tamil_desam_aug12

enalankilli 350நம் தமிழ்ப் பெற்றோர்கள் திடீர்க் கல்வியாளர்களாகி உதிர்க்கும் அறிவு முத்துக்கள் பல. தமிழ் மண்ணில் தப்பித் தவறி குழந்தைகளைத் தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்கும் பெற்றோர் எவரையும் பார்த்து இந்தக் கல்வியாளர்கள் உடனடியாகக் கேட்கும் கேள்வி:

“உங்க புள்ளைக்கு இங்கிலீஷ் எப்படி வரும்?” தமிழ் தெரியாமல் போனால்தான் ஆங்கிலம் குழந்தைகளின் நாக்கில் நன்கு தவழும் என்பது இவர்களின் உறுதியான கருத்து. இது எவ்வளவு மோசமான குருட்டு நம்பிக்கை என்பதை இரு அமெரிக்க ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

அமெரிக்கக் கல்வித் துறை ரமிரெஸ் எட் அல் 1991 (ramirez et al 1991)  என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் சுமார் 8 ஆண்டுகள் ஸ்பானியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் ஆய்வொன்றை மேற்கொண்டது. அம்மாணவர்களுக்குச் சிறந்த பயிற்று மொழி ஆங்கிலமா? ஸ்பானியமா?

எனக் கண்டறிவதே ஆய்வின் நோக்கம். இந்த ஆய்வில் 2,342 மாணவர்கள் 3 குழுக்களாகக் கலந்து கொண்டனர். முதல் குழுவினர் ஆரம்பம் முதல் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலவழியில் மட்டுமே பயின்றனர்.

இரண்டாம் குழுவினர் முதல் ஓரிரண்டு ஆண்டுகள் ஸ்பானிய மொழியில் பயின்று விட்டு, பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினர்.

மூன்றாவது குழுவினர் முதல் 4 அல்லது 6 ஆண்டுகள் அனைத்தையும் ஸ்பானிய மொழியில் மட்டுமே பயின்றாலும், ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டும் கற்றுக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் ஆங்கிலவழிக்கு மாறினர்.

சில ஆண்டு கழிந்து மூன்று குழு மாணவர்களிடமும் அறிவுத்திறன், ஆங்கில ஆற்றல் குறித்த சோதனைகள் நடந்தேறின, பின்னர் முடிவுகள் வெளியாயின.

தொடக்கத்திலேயே ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்களின் மூளையில் இங்கிலீஷ் பொங்கி வழியும் என நம் தமிழ்ப் பெற்றோர்கள் கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள், அல்லவா?

ஆனால் கிடைத்த முடிவுகளோ வேறு. அனைத்தையும் தாய்மொழி ஸ்பானியத்தில் மட்டுமே பயின்ற 3ஆம் குழுவினர் அறிவுத்திறத்தில் மட்டுமல்லாது, ஆங்கில ஆற்றலிலும் முதலிடம் பிடித்தனர். அனைத்தையும் ஆங்கிலத்தில் பயின்ற முதல் குழுவினருக்கோ மூன்றாம் இடந்தான் கிடைத்தது.

இதே அடிப்படையில் தாமஸ், & கால்லியர் ஆய்வு அமெரிக்கக் கல்விதுறையின் நிதியுதவியுடன் 6 ஆண்டு (1996-2001) நடைபெற்றது. ஆனால் இப்போது அந்த 3 குழுக்களில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். மொழிச் சிறுபான்மையினருக்காக இன்றுவரை உலகில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிகப் பெரியது இது. இப்போதுங்கூட தாய்மொழியில் பயின்ற ஸ்பானிய மாணவர்களே அறிவுத் திறனிலும் ஆங்கிலப் புலமையிலும் ஓங்கி நின்றனர்.

ஒரு மாணவர் தாய்மொழி தமிழில் எந்தளவுக்கு வலுவாக இருக்கிறாரோ, அவர் அந்தளவுக்கு ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம் என்றும், உலகின் எந்த அறிவைப் பயிலவும் தாய்மொழி தமிழே சிறந்தது என்றும் தமிழ்க் கல்வியாளர்கள் நீண்ட நாள் கூறி வரும் கூற்றுகளுக்கு இவ்விரு அமெரிக்க ஆய்வுகளே சான்றாகின்றன. நம் தமிழர்களுக்கு நம் தமிழறிஞர்களின் பேச்சுதான் காதில் விழாது. அவர்களே வியந்து நோக்கும் இந்த அமெரிக்கர்களின் பார்வையேனும் காதில் விழுமா?

Pin It

nursery-school-banner 600இருபதாண்டு முன்பு தமிழகத்தில் ஒரு புதிய கல்வி இயக்கமாகப் பிறந்த தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இப்போது கடும் தவிப்பில் உள்ளன. மெல்லத் தமிழ் இனி வாழும் என்று தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வாழ்த்தியது தினமணி பொங்கல் மலர். இது கல்வித் துறையில் ஒரு புரட்சி என்று போற்றினார் தமிழண்ணல். தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும் என்று அமைச்சர்கள் வாக்களித்ததும் உண்டு.

தமிழ்க் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற அவப்பெயரை மாற்றித் தமிழ்நாடெங்கும் தமிழ்ப் பற்றாளர்களின் முயற்சியினால் தமிழ் மக்களின் ஆதரவோடு ஐம்பதுக்கு மேற்பட்ட தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன. இவை தவிர பல பகுதிகளில் தமிழ்வழிப் பள்ளி-களும் இயங்கி வந்தன. இப்போது இவற்றின் எண்ணிக்கை சுருங்கி விட்டது. மாணவர்ச் சேர்க்கை குறைந்து விட்டது என்று எல்லாப் பகுதிகளிலிருந்தும் செய்தி வருகிறது.

தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் இந்த நலிவுக்கு என்ன காரணம்? அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மளமளவென மாற்றுவதில் முனைந்து செயல்படும் தமிழக அரசின் கொள்கையே முதன்மைக் காரணம் எனப்படுகிறது.

மக்களிடம் கல்வி ஆர்வம் மிகுந்துள்ளதே தவிர கல்வித் தெளிவு இல்லை. அரசிடமே தெளிந்த கல்விக் கொள்கை இல்லாத போது மக்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அனைவர்க்கும் கல்வி, அனைத்துக் கல்வியும் தமிழில் என்பதை அரசே ஒரு கொள்கையாக ஏற்று முழுமையாகச் செயல்படுத்துமானால், தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கே தேவையிருக்காது.

ஆனால் அரசின் கொள்கை நேர்மாறாக இருக்கும் போது தமிழையும் சமூகநீதியையும் காப்பதற்கும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கும் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்து நிற்க வேண்டும், அவை வளர்ந்து செழிக்க வேண்டும். இதற்கு அரசு துணைநிற்பது இன்றியமையாதது. இப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குவது, நிலம் ஒதுக்கித் தருவது, கட்டடம் கட்டிக் கொடுப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, விரைந்து ஒப்புதல் அல்லது அறிந்தேற்பு வழங்குவது, கல்வித் துறைக் கெடுபிடிகளை நீக்குவது... இப்படிப் பல்வேறு வழிகளிலும் தமிழக அரசு உதவ வேண்டும்.

அரசு உதவட்டும் என்று தமிழ்ப் பற்றாளர்களும் கல்வி ஆர்வலர்களும் ஒதுங்கி இருந்து விடக் கூடாது. தாய்த் தமிழ்ப் பள்ளிகளைக் காக்கவும் வளர்க்கவும் அவர்கள் ஒல்லும் வகையெல்லாம் உதவிடல் வேண்டும். படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் கிடைத்த நேரமெல்லாம் இப்பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியத் தொண்டர்களாகப் பயிற்சி பெற்றுப் பணியாற்ற முன்வர வேண்டும்.

