covid19 289நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலையும் அதிலுள்ள உயிரினங்களுக்கிடையிலான உறவுகளையும் பற்றி அறிந்து கொள்ளும் துறையாக சூழலியல் உள்ளது. சூழலியலின் முக்கியத்துவம் உணரப்படாமல் பெருமளவில் புறக்கணிக்கப்பட்ட துறையாகவே இருந்து வந்துள்ளது. சூழலியலை ஒற்றைத் துறையாகக் குறுகிய கண்ணோட்டத்திலும் பார்க்க முடியும்.  

இல்லையெனில், மற்றத் துறைகளோடு அதற்குள்ள இடைத் தொடர்புகளையும் ஒருங்கிணைத்து விரிந்த கண்ணோட்டத்திலும் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு வசதியாகத் துறைகளை உயிரியல், சூழலியல், வேதியியல் எனப் பிரித்து வகைப்படுத்தியுள்ளோம், எதார்த்தத்தில் அவை அவ்வாறு பிரிந்திருப்பதில்லை. அவை ஒருங்கிணைந்தே செயல்பாட்டில் உள்ளன.

நாம் துறைகளைப் பிரித்துத் தனித்து வைத்துப் புரிந்து கொள்ளும் போக்கே அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான நீடித்த தீர்வுகளைப் பெறுவதற்குத் தடையாக அமைந்துள்ளது. இன்று கோவிட்-19 நெருக்கடியால் உலக மக்கள் யாவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு மருத்துவம் சார்ந்த சுகாதார பிரச்சினை மட்டுமல்ல, சூழலியல் பிரச்சினையாகவும் உள்ளது, பொருளாதாரப் பிரச்சினையாகவும் உள்ளது, சமூகப் பிரச்சினைகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களே இதனால் மேலும் அதிகமாகப் பாதிக்கப்படுவதால் இது ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினையாகவும், விளிம்புநிலை மக்களின் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் சமூக நீதிப் பிரச்சினையாகவும் உள்ளது.

சூழலியல் பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினையாகவும் உள்ளது, பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாமே என்று பொதுவாகக் கூறப்படுகிறது, எல்லாப் பிரச்சினையிலும் அரசியல் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாமல் தீர்வுகளை நோக்கி நாம் முன்னேற முடியாது. ஒருங்கிணைந்த புரிதலின் மூலமே போராட்டங்களையும் ஒருங்கிணைத்து வளர்த்தெடுக்க முடியும்.

நாம் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுக்கிறோம், அவை சூழலியல் பிரச்சினைகளாக இருக்கலாம், ஊதிய உயர்வுப் பிரச்சினைகளாக இருக்கலாம், கருத்துரிமைகளுக்கான, பணி நிரந்தரம் செய்வதற்கான போராட்டங்களாக இருக்கலாம், ஆனால் அவற்றை ஒருங்கிணைத்து அரசியல் போராட்டங்களாக வளர்த்தெடுக்காமல், தற்காலிகத் தீர்வுகளுடன் நிறைவடைந்தால் அதுவே நிரந்தரத் தீர்வுகளுக்கான பாதையை நாம் ஒருபோதும் அடைய முடியாத வண்ணம் தடை போடுகிறது.

சூழலியல் குறித்த ஒருங்கிணைந்த புரிதலின் மூலமே சூழலியல் பிரச்சினைகளுக்கான நீடித்த தீர்வுகளை நாம் அடைய முடியும் என்பதால் விரிந்த கண்ணோட்டத்துடன் சூழலியலை முழுமையாகப் புரிந்து கொள்ளும் முயற்சியை தொடங்குவோம் வாருங்கள்.

இன்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் ”நாம் கொள்ளை நோய்களுக்கான காலக்கட்டத்திற்கு வந்துள்ளோம், கோவிட்-19 முடிவல்ல, தொடக்கம் மட்டுமே” என எச்சரித்துள்ளார்கள். காடுகளில் மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வனச் சூழல் அழிக்கப்படுவதால் அங்கிருந்து சிந்திப் பரவும் (spill over) நோய்க் கிருமிகளின் மூலமாகவே மனிதர்களுக்குப் புதிய தொற்று நோய்கள் ஏற்படவும், அவை கொள்ளை நோய்களாகப் பரவவும் செய்கின்றன.

