girl artபாத்திரங்களை ஒவ்வொன்றாக நன்றாகக் கழுவி, அலசி பக்கத்தில் வெயிலில் கவிழ்த்து வைத்தான். அவனுக்கு உதவியாக இருந்த செல்லப்பா “ஏண்ணே இப்படி வெயிலைக் கண்டு பயப்படுறீங்க, இப்பப் பாருங்க வெயில் இருக்கிறதனால பாத்திரமெல்லாம் நல்லா பள பளன்னு வெரசா ரெடி ஆயிருதில்ல” என்றான்.

”போடா மூதி அப்புறம் நாமதாண்டா வெயில்ல போய் வியாபாரம் பண்ணனும். நான் அத நினைச்சுதாண்டா புலம்பிக்கிட்டு இருக்கேன்”

“சரிண்ணே கொஞ்சம் லேட்டாப் போனாப் போச்சு”

“லேட்டாப் போனா நம்ம பதிவு இடம் போயிருமேடா”

“ஆமால்ல” “சரிண்ணே கிளம்பலாம் சரியா இருக்கும்”

நாகு, திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பம். அப்பாவும் அம்மாவும் இறந்து போகும் பொழுது நாகுக்கு பதினெட்டு வயசுதான் இருக்கும். பக்கத்து வீட்டு இசக்கியா பிள்ளை கூப்பிட்டார்ன்னு அவருக்குத் துணையாக சமையல் வேலைக்கு வந்தவன்தான் மதுரைக்கு. இப்ப நாகுக்கு இருபத்தியேழு வயசாச்சு இன்னும் ஊர்ப் பக்கம் போகவில்லை. நாலு பேர் மதிக்கிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வந்த பிறகுதான் கிராமத்துக்குப் போகணும்னு ஒரு முடிவோட இருக்கான்.

மதுரைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது இசக்கியாபிள்ளை சமையலுக்கு கூப்பிடவில்லை, தள்ளு வண்டியில் சுண்டலும், வடையும் போட்டு மேலக் கோபுர வாசல் தெருவில் சென்ட்ரல் சினிமாப் பக்கம் தெருவில் வண்டியோடு நின்று கொண்டு வியாபாரம் செய்ய துணைக்கு ஆள் தேவைக்காக கூட்டிட்டு வந்திருக்கார்ன்னு.

ஊர்ல ஒரு போக்கும் இல்லாம சுத்திக் கொண்டிருந்த நாகுக்கு இதுவே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான்னு யாரும் சொல்றதக்கு முன்னால நாமும் ஒரு இடத்துக்கு வந்திரணும்ன்னு ஒரு வெறியில அவர் கூட இருந்துகொண்டே கொஞ்சம் தொழிலும் கத்துகிட்டான்.

சொக்கக் கொத்தன் தெருவிலிருக்கிற மடத்தில ஒரு மூலையில் முனியாண்டி சாமி சன்னதிக்கு பின்னால பிளெக்ஸ் சினிமா போஸ்டர், சாக்கு, பல நிற படுத்தாக்களைக் கொண்டு போடப்பட்ட ஒரு சின்ன குடிசையில் வாசம். நியூ சினிமா பக்கத்தில இருக்கிற பொது கழிப்பறை, குளியலறையில் மற்றதெல்லாம்.

காலையில் ஹரி விலாசில் இரண்டு இட்லி, ஒரு காரா வடை ஒரு சுக்கு மல்லிக் காபி. மதியம் அநேகமாக சாப்பாடு கிடையாது. இரவில் விற்றது போக மிச்சம் இருக்கிற சுண்டல், வடை, எப்பவாவது அது அநேகமாக மழை பெய்கிற இரவு நேரமாக இருக்கும், இரண்டாவது ஆட்டம் சினிமா, மற்றபடி ஒரு கஷ்டமுமில்லாமல்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

எல்லாம் இரண்டு வருஷம்தான். இசக்கியா பிள்ளையின் அளவுக்கு அதிகமான குடியும், ஆர்.எம்.எஸ் பக்கத்துக்கு அடிக்கடி போய் வர்றதுன்னு முறையற்ற வாழ்க்கையினால் மரணம் அவரை தழுவிக் கொண்டது. அதற்குள் நாகு அவரிடம் தொழில் கற்றுக் கொண்டதுமில்லாமல் அவர்களின் கஷ்டமர்களையும் கவர்ந்து வைத்திருந்தான். நாகுக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.

வெள்ளிக்கிழமை தவறாமல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், தினமும் இன்மையில் நன்மை தருவார் கோயில் ஒரு நாள், மதனகோபால் சாமி கோயில் ஒரு நாள், கூடலழகர் பெருமாள் கோயில் ஒரு நாள் என்று முறை வைத்து போய்விடுவான். இதையெல்லாம் இசக்கியா பிள்ளை கிண்டல் பண்ணிக் கூடப் பார்த்தார். சும்மா இருங்க அண்ணாச்சி நான் பாட்டுக்குப் போறேன் உங்களையா கூப்பிடுதேன்னு சொல்லிக் கொண்டே போய் வந்து விடுவான்.