மக்களிடையே தமிழ்வழிக் கல்வியின் தேவையைப் பரப்புதல் வேண்டும். தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பேற்று இயன்றதனைத்தும் செய்திடல் வேண்டும். இது தமிழ்ப் பணி, கல்விப் பணி, அறிவுப் பணி. நம் கடன் இப்பணி செய்வது என்ற உணர்வோடு செயலாற்ற முன்வாருங்கள் என்று அழைக்கிறோம்!

Pin It

 

maniaasanvenkatraman 600

ஒற்றுமை நோக்கில் ஒரு விவாதம் - 2

(தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி "தமிழ்த் தேசியப் பேரியக்கம்" எனப் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமுன் இக்கட்டுரை எழுதப்பட்டது.)

தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு ஆற்றல்களிடையே கருத்தொற்றுமையும் செயலொற்றுமையும் இப்போதைய உடனடித் தேவைகள் என்று நம்புகிறோம். பதவி அரசியல் போதைக்கு மயங்காத கொள்கைவழிப்பட்ட இயக்கங்கள்தாம் இந்த ஒற்றுமைக்கு நடுவணச்சாகத் திகழ முடியும் என்பதைக் கூறத் தேவையில்லை. கடந்த காலம் கற்பிக்கும் பாடமும் இதுவேதான்.

சென்ற இதழில் (2014 சித்திரை) மே பதினேழு சிந்தனைக்கு (ஒற்றுமை நோக்கில் ஒரு விவாதம்  1) ஒரு சிலவற்றை முன்வைத்திருந்தோம்.  இம்-முறை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி-யோடு விவாதிக்கிறோம்.  

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அண்ணன் திரு பழ. நெடுமாறன் அவர்--களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு 1991 தொடங்கிக் கிட்டத்தட்ட 18 ஆண்டுக் காலம் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்தது. கடுமை

யான நெருக்கடிகளுக்கும் கெடுபிடிகளுக்கும் முகங்கொடுத்துத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவுச் சுடரை அணைய விடாமல் காத்த பெருமை நம் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உரியது.

ஒருங்கிணைப்பு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவிலும் அதன் சார்பில் நடாத்தப்பட்ட கிளர்ச்சி இயக்கங்களிலும் தமிழ்த் தேசப் பொது-வுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும், மற்றத் தோழமைக் கட்சிகள், இயக்கங்-களும் பங்கேற்றுப் பாடாற்றின.

கடந்த 2008இல் போர்நிறுத்தம் முறிவுற்று, சிங்கள முப்படையின் இன அழிப்புப் போர் தொடங்கிய பிறகு ஒருங்கிணைப்புக் குழு ஒரே ஒரு முறைதான் கூடியது. அதன் பிறகு ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டு முனைப்புடன் செயல்பட்டது. நாமும் அந்தச் செயற்பாடுகளில் ஊக்கத்துடன் பங்கேற்ற போதிலும் நம் அமைப்புகளுக்கு  அந்த இயக்கத்--தில் முறைப்படி இடமில்லை. போரை நிறுத்த வேண்டிய அவசியத் தேவை கருதி நாமும் குறையன்றும் சொல்லாமல் அவர்களோடு இணக்கமாக இயங்கி வந்தோம்.

ஆனால் நம் தற்சார்பான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி, பெரியார் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு என்ற கூட்டியக்கத்தை நிறுவி அதன் சார்பில் சென்னை வருமானவரி அலுவலக முற்றுகை, தஞ்சை வானூர்தித் தள மறியல் போன்ற சில போராட்டங்களும்  நடாத்தினோம். போர்நிறுத்தக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் குறுவுத்தியாக (tactic) 2009 மே பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்கப் பரப்புரை செய்வது என்றும் முடிவெடுத்தோம், அதற்காகவே ஈரோடை நகரில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டோம்.

ஆனால் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டார். பெரியார் திராவிடர் கழகம் காங்கிரசை எதிர்ப்பது என்ற அளவோடு நில்லாமல் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்துச் செயல்படத் தொடங்கி விட்டதால் தமிழர் ஒருங்கிணைப்பு கலைந்து விட்டது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலத்தில் தமிழீழத்துக்காகச் செய்ய வேண்டியது என்ன என்பதை முள்ளிவாய்க்கால் - முன்னும் பின்னும் என்ற கட்டுரையில் கோட்பாட்டளவில் முன்வைத்-திருந்தேன். தமிழீழத் தாயகத்தில் மக்கள் போராடு-வதற்கான சனநாயக வெளியைத் தோற்றுவிக்கவும் விரிவாக்கவும் ஏற்ற வகையில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் சிங்கள சிறிலங்காவைத் தனிமைப்படுத்திப் புறக்கணிப்பது என்பதே என் முன்மொழிவின் சாரம்.

ஐநா மனித உரிமை மன்ற விவாதங்களும் தீர்-மானங்-களும் சிறிலங்காவைப் புறக்கணிக்கும் நம் முயற்சிக்குத் துணையாகலாம் என்பதை ததேபொ--கவும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. அதே போது ஐநா நிறுவனங்களின் வரம்புக் கூறு

களைப் பற்றியும், ஏற்றத்தாழ்வான உலக ஒழுங்கின் விளைவாக ஐநாவில்  வல்லரசுகளின் சட்டாம்-பிள்ளைத்தனம், சதியாட்டங்கள் பற்றியும் ததேபொகவுக்கு நாம் சொல்லித்தர வேண்டும் என்ற தேவையில்லை.

ஒன்றை மனத்தில் நிறுத்துவோம். ஈழத்தில் நடந்தது இனக்கொலை என்பதை உலகில் ஒரே ஓர் அரசு கூட இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசல்லாத நிறுவனங்களில் பிறேமெனில் கூடிய நிரந்தரத் தீர்ப்பாயம் மட்டுமே இனக்கொலை நடந்ததாக ஏற்றுக் கொண்டுள்ளது. வேறு யாரும் இதை அறிந்தேற்கவில்லை.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில். . .

கடந்த 2009, 2012, 2013 ஐநா மனித உரிமை மன்ற நடவடிக்கைகள், விவாதங்கள், தீர்மானங்கள், அமெரிக்கா எடுத்த முயற்சிகள், யாவற்றிலும் குறிப்பாக இந்தியா எடுத்த நிலைப்பாடுகள் . . . இந்த ஒவ்வொன்றிலும் ததேபொக, ததேவிஇ பார்வைகளில் அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. தீர்மான உரைகளிலும் வாக்களிப்பு முறையிலும் ஏற்பட்டு வந்த மெல்லிய மாற்றங்-களுக்குக் கொடுத்த அழுத்தங்களில் சிறு  வேறு-பாடுகள் இருக்கலாம். இப்போது அவை பொருட்டில்லை.

ஆனால் 2014 தீர்மானத்தையும் அதன் புற விளைவுகளையும் புரிந்துகொள்வதில் நம்மிடையில் கூர்மையான கருத்து வேறுபாடுகள் முன்-னுக்கு வந்து வெளிப்பட்டன. வேறு பல கட்சிகள், இயக்கங்களாலும் இந்தக் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியவில்லை. மாணவர் போராட்டம், மக்கள் எழுச்சி என்ற கோணத்தில் 2013 போல் 2014 இல்லையே என்ற வருத்தம் உங்களுக்கும் எங்களுக்கும் நம்மையத்த பலருக்கும் உண்டு. இதற்கான காரணங்களில் மேற்சொன்ன கருத்து வேறுபாடுகளுக்கு ஒரு முகாமைப் பங்குண்டு.

விவாதத்துக்குரிய கட்டுரைகள்

எவ்வித உள்நோக்கம் கற்பிப்பதும் கருத்து வேறு-பாடுகளைக் களைய உதவாது என்று உறுதியாக நம்புகிறோம். இந்த அடிப்படையில்தான் மே பதினேழுடன் விவாதித்தோம். இப்போது ததேபொகவுடனும் விவாதிக்கப் போகிறோம். ததேபொக நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக இரு கட்டுரைகளை எடுத்துக் கொள்கிறோம்.

1) தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 மார்ச்சு 16-&31 இதழில் ததேபொக பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரை: கிழித்தெறியப்பட வேண்டிய அமெரிக்கத் தீர்மானம்.

2) தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 ஏப்ரல் 1-&15  இதழில் ததேபொக தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ள கட்டுரை: தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும்.   

முதல் கட்டுரை ஐநா மனித உரிமை மன்றத்தில் முதல் வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் எழுதப்பட்டது. இரண்டாம் கட்டுரை இறுதி வடிவில் தீர்மானம் இயற்றப்பட்ட பின் எழுதப்பட்டது. கி.வெ., பெ.ம. இருவரின் கட்டுரைகளிலும் வெளிப்படும் பார்வைகள் ததேபொகவினுடையவை  மட்டுமல்ல, வேறு பலரும் கூட ஏறத்தாழப் பகிர்ந்து கொள்ளக் கூடியவையே என்பதால், இந்தக் கட்டுரைகளை மையப்படுத்தி விவாதிப்பது இன்னுங்கூடத் தேவையானதாகிறது.

மாறுபாடுகளுக்கு மையமான ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்துத் தமிழ்த் தேசம் ஏட்டில் ஓரடி முன்னே... (2014 சித்திரை) கட்டுரையிலும், பிறகு மே பதினேழு சிந்தனைக்கு (2014 வைகாசி) கட்டுரையிலும் சற்றே விரிவாக எழுதியுள்ளேன். ஆகவே, தவிர்க்கவியலாத இடந்தவிர கூறியது கூறலைத் தவிர்க்கும் அக்கறையோடு இவ்விவா-தத்தைத் தொடர்கிறேன்.

மோசடித் திட்டம்

தோழர் கி.வெ.முதலில் பழைய தீர்மானங்களோடு புதிய தீர்மானத்தை ஒப்பிட்டுக் காட்டி, சேர்க்கைகள் நீக்கங்களைப் பட்டியலிடுகிறார். பதின்-மூன்றாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்று இந்தத் தீர்மானம் முன்மொழிவது ஒரு மோசடித் திட்டமே என்பது சரியானது. ஒன்று பட்ட இலங்கைக்குள்ளும் பதின்மூன்றாம் சட்டத் திருத்தத்துக்குள்ளும் அரசியல் தீர்வு என்பது இலங்கையின் ஒற்றையாட்சி முறைக்குப் பட்டுக்-குஞ்சம் கட்டுவதே தவிர வேறன்று.

ஆனால் இது ஈழத் தமிழர்களை  நிரந்தரமாகச் சிக்க வைக்கும் ஏற்பாடு என்பது மிகையான அச்சம். ஏனென்றால் இந்தத் தீர்மானம் ஈழத் தமிழர்களை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. இந்தத் தீர்மானத்துக்குப் பிறகும் பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட தங்கள் அடிப்படைக் கோரிக்கைகளுக்காகப் போராடத் தமிழர்களுக்கு முழு உரிமை உண்டு.

அமெரிக்கத் தீர்மானமானது தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை என்பது அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைதான் என்பதை மறைப்பதும் மறுப்பதும் உண்மைதான்.

தேசிய இன ஒடுக்குமுறையும் சமய ஒடுக்குமுறையும்

ஆனால் இந்தத் தேசிய ஒடுக்குமுறையில் சமயப் பாகுபாட்டுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆகவேதான் சிங்கள அரசை பௌத்த & சிங்களப் பேரினவாத அரசு என்கிறோம். சிங்கள இனவெறியும் பௌத்த மத வெறியும் இணைந்தே அரசாள்கின்றன.

அண்மையில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மீது சிங்கள & பௌத்த வெறியர்கள் நடத்திய தாக்குதல்களை இனவெறியும் மதவெறியும் கலந்த தாக்குதல்களாக விவரிப்பதில் தவறில்லை. அமெரிக்கத் தீர்மானம் தேசிய இன ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளவில்லை என்பதாலேயே, அது பதிவு செய்யும் மதஞ்சார்ந்த தாக்குதல்களை சிங்கள அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக வகைப்படுத்துவதில் கேடில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளும் உலக அரங்கில் சிறிலங்காவைத் தனிமைப்படுத்தவே துணைசெய்யும் என்பதை மறந்து விடக் கூடாது.

உள்நாட்டு விசாரணையா? பன்னாட்டு விசாரணையா?   

அமெரிக்கத் தீர்மானம் - 2014 தொடர்பாகப் பன்னாட்டு அரங்கில் நம் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்குமான போராட்டம் இறுதியாக ஒரு கேள்வியைத்தான் சுற்றிச் சுற்றி வந்தது: உள்நாட்டு விசாரணையா? பன்னாட்டு விசாரணையா?   

கடந்த 2012, 2013 தீர்மானங்களைக் கவைக்குதவாதவை என்று நாம் மறுதலித்ததற்கு அடிப்-படையே அவை பன்னாட்டு விசாரணைக்கு எள்முனையளவும் இடந்தரவில்லை என்பதுதான். ஆனால் 2014 தீர்மானம் இந்த வகையில் பன்-னாட்டு விசாரணைக்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்தது.

போர்க்குற்றங்கள், மானிடவிரோதக் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என்பதுதான் ஐநா பொதுச்செயலர் அமைத்த மூவல்லுனர் குழுவின் பரிந்துரை. இலங்கைக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கையளித்த மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் பரிந்துரையும் அதுவே. ஆணையரின் இந்தப் பரிந்துரையை வரவேற்பதாக அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவு கூறியது. இது குறித்துக் கி.வெ. எழுதுகிறார்:--

‘இறுதியாக, “இலங்கையில் நம்பகமான கருதத்தக்க விளைவுகளை உருவாக்கும் தேசிய நடவடிக்கைகள் செயல்படாமல் போனால்சுதந்திரமான நம்பக-மான பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்ற ஆணையரின் பரிந்துரையை இம்மன்றம் வரவேற்கிறது....” என்று (அமெரிக்கத் தீர்மானம்) கூறுகிறது.’

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவில் இருப்பதை ஆங்கிலத்தில் படிப்போம்:

"welcomes the high commisioner's recommadations and conclusions regarding ongoing human rights violations and on the need for an independent and credible inqyiry mechanism in the absence of a credible national process with tangible results.... "

(Emphasis addedd)

செயல்படாமல் போனாலா? செயல்படாத நிலையிலா?

தோழர் கி.வெ. in the absences of  என்ற தொடரை செயல்படாமல் போனால் என்று தமிழாக்குவது சரியா? அல்லது செயல்படாத நிலையில் என்பது சரியா? இரண்டும் ஒன்றல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை. செயல்படாமல் போனால் என்பது சரியாக இருக்குமானால் தேசிய நடவடிக்கைகள் (National processes - உள்நாட்டுச் செயல்வழிகள்) செயல்படத் தவறி விட்டன என்ற முடிவுக்கு ஆணையர் இன்னும் வரவில்லை என்று பொருள். செயல்படாத நிலையில் என்பது சரியாக இருக்குமானால் அவர் ஏற்கெனவே அந்த முடிவுக்கு வந்து விட்டார் என்று பொருள். 

ஆணையரின் அறிக்கை என்ன சொல்கிறது? அதை அமெரிக்கத் தீர்மானம் எப்படிப் புரிந்து கொள்கிறது? என்பதைக் கண்டறிய தமிழாக்க நுட்பங்கள் தவிர வேறு வழிகளும் உள்ளன.

ஆணையர் அறிக்கை

ஐநா மனித உரிமை உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் 2014 பெப்ரவரி 24  நாளிட்ட அறிக்கை முதல் பக்கத்தில் கட்டம் கட்டித் தந்துள்ள சுருக்கம் (summary) என்ற பகுதியின் இரண்டாவது பத்தியே இதைத் தெளிவுபடுத்தி விடுகிறது.

