தமிழகத்தில் இந்த ஆண்டு சராசரியை விட அதிகமான மழை பெய்து, பல மாவட்ட மக்களின் வாழ்க்கையை துயரமாக்கியுள்ளது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டது. வாழை, மணிலா, மரவள்ளி போன்ற பயிர்களும் மழைநீர் தேங்கி நின்றதால் நாசமாகி விட்டது. விவசாயத் தொழிலாளர்களின், கிராமப்புற ஏழைகளின் குடிசைகளுக்குள் மழைநீர் சென்றதால் பல்லாயிரம் குடிசைகள் சேதமாயின. சில குடிசைகள் ஓரளவு சேதமடைந்தன. குடிசைக்குள் தண்ணீர் சென்றதால் குடியிருக்க முடியாமல் பள்ளிக் கூடம், திருமண மண்டபங்களில் தஞ்சம் புகுந்தனர். விவசாய வேலைகளோ, இதர வேலைகளோ கிடைக்காததால் பட்டினியால் வாடுகின்றனர்.

விவசாயிகள் கையிலிருந்த, கடன் வாங்கிய பணத்தையெல்லாம் பயிரில் முதலீடு செய்து விட்டனர். பயிர் விளைந்தால் கடனை செலுத்தி விடலாம் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளின் தலையில் பேரிடியாக விழுந்தது மழைச்சேதம். அடுத்து பயிரிட எங்கே கடன் வாங்குவது? அதுவரை குடும்பத்தை நடத்திட என்ன செய்வது என வழி தெரியாமல் திகைத்து போயுள்ளனர். பாதுகாப்பிற்கு அரசு அளிக்கும் நிவாரணம் விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட எந்த வகையிலும் போதுமானதல்ல.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். 2005இம் ஆண்டு முதல் கடந்த ஆறு ஆண்டுகளில் சராசரி வடகிழக்கு பருவமழையை விட ஐந்து ஆண்டுகளில் அதிகம் மழை பெய்துள்ளது. 2008ஆம் ஆண்டு மட்டும் மழையளவு சராசரியை விட குறைவு.

மழை பெய்வது இயற்கை. இயற்கையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தேவையாகும். மழைக்காலத்தில் வரக் கூடிய தண்ணீரை பாதுகாப்பது சேதமேற்படாமல் வடிய வைப்பது அவசியமாகும். மழைபெய்தால் வெள்ளச்சேதம் மழைபொய்த்தால் வறட்சி. இதைச் சொல்வதற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்படுவதில்லை. தமிழகத்தில் எந்த ஆறும் கரைபுரண்டு ஓடி பெரிய சேதாரத்தை ஏற்படுத்த வில்லை. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மிகப்பெரிய வடிகாலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சேதம் ஏற்படுகிறது. அதை முறைப்படுத்துவதற்கு எவ்வித திட்டமும் அரசிடம் இல்லை.

மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகளையே பராமரிப்பதில்லை. ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வரவு கால்வாய், ஏரி நிரம்பினால் தண்ணீர் வழிந்து ஓட கலங்கல், பாசனத்திற்கு பாசனக் கால்வாய், கலங்கள் தண்ணீர் அடுத்த ஏரிக்கு செல்வதற்கு கால்வாய், இவையெல்லாம் பழங்கதைகள். வழிந்தோடும் தண்ணீர் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டதால் மழைநீர் தாறுமாறாக செல்கிறது. பள்ளங்களில் தேங்குகிறது. இதுதான் பயிர்ச்சேதத்திற்கும், வாழ்க்கை சிரமத்திற்கும் முக்கிய காரணம். மழைக்காலங்களில் வரும் தண்ணீர் சேமித்து வைப்பதற்கு பல திட்டங்கள், பல கோடி ரூபாய்கள் செலவிட்டும் எதுவும் உருப்படியாக நிறைவேற வில்லை. குறைந்தபட்சம் ஏரி, குளங்களை கூட பாதுகாக்கவில்லை.

மழைக்காலத்தில் வரக்கூடிய தண்ணீர் முழுவதும் சேமிக்க முடியாது. கடலுக்கு ஒரு பகுதி தண்ணீர் சென்றாக வேண்டும். மீன் வளத்தைப் பாதுகாக்க அது இன்றியமையாதது. கடலுக்கு தண்ணீர் செல்வதற்கான வழி எங்கே என்பது இன்றைக்கும் கேள்விக்குறியாகும். ஆறுகளில் வரக்கூடிய தண்ணீரைக் கூட சேமிப்பதற்கான தடுப்பணைகள் பெயரளவிற்கே உள்ளது. ஆறுகளில் வரக்கூடிய தண்ணீர் எவ்வித தடையும் இன்றி கடலில் சங்கமமாகிறது. அடுத்து தண்ணீர் பஞ்சம்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தும் அரசாங்கம் மழைநீரை சேமித்திட உருப்படியான ஏதும் செய்வதில்லை. தமிழகத்தில் 24.2 சதமான நிலங்கள் தரிசாக உள்ளன. (சுமார் 78 லட்சம் ஏக்கர் தரிசாகவும் பயிரிட முடியாமலும் உள்ளன). மொத்த பயிரிடும் பரப்பில் ஏறத்தாழ சரி பாதி நிலங்கள் மானாவாரியாக உள்ளது. மானாவாரி பகுதிகளில் தண்ணீரை சேமித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழகத்தில் இயல்பான மழை அளவு 967.2 மி.மீட்டராகும். தென்மேற்கு பருவ மழை (ஜுன்_செப்) 331.6 மி.மீ, வடகிழக்கு பருவமழை (அக்டோபர்_டிச) 464.7 மி.மீ, கோடை மழை (மார்ச்_மே) 127.5 மி.மீ.

Pin It