tamil_desam_aug12

வீரத்தமிழன் முத்துக்குமார் ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து 2009 சனவரி 29ஆம் நாள் சென்னையில் உயிராயுதம் ஏந்தினார். முத்துக்குமார் தமிழ்த் தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டவர். புரட்சிகர இளைஞர் முன்னணியின் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டவர். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய பண்பான ஆரவாரமில்லாத உழைப்பு, தோழமையான உதவி, விடுதலை அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ளத் தொடர்ந்த வாசிப்பு, சக மனிதர்களை அடையாளம் கண்டு நேசிப்பது, கொள்கையில் நெஞ்சுறுதி - இவையே முத்துக்குமாரின் தனிச்சிறப்பு.

தமிழகம் எத்தனையோ இளைஞர்களின் தீரத்தையும் ஈகத்தையும் போற்றியிருக்கிறது. ஈழத்தில் நடந்த மனிதப் பேரவலத்தைக் கண்டித்துத் தனக்கே எரியூட்டிக் கொண்ட முத்துக்குமாருக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் இதயத்தில் கொடுத்த இடத்தை வேறு எவருக்கும் கொடுக்க வில்லை.

பல நூறு புத்தகங்கள் சேர்ந்து கொடுக்கக்கூடிய சிந்தனை எழுச்சியை முத்துக்குமாரின் இறுதி அறிக்கை கொண்டு வந்தது. இந்த அறிக்கையின் பின்னணியை அறிந்துகொள்ள இனப்படுகொலைக்குப் பின்னால் உள்ள வரலாற்றை ஆய்வது அவசியம்.

ஈழ மக்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதை முத்துக்குமாரின் கடிதம் எல்லாக் கோணத்திலும் விவரிக்கிறது. துரோகம் புரியும், கள்ள மௌனம் சாதிக்கும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கை பார்க்கும் சர்வதேசச் சமூகத்தைக் கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைப் போர்க்குணமிக்கப் போராட்டத்தைத் தொடங்குமாறு கோரியும், அப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையைச் சுமந்தும் நிற்கிறது முத்துக்குமாரின் இறுதிக் கடிதம்.

"சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் ஆம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்".

இந்திய ஏகாதிபத்தியம் சிங்கள இனவெறி அரசுக்குத் துணை நிற்பது ஏன்? தெற்காசியாவின் வல்லரசுக் கனவு, இந்திய ஆளும் வர்க்க அரசியல், பொருளியல், இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருக்கத் துடிக்கும் அதன் பதட்டம், தனக்குக் கீழ் உள்ள தேசிய இனங்களை ஒடுக்குவதன் ஒரு பகுதியாக ஈழத் தேசிய இனத்தை ஒடுக்குவதில் அது கொண்டுள்ள தீவிரக் கொள்கை - இவற்றை யெல்லாம் முத்துக்குமார் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.

சமூகத்தைப் பற்றிய புரிந்துணர்வும், உலகெங்கிலும் நடை பெற்ற உரிமைப் போராட்டங்கள், அவற்றின் படிப்பினைகள் குறித்துத் துல்லியமான பார்வையும் கொண்டிருந்த முத்துக்குமாருக்குள் உலகில் எங்கும் எப்போதும் நியாயம் தேடும் ஒரு மனிதனின் கோபத் தீ இருப்பதைக் காணமுடியும்.

இந்தி ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவதன் வழி மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம்தான், இந்திய அரசு ஈழப்போரில் தலையிடுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றே முத்துக்குமார் கருதினார்.

குழந்தைகளும் பெண்களும் கூட போரில் திட்டமிட்டுக் கொல்லப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முத்துக்குமார் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டார். ஆனால் அவர் நினைத்தபடி நம்மால் போரை நிறுத்த முடியவில்லை. சிங்களப் பேரினவாத அரசு தான் நினைத்தபடி வெற்றி கண்டுவிட்டது என்பது நம் முகத்தில் அறைகிற உண்மை. அதன்பின்னாவது நாம் முத்துக்குமார் காட்டிய வழியில்தான் பயணிக்கிறோமா? அவர் கற்றுத் தந்த அரசியல் பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா? குறிப்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முத்துக்குமாரின் ஒவ்வொரு நினைவுநாளிலும் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கத் தவறியதில்லை. அதிலும் விசிக, 'முத்துக்குமார் பாசறை'யே அமைத்திருக்கிறது. இவ்விரு கட்சிகளையும் 'முத்துக்குமார் அரசியலில்' ஊன்றி நின்று மதிப்பீடு செய்வதே எம் நோக்கம்.

ஈழ விடுதலைக்காகவும் தமிழக உரிமைகளுக்காகவும் ஓய்வின்றிச் செயல்பட்டு வருபவர் வைகோ. தமிழகம் சந்திக்கிற எந்த நெருக்கடிக்கும் காத்திரமான போராட்டங்கள் மூலமாக முகம் கொடுத்து வருகிறார், தன் பேச்சால் தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிறார் என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவையும், தனித் தமிழீழக் கோரிக்கையின் நியாயத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எப்போதும் உண்டு. தமிழ்த் தேசியம் எனும் அரசியல் முழக்கத்தை அம்மக்களின் நெஞ்சங்களில் ஊன்றியதும், தொடர்ந்து உச்சரிக்கச் செய்ததும் திருமாவளவன் என்பதும் உண்மை.

முத்துக்குமார் அரசியல் என்பது நேர்மையிலிருந்து இம்மியும் விலகாமல், கொள்கை அரசியலில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், விடுதலை அரசியலை இலட்சியமாய்க் கொண்டு உறுதியோடு செயல்படுவதே! இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தன் இறுதிக் கடிதத்தில் கருணாநிதி மட்டுமல்ல, செயலலிதாவும் தமிழர்களுக்கு எதிரானவர் என்பதை வெளிப்படுத்த அவர் மறக்கவில்லை. வைகோவும் திருமாவும் முத்துக்குமாரின் உயிர் ஈகத்திற்குப் பின்பு கூட இந்திய ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிந்தோ, ஒருங்கே கருணாநிதி, செயலலிதா இரு வரையும் தவிர்த்தோ அரசியலை முன்னெடுக்கத் தயாரில்லை.

இதை நன்கு புரிந்து வைத் திருந்ததாலோ என்னவோ முத்துக் குமார் எந்த அரசியல் கட்சித் தலைவரையும் நம்பிக்கைக்கு உரியவராய்த் தன் கடிதத்தில் இனம் காட்டிவிடவில்லை. சுருக்கமாக, ஓட்டுக் கேட்கும் அரசியலும் முத்துக்குமார் வழிகாட்டும் அரசியலும் இரு வேறு துருவங் கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

பாசிச அதிபராட்சி வேண்டும் என்று பேசிவரும் அத்வானி - வெங்கையா நாயுடு முன்னிலை யில் மாநாடு ஒன்றை நடத்தியது மதிமுக. மாநாட்டுக்குப் பெயர் 'மாநில சுயாட்சி மாநாடு'. இதில் அணிவகுத்து வந்த தொண்டர்களோ வைகோவைக் கண்டால் தமிழில் முழக்கமிடு வார்கள். அத்வானியைக் கண்ட வுடன் 'பாரத் மாதாகி ஜே' போடு வார்கள். முன்னாளில் 'ஊழல் நாயகி ஒழிக' என்று முழங்கிய வர்கள்தான், பிறகு 'புரட்சித் தலைவி வாழ்க' என்று முழக்க மிட்டார்கள்.

ஒபாமாவை உயர்த்திப் பிடித்து, சீமீs, ஷ்மீ நீணீஸீ எனும் தலைப்பில் வைகோ ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டார். ஈழத் தமிழர் இன அழிப்புப் போரில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்குமே இல்லையா? இராக்கிலும் ஆப்கனிலும் அம்மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் கொடிய போருக்கும் ஒபாமாவுக்கும் தொடர்பே இல்லையா? அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராசபக்சேவின் இன அழிப்புப் போரை எதிர்ப்பது முரண் இல்லையா? தமிழினத்துக்கு எதிரான போரைப் பற்றி ராசபக்சேவிடம் உலகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது 'இராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்கா இதைத்தானே செய்தது' எனக் கொக்கரித்தான். ஆக, ராசபக்சேவுக்கு முன்னோடியாக இருப்பது அமெரிக்காவே!