“உயர் ஆணையரும் தனி வல்லுனர்களும் வழங்க முன்வந்த செய்நுட்ப உதவியை அரசாங்கம் (சிறிலங்கா) ஏற்கவில்லை. இதற்கிடையில், ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களில் நடந்தவை குறித்துப் புதிய சான்று தொடர்ந்து வெளிப்பட்ட வண்ணமுள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு தற்சார்பான பன்னாட்டு விசாரணைப் பொறி-யமைவை நிறுவும்படி உயர் ஆணையர் பரிந்துரைக்கிறார்.

உள்நாட்டு விசாரணைப் பொறியமைவுகள் செயல்படத் தவறி விட்ட நிலையில், இது (பன்னாட்டுப் பொறியமைவு)   உண்மையை நிலைநாட்ட உதவக் கூடியதாகும்.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

இதே அறிக்கையின் பரிந்துரைகள் என்று தலைப்-பிட்ட இறுதிப் பகுதியில் உயர் ஆணையர் முன்-வைக்கும் முதல் பரிந்துரை இதுதான்:

“74. மனித உரிமை மன்றமானது பன்னாட்டு மனித உரிமைச் சட்ட மீறல்கள், மனிதநேய உரிமைச் சட்ட மீறல்கள் எனும் குற்றச்சாட்டை மேலும் புலனாய்வு செய்யவும், உள்நாட்டுப் பொறுப்புக் கூறல் செயல்வழிகள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்காணிக்கவும் ஒரு பன்னாட்டு விசாரணைப் பொறியமைவை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் ஆணையர் பரிந்துரைக்கிறார். இவ்வாறான ஒரு செயல்வழியில் துணைபுரிய மனித உரிமை உயர் ஆணையர்ப் பணியகம் அணியமாயுள்ளது.”

உள்நாட்டுச் செயல்வழிகளும் பன்னாட்டு விசாரணையும்

இதையடுத்து வரும் 75ஆம் பத்தி சிறிலங்கா அரசுக்கான பரிந்துரைகளைப் பட்டியலிடுகிறது. இந்த இரு பத்திகளுக்கும் இடையில் சார்புறவு ஏதுமில்லை. இந்த 75ஆம் பத்தியைச் செயலாக்கி--னால் அந்த 74ஆம் பத்தியைச் செயலாக்கத் தேவையில்லை என்ற சலுகை ஏதும் தரப்படாத போது, இரண்டும் தனித் தனியானவை, தற்சார் பானவை என்றாகிறது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் உள்நாட்டுச் செயல்வழிகளைக் கைக்கொள்வதன் மூலம் பன்னாட்டு விசாரணை-யிலிருந்து தப்ப முடியாது என்று பொருள். 

ஆகவே, இனிமேல் உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால்தான் பன்னாட்டுப் புலனாய்வு என்று கி.வெ. தரும் பொருள் விளக்-கத்துக்கு அடிப்படையே இல்லை. உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போய் விட்டன என்று பெப்ரவரி 24 அறிக்கையிலேயே நவநீதம் பிள்ளை திட்டவட்டமாக அறிவித்த பிறகு, மார்ச்சு தொடக்கத்தில் வரைவு பெறும் அமெரிக்கத் தீர்மானம் ‘உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால்’ என்ற சொற்றொடரை உயர் ஆணையரின் அறிக்கைக்குள் திணிக்கு-மானால் அது திரிபு வேலையே தவிர வேறன்று. ஆனால் அமெரிக்கத் தீர்மானம் உயர் ஆணையர் அறிக்கையை அப்படித் திரித்திருந்தாலோ தவ-றாகப் புரிந்து கொண்டிருந்தாலோ நவநீதம் பிள்ளையே முதல் ஆளாக அதை மறுத்துரைத்-திருப்பார்.

தீர்மானத்திலேயே அகச் சான்று

அமெரிக்கத் தீர்மானம் அப்படித் திரிக்கவோ தவறாகப் புரிந்து கொள்ளவோ இல்லை என்-பதற்கு தோழர் கி.வெ. எடுத்துக்காட்டும் வரைவுத் தீர்மானத்திலேயே அகச் சான்று உள்ளது. கி.வெ. எடுத்துக்காட்டும் எட்டாம் பத்திக்கு மேல் முதல் பத்தி சொல்வது ஐயத்துக்கிடமற்றது:

“சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் ஊக்கி வளர்ப்பது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஆணையர்ப் பணி-யகம் 2013 செப்டம்பர்  25இல் வாய்மொழியாகத் தெரிவித்த  நடப்புநிலையையும் 2014 பெப்ரவரி 24இல் அளித்த அறிக்கையயும், அவற்றில் அடங்கிய பரிந்துரைகள், முடிவுகளையும் [இத்-தீர்மானம்] வரவேற்கிறது....”

உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால் என்று கி.வெ. புரிந்து கொள்ளும் நிபந்தனைக்கு இங்கு இடமே இல்லை. உள்நாட்டுச் செயல் வழிகள் செயல்படாமல் போய் விட்டன என்ற முடிவுக்கு உயர் ஆணையர் முன்பே வந்து விட்டார் என்பதற்கு இந்தத் தீர்மான வரை-விலேயே நேர்ச் சான்று இருப்பதை கி.வெ. கவனிக்கத் தவறி விட்டார். வரிசையாக 1, 2, 3... என்று எண்ணிடப்பட்ட முடிவுரைப் பத்திகளுக்கு மேல் வரும் பகுதியை முகப்புரை எனலாம். இந்த முகப்புரையின் இறுதிக்கு முந்தைய பத்தி [ Recalling the High commisioner's conclusion.....என்று தொடங்கும் பத்தி] இதைத் தெளிவாக்குகிறது:

“உண்மையை நிறுவி நீதியை நிலைநாட்ட உள்-நாட்டுப் பொறியமைவுகள் செயல்படத் தவறுவது  விடாத்தொடர் நிகழ்வாகி விட்டது என்ற முடிவுக்கு உயர் ஆணையர் வந்திருப்பதையும், பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், மனிதநேயச் சட்டங்கள் மீறப்பட்ட நிகழ்வுகளை மேலும் புலனாய்வு செய்யவும், உள்நாட்டுப் பொறுப்புக் கூறல் செயல்வழிகள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்காணிக்கவும் மனித உரிமை மன்றம் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்தவும் அவர் பரிந்துரை செய்திருப்பதையும் [இத்தீர்மானம்] நினைவு-கூர்கிறது.”                                                                           

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

இது சற்றே நீண்ட வாக்கியம் என்பதால் செய்தி--களை உடைத்துப் பார்ப்போம்: (1) உள்நாட்டுப் பொறியமைவுகள் செயல்படாமல் போய் விட்டன என்ற முடிவுக்கு உயர் ஆணையர் வந்து விட்டார். (2) பன்னாட்டுப் பொறியமைவை ஏற்-படுத்த வேண்டும் என்பது அவரது திட்டவட்ட-மான பரிந்துரை. இதற்கு நிபந்தனை ஏதுமில்லை. (3) உள்நாட்டுச் செயல்வழிகள் ஏதும் இருப்பின் அவற்றையும் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு கண்காணிக்க வேண்டும். (4) இந்த உண்மைகளை அமெரிக்கத் தீர்மானம் நினைவு-கூர்கிறது.

முன்முடிவே காரணமா?

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, இப்-போதே! இது தமிழர்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு அட்டியின்றி ஆதரவு தருவதுதான் நவநீதம் பிள்ளை அறிக்கை. அந்த அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் அமெரிக்காவின் முதல் வரைவுத் தீர்மானம் வரவேற்கிறது என்பதுதான் முகாமையான செய்தி. தோழர் கி.வெ. இதைக் காணத் தவறுவது ஏன்? தவறான புரிதலே என்று நம்ப முடியவில்லை. அமெரிக்கத் தீர்மானத்தை முன்பு எதிர்த்தோம், இம்முறையும் அடியோடு எதிர்க்கத்தான் வேண்டும் என்ற முன்முடிவோடு அணுகியதுதான் காரணமா? யாமறியோம்.

