போட்டேன். அப்புறம் அதுல ஏறி இருந்துக்கிட்டா. நானும் சைக்கிளை மிறிக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச தூரம் சாதாரணமாத்தான் இருந்தது. அரை கிலோ மீட்டர் போனதுக்கு அப்புறம்தான் என்னால சைக்கிளை மிதிக்க முடியலல்ல. கேரியல்ல கனம் கூடிக்கிட்டே வருது. லேசா ஓரக்கண்ணால கேரியல்ல பார்த்தேன்..."

"என்னாச்சு மாமா?" -இது கோலப்பன்.

"அந்தப் புள்ளை அப்படியேதான் இருக்குறா. என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே இருக்கா. எனக்கு என்னமோ உள்ளுக்குள்ளே ஆகுது. என்னென்னு சொல்லத் தெரியல. நானும் பேசாம சைக்கிளை மிறிச்சேன். ஆனா கொஞ்ச நேரத்துல பாரு... கேரியல் செக்கு கனம் கனக்குது. அந்தக் குளிர்லயும் எனக்கு லேசா வெசர்க்க ஆரம்பிச்சுது. திடீர்னு அந்தப் புள்ளை என்ன நினைச்சுதோ தெரியல. என் இடுப்பைத் தொட்டது மாதிரி இருந்தது. அப்ப இளவட்ட வயசுல்லா. எனக்கு ஒருமாதிரி வந்துது. லேசா இந்திரியம் ஒழுகுற மாதிரி தோணுச்சு..." -மாமா சொல்லிவிட்டு நிறுத்தியதும்...

ஐயப்பனும் கோலப்பனும் ஒருத்தரையொருத்தர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். எனக்கும் லேசாகச் சிரிப்பு வந்தது. ஆனால் பெருமாள் மாமா அதையெதையும் கவனித்தது போலத் தெரியவில்லை.

"அவ்வளவுதாம்ல... அதுக்கு மேல என்னால சைக்கிளை மிறிக்க முடியல. நான் சைக்கிளோட சாய்ஞ்சு விழுந்தேன். இடது காலை தரையில ஊணலாம்னு பார்த்தா அதுக்குக்கூட ஏலாமப் போச்சு. நான் அப்படியே மண்ணுல விழுந்து கிடக்கேன். அந்தப் புள்ளை அப்படியே சைக்கிள்லயிருந்து இறங்கி நிக்குறா. இவ்வளவு நேரமும் நான் சைக்கிளைப் பிடிச்சுட்டுல்லா வந்தேன். இரும்பு... என்னைத் தொடாம இருந்தவ. இப்ப என்னையப் பார்த்து சிரிச்சுக்கிட்டே வந்து என் மேல கையை வைக்க வந்தா...." -சொல்லும்போதே மாமாவின் கைகளில் ரோமம் எழும்பியது. அவர் உடம்பெல்லாம் புல்லரிப்பது எனக்குத் தெரிந்தது.

"அந்த நேரத்துல... ஏய்... யாரு நீ? உனக்கு இங்கென்ன வேலைன்னு ஒரு ஆம்பிளைச் சத்தம் எங்கேயோ கேட்குற மாதிரி இருந்தது. எனக்கு நல்லா போதம் இல்லை. ஆனா குரல் கேட்குது. லேசா மங்கலா ரோடு தெரியுது. குரல் வந்த திசையில அந்தப் புள்ளை திரும்பிப் பார்க்குறா. பொசுக்குன்னு அவ கண்ணுல ஒரு பீதி. என்னைத் தொட வந்தவ என்னைய விட்டுட்டு குரல் வந்த திசைக்கு எதிர்த் திசையில ஓட ஆரம்பிச்சா. இப்பதான் நானும் குரல் வந்த திசையில பார்த்தேன். நாலைஞ்சு பேரு. துலுக்கமாருங்க. பள்ளியில பாங்கு ஓதிகிட்டு வாராங்க. அதுல வயசான ஒருத்தர் கையில ஒரு துணி. அவரு அந்தத் துணியைச் சுழட்டிட்டே ஓடி வர்றாரு. இந்தப் புள்ளை அவருக்கு பயந்துக்கிட்டுத்தான் ஓடுது..."

"அவரைக் கண்டு இவ ஏன் ஓடுனா?" -கேரலப்பன் சந்தேகத்தோடு கேட்டான்.