இசக்கியா பிள்ளை இவனுக்கு விட்டுச் சென்றது ஒரு நான்கு சைக்கிள் சக்கரங்கள் பொருத்திய, ஒரு தள்ளு வண்டி. அதில் ஒரு தகரக் கூரை இருக்கும். வண்டியின் முகப்பு கீழ்புறம் தகரத்தால் அடைக்கப்பட்டு நெல்லை இசக்கி பலகாரங்கள் என எழுதப்பட்டிருக்கும். இவன் அதை நன்றாகப் புதுப்பித்து, வைத்துக் கொண்டான். இவன் அதில் ஒரு குடையும், ஒரு ஸ்டூலும் சேர்த்துக் கொண்டான்.

மற்றபடி, ஒரு சிறு மண்ணென்ணெய் அடுப்பு, ஒரு இருப்புச் சட்டி, இரண்டு கரண்டி, பத்து ஸ்பூன்கள், பத்து பீங்கான் சாசர் மட்டும், வடை எடுத்து வைக்க இரண்டு எவர்சில்வர் தாம்பாளங்கள், மூன்று வகை சுண்டல்களுக்குரிய எவர் சில்வரில் மூன்று உயரச் சட்டிகள் ஒரு பிளாஸ்டிக் கப் இரண்டு சிறிய வாளிகளையும் அண்ணாச்சி இவனுக்கு விட்டுச் சென்றிருந்தார்.

இவைகளைத்தவிர வியாபரத்தின் புதுவரவு செல்லப்பா. தென்காசிப் பக்கமிருந்து வீட்டை விட்டு ஓடி வந்து இவனிடம் பசிக்குதுன்னு கை நீட்டி நின்றவனை அப்படியே வேலைக்கு சேர்த்துக் கொண்டான். அவனும் இவனுக்கு ஒரு அடிமையைப் போல இருந்து உதவிக் கொண்டிருந்தான்.

சாயுங்காலம் செண்ட்ரல் சினிமா வாசலில் கடை போட்டால் இரவு பதினோரு மணி வரை வியாபாரம் நடக்கும். இடையில் போலீஸ் தொந்தரவு இல்லையென்றால் அங்கேயே இருந்து வியாபரத்தை முடித்து விட்டு வீடடைய பனிரெண்டு மணியாகிவிடும். போலீஸ் தொந்தரவு இருந்தால் வண்டியை அப்படியே டவுன்ஹால் ரோடு வழியாக தள்ளிக் கொண்டே ரயில்வே ஸ்டேசன் வரை போய் பஸ் ஸ்டாண்டு, பெருமாள் கோவில், மீனாட்சி டாக்கீஸ்ன்னு சுத்தி வந்து வியாபாரம் முடிய சில நேரம் இரண்டாம் ஆட்டம் முடிகிற நேரம் ஆகிவிடும்.

இன்னும் இரண்டு நாட்களில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடும். அங்கே போய் வண்டியை நிறுத்தினால் கொஞ்சம் நல்ல வியாபாரம் ஆகும். கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கும், போலீஸ்காரர்களுக்கும் கொடுக்க பணம் தனியாக எடுத்து வைத்துவிட்டான். பழைய நியூஸ் பேப்பர் வாங்கி பொட்டலம் போட வசதியாகக் கிழித்து வைத்து விட்டான். வடை சுட புது எண்ணெய், சுண்டல் வகையறாக்களுக்கு கீழமாசி வீதியில் போய் தேங்காய், பருப்பு வகைகளையெல்லாம் நல்ல நயம் சரக்காக வாங்கி வைத்துவிட்டான்.

“செல்லப்பா நாளைக்கு ஒரு நாள் லீவுடா”

“ஏண்ணே”

“இன்னைக்கு வெள்ளிக் கிழமையா, ஞாயித்துக்கிழமையிலிருந்து நாம தமுக்கத்தில பொருட்காட்சிக்கு. போகணுமில்ல”

“சரிண்ணே”

ஞாயிற்றுக் கிழமை காலை ஆறு மணிக்கே இருவரும் வண்டியத் தள்ளிக் கொண்டு தமுக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அங்கே போய் சேரும் பொழுது மாலை மூன்று மணிக்குத் தொடங்க இருந்த பொருட்காட்சிக்காக வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

வாசலிலேயெ நிறுத்தி பாஸ் இருக்கான்னு கேட்ட செக்யூரிட்டு கையில் பணத்தைத் திணித்துவிட்டு உள்ளே நுழைந்து திசையெல்லாம் பார்த்து நாள் முழுவதும் வெயிலில்லாமல் நிழலாக இருக்கும் ஒரு இடமாகப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைப்ப் பார்க்கத் தொடங்கினான், நாகு. செல்லப்பா பரப்பரப்பாகி வேலைகளை நாகுக்கு இலகுவாக்கினான்.