பிறேமன் தீர்ப்பாயத்தின் ‘இனக் கொலை’த் தீர்ப்பைத் தோழர் கி.வெ. எடுத்துக்காட்டுவது சரியானது. இனக்கொலை, போர்க் குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை-மீறல்கள் ஆகிய அனைத்துக் குற்றச் சாட்டுகள் குறித்தும் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என்பதுதான் நம் அழுத்தமான கோரிக்கை.

கி.வெ. தரும் தவறான தகவல்கள்

ஆனால் “சேனல் நான்கு தொலைக்காட்சி சிங்களப் படையாட்களின் கைப்பேசியின் வழி கிடைத்த படத் தொகுப்புகளைக் கொண்டே நடந்திருப்பது இன அழிப்புதான் என உறுதிபடக் கூறுகிறது” என்று கி.வெ. சொல்வது தவறு. நடந்திருப்பது இன அழிப்புதான் என்று சேனல் நான்கு ஒருபோதும் உறுதிபடக் கூறவில்லை. இதை இயக்குனர் கலம் மக்ரே அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார். இன அழிப்புதான் என்று வரையறுப்பதற்கு குற்றமுறு உள்நோக்கம் (criminal intent) மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கமளித்தும் உள்ளார்.

தோழர் கி.வெ. அமெரிக்கத் தீர்மானத்தின் பல பித்தலாட்டங்களையும்  எடுத்துக்காட்டுவதில் நமக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்ய அது வழங்கும் வாய்ப்பை அவர் காணத் தவறுவதுதான் பிழை. இந்தத் தீர்மானத்தால் ஒரு பயனும் இல்லை என்று காட்டும் ஆர்வத்தில் தவறான தகவல் தருகிறார். சான்றாக,

“... இனக் கொலையாளிக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இராசபட்சே நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்தி நிலைமையை மேம்படுத்த வேண்டுமாம். அவ்-வாறு நம்பகமான விசாரணை நடத்தி தவறிழைத்த-வர்கள் மீது இராசபட்சே நடவடிக்கை எடுக்கி-றாரா என்று கண்காணித்து ஐநா மனித உரிமை ஆணையர் அடுத்த 2015 மார்ச்சில் அறிக்கை அளிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு மனித உரிமை மன்றம் மேல் முடிவு எடுப்பதைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்கிறது தீர்மானம்.”

ஆகா, இது கி.வெ.யின் கண்டுபிடிப்பு! தீர்மானம் இப்படி எதுவும் எங்கும் சொல்லவில்லை. ஒரு-வேளை தீர்மானத்துக்கு அவர் இப்படிப் பொருள்விளக்கம் கொள்வதாக இருக்கலாம். அதாவது இது ஒரு வகையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானம் என்பதை அவர் மறுக்க விரும்பலாம். பன்னாட்டுப் புலனாய்வே வந்தாலும் அது  2015 மார்ச்சுக்குப் பிறகுதான் என்று அவர் சொல்ல வருகின்றாரோ?

இந்த 2014 சூன்,- சூலையிலேயே புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டனவே, இது ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்துக்குப் புறம்பானது எனக் கி.வெ. கருதுகிறாரா?

அமெரிக்கத் தீர்மானம் பன்னாட்டுப் புலனாய்-வுக்கு வழிகோலுமா? கோலாதா? என்ற கேள்வி-யில்தான் கி.வெ. பார்வையுடன் முரண்படுகிறோம். மற்றச் செய்திகளில் பெரிதாக விவாதிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை.

பன்னாட்டுப் புலனாய்வுதான் ஈடுசெய் நீதிக்கான போராட்டத்தில் தமிழர்கள் கைப்பற்ற வேண்டிய அடுத்த கண்ணி என்று நம்புகிறோம். இதைக் கண்டுகொள்ளாமல் தாவிப் பாயும் முயற்சிகள் தமிழர்களின் போராட்டத்துக்கு உதவ மாட்டா. இப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் தமிழர்களுக்-கென்று கி.வெ. முன்மொழியும் மூன்று கோரிக்கை-களில் முதலாவது:

“இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அங்கு இப்போதும் தொடர்வது தமிழின அழிப்பு என்பதைப் பன்னாட்டுச் சமூகம் ஏற்க வேண்டும், இக்குற்றச்சாட்டின் மீது இராசபட்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் மீது தற்சார்பான பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை மேற்-கொள்ளப்பட வேண்டும்.”

நாம் இங்கே சர்வதேசச் சட்டங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால், அந்தச் சட்டங்-களின் படி சர்வதேசச் சமூகம் என்றால் என்ன? ஐநா அமைப்பா? அதன் பொதுப் பேரவையா? பாதுகாப்பு மன்றமா? மனித உரிமை மன்றமா? பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமா? சர்வதேசச் சமூகம் என்பது அரசுகளின் சமூகம்தான் என்-றால் அவற்றில் விரல்விட்டு எண்ணத்தக்கவை கூட - ஏன், ஒன்றிரண்டு கூட -- உடனடியாக உங்கள் கோரிக்கையை ஏற்க வாய்ப்பில்லை. பெரும்பான்மை நாடுகள் தமிழின அழிப்பு என்-பதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் பன்னாட்டுப் புலனாய்வு என்றால், நீங்கள் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகப் பொருள். இது இனக் கொலையாளிகள் எவ்வித விசாரணையிலிருந்தும் தப்பித்துக் கொள்ள வழி ஏற்படுத்தித் தரும்  கோரிக்கையே தவிர வேறல்ல. 

அமெரிக்கத் தீர்மானத்தை ஒரு படி முன்னேற்றம் என்று பார்ப்பது அழிவுப் பார்வை என்று சாடு-கிறீர்கள். இந்தத் தீர்மானத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று ஆவேச அறைகூவல் விடுக்கின்-றீர்கள். சரி, இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் உலக நாடுகளிடம், குறிப்பாக இந்தியாவிடம் கோரிக்கை வைத்தீர்களா? இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த-வர்களையும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியவர்களையும் பாராட்டினீர்களா? இந்தத் தீர்மானத்தையட்டி ஐநா மனித உரிமை ஆணையர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்களா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் அமெரிக்கத் தீர்மானம், அதற்குள் மறைந்திருக்கும் இந்திய--&சிங்கள சதித் திட்டங்கள் பற்றியெல்லாம் எச்சரிக்கையாக இருந்து, தமிழ் மக்களையும் எச்சரிக்க விரும்புவதில் தவறில்லை. ஆனால் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்--தாலும் உலக சனநாயக ஆற்றல்களின் ஆதரவாலும் புறநிலையில் வளர்ந்து வரும் முன்னேற்றங்களைக் காணத் தவறி விடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகிறோம்.

ஆனால் ஐநா மனித உரிமை மன்றத்தில் அல்பேனியா முதல் வட அமெரிக்கா முடிய 39 நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேறிய பிறகும், அது எத்தனையோ குற்றங்குறைகளுக்கு நடுவிலும் விளைவளவில்  பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானம் என்பது தெளிவான பிறகும், தமிழ்த் தேசப் பொது-வுடைமைக் கட்சி தன் நிலைப்பாட்டைச் சிறிதும்  மாற்றிக் கொள்ளவில்லை என்பது தோழர் பெ.ம. எழுதியுள்ள கட்டுரையிலிருந்து தெரிகிறது.

கி.வெ.யை மறுக்கும் பெ.ம.

பெ.ம. முன்வைக்கும் வாதங்களைக் கருதிப் பார்க்குமுன், கி.வெ. தூணாக நம்பியிருக்கும் ஆதாரம் ஒன்றை அவர் தம்மையறியாமல் பெயர்த்-தெறிவதைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை எனக் கருதுகிறோம். அதாவது, உள்நாட்டுச் செயல்வழிகள் செயல்படாமல் போனால் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை என்பது தான் கி.வெ.யின் புரிதல். ஆனால் பெ..ம. இறுதித் தீர்மானத்தின் பத்தாம் பத்தியை எடுத்துக்காட்டுகிறார்:

“தொடர்ந்து கொண்டுள்ள மனித உரிமை மீறல்-கள் மீது நடவடிக்கை எடுக்க நம்பகமான உள்-நாட்டுச் செயல்முறைகள் இல்லாததால் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு தேவை என்று மனித உரிமை ஆணையர் அலுவலகம் பரிந்துரைத்தது.”