இதைப் புரிந்து கொள்ள ஒரு வரலாற்று உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். தொற்று நோய்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலாளித்துவக் காலனியாதிக்கத்தில்தான் பிளேக், பெரியம்மை, காலரா, டைபாய்டு போன்ற தொற்று நோய்கள் பெரிதும் பரவின.

காலனியாதிக்கத்தின் போது கொலம்பஸும் அவரது படையும் அமெரிக்காவில் உள்ள பூர்வக்குடி மக்களிடமிருந்து நிலங்களையும், அவர்களது அனைத்து உரிமைகளையும் பறித்தார்கள், இதே போல் தளபதி குக்கும் அவரது படைகளும் ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் நிலங்களையும், உரிமைகளையும் பறித்தார்கள். இதனால் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இன அழிப்பால் 90% பூர்வக் குடிமக்கள் அழிந்து போனார்கள்.

ஆனால் கொலம்பஸூம், குக்கும் அவரது படையினரும் அவர்களை அறியாமலே பூர்வக் குடிமக்களுக்குப் பெரியம்மை, பிளேக், காலரா, டைஃபாய்டு போன்ற நோய்களைப் பரப்பினர். அங்கிருந்த பூர்வக்குடிகளுக்கு அதற்கு முன் பெரியம்மை, பிளேக், காலரா, டைஃபாய்டு போன்ற நோய்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நகர்ப்புறத்திலிருந்து வனப் பகுதிகளுக்குள் நோய்க்கிருமிகள் சிந்திச் சிதறியதால் இந்நோய்த் தாக்கம் ஏற்பட்டது. இதை இன்னும் விரிவாக புரிந்து கொள்வோம்.

நுண்ணுயிரிகளின் உலகம்:

நுண்ணுயிரிகளின் உலகுக்குச் செல்லாமல் தொற்று நோய்களை  நம்மால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. அங்கிங்கெனாத படி பூமியெங்கும் நிறைந்து வாழ்பவையாக நுண்ணுயிரிகள் உள்ளன. நம் பூமிக்கு வயது 450 கோடி ஆண்டுகள் அதில் 360 கோடி ஆண்டுகளாக நுண்ணுயிரிகள் வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றன.

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பார்களே, அது நுண்ணுயிரிகளுக்கே மிகச் சரியாகப் பொருந்தும். எரிமலைக் குழம்பிலும், நிரந்தர உறைபனியிலும் கூட வாழக் கூடிய சர்வ வல்லமை படைத்தவையாக நுண்ணுயிரிகள் உள்ளன. பூமியில் மனிதனின் கால்தடம் படாத பகுதிகள் இருக்கலாம், ஆனால் நுண்ணுயிரிகள் இல்லாத இடமே இல்லை என்று சொல்ல முடியும்.

எல்லாம் அவன் செயல் என்பார்கள், பல்வேறு செயல்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத நூண்ணுயிரிகளே காரணமாகவும் உள்ளன. மழை வரும் போது வரும் மண் வாசனை பிடிக்காதவர் எவரும் உண்டா? அதற்கு ஆக்டினோமைசீட்ஸ் என்ற பாக்டீரியாக்களே காரணமாயுள்ளன.

இட்லி மாவு புளிப்பதற்கு உங்கள் கைகளிலுள்ள லாக்டோ பேசிலஸ் வகை பாக்டீரியாக்கள்தான் காரணம். புரொபியனி பாக்டீரியம் அக்னெ உங்கள் கன்னங்களைக் கிள்ளுவதால்தான் பரு வருகிறது இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த உலகில் கிட்டத்தட்ட 1032 வைரஸ்கள் உள்ளன (10க்குப் பின் 32 பூஜ்ஜியங்களை சேர்க்கவும்(. அவற்றில் எல்லாமே மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல. இது வரை 1000 முதல் 2000 வரையிலான வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்பட வேண்டியவை பல உள்ளன. பாக்டீரியாக்களை விட வைரஸ்கள் மேலும் நுண்ணியவை என்பதால் அவற்றை ஆராய்வது கடினமான பணி. 

நம் மனித உடலே பாக்டீரியாக்கள் வாழும் உயிர்ச் சூழலாக உள்ளது. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 37 இலட்சம் கோடி. அதை விடப் பத்து மடங்கு அதிக எண்ணிக்கையுள்ள பாக்டீரியாக்கள் மனித உடம்பில் குடியிருக்கின்றன. நீங்கள் அறியாமலே அவற்றிற்கு வாழ்விடம் அளித்து வருகிறீர்கள்.