இரண்டு நாட்களில் பொருட்காட்சிக்கு எல்லா அரங்குகளும் வந்து விட பொருட்காட்சி களை கட்டத் தொடங்கியது. இவனுக்கு நேர் எதிரில் டில்லி அப்பளம் ஸ்டால் வந்ததில் இவனுக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் வியாபாரம் ஒன்றும் குறையவில்லை என்கிற சந்தோஷமும் இருந்தது. எல்லாம் நம்ம கையிலேல்டா இருக்குன்னு செல்லப்பாவிடம் சொல்லிக் கொண்டான்.

மூன்றாம் நாள் மாலையில் இன்னும் பொருட்காட்சிக்கு யாரும் வராத அந்தி வேளையில், “ஏங்க இங்க எங்க குழாய் இருக்குன்னு” கேட்டுகிட்டே எதிரில் வந்து நின்றவள்தான் ராணி. இவன் “என்ன குழாய் ன்னு” கேட்க என்றான், “என்ன நக்கலா” தண்ணிக் குழாயத்தான் கேக்கேன்” ”இங்க வேற எதுவம் குழாயில வருதான்னு” கேட்டாள். “அய்ய இந்த விருதாப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல, நான் கேட்டது தண்ணிக் குழாயா, குடிக்கிற தண்ணி குழாயான்னு” என்றான்.

“அப்படியா, குடிக்கிற தண்ணிக் குழாய்தான் கைல பாட்டில் இருக்கு பாக்கலியாண்ணு” என்றாள். “பாட்டில் எங்க தெரியுதுன்னு சொல்லி சிரித்துக் கொண்டே, அங்க வடக்க ஒரு ஊதாக் கலர் டிரம் தெரியுதா அதுக்குப் பின்னால போய் பாரு குழாய் இருக்கும். மத்த தண்ணிக்கெல்லாம், தெற்க போணும் சரியா என்றான். சரிதான், தப்பாவா சொல்லப் போறீக, சொல்லிக் கொண்டே வடக்கே நடக்கத் தொடங்கினாள்.

ஒரு வார இடைவெளியில் ஒரு மதியம் மும்முரமாக சுண்டலுக்கு தேங்காய் துருவிக் கொண்டிருந்த நாகு பக்கத்தில் யாரோ நிற்பது போலத் தோன்ற பார்த்தான் இவள்தான்.

“என்ன இந்தத் துருவு துருவிறீக, நல்லா சமையல் வருமோ” என்றாள்.

“ஆமா. நான் சுண்டல் விக்கிறேன், நீ என்ன பண்றே”

“நாந்தான் கடல் கன்னி தெரியாதா” என்றாள்.

“அடிப்பாவி நீதான் அந்த ஏமாத்துக்காரியா” என்றான்.

“ஏமாத்துறோம்னு தெரிஞ்சும் அவ்வளவு கூட்டம் வருதேய்யா”

“சரி கடல் கன்னி பேர் என்ன”

“கடல் கன்னிதான்”

“ஏட்டி பேரைச் சொன்னா என்ன குறைஞ்சா போயிருவே, என் பேரு நாகு, நாகராஜன்” என்றான்.

“ராணி” என்றாள்.

“என்னய என்ன நீ பாட்டுக்கு ஏட்டின்னு கூப்பிட்ட, எந்த ஊரு”

“திருநெல்வேலிப் பக்கம்” என்றான்.

“நான்கூட சுரண்டைப் பக்கம்தான்”

“அப்படியா நம்மாளா போயிட்டியே” என்றான்.

“நான் என்ன உன் ஆளா” ன்னு சொல்லிக் கொண்டே இவனது ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏயப்பா, என்னா கோபம் வருது, நம்ம ஊர் பக்கம்ன்னு சொல்றததான் அப்படி சொல்லீட்டேன்”

“பரவாயில்ல....பரவாயில்ல”

கொஞ்ச நேர மெளனத்திற்குப் பிறகு, சுண்டல் ரெடியா சாப்பிடக் கிடைக்குமான்னு கேட்டாள். அவிச்சு, தாழிச்சு வைத்திருந்த சுண்டலை எடுத்து ஒரு சாசரில் போட்டு துருவிய தேங்காயை கொஞ்சம் அதிகமாக அதன் மேலே தூவி ஒரு ஸ்பூன் போட்டுக் கொடுத்தான். ராணி சாப்பிட ஆரம்பித்தாள், என்ன உப்புலெம்மாம் கரெக்டா இருக்கான்னு கேட்டான்.