(அழுத்தம் சேர்க்கப்பட்டது)

 மனித உரிமை ஆணையரின் பரிந்துரையைப் புரிந்து கொள்வதிலேயே பெ.ம., கி.வெ. தங்களுக்குள் மாறுபடுகிறார்கள் என்றாலும் அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் தீர்மானத்தைக் கிழித்தெறியும் கருத்தில் உடன்படவே செய்கிறார்கள்.

என்ன சொல்கிறார் தோழர் பெ.ம.? ஈழத் தமிழர் இனக்கொலை மீது  இலங்கை அரசைத்  தண்டிப்--பது  தொடர்பான  சிக்கல்களில் அமெரிக்காவும் இந்தியாவும் கடைப்பிடிக்கும் உத்திகள் ஆரிய சூழ்ச்சித் திட்டங்களை ஒத்தவை என்கிறார்! ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் அனுகூலச் சத்துரு உத்தி சார்ந்தது என்கிறார்! அமெரிக்கா--&-இந்தியா---&இலங்கை மூன்று நாடுகளும் திரைக்குப் பின்னால் கூட்டாகப் பேசித் திரைக்குப் பின்னால் ஒத்திகையும் நடத்தி விட்டு அரங்கத்தில் எதிரும் புதிருமானவர்களாக நின்று வசனம் பேசி நாடகம் நடத்தியிருப்பது அம்பலமாகி விட்டது என்கிறார்!

ஆரிய சூழ்ச்சித் திட்டங்கள், அனுகூலச் சத்துரு உத்திகள், ஆதிக்க அரசுகள் அரங்கேற்றும் நாடகங்கள்... எல்லாம் சரி. ஆனால் வரலாறு என்பதே இவ்வளவுதானா? மக்கள் போராட்டங்-கள், சனாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான அயரா முயற்சிகள், வெளிப்பட்டு வரும் உண்மை-களின் தாக்கம், பன்னாட்டு அரங்கிலான ஆதிக்கப் போட்டிகள், அரசுகளுக்கிடையிலான புவிசார் அரசியல் முரண்பாடுகள் ...

இவற்றுக்-கெல்லாம் நிகழ்ச்சிப் போக்குகளை நிர்ணயிப்பதில் எந்தப் பங்கும் இல்லையா?  எல்லாவற்றையும் அரண்மனைச் சூழ்ச்சிகளாகவும் நாடக அரங்-கேற்றங்களாகவும் கற்பித்து விளக்கமளிப்பது மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையாகுமா? வர்க்கப் போராட்டங்கள், இனப் போராட்டங்கள் உள்ளிட்ட சமூக ஆற்றல்களின் நலமோதல்களையும் மக்கள் போராட்டங்களையும் கனத்த புத்தகப் பக்கங்களில் பூட்டி வைத்து விட்டு, ஆரிய சூழ்ச்சிகளையும் அனுகூலச் சத்துரு உத்திகளையுமே உருவிக் கொண்டு கிளம்புவது கருத்துமுதல்வாதமாகாதா? ஐந்-தாண்டுக் காலத்திய உலக நிகழ்வுகளையும் அவற்றின் பிரதிபலிப்புகளையும் தூலமாக ஆய்ந்து மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கணக்கில் கொள்ள மறப்பது இயக்க மறுப்பியல் ஆகாதா?

‘டமாரம்‘ அடித்தது யார்?

அமெரிக்கத் தீர்மானம் வருமுன்பே டெசோவும் கருணாநிதியும் அதை ஆதரிக்கச் சொல்லித் தீர்மானம் இயற்றியது குறித்து பெ.ம. வினாத் தொடுப்பது சரி. நமக்கு அதில் மாற்றுக் கருத்-தில்லை. ஆனால் கருணாநிதியைச் சாடும் அதே தொனியில் பெ.ம. நம்மையும் ஒரு பிடி பிடிக்கிறார்:

“கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம் நிறைவேற்றிய தீர்மானத்தை விடப் புரட்சிகரத் தீர்மானம் இந்த ஆண்டு வந்துள்ளது, தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமாறு அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது என்று புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும், தமிழ்நாட்டுத் தமிழர்களில் ஒரு சாராரும் டமாரம் அடித்துத் திரிந்தனர்.”

இப்படி டமாரம் அடித்துத் திரிந்தவர்கள் யார் என்று பெ.ம. திட்டவட்டமாக இனங்காட்டட்டும். விவாதத்துக்குரிய அந்தத் தீர்மானத்தைப் புரட்சிகரத் தீர்மானம் என்று நாம் ஒரு போதும் குணங்குறிக்கவில்லை. பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமாறு அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது என்று நாம் ஒருபோதும் டமாரம் அடிக்கவும் இல்லை.

எமது கூட்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ் (இப்போது இளந்தமிழகம்) ஆகியவற்றின் சார்பில், மார்ச் 2014: தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே இலக்கு என்ற தலைப்பில் நாங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையைப் பெ.ம. படித்திருக்க வேண்டும். அந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை நேரடியாகவோ சுற்றடியாகவோ புரட்சிகரத் தீர்மானம் என்று நாங்கள் குணங்-குறித்துள்ளோமா? கூட்டறிக்கை--யில் இப்படிச் சொல்கிறோம்:

“... இலங்கை அரசு நம்பகமான தேசியச் செயல்-முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் தற்சார்-புள்ள பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்று விட்டு அத்தகையதோர் பொறியமைவை ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை...”

முழு அறிக்கையையும் படித்து விட்டு, எங்கே டமார ஓசை கேட்கிறது என்று பெ.ம. எடுத்துக்-காட்டட்டும். அமெரிக்கச் சூழ்ச்சி, இந்தியச் சதி என்றெல்லாம் பொத்தம்பொதுவாகப் பேசாமல் வரைவுத் தீர்மானத்திலிருந்தே உரிய அகச் சான்றுகளை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“இனக்கொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் இத்தீர்மான வரைவு ஏற்கத்தக்க-தன்று” என்று எமது கூட்டறிக்கையில் முரசரைந்-திருக்கிறோமே, இதற்குப் பெயர்தான் டமாரமா? தீர்மானத்தின் மீது தோழர் பெ.ம. முன்வைக்கும் குற்றாய்வுகள் பெரும்பாலும் எமது கூட்டறிக்-கையிலும் இன்னுங்கூடக் கூர்மையாகவும் துல்லியமாகவும் --இடம்பெற்றிருப்பதை அவர் கருத்தில் கொள்ளாதது ஏன்?

கோரிக்கை இல்லாத வெற்று முழக்கம் 

யாரிடமும் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் நழுவி ‘அமெரிக்கத் தீர்மானத்தைக் கிழித்தெறி-வோம்!’ என்று ஆவேச முழக்கமிடுவதில் எமக்கு நம்பிக்கை இல்லை. கூட்டறிக்கையின் இறுதிப் பத்தியில் தமிழர்களின் கோரிக்கையைத் தெளிவாக முன்வைக்கிறோம்:

“அமெரிக்கத் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவிப்பது, எதிர்ப்புத் தெரிவிப்பது என்ற அள-வோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் கோருவது போன்ற தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நமது போராட்-டத்தை இந்திய அரசை நோக்கிக் குவிமையப்படுத்த வேண்டும்.” 

இந்தப் பார்வையில் நீங்கள் காணும் குற்றமென்ன? சொல்லுங்கள் தோழரே!