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் என்பது போர்க்குற்றம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும்கூட சிங்கள அரசை - ராசபக்சேவை - தப்பிக்க வைக்கும் முயற்சியாகவே அமைந்ததை மறுக்க முடியுமா? இதற்கும் ஒபாமாவுக்கும் தொடர்பே இல்லையா?

குசராத்தில் அப்பாவி இசுலாமியர்கள் ஏறக்குறைய 2000 பேரின் படுகொலைக்குக் காரணமாக இருந்தது பாசக - நரேந்திர மோடி. குசராத் படுகொலையையும் நரேந்திரமோடியையும் நாடாளுமன்றத்தில் வைகோ ஆதரித்துப் பேசியதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியவில்லை. அதுமட்டுமல்ல, குசராத்துக்கே சென்று நரேந்திரமோடியின் கைத்தலம் பற்றி அவருக்காக வாக்குக் கேட்டது எப்படி பெரியார் - அண்ணா வழி அரசியல் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிய வில்லை. இந்துத்துவத்திற்கு எதிரான அண்ணாவின் பேச்சும் எழுத்தும் தமிழ்ச் சமூகம் இன்றும் சமத்துவத்திற்கான ஆயுதமாக ஏந்த வல்லவை அல்லவா! திராவிட இயக்க நூற்றாண்டு மாநாடு கூட்டுகிற போதாவது இது குறித்து நேர்மையாக மீளாய்வு செய்யத் தவறுவது சரியா? எல்லாம் பதவிக்காக மட்டுமே என்றால் இன்றும் பதவி அரசியலைக் கைவிட்டு விடவில்லை - இனிமேலும் தமிழ்ச் சமூகத்திற்கு நச்சுப் பரப்பும் கட்சிகளைத் தூக்கிச் சுமக்க நேரிடும் வாய்ப்பு அற்றுப்போய்விடவில்லை என்றால் - இதுதான் முத்துக்குமார் கைகாட்டும் அரசியலா?

விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்காத, பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன, இலங்கைத் தமிழர்கள் என்று மட்டுமே கவனமாகக் குறிப்பிடுகிற பார்ப்பன ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டுச் சேர்ந்ததை எப்படி நியாயப்படுத்துவது? பார்வதியம்மாளின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 'பார்வதியம்மாவைக் கொன்றது கருணாநிதி' என்றார் வைகோ. ஆனால் அதே நேரடிப் பொருளில் அன்ரன் பாலசிங்கத்தைக் கொன்றது ஜெயலலிதா என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியுமா?

'அடங்க மறு; அத்து மீறு!' என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் வானில், தலித்துகளின் நம்பிக்கை நட்சத்திரமாக எண்பதுகளின் இறுதியில் தன் பயணத்தைத் தொடங்கியவர் திருமாவளவன். தனக்கு அவசியப்பட்ட பதவிகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய சூரப்புலி என்றும், மக்களின் போராட்டத்திற்குப் பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டார் என்றும் முத்துக்குமாரால் சாடப்பட்ட கருணாநிதியோடு அப்போதும் இப்போதும் கைபற்றி இருப்பதும் முத்துக்குமார் பாசறை அமைப்பதும் ஆகப்பெரிய முரண்பாடு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈழ ஆதரவு அணி ஒன்றை ஏற்படுத்த அழைப்பு விடுத்தும் யாரும் அதற்கு அணியமாக இல்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார் திருமா. திருமாவின் அழைப்பு வரவேற்கத்தக்கதே. அதைச் செவிமடுக்காது அலட்சியப் படுத்திய ஈழ ஆதரவுக் கட்சிகள் கண்டனத்துக்குரியனவே. ஆனால் அதனால்தான் காங்கிரசைத் தாங்கிப் பிடிக்கும் கருணாநிதியோடு கூட்டணி வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்வதுதான் நமக்கு விளங்கவில்லை. ஆக, திருமாவின் எல்லா முடிவுகளுக்கும் ஈழ விடுதலை அரசியல் அல்ல, பதவி அரசியலே அடிப்படை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?

ஈழத் தமிழர் அழிப்புக்குக் கருணாநிதி முழு உடந்தை என்பதற்கு முத்துக்குமார் கடிதம் வரலாற்று சாட்சியம். ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் காலில் போட்டு மிதித்து விட்ட கருணாநிதியை, அம்மக்களுக்காக உணர்வெழுச்சியுடன் போராடுவதாகச் சொல்லும் திருமா அண்டியிருப்பது நியாயம்தானா?

'போரை நிறுத்து!' என்ற கோரிக்கை முழக்கத்தோடு உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் திருமா. அந்நேரம் துணிந்து தன்னையே பணயம் வைத்தது போற்றுதலுக்குரியது. அப்போராட்டத்தை முடிக்கிறபோது 'இனி எக்காலத்திலும் காங்கிரசுக் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்காது' என்றும் 'தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியைப் புல்பூண்டு தெரியாமல் அழிப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் வேலை' என்றும் முழங்கினார்.

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் போர்நிறுத்தக் கோரிக்கையின் அடையாளமாக அன்று திருமா திகழ்ந்தார். அந்த உண்ணாநிலைப் பந்தலில் முத்துக்குமாரும் நம்பிக்கையோடு அமர்ந்திருந்தார் என்பது பின்னர் நாம் அறிந்துகொண்ட செய்தி. அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் பலரும் குண்டர் தடுப்புச் சட்டங்களில் தளைப்படுத்தப்பட்டு பிணை கிடைக்காமல் சிறையில் கிடந்த ஈகத்தையும் நாம் மறக்கவில்லை. அந்த இளைஞர்கள் அனைவர் நெஞ்சிலும் காங்கிரசு மீதான வஞ்சினம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

அடுத்து வந்த தேர்தலில் 'திமுகவோடுதான் கூட்டணி; காங்கிரசுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி கிடையாது' என்றார் திருமா. 'காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி எனக்குக் கவலையில்லை' என்றார். இதுதான் திருமாவின் நிலைப்பாடு என்றால் தங்கபாலுவிடம் சமாதானம் பேச வேண்டி வந்தது எதற்கு என்பதை விளக்க முடியுமா? போர் நிறுத்தத்திற்காகப் போராடினீர்கள் சரி; ஆனால் சோனியாவும் மன்மோகனும் போர்க்குற்றவாளிகள் என முழங்க முடியாமல் போனதே ஏன்? காங்கிரசின் மிரட்டலுக்கு அஞ்சி டெசோ மாநாட்டில் தனித்தமிழ் ஈழக் கோரிக்கைத் தீர்மானம் இல்லை என அறிவித்து விட்டார் கருணாநிதி. அந்த மாநாட்டில் திருமாவும் பங்கேற்க இருக்கிறார். இப்போதும் திமுகவோடுதான் கூட்டணி என்றால் காங்கிரசுக்கு அஞ்சும் கருணாநிதியோடு திருமாவை உலகத் தமிழர்கள் ஒப்பிடுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு, இந்திய இறையாண்மைக்குப் பங்கமின்றி, கொலைகாரனிடம் கொலைக்கான நியாயம் வேண்டி அரசியல் செய்வதன்று முத்துக்குமார் வழி! இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கக் களம் அமைப்பதே இன அழிப்புச் செய்த இந்தியத்துக்கு நாம் தரும் தண்டனை. அதுவே முத்துக் குமாருக்கு நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலி. ஈழத்துக்கு அமைந்ததுபோல் நம்மிலிருந்தும் ஒரு தலைவன் போராட்டத்தின் வழி உருவாவான் என்றால் தமிழ்த் தேசிய விடுதலைக்கான தலைவன் உருவாவான் என்பதே அதன் பொருள். முத்துக்குமாரின் உயிரற்ற உடலருகில் நின்றபோது கூட தமிழ்த் தேசியம் நெஞ்சில் கனன்று எழவில்லையெனில் பிறகு எப்போது...?

