மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்த பாஜக அரசு, டிரம்பின் இரு நாள் வருகைக்கு மட்டும் 100 கோடிக்கு மேல் செலவழித்துள்ளது. எளிய மக்களை அவமானப்படுத்தும் விதமாகக் கட்டப்பட்ட காணாமைச் சுவரில்தான் வளர்ச்சியின் மாதிரி, குஜராத் மாதிரி என்று கூவிய மோடி அரசின் உண்மையான குஜராத் மாதிரி முகம் உலக அரங்கிற்கே காணக் கிடைத்தது. டிரம்பின் இந்திய வருகையைப் புறக்கணித்து நாடெங்கும் உள்ள ஜனநாயக அமைப்புகளும், மக்களும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஃபிப்ரவரி 25ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் உலக நாடுகள் முழுமையாக அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும், ஆயுதப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையில்; இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய-அமெரிக்க உறவை இதுவரை இல்லாத அளவிற்கு வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் மக்களை மையமாக வைத்தே எட்டப்பட்டதாக மோடி குறிப்பிடுவது பொய்யல்ல! ஏனென்றால் அதே நாளில் பாஜக அரசு மற்றும் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் இந்து அடிப்படைவாதிகள் மசூதியைக் கொளுத்தி அனுமன் கொடியை ஏற்றி, இஸ்லாமிய மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பற்றவைத்துள்ளனர். இதுவரை சற்றொப்ப 50 இன்னுயிர்களை இழந்துள்ளோம். வலது தீவிரவாதி டிரம்பும், இந்துத் தீவிரவாதி மோடியும் “இஸ்லாமியத் தீவிரவாதத்தை” வேரறுக்க உறுதியெடுத்துள்ளார்களாம்.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான அமெரிக்காவின் நாற்கர இராணுவக் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான பேச்சு வார்த்தையை டிரம்பும் மோடியும் இந்தச் சந்திப்பில் புதுப்பித்துள்ளனர். அணிசேரா இயக்கத்தின் உறுப்பு நாடாக இருந்த இந்தியா, ஆசியாவின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் விதமாகவும், சீனாவைத் தனிமைப்படுத்திக் கட்டுபடுத்தும் நோக்குடனும் ஏற்படுத்தப்பட்ட இந்த ராணுவக் கூட்டமைப்பில் இணைந்திருப்பது பெருத்த வெட்கக் கேடு. அமெரிக்காவுக்கு முழுவதுமாக அடிபணிந்து விட்டது மோடி அரசு. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையில் உள்ள போதும் விவசாயம், தொழில்துறை உற்பத்தியைக் கைவிட்டு, ஆயுதத் தளவாடங்கள் உற்பத்தியைப் பெருக்குவதிலும், நாடு முழுவதும் ஆயுதக் கேந்திரங்களை உருவாக்குவதிலுமே பேரார்வத்துடன் செயல்பட்டு, பாஜக அரசு இந்தியாவை இரண்டாவது இஸ்ரேலாக, இந்துத்துவ இஸ்ரேலாக மாற்றியுள்ளது.

`இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னரோ, அல்லது பிறகோ மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 9ஆவது பெரிய சரக்கு வர்த்தகப் பங்காளராக இந்தியா உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளராக அமெரிக்கா உள்ளது. . இந்திய-அமெரிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகம் 2018இல் 142.6 பில்லியன் டாலர்கள் என்ற அதிகபட்ச நிலையை எட்டியது. அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் 2019ல் 24 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டதால் அமெரிக்க அரசு, இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியது.

வளரும் நாடுகளுக்குப் பொதுவாக அளிக்கப்படும் பொதுமைப்படுத்திய முன்னுரிமை முறைமையிலிருந்து (ஜி. எஸ். பி. - Generalized System of Preferences) இந்தியாவை 2019 ஜூனில் விலக்கியது. இதனால் சுமார் 5.6 பில்லியன் டாலர் அளவிலான இந்திய வர்த்தகப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்ந்தது. இந்தியாவிலிருந்து வரும் எஃகுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 25 சதவீதமாகவும் அலுமினியப் பொருட்களுக்கு 10 சதவீதமாகவும் உயர்த்தியது. இதனால் இந்தியாவின் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. 12 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் எஃகின் அளவு 46% குறைந்தது. வீட்டு உபகரணங்கள், மின் இயந்திரங்கள், தானியங்கி உதிரி பாகங்கள், இரும்பு ஆகியவற்றின் வர்த்தகமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கச் சந்தையில் போட்டியிடுவது இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கடினமானது.

இதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 28 வகையான பொருட்களுக்கு இந்தியா 2019 ஜூன் 16ஆம் தேதியிலிருந்து கூடுதல் வரி விதித்தது இதைக் கண்டித்து உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டது அமெரிக்கா.

இந்தியாவிற்குத் தேவையா, இல்லையா எனக் கருதாமல் எதையாவது இந்தியாவின் தலையில் கட்டி, இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை சமன் செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்க அரசு குறியாய் உள்ளது. அதன்படி இந்தியாவிற்குப் பெருமளவு ஆயுதங்களை விற்றே இதை சமன் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு வர்த்தக நிபந்தனைகளைச் செயல்படுத்தினால் மட்டுமே இந்தியா மீண்டும் பொதுமைப்படுத்திய முன்னுரிமை முறைமையைப் (ஜி.எஸ்.பி.) பெறமுடியும் என அமெரிக்க அரசு பலக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக நிபந்தனைகள்: இந்தியா தற்போது மேற்கொள்ளும் வர்த்தக அளவைக் காட்டிலும் கூடுதலாக 5 முதல் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் அமெரிக்காவிலிருந்து பால் பொருட்கள் மற்றும் கோழிப்பண்ணை பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியையும் அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும்.