“நாகு பிரமாதம். நல்லா சமையல் வரும்போல”

“சமையலெல்லாம் வராது சுண்டலும் வடையும் நல்லாப் போடுவேன்”

“சரி, ராணி உங்கூட யார் இருக்கா, வீட்டுக்காரரா”

“கொஞ்சம் கொழுப்புதான்யா உனக்கு இப்படி வெறுங்கழுத்தோட இருக்கேன், வீட்டுக்காரரான்னு கேட்கிறேயே, அவர் எங்க அப்பா”

சரி அந்தத் தொட்டிக்குள்ள எப்படி அவ்வளவு நேரம் படுத்துக் கிடக்க. கண்ண வேற சிமிட்டவே மாட்டேங்கிற. எதுவும் மருந்து சாப்பிடுவியா? யோவ் உனக்கு உண்மையிலேயே கொழுப்புத்தான்யா, எல்லாம் பயிற்சிதான்யா. சரி சரி நான் போறேன், இப்பப்போய் கண்ணாடி முன்னால உட்காந்தாத்தான் ஆறு மணிக்கு படுக்க முடியும்.

நாகு ஐந்தரை மணிக்கு வா, நான் தொட்டிக்குள்ள படுக்கிறேனா இல்ல தொட்டிக்குப் பின்னால படுக்கிறேனான்னு பாக்கலாம்ன்னு சொல்லிக் கொண்டே சேலை தலைப்பை கொஞ்சம் கஷ்டப்பட்டு இழுத்து விட்டுக் கொண்டு கிளம்பினாள். நாகு சாரத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, செல்லப்பாவைத் தேடினான், நல்ல வேளை அவன் அங்க இல்லை.

இரண்டு நாள் கழித்து மீண்டும் ராணி காலை நேரத்தில் தேடி வந்தாள். என்ன நாகு இன்னும் குளிக்கலயான்னு கேட்டுக் கொண்டே. இல்லை ராணி கொஞ்ச நேரம் ஆகும். கடல் கன்னி செளக்கியமா, கடல் கன்னி வடை சாப்பிடுமான்னு கேட்டுக் கொண்டே பீங்கான் தட்டில் இரண்டு வடையை வைத்து நீட்டினான். ராணி நேத்தைய வடைதான் தப்பா எடுத்துக்காதன்னு சொல்லிக் கொண்டே கொடுத்தான். யோவ் பேசாம இரு வடை சூப்பரா இருக்கு, சட்னி இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும் என்றாள், ஊகும் சட்னி ஊசிப் போச்சு. நாளைக்கு வா காலையிலேயே கொஞ்சமா அரைச்சு வைக்கிறேன்னு சொன்னான். வந்துட்டாப் போச்சு என்றாள்.

கையைக் கழுவிக்கொண்டே, ”உன்னய மாதிரி வடைப் போட பழகினோம்ல இப்படி படுத்துக்கிட்டு, எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல”

“ஏன் ராணி, இதுவும் ஒரு தொழில்தானே”

“நீதான் மெச்சிக்கணும்” “ஒவ்வொருத்தனும் முன்னால வந்து நின்னுக்கிட்டு என்ன என்ன பேசுரான்னு எனக்குத்தான தெரியும், பதிலும் பேச முடியாது, கண்ணையும் சிமிட்ட முடியாது, உடம்பையும் அசைக்கக் கூடாது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா”

“.............................”

“என்ன அசிங்கமா பேசுவாங்க தெரியுமா” “நேத்து ஒருத்தன் அவன் பிரண்டுகிட்ட சொல்றான் யப்பா எவ்வளவு பெரிசுன்னு” அதுக்கு அவன்பிரண்டு “எதைச் சொல்றேங்கிறான்”

“எதச் சொன்னாங்க”

“ஏய் நாகுன்னு ஒரு பொய் கோபத்துடன் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்தாள்”

“சரி இதுக்கு எதுக்கு கோபம், உண்மைதான” என்றான்.

ராணிக்கு கண்களிலிருந்து பொல பொலன்னு கண்ணீர் வடிய ஆரம்பித்தது, நீயுமா, நான் என்ன எல்லாருக்கும் காட்றதுக்கா வச்சுருக்கேன்” என்றாள்.

நாகு பக்கமாக நெருங்கி வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டு நீ இவ்வளவு வருத்தப் படுவேன்னு எனக்குத் தெரியாது, சும்மா கிண்டல் பண்ணேன்” என்றான்.

“இனிமே கிண்டல் பண்ணக்கூடாது” என்றாள்.

“சரி உங்கப்பாகிட்ட சொல்லி வேற தொழிலுக்கு மாற வேண்டியதுதான”

“அதுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் சாராயத்துக்கு காசு வேணும் அதுக்கு இதுலதான நல்ல காசு வருது. இரண்டு ரூபாயக் கொடுத்துட்டு எவ்வளவு நேரம் வேணாம்னாலும் நின்னு நிதானமா பாக்கலாம், எனக்குக் காது கேட்கும் தெரிஞ்சே அசிங்க அசிங்கமா பேசலாம், அதுக்குத்தான திரும்பத் திரும்ப வர்றாங்க”

“சரி விடு, நான் வேண்ணா உங்க அப்பாகிட்ட பேசவா”

”உடனே அந்தாளு நீயென்ன அவளுக்கு வக்காலத்து அவள வச்சிருக்கியான்னு வாய் கூசாம கேட்பான்”

“அய்யோ ராணி நான் வரலப்பா” “நீ வேணா என் கூட வந்து சேர்ந்திரேன்”.