இளைஞர்களை, மாணவர்களை தேர்தல் கட்சிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்தின் பக்கம் ஈர்ப்பதே நம் முதற்பணி. இதைத்தான் தன் அறிக்கையின் மூலம் அறிவித்தார் முத்துக்குமார். முதலில் நாம் இந்தியர் என்ற மாயையிலிருந்து விடுபட்டுத் தமிழன் என்ற நிலையை அடைய வேண்டும். ஒரே நேரத்தில் இந்தியனாகவும் தமிழனாகவும் இருக்கவே முடியாது.

முத்துக்குமாரை நெஞ்சில் ஏந்தியிருக்கும் இளைஞர்கள் பாட்டாளி வர்க்க, போர்க்குணம் கொண்டு தன்னிழப்புத் துணிவுடன் தமிழ்த் தேசியக் களம் காண வேண்டும்.

ஆம்! நம்மிலிருந்துதான் தலைவன் உருவாவான்!

Pin It

இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே.

நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளி களுக்கென தனிப் பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில் தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. செர்மனிக்கும் சப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் சப்பானிய வீரர்களின் தற்கொடைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறு வதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொடைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது. அந்த ஈகத்துக்குரிய வீரமங்கை யின் பெயர் குயிலி. அவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சேரியில் பிறந்தவர் என்பதாலும் வரலாற்றின் பக்கங்களில் வஞ்சிக்கப்பட்டிருக் கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

குயிலியின் பின்னணி

ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற அந்நிய எதிர்ப்புப் போராட்டத்தில் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரனார் போன்ற தியாகிகள் பட்டியலில் சிவகங்கைச் சீமையின் இராணி வேலு நாச்சியார் மருதுபாண்டியர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் காலத்தால் அழிக்க முடியாதவை. 1750 காலகட்டத்தில் ஏறக்குறைய பூலித்தேவரும் ஒண்டிவீரரும் நெல்லைச் சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட காலகட்டத்திற்குப் பிறகு சிவகங்கைச் சீமையில் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் ஆங்கிலேயரையும் அவர்களது கூட்டாளியான ஆற்காடு நவாப்புகளையும் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சூழ்ச்சியால் முத்துவடுகநாதர் எதிரிகளால் கொல்லப்படு கிறார். உடன் அவரது இரண்டாவது மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகிறார். இந்நிலையில் இழந்த நாட்டை மீட்டெடுக்க முத்துவடுகநாதரின் முதல் மனைவியான இராணி வேலுநாச்சியார் சபதமேற்கிறார். அதற்காக, திண்டுக்கல்லை மையமாகக் கொண்டு ஆட்சி நடத்திவந்த ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் மற்றும் விருப்பாச்சி கோபால் நாயக்கர் ஆகியோரின் உறுதுணையோடு 8 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பெரும் படையைக் கட்டமைத்து சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார்.

வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி.

குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. காளையார் கோவிலில் தன் கணவரைப் பறிகொடுத்த வேலுநாச்சியார் அரியாக்குறிச்சி என்கிற ஊருக்கு அருகில் வரும்போது உடையாள் என்கிற மாடு மேய்க்கும் சிறுமி எதிர்ப் பட்டாள். அவளுக்கு விடை கொடுத்துவிட்டுச் சென்ற வேலு நாச்சியாரைப் பின்தொடர்ந்து வந்த எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். தமக்காக, தன் நாட்டுக்காக உயிரை ஈந்த உடையாளின் நினைவாகவே வேலுநாச்சியார் குயிலி தலைமையிலான மகளிர் படைக்கு உடையாள் மகளிர் படை எனப் பெயர் சூட்டியிருந்தார். மகளிர் படைக்குக் குயிலியை விடத் தகுதியானவர் வேறெவரும் இருக்க முடியாது என்பது வேலுநாச்சியாரின் இணையற்ற நம்பிக்கை. அப்படி குயிலி என்னதான் செய்தார்?

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித் திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

அன்று ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத தால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் ''ஓ, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று வினவினார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சிலம்பு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அதற்கு ஈடாக கை நிறைய பணமும் கொடுத்தார். குயிலி, ''தாயைப் பார்க்கப் போகத்தான் போகிறேன். போகிற போக்கில் இக்கடிதத்தை எப்படியும் ஒப்படைத்து விடுகிறேன். பணம் வேண்டாம்'' என மறுத்து விடுகிறார். புறப்படுவதற்கு முன்னதாக அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்கிறார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவு களையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இராணியார் தன் தந்தையைப் போல பாவிக்கும் சிலம்பு வாத்தியாரா இப்படிக் காட்டிக்கொடுக் கிறார் என்பதை அறிந்து அதிர்சசியடைந்து ஆவேசமானார் குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இராணி வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளை நாச்சியாரும் குயிலியும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நேரம் அறைக்கு வெளியே காலடிச் சத்தம் கேட்டது. கேட்டும், கேட்காததுபோல் குயிலி படுத்துக் கிடந்தார். சன்னலைத் திறந்து நோட்டமிட்ட ஓர் உருவம் சட்டென வேலு நாச்சியார் படுத்துக்கிடந்த கட்டிலை நோக்கி சூரிக் கத்தியை வீசியது. பாய்ந்து தடுத்த குயிலியின் கையை கத்தி பதம் பார்த்தது. வலியால் அலறிய குயிலியின் சத்தம் கேட்டு எழுந்த வேலுநாச்சியார் ரத்தம் வடிந்த குயிலியின் கையைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். ஒரு தாயின் அரவணைப்போடு குயிலியைக் கட்டி அணைத்துக் கைகளுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார். கத்தி வீசிய உருவமோ சிவகங்கையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூப மிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு மனுதர்ம நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேள்விப்பட்டு வேலுநாச்சியார் தம் படைவீரர்களுக்குப் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ''எதிரிகள் சிவகங்கை மண்ணிலிருந்து விருப்பாச்சியிலுள்ள நம் இருப் பிடத்திற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என் அறையில் கத்தி வீசியிருக்கிறார்கள். இது என்னைக் கொல்வதற்கா? அல்லது குயிலியைக் கொல்வதற்கா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இத்தனைத் துணிச்சலாக என் அறைக்கு அவர்கள் எப்படி வந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி. நம் படை வீரர்களின் ஆதரவு இல்லாமல் அவர்களுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது. சிவகங்கையில் நம் எதிரிகள் கடைசியாக என்னை வீழ்த்துவதற் காக எடுத்துள்ள சாதி என்னும் ஆயுதம் நம் வீரர் களையும் பாதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னுடைய அத்தனைவிதமான சலுகைகளையும் சன்மானங்களையும் பெற்றுக் கொண்ட சிலம்பு வாத்தியார் எனக்குத் துரோகம் செய்தார். ஆனால் எந்தவிதமான சலுகையினையும் கிஞ்சித்தும் பெறாத குயிலி என் உயிரைக் காப்பாற்றியிருக் கிறாள்.

''சிலம்பு வாத்தியார் என் சொந்த சாதிக்காரராக இருந்தாலும் அவர் எனக்கு துரோகமல்லவா இழைத் தார்? ஆனால் குயிலி சக்கிலியர் குலத்தில் பிறந்திருந்தாலும் நம் நாட்டிற்கு துரோகமிழைத்தவர் களைக் கண்டறிந்து களையெடுத் திருக்கிறாளே?

