seeman namtamizarஉரிமைத் தமிழ்த் தேசம் ஏப்ரல் இதழில் நாம் தமிழர் கட்சிக்குச் சில வினாக்கள் தொடுத்திருந்தோம். அந்த வினாக்களோடு முடித்துக் கொள்ளவே விரும்பினோம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் புதிய ஆவணம் ஒன்றை நண்பர்கள் அனுப்பியுள்ளார்கள்.

”காலத்தின் தேவை / முழுமையான மாநில சுயாட்சியின் கீழ் / இறையாண்மையுள்ள நாம் தமிழர் அரசு” என்ற ஈர்ப்பான தலைப்பில் இந்தப் புதிய ஆவணம் சொல்லும் செய்திகள் கருத்துக்குரியவை. முழுமையான சுயாட்சி! இறையாண்மையுள்ள அரசு! இது வரவேற்கத்தக்க சிந்தனை!

முழுமையான சுயாட்சியின் கீழ் இறையாண்மையுள்ள அரசமைக்க இந்த ஆவணம் மூன்று வழிகள் காட்டுகிறது: (1) இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 370; (2) மாநில, ஒன்றியப் பட்டியல்; (3) இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 371.

ஆக, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டுத் தமிழ்நாட்டின் இறைமையை நிறுவது காலத்தின் தேவை என்று நாதக நம்புகிறது. இதற்கான சட்ட வழிவகைகளையும் முன்மொழிகிறது. நம்மால் வழிமொழிய முடியுமா? பார்ப்போம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370 என்பது என்ன?

இந்திய அரசமைப்பின் பகுதி XXI இன் தலைப்பு ”நிலையல்லாத, நிலைமாற்ற, சிறப்பு வழிவகைகள்” என்பதாகும். இந்தப் பகுதியில் காசுமீரத்துக்கான இடைக்கால வழிவகை என்ற பெயரில் இடம் பெறுவதுதான் உறுப்பு 370.

இந்த 370ஆம் உறுப்பை நம்பி இந்திய அரசமைப்புக்குள் தமிழ்நாட்டின் இறைமையை நிலைநாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சி நம்புவதால், அதன் பின்னணி, உள்ளடக்கம், நிகழ் தகுநிலை ஆகியவற்றைப் பார்க்க வேண்டும்.

தோழர் நலங்கிள்ளி எழுதியுள்ள “உறுப்பு 370: காசுமீரத்தின் உரிமை முறியா? அடிமைப் பொறியா?” என்ற குறுநூலை நாம் தமிழர் கட்சித் தோழர்கள் படிக்கப் பரிந்துரை செய்கிறேன். சற்றே விரிவாக “காசுமீரம் யாருக்கு?” என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள நூலையும் படிக்கலாம்.

சுருக்கமாகச் சொல்கிறேன்: இந்திய விடுமைக்கு முன் இந்தியாவின் வடக்கில் அல்லது இந்தியாவுக்கு வடக்கே ஒரு குறுநில (சமத்தான) அரசாக இருந்த சம்மு - காசுமீரத்தில் பெரும்பான்மை மக்கள் முசுலீம்கள். மன்னர் அரிசிங் இந்து. இந்தியாவும் பாகிஸ்தானும் விடுமை பெற்ற பின் காசுமீரம் எந்த நாட்டுடன் இணைவது? அல்லது தனிநாடாக நீடிப்பதா? என்ற சிக்கல் எழுந்தது.

1947 செப்டெம்பரில் அரிசிங்கின் மன்னராட்சிக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் வெடித்தன. பாகிஸ்தான் ஆதரவோடு பத்தான் பழங்குடியினர் படையெடுத்து வந்தனர். மன்னர் அரிசிங் இந்திய அரசிடம் இராணுவ உதவி கேட்டார். இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுமாறு நேரு நிபந்தனை விதித்தார். அரிசிங்கை இணைப்புக்கு இணங்கச் செய்ய ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் தூது சென்றார்.

1947 அக்டோபர் 26ஆம் நாள் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு விட்டு அரிசிங் காசுமீரத்தை விட்டு ஓடிப்போனார். இந்த இணைப்பு இறுதியானதன்று என்றும், காசுமீர மக்களின் விருப்பம் இல்லாமல் அது இறுதி செய்யப்படாது என்றும் இந்திய அரசு அறிக்கை விட்டது. காசுமீர் மக்களின் தலைவர் சேக் அப்துல்லா இடைக்கால அடிப்படையில் இந்த இணைப்பை ஏற்றுக் கொண்டார்.

காசுமீரம் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதல் போர் மூண்டது. 1948 சனவரி முதல் நாள் ஐநா பாதுகாப்பு அவை தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்து வைத்தது. காசுமீரம் இந்தியாவுக்கா? பாகிஸ்தானுக்கா? என்பதைத் தீர்வு செய்யப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஐநா தீர்மானம் இயற்றியது.

ஆனால் வாக்கெடுப்பு நடத்துவதை சவகர்லால் நேரு தலைமை விரும்பவில்லை. வாக்கெடுப்பு நடத்தாமலே காசுமீரத்தை நிலையாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள காசுமீரப் பண்டிதர் நேரு எல்லா வகையிலும் முயன்று கொண்டிருந்தார்.

இந்தியாவுடன் காசுமீரத்தை இணைப்பதற்கான ஒப்பந்தப்படி பாதுகாப்பு, அயலுறவு, தொலைத் தொடர்பு தவிர்த்து வேறு எவ்வகையிலும் இந்தியா காசுமீரத்தில் தலையிடலாகாது. இந்த இணைப்பு ஒப்பந்தத்தைச் செயலாக்கும் சாக்கில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1949 அக்டோபர் 17ஆம் நாள் உறுப்பு 370 சேர்க்கப்பட்டது.