“போய்யா என்ன இருந்தாலும் அவன் என் அப்பந்தான் விட்டுட்டு வர முடியாது”

“சரி ராத்திரி உன் ஷோ பாக்க வர்றேன், எத்தன மணிக்கு வர்ற”

“”ஒம்பது மணிக்கு மேல வா, ஆளே இருக்காது”

“நீ, இருப்பியா”

“சீ வா”ன்னு மூக்கை ஒரு மாதிரி சுருக்கி வழிப்புக் காட்டிக் கொண்டே கவர்ச்சியாக நடந்து போனாள். போனவள் கொஞ்ச தூரத்தில் திரும்பி வந்து, உனக்கு என்ன கலர் பிடிக்கும் என்றாள், எனக்கு புளுன்னா ரொம்பப் பிடிக்கும் ஏன் என்றான், அவள் சிரித்துக் கொண்டே அவசியம் வரணும் சொல்லிக் கொண்டு நடந்தாள்.

மாலையிலிருந்து நாகு ஒரு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தான், செல்லப்பா அவனைக் கவனித்துக் கொண்டே அவனுக்கு சமமாக வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தான். ஒன்பது மணிக்கு முகம் கழுவி அழுந்தத் துடைத்துக் கொண்டு சட்டையை மாற்றிக் கொண்டு, செல்லப்பா கொஞ்ச நேரம் பாத்துக்க நான் போய் இந்த ராணியைப் பாத்திட்டு வந்துர்றேன்னு நகர்ந்தான்.

ராணியின் அப்பா வாங்க வடை வண்டி தம்பியில்ல போங்க போய் பாருங்க டிக்கெட் எல்லாம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டே உள்ளே அனுமதித்தார். நல்ல இருட்டில் ஒரு தண்ணீர் தொட்டியில் விளக்கு எரிய தொட்டிக்குள் அல்லது தொட்டிக்கு அந்தப்புறம் ராணி கண்ணைக் கவரும் புளு மேலலங்காரத்திலும், இடுப்புக்கு கீழே வெள்ளையும் மஞ்சளும் கலந்த மீனின் உடல் போல தைக்கப்பட்டிருந்த ஆடைகளையும் அணிந்து கொண்டு ஒரு கையை தலைக்குத் தாங்கு கொடுத்துக் கொண்டும், இன்னொரு கையை பெருமாளைப் போல உடம்பில் வைத்துக் கொண்டும் படுத்துக் கிடந்தாள். கால்களில் இருந்த செதில்கள் இலேசாக ஆடிக்கொண்டிருந்தது.

நாளைக்கு எப்படீன்னு ராணிகிட்ட கேட்கணும்னு நினைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான், அவள் இமைக்காமல் அப்படியே கிடந்தாள். இன்னும் கொஞ்சம் ஒளியைக் குறைத்தால் அப்படியே கடல் கன்னிதான்னு நினைத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தான், அவள் அப்படியே கிடந்தாள். சரி போகலாம்ன்னு திரும்ப இவனைப் பார்த்து கண்ணடித்தாள். இவனும் பதிலுக்குக் கண்ணடிக்க, கண்களாலேயே, புளு டிரஸ் எப்படி என்று கேட்டான், அவள் கேட்டது இவனுக்கு வேறு மாதிரி புரிய கையாலேயே கொஞ்சம் பெரிசுதான்னு சைகை செய்ய அவள் சீன்னு பொய்க் கோபம் காட்டினாள். இவன் கடிகாரத்தைக் காட்டி ஒரு மணிக்கு வர்றேன்னு சொல்லிவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு கிளம்பினான். அவள் சிரித்துக் கொண்டாள்.

ஒரு மணிக்கு செல்லப்பா நல்லா தூங்கிட்டானான்னு பார்த்துட்டு சாரத்தைக் கட்டிக் கொண்டு கிளம்பினான். கடல் கன்னி கூடாரம் இருட்டிக் கிடந்தது, உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தாற் போல் இரவு விளக்கு எரிந்து கொண்டிருந்தது, ராணியின் அப்பா குடியின் போதையில் முனங்கிக் கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தார், இவன் அவரை இலேசாக தொட்டு ஓரமாக படுக்க வைத்தான்.

“அவர் என்ன அங்கேயேவா படுக்கப் போறார் இன்னும் கொஞ்ச நேரத்தில திரும்பி இதே இடத்திலதான் கிடப்பார்ன்னு” குரல் கேட்க ராணி நின்று கொண்டிருந்தாள். இவனுக்கு அவளைப் பார்க்கும் பொழுது ஒரு ராணியைப் போலவே தோன்ற “ராணி” ன்னு ஒரு மாதிரியான குரலில் கூப்பிட்டான்.

“நாகுன்னு சொல்லிக் கொண்டே அவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்’ ஒரு பிளாஸ்டிக் நாற்காலியக் காட்டி முதல்ல உட்காருன்னு சொல்லிக் கொண்டே கொஞ்சம் உள்ளே போய் கையில் எதையோ கொண்டு வந்து கொடுத்தாள்.