உங்களுக்குச் சாதிதான் முக்கியம் என்றால் நீங்கள் இந்த நிமிடமே என்னுடைய படையிலிருந்து விலகிக் கொள்ளலாம். சாதிவெறி பிடித்தவர்கள் எனக்குத் தேவையில்லை.''

வேலுநாச்சியாரின் இந்த அறிவிப்பு கடுமையாக இருந்தாலும்கூட அது நியாயமாகப்பட்டதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குயிலி வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தலைமையாக்கப்பட்டார்.

நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை அடித்துத் துவம்சம் செய்தது. அன்று மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.

முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.

தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கி களும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

அப்போது ஒரு மூதாட்டி வேலுநாச்சியாரிடம், "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?" என வினவினார். "எங்களிடம் இத்தனை அக்கறையோடு பேசும் நீங்கள் யார்?" எனக் கேட்டார் வேலுநாச்சியார். பதில் கூறாமல் மூதாட்டி நழுவ முற்பட சின்னமருது மிகக் கடுமையாக வாள்முனையில் நிறுத்திக் கேட்டார். அப்போது அம்மூதாட்டி தன்னுடைய வெண்மையான தலைமுடியை விலக்கி ஒப்பனையைக் கலைந்து காட்டினார். அவர் வேறு யாருமில்லை, குயிலிதான்.

சிவகங்கையின் நிலவரம் அறிய மாறுவேடத்தில் சென்று வந்ததாகவும் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பணிந்து நின்றார்.

வேலு நாச்சியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குயிலியைப் பாராட்டியதோடு குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங் களோடு வேலுநாச்சியாருடன் உள்ளே நுழைந்தனர். போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் வாட்களைச் சுழற்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் விழி பிதுங்கி நின்றான். ஆனால் இந்தப் போர் இதுவரை நடந்த தாக்குதல்களிலிருந்து மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயரின் நவீன ஆயுதங் களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தமிழர் பக்கம் அழிவு அதிகமாகிக் கொண்டிருந்தது.

அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படை களுக்குச் சென்று கொண்டிருந்தன. தோல்வி தவிர்க்க முடியாதது என்கிற நிலை வேலுநாச்சி யாருக்கு ஏற்பட்டது.

என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் ஓர் உருவம் தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது. மறுநிமிடம் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. கை வேறு, கால் வேறு, தலை வேறு, உடல் வேறு, என அவ்வுருவம் சுக்கு நூறாகிப் போனது. ஆயுதக் கிட்டங்கியின் அழிப்பு வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. ஆயிரக் கணக்கானோர் மண்ணில் மடிந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலு நாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான்.

வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியைக் கொண்டாடத் தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். குயிலி கண்டறிய முடியாத அளவிற்கு உருத்தெரியாமல் மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தார். ஆம் ஆயுதக் கிட்டங்கியில் குதித்தது வேறு யாருமில்லை, குயிலியே. சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்கு குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.

Pin It

ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனிய‌ ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது.

Udayakumar_620

இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக் கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பார்ப்பனர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன். தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன்.

 “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா அய்யா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது. பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழைய கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை.

முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றார்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.

பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை.

யார் தமிழர்?

இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள். எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர். சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.

தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான், “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.

இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களைப் பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை. அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம். அப்படியானால் தமிழகத்தை வேற்று இனத்தவர்களுக்குத் திறந்து விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாச்சார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளைய தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா?

தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரீஷியஸ் நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர், தமிழில் பேசவோ, எழுதவோ முடியாதிருப்பினும், தங்களைத் தமிழர்களாகவே உணர்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் வீடுகளில்கூட‌ அந்தந்த நாட்டு மொழிதான் பேசுகிறார்கள். அதனால் அவர்களை தமிழரல்லர் என்று ஒதுக்கிவிட முடியாது. இது, தமிழ் பேச, படிக்கத் தெரியாத மூன்றாம் தலைமுறை புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

எது தமிழ்த் தேசியம்?

இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ்த் தேசியம்.

ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம்தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம்.

பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ்த் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர், இன்று டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள புலம்பித் திரிகிறார். இதுகாறும் பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா, தமிழ்த் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சி அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ்த் தேசியம்.

இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ்த் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதி வைப்பதும் தமிழ்த் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எது தான் தமிழ்த் தேசியம்?

தனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்த தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ்த் தேசியம். பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச் செய்வதுதான் தமிழ்த் தேசியம்.

“மங்கையராய் பிறப்பதற்கே  மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ்த் தேசியம். திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுத்து, இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ்த் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ்த் தேசியம்.

அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ்த் தேசியம். “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி, சாதி, மதக் குழுக்களால் யாரும் யாரையும் அடக்க முடியாதபடி, அதட்ட முடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ்த் தேசியம். தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ்த் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ்த் தேசியம்.

வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ்த் தேசியம். விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம். நதிநீர் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்திய தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ்த் தேசியம். “எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ்த் தேசியம்.

பச்சைத் தமிழ்த் தேசியம்

இன்றைய பன்னாட்டுச் சூழலில், இந்திய‌ அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து, கூடவே பசுமை உணர்வுகளை, விழுமிய‌ங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது.

இன்றைய தமிழகத்தினுடைய தேவை தமிழ் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம்.

பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள்.

நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒரு சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு, பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ் கடலை - கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து,

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ்த் தேசியம்.

(கட்டுரையாளர் சுப.உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)

Pin It

      சென்ற 2012 சூலை 5ஆம் நாள் காலை பெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் திரு மு.பழனி (பழனிச்சாமி) உத்தனப்பள்ளி அருகே அலேசீபம் ஊராட்சி பாலேபுரம் கிராமத்தில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார், இந்தக் கொலையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த தளி சட்டப் பேரவை உறுப்பினர் திரு.இராமச்சந்திரனுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற செய்தி சமூக ஆர்வலர்கள் என்ற முறையில் எங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளித்தது.

     பெரியார் திராவிடர் கழகம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இரண்டுமே தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சனநாயகத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், தமிழ் மொழி இன நலனுக்காகவும், ஈழத் தமிழ் மக்களுக்காகவும் கொள்கைவழி நின்று போராடக் கூடிய அமைப்புகள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்களுக்கிடையே வன்முறை, அதிலும் கொலை என்பது எண்ணிப் பார்க்க முடியாத கொடுமை என்று நாங்கள் கருதியதால், உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவும், எங்களுக்குத் தெரிந்ததை உலகிற்கு அறிவிக்கவும் விரும்பினோம்.

      இதற்கென்று சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி, குழுவின் அமைப்பாளர் தியாகு, ஓவியா, வளர்மதி, தடா ரஹீம் ஆகிய நால்வரும் சென்னையிலிருந்து புறப்பட்டு சூலை 16ஆம் நாள் காலை ஒசூர் போய்ச் சேர்ந்தோம். ஒசூரைச் சேர்ந்த ஒப்புரவாளன், சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமயந்தி, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் உமர் கயான் ஆகியோரும் எங்கள் குழுவில் இணைந்து கொண்டனர்.

     தியாகு தலைமையில் எங்கள் எழுவர் குழு சூலை 16, 17 ஆகிய இரு நாட்களில் பாலேபுரம், அலேசீபம், கெலமங்கலம், நீலகிரி, நெருப்புக்குட்டை, உத்தனப்பள்ளி, ஒசூர் உள்ளிட்ட பல ஊர்களில் சென்று விசாரணை மேற்கொண்டது. பழனியின் மனைவி முருகம்மாள், மகன் வாஞ்சிநாதன், சிகரப்பள்ளி வீ.மருதப்பா, வழக்குரைஞர் நதீம் வெங்கட் (கிருட்டிணகிரி), நெருப்புக்குட்டை லெட்சுமைய்யா, அலேசீபம் முன்னாள் ஊராட்சித் தலைவர் கோபால், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அருண்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா - லெ) மாநிலச் செயலாளர் விந்தை வேந்தன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒசூர் நகர முன்னாள் செயலாளர் வசந்தசந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த செந்தமிழ் ஆகியோரையும் வேறு பலரையும் நாங்கள் விசாரித்து விவரம் அறிந்தோம். எங்களில் வளர்மதியும் ஒப்புரவாளனும் 17ஆம் நாள் ஓசூரில் முன்னாள் சி.பி.ஐ. மாவட்டச் செயலாளரும் இன்னாள் அதிமுக பிரமுகருமாகிய நாகராஜ ரெட்டியை சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டனர்.