தோழர் பெ.ம. சொல்கிறார்:

“இத்தீர்மானத்தை ஏற்கச் செய்ய, புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்களையும் வளைத்துப் போட, அமெரிக்கா இரண்டு மாதங்களாக எல்லாச் சித்து வேலை-களிலும் ஈடுபட்டது. ஏற்கெனவே அமெரிக்கா &-இந்தியா & கருணாநிதி அச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அந்த அச்சில் சுழலும் ஆரக்கால்களாகச் சில தமிழின உணர்வு அமைப்புகளும், சில உணர்-வாளர்களும் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.”

அவதூறுகள்

தோழர் பெ.ம. அவர்களே! கருத்துப் போர்வாள் கைநழுவி விட்டதாலோ  என்னவோ, கையில் கிடைத்ததையெல்லாம் அள்ளி வீசுகின்றீர்கள். அமெரிக்கச் சித்து வேலைகளால் வளைத்துப் போடப்பட்ட புலம் பெயர் தமிழர்களும் தமிழ்-நாட்டுத் தமிழின உணர்வாளர்களும் யார்? யார்?

உலகத் தமிழர்களின் பொறுப்புவாய்ந்த பல்வேறு அமைப்புகள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை (USTPAC) ... இவை போன்ற தமிழர் அமைப்புகள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள், அரசியல் செயற்பாடுகள், மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்து இவ்வமைப்புகள் எடுத்துள்ள கூட்டு நிலைப்பாடு...

இவை குறித்தெல்லாம் ததேபொக மௌனம் காப்பது ஏன்? இலங்கை அரசமைப்புக்குட்பட்டு, தமிழீழக் குறிக்கோளைத் துறந்து விட்டு மாகாண சபை அரசியல் செய்து வரும் பெரியவர் சம்பந்தனைக் குற்றாய்வு செய்வதோடு நிறுத்தி கொள்கின்றீர்களே, உலக அளவில் அரும்பாடுபட்டு வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும், அவற்றின் நிலைப்பாடுகளையும் கணக்கில் கொள்ளத் தேவை இல்லையா? இந்த அமைப்புகளை சிங்கள அரசு தடை செய்திருப்பதும், அந்தத் தடையை இந்தியா ஆதரிப்பதும் கூட நாடகம்தானா?

அமெரிக்கா&இந்தியா&கருணாநிதி அச்சில் சுழலும் ஆரக்கால்களாகத் தங்களைப் பொருத்திக் கொண்ட அந்தச் சில தமிழின உணர்வு அமைப்பு-கள் எவை? உணர்வாளர்கள் எவர்? வெளிப்படை-யாகச் சொல்லி உங்கள் குற்றச்-சாட்டுகளை மெய்ப்பிக்க முன்வாருங்கள்.

விபரீத விளக்கம்

மெய்க்கூறுகளிலிருந்து உண்மையை அடைவது (from facts to the truth), தூலமான சிக்கல்களைத் தூலமாக அணுகுவது ஆகிய லெனின் வழிமுறைகளை அறியாதவரல்லர் பெ.ம. ஆனால் இறுதித் தீர்மான உரையை எப்படிப் படித்துப் புரிந்து கொள்கிறார், பாருங்கள்:

“... இராசபட்சே அனுமதித்தால் மனித உரிமை ஆணையர் அறிவுரை வழங்கலாம். கவனிக்க வேண்டும். அது கூட குற்றப்புலனாய்வு செய்-வதற்கல்ல, அறிவுரை கூறுவதற்கு! சுதந்திரமான அதிகாரம் படைத்த பன்னாட்டு வல்லுனர்களைக் கொண்ட குழு குற்றப் புலனாய்வு செய்வது என்ற கோரிக்கையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது அமெரிக்கத் தீர்மானம்.’

மனித உரிமை ஆணையர் கட்டளைப்படியான புலனாய்வுக்கு வழி செய்வது 10ஆம் பிரிவு. மனித உரிமை ஆணையர் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று அறிவுரையும் தொழில்நுட்ப உதவியும் வழங்குவது பற்றியது 11ஆம் பிரிவு. இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பி, புலனாய்வுக்கே இலங்கை அரசின் ஒப்புதல் தேவை என்று தவறாகப் பொருள்விளக்கம் தருகிறார் பெ.ம.

அமெரிக்கத் தீர்மானம் இனப்படுகொலை பற்றிய புலனாய்வு என்று கூறா விட்டாலும் போர்க் குற்றம் என்று கூறுகிறது எனப் பூரித்துப் போனார்கள் என்று பெ.ம. குறிப்பிடும் அந்தத் தமிழின உணர்வாளர்கள் யார்? போர்க் குற்றத்திற்குள் இனப்படுகொலைக் குற்றமும் இடம் பெறும் என்று விரித்துரைத்த அந்த விளக்கவுரை விற்பன்னர்கள் யார்?

போர்க் குற்றங்களும் இனக்கொலையும்

ஆனால் அமெரிக்கத் தீர்மானத்தில், “இலங்கையில் இரு தரப்பினரும் நடத்திய மனித உரிமை மீறல்--களையும் ... அவை தொடர்பான குற்றங்களையும் விரிவாகப் புலனாய்வு செய்யவும்...” என்று சொல்லப்பட்டுள்ளதே, “அவை தொடர்பான குற்றங்கள்” என்பதில் போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் என்பவற்றோடு இனக் கொலைக் குற்றத்தையும் சேர்க்க வேண்டும் என்று நாம் வாதிட வாய்ப்புள்ளது என்பது என் கருத்து.

இறுதித் தீர்மானத்தின் சாரம்தான் என்ன? திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலைக் கழகம், தமிழ்--நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ் (இளந்தமிழகம்) ஆகியவற்றின் கூட்டறிக்கை (பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்யும் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறியது!) சொல்கிறது: 

“இத்தீர்மானம் இலங்கை அரசு நம்பகமான தேசியச் செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் பன்னாட்டுப் புலன் விசாரணைக்கான பொறியமைவு ஒன்று அவசியம் என்ற ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் நவிப் பிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் கவனத்தில் கொள்கிறது. கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கால வரையறைக்குள் (2002 முதல் 2009 வரை) இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஐநா மனித உரிமை மன்ற ஆணையர்ப் பணியகத்தைக் கேட்டுக் கொள்கிறது....”

இது ஒரு தற்சார்பான கட்டளை என்பதைப் புரிந்து கொள்ளப் பெரிய சட்டப் புலமை ஏதும் தேவையில்லை. 11ஆம் பிரிவுக்குத் தோழர் பெ.ம. புரிந்து  கொள்வது போல் பொருள் கொண்டால், குற்றம் பற்றிப் புலனாய்வு செய்யக் குற்றவாளியின் இசைவு தேவை என்று பொருள்படும். ஐநா மனித உரிமை மன்றம் இவ்வளவு முட்டாள்தனமாக முடிவெடுத்தால் உலகத்தின் நகைப்புக்கு இடமாகி விடாதா? தீர்மானத்தை எதிர்ப்பவர்களோ ஆதரிப்பவர்களோ, யாருமே பெ.ம. தரும் விபரீத விளக்கத்தைத் தரவில்லை. அவ்வளவு ஏன்? இலங்கை அரசு கூட தீர்மானத்தின் இந்தப் பகுதியை இப்படி விளக்க முற்படவில்லை. பெ.ம. சொல்வதுதான் சரி என்றால் இலங்கை அரசு இத்தீர்மானத்தை எதிர்க்க வேண்டியதில்லை, தனக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.

கமுக்கம் என்ன?

முதல் படியாக அமெரிக்கத் தீர்மானத்தைப் பிடித்துக் கொண்டு மேலேறுவோம் என்று தர்க்கம் பேசியவர்களை நாங்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தெரிந்தே நூலாம்படை அணியை உருவாக்கியவர்கள் யார்? அதில் ஏதோ கமுக்கம் இருப்பதாகச் சொல்கிறீர்களே, அந்தக் கமுக்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், அனைவர்க்கும் உதவியாக இருக்கும்!