“இது என்ன”

“சாப்பிட்டுப் பாரு”

“இந்தா நீயும் சாப்பிடுன்னு அவளுக்கு கொஞ்சம் கொடுத்தான்”

அவள் கையை நீட்டாமல் முகத்தை நீட்டினாள், நாகு ஒரு விநாடி திகைத்துவிட்டு அவள் வாயில் கொடுத்தான்”

“ராணி, அல்வா சூப்பர் என்றான்”

”உனக்காகத்தான் வாங்கி வச்சேன்”

இந்தான்னு இன்னொரு வாய் கொடுத்தான். உங்கப்பா எப்பத்தான் தெளிஞ்சு எந்திருப்பார்ன்னு கேட்டான். எனக்கே தெரியாது, நான் காலைலே எட்டு மணிக்கு எந்திருப்பேன் அவரும் உக்காந்திருப்பார் அவ்வளவுதான்.

“சாய்ங்காலம் உன் புளு கலர் டிரஸ் நல்லா இருந்திச்சு ராணி” என்றான்.

“உனக்குப் பிடிக்குமேன்னுதான் போட்டேன், அப்பா கூட நேத்துதான புளுன்னுச்சு நான்தான் இருக்கட்டும்ன்னு சொல்லி சமாளிச்சேன்” “நீ புளு கலரையா பாத்திரிருப்ப, நீயும் ஒரு ஆம்பளைதானய்யா”

நாகு சட்டென்று எழுந்து நின்றான், ராணி பதறிப் போய் “என்ன” என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்கி நின்றாள். நாகு அவள் மோவாக்கட்டையை தூக்கி பிடித்து என் கூட வந்திரு கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான். “நான் ரெடி ஆனா உன் வருமானத்தில எங்கப்பாவுக்கும் சேர்த்து சோறு மட்டுமல்ல சாராயமும் வாங்கி கொடுத்து உனக்கு கட்டுப்படியாகாது, எங்கப்பாவும் அதுக்கு சம்மதிக்காது”ன்னு சொல்லிக் கொண்டே அவள் கழுத்தை இரண்டு கைகளினாலும் கட்டிக் கொண்டாள், நாகு அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான், அவள் முகத்தை நெருங்கி வந்து “என்ன” என்றாள், நாகு ராணியை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

சித்திரைப் பொருட்காட்சி நிறைவேறும் சமயம் அடிக்கடி சந்தித்த ராணி இவனைத் தேடி வரவேயில்லை. நாகு அவளைத்தேடி ஒரு இரவு போகும் பொழுது, உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். நாகு பதறிப் போய், “ராணி, என்னாச்சு ஏன் அழுகிறன்னு கேட்க” “போய்யா இனி ஒன்னய அடுத்த வருஷம்தான பாக்க முடியும், அதான்” என்றாள்.

“அதான் அடுத்த வருஷம் அவசியம் பாப்போமில்ல”

“அப்ப நடுவில என்ன நினைக்கவேமாட்டியா, நீயில்லய்யா எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான்”

“சீ அப்படி நினைக்காத நான்தான் உன்னைய கட்டிக்கிறீயான்னு கேட்டேன், மாட்டேன்கிற, நான் என்ன செய்ய”

“அட போய்யா அதெல்லாம் நடக்காது, ஆனா நான் சொல்றத கேளு, நாங்க இன்னும் பதினைந்து நாளுக்கு நான் சொன்னேல்ல அந்த ஊர் திருவிழாதான் இருப்போம், நீயும் அங்க வந்து கடையைப் போடேன்.”

“இல்ல ராணி மதுரையில எங்க வாடிக்கை இடம் போயிரும், இங்க இருந்தாலாவது இன்னும் ஒரு பத்து வருஷத்திலயாவது உன்னக் கட்டிக்கலாம், மதுரைய விட்டுப் போயிட்டா நாலு காசு சம்பாரிக்க முடியாது”

“சரி நாளைக்கு கிளம்புறோம், முடிஞ்சா திருவிழாவுக்கு ஒரு நாள் வா”ன்னு சொல்லிக் கொண்டே நாகுவை முதுகுப் பக்கமாக இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

”செல்லப்பா நான் எங்கேயாவது ஊருக்குப் போனா, தனியா இரண்டு நாள் சமாளிச்சுருவியாடா’

“என்னண்ணே நீங்கள் போயிட்டு வாங்க நான் பாத்துகிறேன்னு” செல்லப்பா சொன்னதும், இருக்கிறதிலேயே நல்ல சட்டையும், பேண்ட்டும் போட்டுக் கொண்டு ராணியை தேடிப் புறப்பட்டான்.