     உத்தனப்பள்ளி காவல் ஆய்வாளர் ராமராசுலு அவர்களைக் காவல் நிலையத்தில் சந்தித்து வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்தோம்.

     நாங்கள் பொதுமக்களிடமும் பல்வேறு அரசியல் கட்சியினரிடமும் வினாத் தொடுத்து விடைகளைப் பதிவு செய்து கொண்டதோடு, தாமாக முன்வந்து குழுவிடம் பேசியவர்களின் கூற்றுகளையும் பதிவு செய்து கொண்டோம். அனைவரின் வாக்குமூலங்களைக் காணொளியிலும் பதிவு செய்துள்ளோம். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், சி.மகேந்திரன், கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் நஞ்சப்பா ஆகியோருடனும், பெரியார் திராவிடர் கழகத் தரப்பில் கொளத்தூர் மணியுடனும் எங்கள் குழுவின் சார்பில் தியாகு தொலைபேசியில் உரையாடினார்.

சிக்கலைத் திறந்த மனத்துடன் அணுகி புறஞ்சார் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்விலிருந்து பெறப்பட்ட உண்மைகளைத் தமிழ் மக்கள் முன்பும் அக்கறையுள்ள அனைவர் முன்பும் பணிந்தளிக்கிறோம்.

1. கொலை நிகழ்வு குறித்து

     முதலில் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டோம் . அந்த இடத்திற்கே பழனியின் மகனும் நிகழ்வை நேரில் கண்டவருமான வாஞ்சிநாதனை அழைத்துவரச்செய்து விரிவாக விசாரித்தறிந்தோம். அந்த அடிப்படையில் கொலைக் குற்றம் நடந்த விதம் என்று நாங்கள் புரிந்து கொண்டதைக் கீழே தருகிறோம்.

     நிகழ்வன்று அதிகாலை 5 மணியளவில் பழனியும் வாஞ்சிநாதனும் கத்தரிக்காய்த் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சச் செல்கின்றனர். மணி 6 இருக்கலாம். பழனி கிணற்றுக்கருகில் நின்று கொண்டிருக்கின்றார், வாஞ்சிநாதன் சற்றுத் தொலைவில் நின்று நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். அப்போது "அய்யோ வாஞ்சி" என்ற பழனியின் அலறல் கேட்டு வாஞ்சி கையில் மண்வெட்டியோடு அவரை நோக்கி ஓடுகிறார். இருபதுக்கு மேற்பட்டவர்கள் பழனியை நோக்கி வருகின்றார்கள். சிலர் துப்பாக்கியால் சுடுகின்றனர். பழனி கிணற்றடியிலிருந்து ஓடி அருகில் கால்வாய் அருகே நின்று இருகைகளையும் உயர்த்துகிறார். விரட்டி வந்தவர்கள் கைகளை அரிவாளால் வெட்டுகின்றனர். துப்பாக்கியால் சுடவும் செய்கின்றனர். அவர் கீழே சாய்ந்த பின், தலையைத் துண்டித்து எடுக்கின்றனர். பிறகு தலையுடன் சுமார் 50 மீட்டர் தொலைவில் இருக்கும் மண்சாலைக்குச் செல்கின்றனர். அங்கு, காருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நபரிடமும், காருக்கு உள்ளே இருப்போரிடமும், பழனியின் தலையைக் காட்டி விட்டு, கீழே வீசி விடுகின்றனர். அவர்களை ஏற்றி வந்த காரும், பைக்குகளும் வந்த வழியே திரும்பி விடுகின்றன.

     இவை அனைத்தையும் வாஞ்சிநாதன் பார்த்துள்ளார். முதலில், அவரை விரட்டியுள்ளனர். பிறகு, திரும்பி வந்து, மரத்தின் பின்னால் மறைந்திருந்து எல்லாவற்றையும் பார்த்துள்ளார். கொலைக் கும்பலில், பெரியசாமி, கேசவன் ஆகியோர் இருந்த்தைத் தன்னால் அடையாளம் காண முடிந்ததாக வாஞ்சிநாதன் உறுதிபடக் கூறுகிறார். மேலும், காருக்கு வெளியே நின்று பழனியின் தலையைப் பார்த்தவர் வரதராஜனே என்றும் சொல்கிறார். வரதராஜன் வழக்கமாக அணியும் பிஸ்கட் கலர் முழுக்கால் சட்டை, வெள்ளை மேல் சட்டை ஆகியவற்றைக் கொண்டு இது உறுதியாவதாகச் சொல்கிறார்.

     வாஞ்சிநாதனால் குறிப்பிடப்படும் பெரியசாமி என்பவர் தளி சட்டப் பேரவை உறுப்பினர் இராமச்சந்திரனின் பாதுகாவலராக 15 ஆண்டு காலமாக இருந்து வருபவர் எனத் தெரிகிறது. கேசவன் என்பவர் இராமச்சந்திரனின் அக்காள் மகன்.. வரதராஜன் இராமச்சந்திரனின் அண்ணன்.

     நிகழ்விடத்தைப் பார்வையிட்டு வாஞ்சிநாதனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட பின், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமிருந்தும், பாலேபுரம் கிராமத்தில் பழனியின் துணைவியார் முருகம்மாளிடமிருந்தும் ஊர்ப் பொதுமக்களிடமிருந்தும் திரட்டிய தகவல்கள், கொலைக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை அறியத் துணை செய்தன.

     கொலை நடப்பதற்கு முந்தைய இரவில், பாலேபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் கொலையாளிகளோடு கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, பழனியின் நடமாட்டம் குறித்துத் தகவல் கொடுத்துள்ளார். அவ்வாறு அன்று இரவு மல்லிகார்ஜுனாவோடு பேசியவர்களில் கலீல் என்பவர் முக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறார். இந்த கலீல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர். கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் கணவர். அதே இரவில், கலீல் வரதராஜனுடனும் இலகுமய்யாவுடனும் பல முறை கைபேசி வழியாகப் பேசியிருப்பதாகவும் தெரிகிறது. இந்த விவரங்களை கொலை நடந்த சில மணிநேரத்திற்குள் காவல் துறை துப்பு துலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

     குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான வாஞ்சிநாதனின் கூற்றின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

     கொலை நடந்த விதம் குறித்த வாஞ்சிநாதனின் சாட்சியத்தை ப. பா. மோகன் அறவே மறுத்தார். சி.மகேந்திரன் தமது கட்சிக்கும் இந்தக் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்ததோடு, பழனி கொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொன்னார். ஆனால், நிலத் தரகுத் தொழில் போட்டி காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார்.

     நஞ்சப்பாவைப் பொறுத்த வரை, இந்தக் கொலைக்கும் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், ஓரிரு கட்சி உறுப்பினர்கள் ஒருவேளை இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் இராமச்சந்திரன், வரதராஜன், இலகுமய்யா ஆகியோர் இக்குற்றத்தில் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

2.. கொலைக்கான நோக்கம் குறித்து

     பழனியைக் கொலை செய்தவர்களின் நோக்கம் குறித்துப் பொதுமக்களிடம் திரட்டிய செய்திகளின் அடிப்படையிலும், காவல் துறையினர் குறிப்பிடும் விவரங்களின் அடிப்படையிலும், கொலைக்கான நோக்கம் என்று நாங்கள் கருதுவது பின்வருமாறு.

