கொரனா வைரஸால் பரவியுள்ள கொவிட்-19 மிகவும் சமீபத்தில் வந்த ஒரு கொள்ளை நோய்தான், சரியான மருத்துவ நடைமுறைகளைக் கடைபிடித்தால் ஒரு சில மாதங்களில் இதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் கொரனா வைரஸின் கொவிட்-19ஐ விட மோசமான ஒரு கொள்ளை நோயால் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் அந்த நோயால் தாக்குண்டது குறித்து பெரும்பான்மையான மக்கள் எந்த விழிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. வருந்துவதோடு நின்று விட்டால் அதனால் ஏற்படும் பேரழிவில் அழிந்து விடுவோம் இல்லையா, எனவே நோய் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதிவேகத்தில் சிகிச்சை முறைகளை நாம் பரப்ப வேண்டும். மக்களிடம் மருந்தைக் கொண்டுசேர்க்க வேண்டும். உலகின் பெருமளவு மக்கள் அடிப்படை உரிமைகள் இல்லாமல் வறுமை, பட்டினி, ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவதிலிருந்து, காலநிலை நெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமான முதலாளித்துவம் என்ற அந்த நோய்தான் இங்கே அறிவியல் பார்வை இல்லாமல் குருட்டுத்தனமாகப் போற்றி வணங்கப்படுகிறது.

கண்ணுக்குத் தெரியாத வைரஸிலிருந்து கூட நம்மைக் காத்துக் கொள்ள முடியும் போது, கண்ணை உறுத்தும் அளவிற்கு பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ள முதலாளித்துவத்திடமிருந்து ஏன் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறி விட்டோம்?

தெரிந்த கொள்ளையனை விட மர்மக் கொள்ளையனால் அதிக ஆபத்து என்பதை விளங்கச் செய்ய பெரிய உதாரணம் தேவையில்லை. சில மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் தங்கள் தொழிலையும் வருமானத்தையும் தற்காத்துக் கொள்ள எப்படி நோயை முற்றிலும் குணமாக்காமல் நோயை நீடிக்க வைக்கவே செயல்படுகிறார்களோ அது போலத்தான் முதலாளித்துவமும் தன் இருப்பை நிலைபேறுடையதாக்கிக் கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகிறது. ஒரு பொய்யான நண்பன் எதிரியை விடவும் ஆபத்தானவன்தானே. அப்படித்தான் முதலாளித்துவமும் எதிரியாக இருந்தும் 24/7 நட்பிற்குரிய எசமானாய் வேடம் தரிக்கிறது. மக்கள் அறியா வண்ணம் அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறது. தான் ஒரு கொள்ளை நோய் பரப்பும் ஒட்டுண்ணி என்று மக்கள் அறியாவண்ணம் பார்த்துக்கொள்கிறது. சமத்துவ வேடத்தால் ஏற்றத்தாழ்வுகளை மறைக்கிறது. தன்னால் மட்டுமே இம்மக்களையும், இவ்வுலகத்தையும் பெருந்தன்மையுடன் கட்டிக் காக்க முடியும் என்பது போல் காட்டிக் கொள்கிறது.

உயிரிகளின் இரத்தத்தை அட்டை எப்படி வலியில்லாமல் உறிஞ்சுகிறதோ அப்படித்தான் ஒட்டுண்ணியான முதலாளித்துவமும் வலியில்லாமல் மக்களின் உழைப்பை அவர்களுக்குத் தெரியாமல் உறிஞ்ச நினைக்கிறது, ஆனால் எல்லா நேரத்திலும் அது முடிவதில்லை, பொருளாதார வாழ்வியல் நெருக்கடிகளால் உழைக்கும் மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் துயரம் தாங்காமல் குற்றுயிராகிப் போகிறார்கள். பொறுக்க முடியாமல் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள். முதலாளித்துவம் தன் நட்பு முகமூடியைக் கிழித்தெறிந்து தன் பாசிச முகத்தைக் காட்டுகிறது. இன்முகம் கொடுமுகமாகிறது. கரும்புக் கரம், இரும்புக் கரமாகி பாசிசச் சாட்டையைச் சொடுக்குகிறது. பொருளாதார நெருக்கடிகளாலே இரும்புக் கரம் ஓங்குகிறது. பொருளாதார நெருக்கடியின் போது எதிர்ப்பை ஒடுக்கி மக்களை அழித்து முதலாளித்துவ அரசியலமைப்பைக் காத்துக் கொள்ளும் தற்காப்புக்கலைதான் பாசிசமாகிறது.

இந்நோயைப் பலர் கண்டு கொண்ட போதிலும் அதன் பொறியமைவை, அதன் இயங்குமுறையைப் பற்றி முழுமையாகத் தெளிந்தறிந்து அதற்குத் தீர்வு தரும் சிகிச்சைமுறையைக் கண்டறிவது சிக்கலாகவே இருந்தது, மார்க்ஸ் என்னும் மாமருத்துவரே அந்நோயை முழுமையாகப் பகுத்தாய்ந்தார். அதற்கு சரியான சிகிச்சை முறையையும், மருந்தையும் பரிந்துரைத்தார். அதைக் கண்டறிந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆன போதும் அது பெரும்பான்மையானோர் அறிந்திராத வண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. நோயாளி நோயின் தாக்கத்தை உணராவிட்டால் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ள மாட்டார். நோயின் தாக்கத்தை உணர்ந்தாலும் அது என்ன நோய் என சரியாகக் கண்டறியாவிட்டால் தவறான சிகிச்சை முறையால் பாதிப்பு ஏற்படுவதுடன். நோயின் தீவிரமும் அதிகரிக்கும். அப்படித் தான் இங்கு பெரும்பாலானோர் இந்த முதலாளித்துவ ஒட்டுண்ணியால் தான் தாங்கள் நோயுற்றுள்ளோம் என்பதை உணரவில்லை. அப்படியே உணர்ந்திருந்தாலும் அதற்கான சிகிச்சை முறையும், மருந்தும் மர்மமாக்கப்பட்டதால் அவர்களின் பாதிப்பு தொடர்கதையாகியுள்ளது. உழைக்கும் மக்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அம்மருந்து அவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் தடுக்கப்படுவதால் தான் கொள்ளை நோயின் தாக்கமும், தீவிரமும் அதிகரிக்கிறதே ஒழியக் கொள்ளை நோய் குறைந்தபாடில்லை.

இந்தியாவில் அந்த முதலாளித்துவ ஒட்டுண்ணி பிராமணிய ஒட்டுண்ணியுடன் இரண்டறக் கலந்து கலப்பினமாக அவதாரம் எடுத்தது. இரண்டின் கொடுந்தன்மையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததால் கலப்பின ஒட்டுண்ணியின் கொடுந்தன்மை அதிதீவிரமானது. இந்தக் கலப்பின ஒட்டுண்ணியை முறியடிப்பதற்கும் அதன் பாசிசக் கொள்ளை நோயிடமிருந்து நிரந்தரமாக வெற்றி பெறுவதற்கும் மார்க்ஸ் பரிந்துரைக்கும் அருமருந்தே தீர்வாகும். தடைகளைக் கடப்போம். அம்மருந்தை மக்களிடம் சேர்ப்போம்.