முதலில் ஒரு மணி நேர ரயில் பயணம் பிறகு அரை மணி பஸ் பயணமுமாக ராணி சொன்ன திருவிழா ஊரை வந்தடைந்தான். முல்லையாற்றாங்கரையில் ரோட்டுக்கு தெற்குப் பக்கம் கோவிலும், வடக்குப் பக்கம் ஒரு பெரிய மைதானமுமாக இருந்தது ஊர். கோவிலில் ஒரு வார காலம் திருவிழாவும், மைதானத்தில் பதினைந்து நாட்களுக்கு கேளிக்கைகளுக்கும் அனுமதி உண்டு என்று ராணி சொல்லியிருக்கிறாள்

மைதானத்தில் ராட்டினம், சிறிய சர்க்கஸ், பெரிய ஜெயண்ட் வீல் ராட்டினம், துப்பாக்கி சுடுதல், பலூன் உடைத்தல், சின்னப் பிள்ளைகள் விளையாட ஒரு குகை போன்ற அமைப்பு, சிறிய ரயில் வண்டி, பிள்ளைகள் ஓட்டி மோதி மோதி விளையாட ஒரு கார் மைதானம், பல வகையான சூதாட்டம், சர்பத் வண்டி பலூன் வண்டி, ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய், சுண்டல் வண்டி எல்லாம் இருந்தது. மைதானத்தின் நடுவில் ஒரு உயரமான கூடாரம், அது ஒரு பிரமிட் போல எந்தப் பக்கம் இருந்து பாத்தாலும் முக்கோணமாகத் தெரிகிற மாதிரு ஒரு அமைப்பு, அநேகமாக நடுவில் ஒரு உயர தடியில் மேலிருந்து கீழாக எல்லாப் பக்கமும் இறக்கி பலத்த ஆணிகளால் தரையோடு நன்கு அறையப்பட்ட ஒரு கூடாரம்.

இவன் போன மதிய நேரம் எல்லா விளையாட்டுகளும், ராட்டினங்களும் கூட்டம் கூட்டமாகக் கொண்டாடிகிட்டு இருக்க, இந்தக் கூடாரத்தில் மட்டும் ஆள் நடமாட்டமே இல்லை, விளம்பர பலகை எதுவுமேயில்லை. இரண்டு முறை மைதானத்தைச் சுற்றி வந்து, இரண்டு முறை கோவிலுக்குள்ளேயும் வெளியேயும் தேடியும் ராணி கண்ணில் படவேயில்லை.

மணி மூன்று என்று தெரிய வந்ததும் அவனை அறியாமலேயே பசி வந்தது. இருக்கிறதிலே பெரிய ஓட்டலாகப் பார்த்து, மூலையில் கிடந்த ஒரு மேஜையில் தனியாக அமர்ந்து கொண்டு வந்தவரிடம் ஒரு சாப்பாடு என்றான்.

பாதி சாப்பாட்டில் சாருக்கு என்னமும் வேணும்னா கூச்சப் படாம கேளுங்கன்னு சொல்லிக் கொண்டே பறிமாரியவர் அவனுக்கு எதிர் சேரில் வந்தமர்ந்தார்.

இவன் சிரித்துக் கொண்டே இந்தத் திருவிழால கடல் கன்னி கிடையாதான்னு கேட்டான். இல்ல சார், போன வருஷம் போட்டாங்க, ஆனா இந்த வருஷம் அத விட பெரிசா இந்தத் ”தீக்குச்சி டான்ஸ்”த்தான் பேசிக்கிறாங்கன்னு சொன்னார்.

“என்னது தீக்குச்சி டான்ஸா” அப்படீன்னா?

“நான் இன்னும் பாக்கல சார், ஆனா ராத்திரி பாருங்க கூட்டத்தை”

“என்ன நடக்கும்”

“சார் உள்ள போனீங்களா?”

“ஆமா”

“நடு மைதானத்தில ஒரு உயரமான கூடாரம் பாத்தீங்களா, அதுதான் அது நடக்கிற இடம்”

“ரொம்ப சின்னக் கூடாரமல்ல இருக்கு, அதில போய் எப்படி டான்ஸ்.............”

“இல்ல சார், டான்ஸெல்லாம் கிடையாது. உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?”

“தெரியாதுங்க, நான் திருவிழாவுக்கு வர்றதே, ஏன், இந்த ஊருக்கு வர்றதே இதுதாங்க முதல்முறை”

“அப்படியா, ஒண்ணுமில்ல சார், நடுவில கருப்புக் கலர் கூடாரம் இருக்குல்ல, அதில நடுவில ஒரு உயரமான கழி இருக்குல்ல, அதில ராத்திரி ஏழு மணிக்கு மேல, முழு இருட்டில ஒரு வயசுப் பொண்ணு உடம்புல ஒட்டுத்துணியில்லாம இரண்டு கையையும் மேலே தூக்கிகிட்டு நிற்குமாம். நம்மகிட்ட ஐந்து ரூபா வாங்கிகிட்டு, ஒரு ஆள் ஒரு காலி தீப்பெட்டியும் ஒரே ஒரு தீக்குச்சியும் கையில கொடுத்து உள்ள விடுவானாம், அப்ப அங்க இருக்கிற ஒரு ஆளு நம்ம கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போய் அந்த கழி முன்னால நிற்க வச்சு சீக்கிரம்ன்னு சொல்வானாம். நாம உடனே தீக்குச்சிய பொருத்தி அந்தப் பொண்ண நிர்வாணமாப் பாத்துக்கிடலாமாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க சார்”