     பழனி பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கிய பின், நீலகிரி என்ற ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள், அக்கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கினர். அது வரை அந்த ஊரில், இராமச்சந்திரன் சார்ந்துள்ள கம்யூனிஸ்டுக் கட்சி மட்டுமே இயங்கி வந்துள்ளது. பெரியார் தி.க. இளைஞர்கள் கறுப்புச் சட்டை அணிவதற்கு இரமாச்சந்திரனின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கறுப்புச் சட்டையைக் கிழித்து தீயிட்ட நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இது குறித்து தாமே கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிடம் முறையிட்டதாகவும் கொளத்தூர் மணி கூறுகிறார்.

     கடந்த உள்ளாட்சித் தேர்தலில், நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, இரமச்சந்திரனின் மாமா திம்மராயனின் மனைவி வனிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பெரியார் தி.க. தோழர் மாருதியின் தாயார் நாராயணம்மாள் போட்டியிட்டுத் தோற்றார். தம்மை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டதையே இராமச்சந்திரனைச் சேர்ந்தவர்கள் பகைச் செயலாக எடுத்துக் கொண்டனர் எனப்படுகிறது.

     இதையடுத்து, 2012 ஏப்ரல் 6ஆம் நாள், நீலகிரி வரதராஜசாமி கோயில் திருவிழாவில் மாருதியின் சித்தப்பா அன்னையப்பாவை வம்புக்கு இழுத்து, நாராயணம்மாவின் கணவரையும் மூன்று மகன்களையும் இரமாச்சந்திரனைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். பெரியார் தி.க. ஆதரவாளர்களும் திருப்பித் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக, இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

     தாக்குதலுக்கு உள்ளான பெரியார் தி.க. ஆதரவாளர்கள், சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, இராமச்சந்திரனும் அவரைச் சேர்ந்தவர்களும் அங்கேயே சென்று, அவர்களை மீண்டும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

     இதுதொடர்பாக, இராமச்சந்திரனைத் தவிர்த்து மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     உத்தனபள்ளி காவல் நிலையம் சென்று நாங்கள் விசாரித்த போது அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், "வரதராஜ பெருமாள் கோவில் தகராறுதான் இந்தப் பிரச்ச்சனைகளுக்கேல்லாம் முதல் காரணம். பின்னிட்டு இரு தரப்பினர் மீதும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொடர்ந்து ஊரில் பிரச்சனை ஏற்படுவதால் இரண்டு முறை ஆர்.டி.ஒ மூலம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பழனி மீது இங்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பழனி கொலை வழக்கு சம்பந்தம்மாகத் தீவிரமாகத் தலைமறைவுக் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த பகுதி மக்களிடையே இன்னும் அச்சம் நிலவி வருவதால் பாதுகாப்புக் கொடுத்து வருகிறோம்." என்று குறிப்பிட்டார்.

     பழனி கொலைக்கான உடனடிக் காரணங்கள் இவையே எனக் கருதுகிறோம்.

3. கொலையுண்டவர் குறித்து

     பாலேபுரம் கிராமத்தில் பழனி வாழ்ந்து வந்த வீட்டைப் பார்த்தோம். அவரது எளிமைக்கும் உழைப்புக்கும் சான்றாக அது காட்சியளித்தது. அவரது துணைவியாரையும் அவ்வூர்ப் பொதுமக்களையும் அங்கேயே சந்தித்துப் பேசினோம். பழனியின் பொதுத் தொண்டு குறித்தும் இயல்பான பழகும் தன்மை குறித்தும் அனைவரும் வியந்து பேசினர்.

     பழனி, சி.பி.எம் கட்சியில் பகுதிச் செயலாளராகப் பணியாற்றியவர். பிறகு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன் பின்னர், தமிழ் நாடு விடுதலைப் படை அமைப்பிற்கு ஆதரவாளராகவும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்புதான் அவர் பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து களப் பணியாளராக இருந்துவந்தார்.

     நாங்கள் சந்தித்த பொதுமக்கள் யாவரும் பழனிக்கு ஏற்பட்ட கொடிய முடிவு குறித்து வேதனைப்பட்டதோடு, அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

     பழனி இப்பகுதி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்பது தவிர, அவர் மீதான பகைக்கு வேறு காரணம் இருக்கக் கூடுமா? இந்தக் கேள்வியை நாங்கள் பலரிடமும் கேட்டுப் பார்த்தோம். இல்லை என்பதே அனைவரிடமும் வெளிப்பட்ட பதிலாக இருந்தது.

     பழனியின் மகன் வாஞ்சிநாதன், தனித்தும் இப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள கலீலுடன் சேர்ந்தும், நிலம் வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தாரா? அப்படியொரு விருப்பமும் நோக்கமும் இருந்ததை வாஞ்சிநாதனே ஒப்புக் கொண்டார். தங்கள் சொந்த ஊரான சந்தூரில் இருந்த பூர்வீக நிலச் சொத்தை விற்று விட்டு, அந்தத் தொகையில் நிலம் வாங்கிப் போட்டதாகவும், ஆனால், அதைத் திரும்ப விற்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பழனியின் குடும்பத்தோடு கலீல் நெருக்கமாக இருந்ததை பழனியின் மனைவி முருகம்மாளே குறிப்பிட்டார். ஆனால், வாஞ்சியின் நில வணிகத் தொழில் ஆர்வத்துக்கும் பழனி கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. கொலையுண்ட பழனியைப் பற்றி ஒரு கோடீஸ்வரப் பணக்காரர் என்றும், அவரது கொலைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறுவது மறைந்த மக்கள் தொண்டனின் மாண்பைக் குறைப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

     இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பழனியின் கடந்த கால நடவடிக்கைகள் வேறுசில வழக்குகளோடு தொடர்பு கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அவற்றிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

     பழனி போன்றவர்கள் நம் தமிழ்ச் சமூகம் பாதுகாக்க வேண்டிய நல்முத்துக்கள் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

4. குற்றஞ்சாட்டப்படுவோர் குறித்து

இராமச்சந்திரன், மாணவப் பருவம் தொட்டுப் பொதுவுடைமை இயக்கத்தில் முனைப்பாக இயங்கி வந்துள்ளார். கிருட்டிணகிரி அரசுக் கல்லூரி மாணவர் தலைவராகச் செயல்பட்டு, பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். ஒரு முறை கெலமங்கலம் ஒன்றியத் தலைவராகவும் இரண்டு முறை தளித் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2006இல் சிபிஎம் கட்சியை விட்டு விலகி, சுயேச்சையாக சிபிஐ கட்சியை எதிர்த்தும், 2011இல் அதே சிபிஐ கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2006இல் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாகராஜ ரெட்டி சிபிஐ கட்சியிலிருந்து விலகி, இப்போது அதிமுகவில் இருக்கிறார். இவர் இராமச்சந்திரனின் ஆட்கள் இருமுறை தம்மீது கொலைத்தாக்குதல் நடத்தியதாக எங்களிடம் கூறினார்.

     இராமச்சந்திரனின் மாமனார் இலகுமய்யா பற்றி இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. அவர் இந்தப் பகுதியில், கிருட்டிணகிரி மாவட்டத்தில், மக்களுக்கான பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்கின்றனர். மறு புறம், இவரை வன்முறையாளர் என்றும், அரசியல் போட்டியாளர்களை வன்முறை வழியில் ஒழித்துக் கட்டக் கூடியவர் என்றும் அச்சத்துடன் குறிப்பிடுவோரும் உள்ளனர். உண்மையில், இவரைப் பற்றிய இந்த இருவிதமான கருத்துகளும் அவரது அரசியல் வாழ்வின் இரு வளர்ச்சிக் கட்டங்களைக் குறிப்பனவாக இருக்கலாம் எனக் கருதுகிறோம்.