மனித உடலில் உள்ள மொத்த மரபணுவில் (டி.என்.ஏ) மனித மரபணுவைக் காட்டிலும், பாக்டீரியாக்களின் மரபணுக்களின் அளவு 100 மடங்கு அதிகமாக உள்ளது. மனித உடலில் உள்ள மொத்த பாக்டீரியாக்களை எடை போட்டால் 1.5 கி.கி. எடை இருக்கும், கிட்டத்தட்ட நம் மூளையின் அளவிற்கு வரும். மனித உடலில் ஈஸ்ட் போன்ற பூஞ்சையினங்களும் இருக்கின்றன. மனித உடலில் உள்ள நுண்ணுயிரிகளை இயல் உயிர் என்ற பொருளில் ‘நார்மல் ஃப்ளோரா’ என அழைக்கப்படுகிறது.

ஒருவர் உடலில் உள்ள “நார்மல் ஃப்ளோரா” பிறருக்கு உள்ளதை போல் ஒத்த வகையுடையதாக இருந்த போதிலும் மாறுபாடுகளையும் கொண்டிருக்கும். இரட்டையர்களுக்குள் அது பெருமளவுக்கு ஒத்த தன்மையுடையதாக இருக்கலாம் என்ற போதும் 100 சதவீதம் முற்றிலும் ஒத்ததாக இருக்காது. நாம் எந்தச் சூழலில் வசிக்கிறோம், என்ன உணவு உண்கிறோம் என்பதைப் பொறுத்து நம் நார்மல் ஃப்ளோரா ஒருவருக்கொருவர் வேறுபடலாம். நுண்ணுயிரிகளின் தொகுப்பு, வெவ்வேறு பகுதியில் வாழ்பவர்களுக்கிடையே மாறுபாடுகளைக் கொண்டிருக்கலாம்.

மனித உடலில் பல நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நோய்க் கிருமிகள் தாக்காத வண்ணம் உடலுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதால், இவற்றிற்கெதிரான எதிர்ப்புப் புரதங்கள் (‘ஆண்டிபாடி’) உடலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை நம் உடலிலிருந்து ஊட்டத்தைப் பெறுகின்றன. மனித உடலால் தயாரிக்க முடியாத நுண்ணூட்டங்களான விட்டமின் பி12, விட்டமின் கே ஆகியவற்றை பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் தயாரித்து அளிக்கின்றன.

உடலிலே குடல் பகுதியில்தான் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. குடல்வாழ் பாக்டீரியாக்கள் என்ற பொருளில் ‘எண்டிரோ பாக்டீரியேசியே’ என்றொரு பாக்டீரியக் குடும்பமே உள்ளது. மனிதர்களின் சீரண மண்டலம் சீராக செயல்படுவதற்கு நுண்ணுயிர்த் தொகுப்பின் சமநிலையைக் காப்பது மிகவும் அவசியம்.

மனிதர்கள் பாக்டீரியாக்களைக் கொல்லும் எதிர்ப்பு மருந்துகளை (‘ஆண்டிபயாடிக்’) தொடர்ந்து உட்கொண்டால் நமது உடலிலுள்ள நுண்ணுயிர்களின் சமநிலை பாதிக்கப்படும், செரிமானக் கோளாறு ஏற்படும். அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போக்கும் ஏற்படுகிறது, அதனால் எளிதாக நோய்த் தாக்கம் ஏற்படலாம்.

ஒரு உதாரணத்திற்கு கூறுவோமானால், நல்ல உடல்நிலையில் 10,000 கிருமிகள் தாக்கும் போதுதான் நோய்த் தாக்கம் ஏற்படும் என்ற நிலையானது நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவினால் 100 நுண்ணுயிரிகள் தாக்கும் போதே நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தவிர்க்க இயலாத நேரங்களில் மட்டும் நோய் எதிர்ப்பு ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளை தேவைக்கதிகமாக இல்லாமல் உட்கொள்வது நலம் பயக்கும்.

