1. கொரோனா, கரோனா எதுவானாலும்…

கொரோனா என்பதை ஒருசில ஏடுகள் கரோனா என்று எழுதுகின்றன. இருவிதமாகவும் எழுதலாம் எனத் தோன்றுகிறது. போகட்டும். கொரோனா குறித்து நம் தோழர்கள், நண்பர்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்பதே என் முதல் கவலை. நாம் கவனமாக இருப்பது மட்டுமல்ல, மற்றவர்களையும் கவனமாக இருக்கச் செய்தல் வேண்டும். வழலையும் நீரும் கொண்டு கை கழுவுதல், குமுகத் தொலைவு பேணல், கூட்டம் தவிர்த்தல், நோயறிகுறிகளை மதித்து உடனே மருத்துவ ஆய்வும் அறிவுரையும் பெறுதல் உள்ளிட்ட எல்லா நடைபடிகளும் ஊடகங்களில் விரிவாகச் சொல்லப்பட்டு விட்டன. அறிவியலை நம்பிச் செயல்படுங்கள். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.

2. பதினாறாம் கட்டளை:

கொரோனா கிருமித் தொற்று பரவாமல் தடுக்க இந்திய அரசு 15 கட்டளைகள் பிறப்பித்துள்ளது. எல்லாம் சரி. ஆனால் 16ஆம் கட்டளை ஒன்று தேவைப்படுகிறது. உண்மை பேசுங்கள் என்பதே அது. இது ஆட்சியாளர்களுக்கான கட்டளை. இந்தியாவில் கிருமித் தொற்று எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பது பற்றி வெளிப்படைத் தன்மை தேவை. சீனம், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் போல் இந்தியாவிலும் கொவிட்-19 சிறுகத் தொடங்கி பெரிதாக வெடித்துப் பரவினால் அதற்கு அரசும் மக்களும் அணியமாக வேண்டும். இது வரை நோய்காண் ஆய்வுகள் போதுமான அளவு விரிவாகச் செய்யப்படவில்லை என்று வல்லுநர்கள் சொல்வதற்கு அரசு மறுமொழியே இல்லை. ஆய்வுகள் நடைபெறுவதோடு ஆய்வுமுடிவுகளும் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும். ஒளிவுமறைவின்றி எல்லாத் தரவுகளும் கணிப்புகளும் மக்களுக்குத் தெரிய வேண்டும். அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் போது அவற்றுக்கான தேவையை உணர்ந்து மக்கள் ஒத்துழைப்புத் தரவும் இந்த வெளிப்படைத்தன்மை இன்றியமையாதது. உண்மை பேசு என்ற இந்தப் பதினாறாம் கட்டளை இந்திய அரசுக்கு மட்டுமல்ல, தமிழக அரசுக்கும்தான்!

3. உமி கொண்டு வந்த மோதி உரை:

சென்ற 19ஆம் நாள் இரவு தலைமையமைச்சர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையைக் கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். எல்லாம் கொரோனா பற்றித்தான்! மக்களுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினாரே தவிர, அரசு எடுத்துள்ள, எடுக்கப் போகிற முயற்சிகள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. வருகிற 22 ஒரு நாள் நாமாக ஊரடங்கு செய்ய வேண்டுமாம்! கைத்தட்ட வேண்டுமாம். மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களைப் பாராட்டுவதற்காம்! கேலிக்கூத்து! கொரோனா உலகப் போர்களை விடக் கொடியது என்கிறார். பொருளியல் நெருக்கடி பற்றி எச்சரிக்கிறார். அதற்கு நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைத்துள்ளார்களாம். நெருக்கடியின் சுமைகள் மென்மேலும் நம் தலையில் கட்டப்படும், பெருங்குழுமங்களின் காட்டில் மென்மேலும் சலுகை மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். நாம் அரிசி கொண்டு வந்தால் மோதி உமி கொண்டு வருவார், ஊதி ஊதித் தின்னலாம். போராட்ட வழிகள் அடைக்கப்படும் போதே போராடுவதற்கான தேவைகள் குறையவில்லை, கூடியே செல்கின்றன.

4. கொரோனா எதிர்ப்புக்குக் குமுகத்தை அணியமாக்கல்:

கண்ணுக்குத் தெரியாத பகை, கட்டுக்கடங்காத களம், கொரோனா மீது உலகப் போர் என்று தொடக்கத்தில் நான் எழுதிய போதே, ”அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது சமூக வாழ்வில் நிலவும் பூசல்களைத் தீர்த்து இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும். பிளவுற்றுக் கிடக்கும் சமூகத்தால் கொரோனாவை எதிர்த்த போருக்காக ஒன்றுபட முடியாமற்போகும். அரசுக்கு இந்த எச்சரிக்கை உணர்வு உடனடித் தேவை!” என்று எழுதினேன். சென்ற மார்ச்சு 12ஆம் நாள் குடந்தையிலும் கூத்தாநல்லூரிலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்ட அமர்வுகளில் பேசிய போது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைத்தேன்: ஒன்று, காசுமீரத்தைத் திறந்து விடுங்கள்! இரண்டு, குடியுரிமைத் திருத்த சட்டம் உள்ளிட்ட பூசலுக்குரிய சட்டதிட்டங்களைக் கைவிடுங்கள்! அடியோடு கைவிட முடியாது என்றால் ஆறு மாதம் நிறுத்தி வையுங்கள்! அதற்கேற்ப போராட்டங்களையும் நிறுத்தி வைக்கலாம் என்றேன். ஆனால் கொரோனா தொடர்பான அரசு அறிவிப்புகளில் இது போன்ற எந்தக் குறிப்பும் இல்லை. எனவே போராட்ட வடிவம் வேறு வழியின்றி மாறி விட்டதென்றாலும் இலக்கு மாறவில்லை என்பது தெளிவாகி விட்டது.

5. புதிய போராட்ட வடிவங்கள் தேடுக!

என்றும் உள்ள கோரிக்கைகளுக்காக இன்றும் போராட வேண்டிய தேவை இருக்கும் போதே கொரோனா தொடர்பான மக்கள் கோரிக்கைகளையும் இனங்கண்டு பட்டியலிட வேண்டும். அவற்றுக்காகவும் போராடத்தான் வேண்டும். தனியார் மருத்துவமைனை உள்ளிட்ட எல்லா மருத்துவமனைகளிலும் கட்டணமில்லாத பிணியாய்வும் பிணித் தணிப்பு மருத்துவமும் வேலையிழப்புக்கு இழப்பீடு போன்ற பல கோரிக்கைகளும் உள்ளன. இவற்றுக்காகப் போராடுவது தவிர அரசு நமக்கு வேறு வழி விட்டு வைக்கும் போல் தெரியவில்லை. கொவிட்-19 உண்டாக்கிய கிருமி புதுவிதக் கொரோனா எனப்படுகிறது. நமக்கும் புதுவிதப் போராட்ட வடிவங்கள் தேவைப்படுகின்றன. நாம் அவற்றைக் கண்டு படைக்க வேண்டும். இப்போதைக்கு ஒன்றைச் சொல்லலாம். வலுவான பொதுக்கருத்து என்பதே கூட குடியாட்சியத்தில் ஒரு போராட்ட முறைதான் என்பது நினைவிருக்கட்டும்.