     இராமச்சந்திரனின் அண்ணன் வரதராஜனுக்கும் கம்யூனிஸ்டு இயக்கச் செயல்பாடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர் முழுக்க முழுக்க நிலத் தரகு தொழில் செய்து வந்துள்ளார் எனத் தெரிகிறது. இவரே இவ்வழக்கின் முதல் குற்றவாளியாக காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

     இது மட்டுமல்லாமல், இவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற வேறு பல வன்முறைச் செயல்கள் பற்றியும் பல தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, சி.பி.ஐ முன்னாள் மாட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி அவர்களும் தம் மீது இரண்டு முறை கொலைவெறித் தாக்குதல் தொடுக்கப்பட்டதையும், இரண்டாம் முறை தாம் படுகாயம் உற்று சிகிச்சை பெற்று வருவதையும் எங்களிடம் தெரிவித்தார்.

     இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களைப் பொறுத்த வரையில் எவ்வித அரசியல் குறிக்கோளும் அற்றவர்களாகவே தெரிகிறது.

5. கொலைக்கான சமூகப் பகைப்புலம் குறித்து

     உலகமயம் என்ற இன்றைய முதலாளிய வளர்ச்சிக் கட்டம், தனியார்மயத்திற்கும் தாராளமயத்திற்கும் இட்டுச் சென்றிருப்பதாகச் சொல்கின்றனர். அதுவே, பொதுவாழ்வில் ஊழல் மயத்திற்கும் அரசியலில் குற்றமயத்திற்கும் வழி செய்துள்ளது.

     இந்த ஊழல் மயமும் குற்றமயமும் உலகமயத்தை எதிர்க்கும் கொள்கை கொண்ட கட்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை என்பதுதான் நாம் ஆய்வில் கொண்டுள்ள நிகழ்வுகளில் வெளிப்படுகிறது,    தமிழகத்தின் எல்லையோரத்தில் இருக்கும் கிருட்டிணகிரி மாவட்டம், குறிப்பாக, தளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகள் பொருளியல் வளர்ச்சியும், அரசியல் விழிப்பும் அற்று காலத்தால் பின்தங்கிக் கிடப்பவை. தமிழ் மக்களோடு தமிழறியாத சிறுபான்மை மக்களும் திரளாகச் சேர்ந்து வசிப்பவை. பன்னாட்டு மூலதனத்தின் பாய்ச்சலுக்கும் இலாப வேட்டைக்கும் இலக்காகி, வளமைக்கும் வறுமைக்குமான கொடுமுரண்பாட்டில் இம்மக்கள் சிக்கிக் கிடக்கின்றனர்.

     குவாரித் தொழில் என்ற பெயரில், மரபு வழிப்பட்ட வேளாண்மைக்குரிய விளைநிலங்கள் பறிபோகின்றன. சிறப்புப் பொருளியல் மண்டலங்களின் பேரால், உழவர்களை ஊரை விட்டுத் துரத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்தப் பின்னணியில், பின் தங்கிய மக்களை ஏய்த்துப் பிழைப்பதும் அச்சுறுத்தி அடக்கி வைப்பதுமே திறமான அரசியல் என்ற புதுவாய்ப்பாடு பிறக்கிறது.

     இந்தக் கொடும்போக்கை எதிர்த்து உறுதியாக ஊன்றி நிற்பவர்கள் யாராயினும் தன்னல வெறிகொண்ட ஆதிக்க ஆற்றல்களின் கடுங்கோபத்திற்கும் தீராப் பகைக்கும் ஆளாவதன் ஒரு வெளிப்பாடே பழனி கொலை என்று கருதுகிறோம். 

பரிந்துரைகள்

      தமிழக அரசுக்கு:

     1. பழனி கொலை வழக்கில் புலனாய்வுப் பொறுப்பை ஏற்றுள்ள உள்ளூர்க் காவல்துறையினர் இதுவரை மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாங்கள் குறை கூற விரும்பவில்லை என்றாலும், பொதுமக்களிடம் உள்ளூர்க் காவல்துறையினர் மீது நம்பிக்கையற்ற போக்கே பரவலாக மேலோங்கிக் காணப்படுகிறது. இராமச்சந்திரன், இலகுமையா ஆகியோரைக் கைது செய்ய முடியவில்லை என்பதும், கடந்த காலத்தில் இது போன்ற நிகழ்வுகளில் காவல்துறை நடந்துள்ள விதமும் இந்த நம்பிக்கையின்மைக்கு அடிப்படையாக உள்ளது. சான்றுரைக்கக் கூடிய .பலரும் இதனால் வெளிப்படையாக உண்மை பேசத் தயங்குகிறார்கள்.

     குற்றவாளிகள் பிடிபட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டாலும், எப்படியும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்து தங்களைப் பழி தீர்த்து விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

     இந்நிலையில் பழனி கொலை வழக்கின் புலனாய்வுப் பொறுப்பை நடுவண் புலனாய்வுக் கழகம் (CBI) அல்லது தமிழகக் காவல்துறையின் குற்றப் பிரிவுப் புலனாய்வுத் துறையினரிடம் (CBCID) ஒப்படைக்கும்படி பரிந்துரை செய்கிறோம்.

     2. கிருட்டிணகிரி மாவட்டம் தளி, கெலமங்கலம், இராயக்கோட்டை பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள கொலை மற்றும் கொடுந்தாக்குதல் வழக்குகளில் இலகுமையா-வரதராஜன் குழுவினருக்குத் தொடர்புடையவற்றை விரைந்து நடத்தி முடிக்க ஒரு தனி நீதிமன்றம் அமைக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

    3. புலனாய்வை இழுத்தடிப்பது, பொய்க் குற்றவாளிகளை சரணடையச் செய்வது, சான்றளிப்பவர்களை அச்சுறுத்தியோ விலைக்கு வாங்கியோ பொய்ச் சான்றியம் அளிக்கச் செய்வது போன்ற சட்டப்புறம்பான முயற்சிகளுக்குத் துணைநின்ற காவல்துறை அதிகாரிகளைக் கண்டறிந்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.

     4. உத்தனப்பள்ளி, நீலகிரி ஆகிய காவல் சரகங்களில் கடந்த பத்தாண்டுகளில் பதிவாகியுள்ள கொலை மற்றும் கொடுந்தாக்குதல் நிகழ்வுகள் குறித்து நடந்துள்ள புலனாய்வு முதலான சட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்குச் சட்ட ஆணையர் குழு ஒன்றை அமர்த்தும்படி பரிந்துரைக்கிறோம்.

     5. கிருட்டிணகிரி மாவட்ட அளவிலும் தளி, தேன்கனிக்கோட்டை வட்ட அளவிலும் காவல்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை ஆகியவற்றில் அடியோடு மாற்றங்கள் செய்து, சட்டத்தின் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு அவசர உணர்வுடன் ஆவன செய்யும்படி பரிந்துரைக்கிறோம்.

    6. இந்தப் பகுதியில் உழவர்களிடமிருந்து செய்யப்பட நிலப் பறிப்புகளைக் கண்டறிந்து, நிலப் பறிப்பாளர்களைக் கூண்டிலேற்றுவதோடு, பறிக்கப்பட்ட நிலத்தை உரியவர்களுக்கே மீட்டுத் தரும் படி பரிந்துரைகிறோம்.

     7. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களோ பெருங்குழுமங்களோ இப்பகுதியில் விளைநிலம் வாங்குவதைத் தடை செய்யும்படி பரிந்துரைக்கிறோம். கர்நாடகம், ஆந்திரம், திரிபுரா போன்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தடைச்சட்டங்கள் நடப்பில் இருப்பதை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

     8. இப்பகுதியில் கற்குவாரித் தொழிலும் சிறப்புப் பொருளியல் மண்டலங்களும் உழவுத் தொழிலையும் சுற்றுச் சூழலையும் மக்களின் இயல்பு வாழ்வையும் ஊறுபடுத்தியிருப்பதோடு, ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் நாற்றங்கால் ஆகியிருப்பதைக் கருத்தில் கொண்டு, கற்குவாரித் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.