மனித உடலில் வாய், தோல், கால் என ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியையும் வாழிடமாகக் கொண்ட  பாக்டீரியாக்கள் அவை வாழுமிடத்தில் நோய்த் தாக்கம் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவை இயல்பாக மனித உடலில் இருக்கும் இடங்களை விட்டு வேறு பகுதிகளுக்குச் சென்றால் நோய்த் தாக்கும் ஏற்படுத்துகின்றன. மனித உடலில், கீழ் சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், மூளை, தண்டுவடம், தசை, கர்ப்பப் பை ஆகிய பகுதிகள் நுண்ணுயிரிகள் இல்லாத பகுதிகளாக உள்ளன.

அதனால்தான் தாயின் கர்ப்பப் பையில் நோய்த் தொற்று ஏற்படாமல் குழந்தை பாதுகாப்பாக வளர முடிகிறது. குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிரசவமான பிறகே நுண்ணுயிரிகளின் அறிமுகம் ஏற்படுகிறது. சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் விதமான  ‘நார்மல் ஃப்ளோரா’வை, நுண்ணுயிர்த் தொகுப்பைத் தாயிடமிருந்து பெறுகிறது. சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு அந்த வாய்ப்புகள் இல்லாததால் தாயிடமிருந்து அதைப் பெறும் விதமான மருத்துவ முறைகள் சில இடங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஒரு மனிதர் என்பவர் வெறும் மனிதர் மட்டுமல்ல, நுண்ணுயிர்கள் வாழும் உயிர்ச் சூழலாகவும் உள்ளார். அவரிடமிருந்து நுண்ணுயிரிகள் அனைத்தும் முழுமையாகப் பிரித்தெடுக்கப்படுமானால் அவரால் இயல்பாக, அவராக வாழ முடியாது. இது பல இலட்சம் ஆண்டுகளாகத் தொடரும் இணை பரிணாமத்தின் விளைவாக மனிதர்களுக்கு ஏற்றவாறு நுண்ணுயிர்களும், நுண்ணுயிரிகளும் தங்களைத் தகவமைத்துக் கொண்டு பரிணமித்துள்ளன.

இவ்வாறு ஒற்றை மனிதரே கோடிக்கணக்கான பல்லுயிரிகளின் வாழிடமாக உள்ளார் என்றால், காடுகள் எத்தனை விதமான பல்லுயிர்களுக்கான வாழிடமாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள், அதனால்தான் காடுகள் அழிக்கப்படும் போது பல்லுயிரிகள் அழிந்து போகின்றன, பன்மைத்துவம் குறைந்து போகிறது.

இப்பொழுது நாம் கொலம்பஸ் படையும், குக் படையும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து முன்சொன்ன கருத்திற்கு திரும்பிச் செல்வோம். நகரமயமான சூழலிருந்து வந்த கொலம்பஸ், குக் ஆகியோரின் உடலிலுள்ள நுண்ணுயிர்த் தொகுப்பு, அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் பூர்வக்குடிகளின் உடலில் காணப்படும் நுண்ணுயிர்த் தொகுப்பைக் காட்டிலும் வேறுபட்டு இருந்ததாலும், பூர்வக்குடிகளுக்குப் பரிச்சயம் இல்லாத புதிய நுண்ணுயிர்களை அங்கு அறிமுகமப் படுத்தியதாலும், அதற்கெதிரான நோய் எதிர்ப்புச் சக்தி பூர்வக்குடியினருக்கு இல்லாததாலும் அவர்கள் பெரியம்மை, டைஃபாய்டு ஆகிய நோய்களின் தாக்கம் ஏற்பட்டுக் கொத்து கொத்தாய்ச் செத்து மடிந்தனர்.

இவ்வாறு ஒரு சூழலில் உள்ள நோய்க் கிருமிகள் இன்னோரு சூழலுக்குச் சிந்திப் பரவுவதால் நோய்த் தாக்கம் ஏற்படுகிறது. நகர்ப்புறத்தின் கிருமிகள் வனப் பகுதிகளுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டதால் நோய்த் தாக்கம் ஏற்பட்டதல்லவா, அதே போல் வனப் பகுதியிலுள்ள நோய்க்கிருமிகள் மனித வாழிடங்களில் சிந்திப் பரவுவதால் தொற்று நோய்கள் ஏற்படும். இவ்வாறுதான் புதிய கொரோனா வைரஸ் கொள்ளை நோயாகப் பரிணமித்துள்ளது.

வனச் சூழலை அழிக்கும் போது வன விலங்குகளின் உடலிலிருந்து நோய்க் கிருமிகள் மனித சமூகத்தை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன, அதுவே புதிய புதிய தொற்று நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் ஸுனோடிக் நோய்கள் என அழைக்கப்படுகின்றன (zoonotic, zoo-விலங்கு).