அமெரிக்க வேளாண் வர்த்தக நிறுவனங்களுக்கு இலாபம் பெறும் விதமாக அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பாதாம், முந்திரி, ஆப்பிள், கோதுமை, சோயா பீன்ஸ், கொண்டைக் கடலை, சோளம், கடலை ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

இந்திய அரசு விலை நிர்ணயக் கொள்கையைக் கைவிட வேண்டும், மருத்துவ உபகரணங்களின் விலையை நிறுவனங்களே நிர்ணயிக்க வேண்டும். அமெரிக்க மருத்துவக் கருவிகள் மீதான வரியைக் குறைக்க வேண்டும், ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், மின்னணு சாதனங்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும்.

இதயத்துக்கான ஸ்டண்டுகள் மற்றும் மாற்று மூட்டுகள் மீதான விலைக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்குப் பெருலாபம் கிடைக்கும் விதமாக இந்தியாவில் மலிவு விலையில் பொதுவான மருந்துகள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும். ஊடகம், பல்தர வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு வரமபைத் தளர்த்த வேண்டும். அமெரிக்காவின் இணைய வர்த்தக நிறுவனங்கள் பெருலாபம் ஈட்டுமாறு அவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்துமே இந்தியப் பொருளாதாரத்தின் தற்சார்பைக் காவு கொடுப்பவை. ஏற்கெனவே பொருளாதாரம் நெருக்கடி நிலையில் உள்ள போது இவற்றைச் செயல்படுத்தினால் அது இந்திய விவசாயிகளையும், தொழில்துறையையும், மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சேவையையும் கடுமையாக பாதிக்கும், வேலையின்மையையே அதிகரிக்கும். விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப் போவதாக பொய் சொல்லிக் கொண்டே மோடி அரசு அதற்கு முற்றிலும் முரணான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்காவுடன் கூட்டணியை வலுப்படுத்தியிருப்பது மக்களைப் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளது.

இந்தியா தன் நட்பு நாடு எனக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இந்திய அரசு விவசாயப் பொருட்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலை, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் பொது விநியோக முறை, விவசாயிகளுக்குத் தரப்படும் மானியம் இவை யாவும் தடையற்ற வர்த்தகத்தைப் பாதிக்கிறது என்று அவற்றை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து வருகிறது.

டிரம்ப் இந்திய மக்களுக்கு மட்டும் எதிரானவர் அல்ல. உலகெங்கிலும் இனவெறி, மதவெறியைத் தூண்டி. வெறுப்பை விதைக்கும் வலது தீவிரவாதத்தின் கோர முகமாகவே டிரம்ப் காணப்படுகிறார். வெனிசுலா, பொலிவிய நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளின் மூலமாகப் பல பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளார். இதனால் வெனிசுலாவில் மட்டும் 2017-2018 வரை 40, 000 பேர் இறந்துள்ளனர். ஒபாமா ஆட்சியின் போது விலக்கப்பட்ட கியூபாவின் மீதான ஹெல்ம்ஸ் புர்டன் சட்டம் டிரம்ப் நிர்வாகத்தில் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய டிரம்ப் ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடையால் அந்நாட்டின் வேலை வாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அரசு ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொன்று, மேற்காசியாவில் போர் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது,

சௌதி அரேபியாவிற்குப் போர்க் கருவிகள் வழங்கி ஏமனில் மனித நேயமற்ற முறையில் அம்மக்களை இனப்படுகொலை செய்யத் துணை போகிறது. பாலஸ்தீன நிலத்தில் சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எல்லா விதத்திலும் டிரம்பின் அரசு உறுதுணையாக உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீன மக்களுக்கான உதவித் தொகையை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் இஸ்ரேலிய ஆதரவுச் செயல்பாடுகளால் பாலஸ்தீன மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பாலஸ்தீனம், பொலிவியா, வெனிசுலா, கியூபா, ஈரான் ஆகிய நாடுகளின் மீதான போரைத் தீவிரப்படுத்தியதால் அந்நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ் நிலையும் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

காலநிலை நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் விதமாக பசுமைக்குடில் வாயுக்களை அதிகம் வெளியிடும் அமெரிக்க நாட்டைப் பொறுப்பற்ற முறையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொண்ட டிரம்பின் அரசு உலக நாடுகளின் மக்களுக்கு மட்டுமல்ல, சூழலுக்கும் எதிரானது. ஆகையால் டிரம்பின் அமெரிக்க மேலாதிக்கத்தைப் புறக்கணிப்போம். இவ்வாண்டின் நவம்பர் மாதம் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலுக்கான வாக்கு வங்கியைக் கைப்பற்றும் வகையில் தேர்தலுக்கு முன்னோ பின்னோ மேற்கொள்ளவிருக்கும் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்த வர்த்தகச் சூறையாடலிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் தற்சார்பையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் வருமுன் காப்போம்.