     9. நிலச் சொத்திலான கொடுக்கல் வாங்கல்கள் தமிழகமெங்கும் விரிவான முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் வழிவகுத்திருப்பதைக் கருத்தில் கொண்டு, இங்கொன்று அங்கொன்றாக ஒரு சில நிலப்பறிப்பு வழக்குகள் தொடுப்பதோடு நில்லாமல் முழுமொத்தமாக நிலவணிகத்திலும் இதுதொடர்பான தரகுத் தொழிலிலும் ஒழுங்கும் நேர்மையும் நிலைநாட்டுவதற்கு தேவையான சட்டங்கள் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.

     10. இப்பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் ஊர்தோறும் பள்ளிகள் திறக்கும்படியும், தமிழ் மக்கள் தமிழிலும், கன்னடர், தெலுங்கர் போன்ற சிறுபான்மை மக்கள் அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கவும், கட்டாயப் பயில்மொழியாகத் தமிழும் கற்கவும் ஏற்ற வகையில் சமச்சீர்க் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படியும் பரிந்துரைக்கிறோம்.

     இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு:

     1. பழனி கொலையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் தா.பாண்டியன் வன்மையாகக் கண்டித்திருப்பதை வரவேற்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது சரணடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களில் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் தம்மைக் குற்றமற்றவர்களாக நிரூபித்துக் கொள்ளும் வரையில் அவர்களைக் கட்சி உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

.     2. இப்பகுதியில் நடந்துவரும் நில வணிகம் தொடர்பான குற்றச் செயல்களில் தங்கள் கட்சியினருக்கு எவ்வகைப் பங்கு உண்டு என்பதை ஆய்ந்தறிந்து ஆவண செய்வது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கடமையாகும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

- சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழு

Pin It

தமிழ்நாட்டில் ஒன்பது நடுவண் சிறைகளும் எத்தனையோ கிளைச் சிறைகளும் உள்ளன. இந்தச் சிறைகளில் இருப்போர் அங்கு சட்டப்படி அனுப்பப்பட்டு சட்டப்படி அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதோடு அவர்களுக்கென்று சிறைச் சட்டப்படி உரிமைகளும் உண்டு.

தமிழ்நாட்டில் 112 இலங்கைத் தமிழ் அகதி முகாம்கள் உள்ளன. இவை தவிர சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இரண்டு வதைமுகாம்களும் உள்ளன. எந்தச் சட்டப்படி இந்த அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன? எந்தச் சட்டப்படி இந்த முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படுகிறார்கள்? அகதிகள் சட்டப்படி என்று விடை சொல்லத் தோன்றும். ஆனால் இந்திய நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டமே இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.

eelam womanஇந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உட்பட எந்தச் சட்டத்திலும் அகதி (refugee) என்ற சொல்லே கிடையாது. ஈழத்தமிழ் அகதிகள் மட்டுமல்லர், திபெத்திய அகதிகள், பர்மிய அகதிகள், சக்மா அகதிகள்... இவர்களோடு உள்நாட்டு அகதிகளும் நாட்டின் பல பகுதிகளிலும் வதியழிகிற இந்த நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டமே இல்லை என்பது எவ்வளவு கொடிய முரண்பாடு!

அயல்நாட்டு அகதிகளை விரும்பியோ விரும்பாமலோ உள்வாங்குவதோடு ஒவ்வொரு நாளும் பொருளியல் வளர்ச்சியின் பெயரால் சொந்த நாட்டு மக்களையும் அகதிகளாக்கிக் கொண்டிருக்கிற இந்திய அரசு உலக அளவிலான அகதிச் சட்டங்களுக்கும் கட்டுப்படுவதில்லை. ஏனென்றால் 1951ஆம் ஆண்டின் ஜெனிவா ஒப்பந்தத்திலோ 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ இந்தியா இதுவரை ஒப்பமிடவில்லை. இவற்றில் ஒப்பமிடுமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திய போதிலும் இந்தியா செவிசாய்ப்பதாக இல்லை. ஆனால் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையத்தின் செயற்குழுவில் உறுப்பினராகப் பதவி வகிப்பது பற்றி இந்திய அரசுக்கு வெட்கமில்லை. அகதிகளை இந்திய வல்லாதிக்கம் தன் புவிசார் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பகடைக் காய்களாகவே நகர்த்தவும் வெட்டுக் கொடுக்கவும் செய்கிறது என்பதே மெய்.

மனித உரிமைகளுக்கும் மனித கண்ணியத்துக்கும் புறம்பான இந்த அணுகுமுறை இந்தியா ஒப்பமிட்டுள்ள 1948ஆம் ஆண்டின் உலகளாவிய மனித உரிமைச் சாற்றுரை உள்ளிட்ட பன்னாட்டு உடன்படிக்கைகளை மீறுவதாகும் என்பதை இந்திய உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமைகளின் கண்ணோட்டத்தில் அகதிகளை இந்தியக் குடிமக்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றக் கட்டளையையும் இந்திய அரசோ மாநில அரசாங்கங்களோ மதிக்கவில்லை.

அகதிகளின் உரிமைகள் தொடர்பாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். பகவதி தலைமையிலான குழுவினர் ஆக்கித் தந்த முன்மாதிரிச் சட்டமும் அரசுக்கோப்பில் ஒட்டடை படிந்து கிடக்கிறது. 2006இல் இந்திய அரசின் சட்டத்துறை முதன்முதலாக உருவாக்கிய சட்ட முன்வடிவும் வடிவாய் முடங்கிக் கிடக்கிறது. அந்தச் சட்ட முன்வடிவும் கூட அகதிகளின் அரசியல் உரிமைகளைப் பற்றி மூச்சும் விடவில்லை.

இந்திய அரசு எல்லா அகதிகளையும் பிச்சைக்காரர்களாக நடத்துகிறது என்றால், ஈழத்தமிழ் அகதிகளைக் குற்றவாளிகளாகவே நடத்துகிறது. சிறப்பு முகாம்கள் மட்டுமல்ல, இயல்பான முகாம்களே கூட கியூ பிரிவுக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் வைக்கப்பட்டுள்ளன. சொந்த நாட்டில் சிங்கள ஆமிக்காரனுக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் இந்த நாட்டில் கியூ பிரிவுக்கு அஞ்சிக் கிடக்கும் அவலத்தை என்னென்பது?

தமிழீழ அகதிகளைத் தமிழ் நாட்டிலேயே அயலாராகக் கொண்டு அயல்நாட்டார் சட்டத்தின்படி நடத்துவது தமிழர்களாகிய நம் தன்மானத்துக்கும் இனமானத்துக்கும் விடப்பட்ட அறைகூவல் என்பதை உணர வேண்டும்.

அகதியின் முதல் உரிமை திருப்பி அனுப்பப்படாமல் இருக்கும் உரிமைதான். இறுதி உரிமை தானாகத் திரும்பிச் செல்லும் சூழலைத் தோற்றுவிப்பதற்காக சனநாயக முறையில் போராடும் உரிமைதான். இந்த இரு உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் வேறென்ன கொடுத்தும், கொடுப்பதாகச் சொல்லியும் என்ன பயன்? அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் ஓசித் திட்டங்களை ஈழத் தமிழ் அகதிகளுக்கும் விரிவுபடுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் அகதிகள் நலன் என்று இந்த எல்லைக்கு மேல் சிந்திக்க முடியவில்லை என்று பொருள்.

நம்மைப் பொறுத்த வரை ஈழத் தமிழ் ஏதிலியர்க்காகப் போராடுவது மட்டுமன்று, அவர்களையே திரட்டிப் போராடச் செய்வதும் நம் இனக் கடமை எனக் கருதுகிறோம். ஈழ அகதிகளின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், ஈழ மீட்புக்காகவும் ஓர் அரசியல் ஆற்றலாக புலம்பெயர் தமிழர்களைப் போராளித் தமிழர்களாக அணி திரட்டுவோம்.

Pin It