மார்க்சிய வெளிச்சத்தில் தமிழ்த் தேசியத்துக்குச் செறிவூட்டிய முன்னோடிகளில் ஒருவரென நான் மதிக்கும் தோழர் பெ. மணியரசன் கூர்மையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டிய ஒரு விவா-தத்தைத் துப்பறியும் கதை போல் அணுகுவது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. 

இறுதியில் தோழர் பெ.ம. அறைகூவி அழைக்கின்றார்:

“தமிழகத் தமிழின உணர்வாளர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மீண்டும் ஒருங்கிணைந்து முழக்கங்கள் எழுப்புவோம்!”

ஒன்றுபடுவோம் போராடுவோம்

ஒற்றுமைக்கான அழைப்பு என்ற வகையில் இதை வரவேற்கிறோம். ஒரு வகையில் தற்சார்-புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்கப்பட்டு விட்டது, அதற்கு சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லாதிக்கமும் தடைபோட வரிந்துகட்டி நிற்கின்றன, இந்தத் தடைகளை வென்று, சிங்களப் பேரினவாத அரசை எதிர்த் தடைகளால் முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழக மக்-களைத் திரட்ட ஒன்றுபட்டு அணிவகுப்போம்.

உலக அரங்கில் மாற்றங்கள் வரும் என்று பெ.ம. சொல்கிறார். ஏற்கெனவே அவை சிறு அளவிலாவது வரத் தொடங்கி விட்டன என்பதை அறிந்தேற்றுத் திட்டமிட்டுச் செயல்பட்டால், அவரும் நாமும் விரும்புவது போல் நம் கோரிக்கைகள் ஏற்கப்படும் நிலை விரைவில் வரும்!

Pin It

madhimaran 350(பார்ப்பனக் குலத்தில் பிறந்த பேராசிரியர் நீலகண்டையர் என்பவர் தமிழைத் தாழ்த்தியும் ஆங்கிலத்தை உயர்த்தியும் சொன்ன போது, பாரதியார் பொங்கியெழுந்து சுதேசிமித்திரன் ஏட்டில் ஒரு கட்டுரை எழுதினார். பாரதியாரின் அளவு கடந்த தமிழ்மொழிப் பற்றுக்குக் கீழ்க்காணும் அவரின் கட்டுரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் தமிழர்கள் படித்துத் தமிழுணர்வு பெறுக!)

3 ஏப்ரல் 1916

கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் 'மாடன் ரெவ்யூ' என்ற மாதப் பத்திரிகையின் தை- மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுது போக்கின் பொருட்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் ஸ்ரீ நீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதியிருக்கிறார். ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து ஸ்ரீ ஐயர் தமது கருத்துக்களை வெளியிடுகிறார்.

கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கிலீஷீல் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண் தொல்லையாக முடிகிறெதென்றும் தேச பாஷைகளிலே கற்றுக் கொடுத்தால் நல்ல பயன் விளையுமென்றும் ஸ்ரீ சர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட செய்தியைச் சொன்னார். அதற்கு நமது திருநெல்வேலிப் பண்டிதர் சொல்கிறார்: "பாஷைத் தொல்லை பெருந் தொல்லையாகவே இருக்கிறது.

ஆனால் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் தேச பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிக பயன்படுமென்று சொல்வதற்கில்லை. எனது மாணாக்கர்களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வழக்குப் பிழைகளும் நிறையச் செய்த போதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீஷை நன்றாக எழுதுகிறார்கள். சரித்திர விஷயங்களை வியவஹரிக்கும் போது எனக்கும் இங்கிலீஷ் தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது."

இங்ஙனம் எழுதுகிற ஸ்ரீ நீலகண்டையரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!!

மேலும் இவர் தமக்குத் தாய் மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப் போனார் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர், ஸ்விஸ் ஜாதியார், இத்தாலி தேசத்தார், ஹாலந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள்.

இப்போது தான் ஹிந்து ஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கிறார்கள்; கவிகள் இருக்கிறார்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத்தார் தெரிந்து கொள்ளும்படி செய்து வருகிறார்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது.

என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம் போல் விளங்கு-கிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப் போல வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.

இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறி-வேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை.

நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவா விட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக் கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.

Pin It

naveethan pillai- 300நவி பிள்ளை என்கிற நவநீதம் பிள்ளை 1941 செப்டம்பர் 23ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணம் டர்பன் நகரத்தில் தமிழ் வம்சாவழிக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை பேருந்து ஓட்டுனர். 1965இல் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1988இல் ஆர்வட் கல்லூரியில் பயின்று முதல் தென்னாப்பிரிக்கராகச் சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

1967இல் நடால் மாகாணத்தின் வெள்ளையரல்லாத முதல் பெண் வழக்குரைஞரானார். அது இனஒதுக்கல் காலம் என்பதால் நீதிபதி அறைகளுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர் வழக்குரைஞராகப் பணியாற்றிய 28 ஆண்டுக் காலத்தில் இனஒதுக்கலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினார். இனஒதுக்கல் சட்டங்களால் சிறைப்படுத்தப்பட்ட பலருக்காகவும் வாதாடினார்.

பெரும் போராட்டங்கள் நடத்தி ராபன் தீவில் சிறைப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பலருக்கும் வழக்குரைஞரைச் சந்திக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். இல்ல வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கெனப் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தினார். ஈக்வாலிட்டி நவ் (இப்போதே சமத்துவம்) என்னும் பன்னாட்டுப் பெண்கள் அமைப்பை 1992இல் நிறுவினார்.

1995இல் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நெல்சன் மண்டேலா இவரைத் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் வெள்ளையரல்லாத முதல் பெண் நீதிபதி-யாக்கினார். அப்போதுதான் முதன் முதலாக அவருக்கு நீதிபதி அறைக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு சில காலம் பணி-யாற்றிய உடனேயே, அவர் ருவாண்டாவுக்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக ஐநா பொது அவையால் அமர்த்தப்பட்டார். அப்போதுதான் ஜீன்-பால் அக்கேசு என்னும் வழக்கில் பாலியல் வல்லுறவும் வன்கொடுமையும் இனக்கொலையே என்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பை அளித்தார்.

அப்போது நவநீதம் பிள்ளை கூறினார்: "காலங்காலமாகவே பாலியல் வல்லுறவு என்பது போர் வெற்றியாகவே கருதப்பட்டு வருகிறது. இப்போது அது போர்க் குற்றமாகக் கருதப்படும். நாம் இதன் மூலமாகத் தெரிவிக்க விரும்பும் அழுத்தமான செய்தி என்னவென்றால், கற்பழிப்பை இனியும் போர் வெற்றிக்குக் கிடைத்த ஒரு விருதாகக் கருத முடியாது."

2003 பிப்ரவரியில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிமன்றக் குழுவில் அமர்த்தப்பட்டார். 2008 சூலை 24ஆம் நாள் ஐநா மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஆணையர் ஆனார். 2009இல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு முடிந்த நாள் தொட்டு இலங்கை உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்களையும் பிற மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துவதிலும் அவற்றுக்கான நீதி கிடைக்கச் செய்வதிலும் அவர் ஆற்றிய அறிவார்ந்த, துணிவார்ந்த பங்கை உலகத் தமிழினம் மட்டுமல்ல, மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் மதித்துப் போற்றுவர்.

இப்போது ஐநா மனித உரிமை மன்றத்தின் சார்பில் தொடங்கப் பெற்றுள்ள பன்னாட்டுப் புலனாய்வுப் பொறி-யமைவைத் தக்கவாறு ஏற்படுத்துவதில் நவநீதம் பிள்ளை வகித்த பங்கு வரலாற்றில் என்றும் நினைக்கப்படும்.

ஐநா மனித உரிமை மன்ற உயர் ஆணையர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நவநீதம் பிள்ளையைத் தமிழ்த் தேசம் வணங்கி வழியனுப்புகிறது.

Pin It