பன்றிக் காய்ச்சல் ஏற்படுத்தும் எச்1என்1 வைரஸ், எபோலா வைரஸ், சிகா வைரஸ் ஆகியவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவிய கொள்ளை நோய்களாகும். பனை எண்ணெய் தயாரிப்பிற்காக வனங்கள் அழிக்கப்பட்ட போது பழந்திண்ணி வௌவால்களின் மூலமாகவே எபோலா வைரஸ் பரவியுள்ளது. நிஃபா வைரஸும் வௌவாலின் மூலமாகவே பரவியது.

புதிய வகைக் கொள்ளை நோய்கள் வருவதற்குக் காடுகளை அழிப்பதே முக்கியக் காரணமாக உள்ளது. அங்குள்ள வன விலங்குகளின் வாழிடங்கள் அழிக்கப்படுவதால் அவற்றில் வன விலங்குகளை ஓம்புயிரிகளாகக் கொண்ட நோய்க் கிருமிகள் தகவமைப்பின் மூலம் மனிதர்களைத் தம் ஓம்புயிரிகளாக மாற்றிக் கொள்கின்றன.

பூமியை மனித ஆதிக்கம் கொண்ட பகுதியாக மாற்றியதால் நோய்க் கிருமிகள் மனிதர்களிடமிருந்து உணவூட்டம் பெறுமாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டு நோய்த் தாக்கம் ஏற்படுத்துகின்றன. நுண்ணுயிரிகளால் மற்ற உயிரிகளைக் காட்டிலும் மிக வேகமாகத் தகவமைத்துக் கொள்ள முடியும். இப்பொழுது உலகமயமாக்கப்பட்ட விமானப் போக்குவரத்தின் மூலமும் ஒரே நாளிலே கொள்ளை நோய்கள் உலகெங்கும் எளிதில் பரவுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இயல்பாக வனங்களுக்கு உள்ள புவியியல் எல்லைகளைத் தாண்டி அவ்விலங்கினங்கள் வருவதில்லை, ஆனால் காடுகள் அழிக்கப்படும் போது, இந்தப் புவியியல் எல்லைகள் தகர்க்கப்படுகின்றன. அதுவே மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து தொடர்புகளை அதிகப்படுத்தி நோய் பரவக் காரணமாகிறது.

மக்களடர்த்தி அதிகமான, சுகாதாரமற்ற சூழலில் வசிக்கும் போது அதுவே நோய்த் தொற்று ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் முக்கியக் காரணமாக உள்ளது. இவ்வுலகில் நிலம் ஒப்பளவில் குறைவாகத்தான் உள்ளது. இயற்கைச் சூழல்களை அழித்து நகர மயமாக்கமும் தொழில் மயமாக்கமும் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படுவதால் நிலப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இலாப வெறி கொண்ட பெருநிறுவனங்களும், பெருஞ்செல்வந்தர்களும் பெரும்பாலான நிலங்களை ஆக்கிரமித்து சூழலை அழித்து வருகிறார்கள். இதனால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் சுகாதாரமற்ற நெருக்கடியான சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் அனைவருக்கும் சரிவிகிதமான உணவும், சுகாதாரமான சுற்றுச் சூழலும் வசிப்பிடமும் இருந்திருக்குமானால், கொரோனா வைரஸால் மக்கள் இந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் சுகாதாரத் துறையிலிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற வேண்டிய எல்லா சமூகத் துறைகளுக்கும் அரசின் நிதி ஒதுக்கீடுகள் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இன்று காற்று மாசுபாட்டினால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது, ஒரு மாதம் கூட ஆகாத ஒரு இலட்சம் குழந்தைகள் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். இன்று ஆட்சியிலுள்ள முதலாளித்துவ அமைப்பு மக்களின் சுகாதாரமான நல்வாழ்வுக்கான அனைத்து வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து சமூகத்தைத் தொற்று நோய்களின் அடைகாப்பகமாக மாற்றியுள்ளது.