"என்னத்தலே கேட்குறே? அவரு பள்ளியில மந்திரம் ஓதிக்கிட்டு வாராரு. அந்தத் துணியில சக்தி இருக்கும்லாலே. அவரு அந்தத் துணியைச் சுழட்டுறதைப் பார்த்து இந்தப் புள்ளை ஓடுது. அவங்க எல்லாரும் என்கிட்டே வந்துட்டாங்க. அதுல ரெண்டு பேரு என்னையைத் தூக்கினாங்க. அந்தப் பெரியவரும் கூடவே ரெண்டுபேரும் அந்தப் புள்ளையைத் துரத்திக்கிட்டே ஓடுறாங்க. அவளும் வீல்னு அலறிக்கிட்டே ஓடுறா. இனிமே இந்தப் பக்கம் உன்னைப் பார்த்தேன்னா சும்மா விடமாட்டேன்னு சொல்லிக்கிட்டே அந்தப் பெரியவரு துணியைச் சுழட்டிட்டு ஓடுறாரு. ரெம்ப தூரம் ஓடி அவளைத் துரத்திவிட்டுட்டு வந்தாங்க. என்கிட்டே வந்த ரெண்டுபேரும் என்னைத் தூக்குனாங்க. ஏன் தம்பி நேரம்கெட்ட இந்த நேரத்துல இப்படி தனியா வரலாமான்னு கேட்டாங்க. நான் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன். சரிசரி... பாத்து கவனமா போன்னு என்கிட்டே சொல்லிட்டு எல்லாருமா கிளம்புனாங்க. எனக்கு சைக்கிளை ஓட்ட முடியல. நான் உருட்டிக்கிட்டே ஒரு வழியா தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்துட்டேன்..." -சொல்லி முடித்த மாமா பெருமூச்சு விட்டார்.

"மாமா! கதை நல்லாத்தான் இருக்கு. இந்தக் கதையெல்லாம் உம்ம வீட்ல சொல்லியிருக்கீறா?" -கேட்ட என்னைக் கூர்ந்து பார்த்தார்.

"ஏலேய்... கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த பல கதைகளை பொண்டாட்டிக்கிட்டே ஆம்பிளைங்க சொல்ல மாட்டாங்கலே. செரல்லவும் கூடாது. இது ஆம்பிளைக்கு மட்டுமில்லை, பொம்பளைக்குந்தான். அவளும் மாப்பிள்ளைக்கிட்டே எல்லாத்தையும் சொல்லக்கூடாது. அப்படியிருந்தாத்தான் குடும்பம் ஒழுங்கா நடக்கும். ரெம்ப அன்னியோன்னியமான புருசன் பொண்டாட்டின்னு சொல்றாங்கல்ல. அவங்களும் அப்படித்தான் இருப்பாங்க. இப்ப நீங்க என்னென்ன செய்யுறீங்கன்னு எல்லாத்தையும் உங்களுக்குக் கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டிக்கிட்டே சொல்ல மாட்டீங்கலே. சத்தியம் பண்றேன்..." -மாமா சற்று உணர்ச்சிவசப் பட்டிருந்தார்.

கொஞ்ச நேர அமைதியாய் இருந்தோம்.

"ஏன் மாமா! அந்த பள்ளியில ஓதுற ஆம்பிளைங்க அந்த நேரத்துல வரலைன்னா நீரு அந்தப் புள்ளையைக் கெடுத்திருப்பீரா? அல்லது அந்தப் புள்ளை உம்மைக் கெடுத்திருக்குமா? கறுப்பா உசரமா இருக்கிற ஆம்பிளைகளைப் பொம்பளைப் புள்ளைங்களுக்கு ரெம்பப் பிடிக்குமாமே. ஒரு சினிமாலகூட வசனம் வருது. அதனால கேட்குறேன்..." -முகத்தை சீரியஸாக வைத்தபடி மாமாவிடம் ஐயப்பன் கேட்டான்.

"போங்கலே! போக்கத்தப் பயலுகளே. உங்கக்கிட்டே போய் கதையைச் சொன்னேன் பாரு. இப்ப உங்களை மாதிரி பயலுகளுக்குப் பயந்துக்கிட்டுத்தான் அதுக மயானத்தைவிட்டு வெளியே வரதில்லை. சோலியைப் போய் பாருங்கலே..." -முகத்தை உர்ரென்று வைத்தபடி, நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்துக் கொண்ட பெருமாள் மாமா சைக்கிளை உருட்டியபடியே நடந்தார்.

ஒரு மாதத்திற்கு முன்பு இதுபோலொரு கதையைச் சொல்லி முடித்துவிட்டு இப்படித்தான் கோபித்துக் கொண்டு போனார் மாமா. ஏன், அதற்கு சில மாதங்களுக்கு முன்பும்.

- கீர்த்தி