“இதில என்ன இருக்கு எல்லாருதான் பாத்துருவாங்களே”

“அட போங்க சார் இதுவரை ஒருத்தர் கூட பாத்ததில்லையாம்”

“ஏன்”

”சார், நாம ஆம்பளெயெல்லாம் என்ன பண்ணுவோம், உடம்பப் பாக்கிறத விட, உடம்புக்காரியாருன்னு பாக்கத்தானே முயற்சி பண்ணுவோம்” “தீக்குச்சிய உரசி முகத்துக்கு நேரா கொண்டுபோனவுடனே அவ வாயால புஸ்ஸுன்னு ஊதி அணைச்சிருவாளாம், அப்புறம் என்னத்த பாக்க. அந்த நாள் கையைப் பிடிச்சு வெளிய கொண்டுவந்து விட்டிருவானாம்”

“அப்புறம்”

“அப்புறம் என்ன அப்புறம்” “மறுபடியும் வரிசையில வந்து நிக்க வேண்டியதுதான்”

“போலீஸ் ஒண்ணும் பண்ணலியா”

“அதெல்லாம் பணம் சரி பண்ணீரும் சார், உங்களுக்குத் தெரியாதா”

நாகு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தான், மீண்டும் ராணியைத் தேடினான், எங்கும் அவள் தென்படவில்லை. கொஞ்ச நேரம் உட்காரலாம்ன்னு ஒரு புளிய மரத்தடியில் உட்கார்ந்தான், அவனையும் அறியாமல் தூங்கி விட்டான். கண் விழித்துப் பார்க்கும் பொழுது மணி ஆறு.

மீண்டும் ஒரு டீ குடிக்கலாம்ன்னு அதே ஓட்டலுக்குப் போனான். சர்வர் டீயை வைத்துக் கொண்டே என்ன சார் தீக்குச்சி டான்ஸ் பாக்கலாம்னு இருக்கீங்களான்னு கேட்டார். இல்ல கிளம்பீட்டேன் ஆனா நீங்க கேட்டவுடன் பாக்கலாமான்னு ஒரு ஆசைதான் என்றான், சும்மா பாருங்க மதுரைக்குத்தான போகணும் விடிய விடிய பஸ் இருக்குன்னு சொன்னார்.

இரவு எட்டரை மணிக்கு முல்லை ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு, அப்படியே நடந்து வந்து நடு மைதானத்தை அடைந்தான். சில பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் பெரிய டர்கி டவலை தலை முழுவதும் சுற்றியிருந்தார்கள், யாருடைய முகமும் கண்ணும் தெரியாத மாதிரி துண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டது. இவனும் வரிசையில் நிற்கும் பொழுது தனது கைக்குட்டையை எடுத்து மூக்கோடு சேர்த்து பின் பக்கமாக கட்டிக் கொண்டான்.

இவன் முறை வந்ததும் ஐந்து ரூபாயை வாங்கிப் போட்டுக் கொண்டு வாசலில் நின்ற ஆள் இவனிடம் தீப்பெட்டி, லைட்டர் போன்றவைகள் இல்லையென சோதித்து உறுதி செய்து கொண்டு ஒரு காலி தீப்பெட்டியும் ஒரு குச்சியும் கொடுத்து ம்.. என்றான்.

உள்ளே சர்வர் சொன்னது போல ஒரு ஆள் வந்து கூட்டிக் கொண்டு போனான். ஒரு பத்தடி நடந்த பிறகு, சார் பாருங்க தீக்குச்சி அணைஞ்சிருச்சுன்னா கிளம்பீறனும், கையை க்கியை நீட்டிறக் கூடாது ம்.... உரசுங்கன்னார்.

நாகு வெகு ஜாக்கிரதையாக தனது நெஞ்சுக்கு நேராக தீப்பெட்டிய பிடித்து காற்றின் அசைவு எதுவுமில்லைன்னு உறுதி செய்து கொண்டு. இது வரை யாரும் பார்க்காத அவளை தான் பார்த்து விடணும்ன்னு ஒரு உறுதியோட தீக்குச்சிய உரசி முகம் நோக்கி போனான் புஸ்ஸூன்னு ஊதி அணைக்கப்பட்ட அந்த ஒரு நொடி அவன் அவள் முகத்தை பார்த்தான்.

வெளியே வரும்பொழுது பின்னால் யாரோ அழுவது போல கேட்டது.

“முகத்தைப் பொத்திக் கொண்டு ஒரு கிழிந்த குரலில் ராணி அழுது கொண்டிருந்தாள்”

- ஆ. ஆனந்தன்