பெரும் தொழிற்பண்ணைகளில் சுகாதாரமற்ற சூழலில் வளர்க்கப்படும் கால்நடைகளும் பறவைகளும் தொற்று நோய்களின் அடைகாப்பகங்களாக செயல்படுகின்றன. சீனாவின் வூஹான் பகுதியில் இருந்த உயிர்ச் சந்தையின் மூலமாகவே தொற்று நோய் பரவியதால், உயிர்ச் சந்தைகள் அபாயகரமானவை அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. வளரும் நாடுகளில் இப்படிப்பட்ட திறந்த வெளி இறைச்சிக் கடைகளும் உயிர்ச் சந்தைகளும் அதிகம் காணப்படுகின்றன.

அவை பாதுகாப்பற்றவை என்பதும் அவற்றின் மூலம் நோய் எளிதில் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் உண்மைதான். வளர்ந்த நகரங்களில் இறைச்சியானது  புட்டிகளில் அடைக்கப்பட்டு ‘டின் ஃபுட்’, ‘கேண்டு ஃபுட்’ என்று விற்கப்படுகிறது. பெரும் தொழிற்பண்ணைகளிலிருந்து கிடைக்கும் அவை முற்றிலும் பாதுகாப்பானவையா, சுகாதாரமானவையா என்றும் கேட்க வேண்டும்.

ஏனென்றால் பெரும்பண்ணைகளில் பெரும் எண்ணிக்கையில் ஆடு மாடுகள், கோழிகள் ஒரு சிறிய இடத்திற்குள் சுகாதாரமற்ற விதமாக அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அவ்விலங்குகளுக்கு ஏற்படும் நோய்த் தாக்கத்தைத் தடுக்கவும், அவற்றின் உடல் எடையை அதிகரிப்பதன் மூலம் இலாபத்தைப் பெருக்கவும் அதிக அளவில் ஆண்டிபயாடிக் அளிக்கப்படுகிறது.

இதனால் அவற்றை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஒவ்வாமை, ஆஸ்துமா உடல் எடை கூடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது டென்மார்க்கில் கம்பளிக்காகப் பெரும் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒருவகைக் கீரிகளின் (Minks) மூலம் வேறொரு புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவி வருகிறது.

இயற்கையாக வளரும் தாவர, விலங்குகள் பலவகையில் பன்மைத்துவத்துடன் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது நோய்த் தொற்று எங்கும் பரவாதவாறு தடுக்கப்படுகிறது. ஆனால் பண்ணைகளில் ஒரேவகையான விலங்குகளையே வளர்க்கிறோம், இதுவே ஒரு விலங்கிற்கு ஏற்படும் தொற்று மற்றவைகளுக்கும் எளிதில் பரவக் காரணமாக உள்ளது.

பெரும் எண்ணிக்கையில் பறவைகளையும், விலங்குகளையும் சுகாதாரமற்ற சூழலில் வளர்க்கும் போது அதுவே தொற்று நோய்களுக்கான அடைகாப்பமாக மாறுகிறது. ஒரே வகைப் பயிர்களையும், விலங்குகளையும் பெரும் எண்ணிக்கையில் வளர்க்கும் ஒற்றைப் பயிர்முறை / வளர்ப்புமுறை தொற்று நோய்கள் எளிதாகப் பரவுவதற்குக் காரணமாகிறது.

தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் விதமாகப் பல்வகையான தாவரங்களையும், பயிர்களையும் வளர்க்கும் பன்மைத்துவ விவசாய முறைகளையும், வளர்ப்பு முறைகளையையும்  நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வனவிலங்குகளை வேட்டையாடுவதும், சட்டத்திற்கு புறம்பாக அவற்றைக் கடத்தி விற்பனை செய்வதும், வனவிலங்குகளின் இறைச்சியை உணவாகக் கொள்வதும் தொற்றுநோய்கள் பரவக் காரணமாகிறது. எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி வைரஸ், குரங்கு மாமிசம் சாப்பிட்டதால் குரங்கிடமிருந்த சிமியன் வைரஸ் மூலமாக உருவானது.

புதிய கொள்ளை நோய்கள் உருவாவதைத் தடுப்பதற்கு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வேண்டும். சூழலியாளர்கள் அழியும் வனங்களை உடனடியாக மறுவனப்படுத்த வேண்டும் என்கிறார்கள், அதன் மூலமே விலங்குகளின் வாழ்விடமும் காக்கப்பட்டு புதிய தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் காடுகளுக்கு இடங்களை ஒதுக்குவதும், காடுகள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துவதும் நாம் சந்திக்கும் எண்ணற்ற சூழலியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

(தொடரும்)

- சமந்தா