என்ன சொல்கிறது 370?

1) சம்மு-காசுமீரத்துக்கான அரசமைப்புப் பேரவை ஏற்றுக் கொள்ளும் வரை இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கு பொருந்தாது.

2) இந்தியச் சட்டங்கள் சம்மு - காசுமீர அரசமைப்புப் பேரவையின் இசைவைப் பெற்ற பிறகே அம்மாநிலத்துக்குப் பொருந்தும்.

3) இந்திய அரசமைப்பின் முதல் உறுப்பு (முதல் விதி) சம்மு - காசு மீரத்துக்குப் பொருந்தும்.

4) இந்திய அரசமைப்பின் எட்டாம் அட்டவணை குறிப்பிடும் அதிகாரங்களின் பொதுப் பட்டியலின் கீழ் இயற்றப்படும் சட்டங்களுக்கு சம்மு-காசுமீர் அரசாங்கத்தின் இசைவு தேவை.

5) இந்த 370இன் வழிவகைகள் செயல்படுபதற்குக் குடியரசுத் தலைவரின் பொது அறிவிப்பு தேவை. அவர் இப்படி அறிவிப்புச் செய்ய சம்மு - காசுமீரத்து அரசமைப்புப் பேரவையின் பரிந்துரை தேவைப்படும்.

மேற்சொன்ன 3ஆம் கூறுதான் யாவற்றிலும் முகன்மையானது. யாவற்றிலும் சூழ்ச்சியானது. முறைப்படி காசுமீரத்து மக்களின் விருப்பம் அறியாமலே, ஐநாவில் ஒப்புக் கொண்டபடி வாக்கெடுப்பு நடத்தாமலே காசுமீரத்தை என்றென்றைக்குமாக விழுங்கி விடும் சூழ்ச்சிதான் இது. எனவே 370 என்பது இந்தியப் பேரரசு காசுமீர மக்களை வஞ்சித்ததன் அடையாளமே தவிர வேறன்று.

எப்படி என்றால், இந்திய அரசமைப்பின் உறுப்பு 1 என்பது இந்திய ஒன்றியம் எப்பகுதிகளால் ஆனது என்பதை வரையறுக்கிறது. இந்த உறுப்பு சம்மு - காசுமீரத்துக்குப் பொருந்தும் என்றால் அந்தப் பகுதிகளில் அதுவும் சேர்ந்து விட்டது, அதன் இசைவின்றியே சேர்க்கப்பட்டு விட்டது என்று பொருள்.

இந்த முதல் உறுப்பு பொருந்தும் என்றால் அரசமைப்பின் முதல் அட்டவணையில் மாநிலங்களின் பட்டியலில் சம்மு-காசுமீரமும் இடம் பெற்று விட்டது என்று பொருள். சம்மு - காசுமீர மக்களுக்கு உலகறியத் தந்த உறுதிமொழியை இந்தியா காற்றில் பறக்க விட்டதன் மறுபெயர்தான் உறுப்பு 370.

சம்மு-காசுமீரத்துக்கான அரசமைப்புப் பேரவை கூட்டப்படுவதற்கு முன்பே, ஐநா விதித்த வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பே காசுமீரத்து மக்களின் இறைமையைப் பறிக்க இந்தியா செய்த சூழ்ச்சிதான் 370.

இந்த 370 ஒருபோதும் காசுமீரத்து மக்களின் கோரிக்கையோ குறிக்கோளோ அன்று. இந்தியாவில்தான் 370 பற்றிய கூச்சல் பெரிது. காசுமீரத்துக்கு மட்டும் ஏன் 370 தனிச் சலுகை? இந்தியா முழுவதற்கும் ஒரு சட்டம், காசுமீரத்துக்கு ஒரு சட்டமா? என்று ஆர்எஸ்எஸ் கோத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது.

370 அப்படியே நீடிக்க வேண்டும் என்றும், அதை நீக்கினால் இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு என்றும் இந்தியத் தேசியக் காங்கிரசும் ’பாரதபக்த’ இடதுசாரிகளும் கூவிக் கொண்டிருந்தார்கள். காசுமீரத்துக் குடிலர்களின் (பரூக், ஓமர், மெஹ்பூபா) கூவலும் அதுவே.

காசுமீரத் தேசியர்கள் யாரும் 370ஐ ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. காசுமீர மக்கள் நலன் என்ற நோக்கில், 370 இருந்தாலும் குப்பை, தொலைந்தாலும் குப்பை! எங்களுக்கும் ஒரு 370 என்று இந்தியச் சாப்பாட்டுக் கடையில் இலைவிரித்துக் காத்திருப்பது ’மாநில சுயாட்சி’ இரவலர்களின் ஈனக்குரல்!

அறிந்தோ அறியாமலோ இந்த 370இல்தான் காலங்கெட்ட காலத்தில் நாம் தமிழர் கட்சி தஞ்சம் புகுந்துள்ளது. காலத்தின் தேவை என்று பேரறிவிப்புச் செய்யப்படும் 370இன் புதைமேட்டில் ஈரம் காய்ந்து விட்டது தெரியுமா? தோழர்களே!

காசுமீரத்தின் இறைமையை வஞ்சகமாய்ப் பறித்த 370 எப்படித் தமிழ்த் தேசத்தின் இறைமையை மீட்கத் துணை வரும்? காசுமீரத்துக்குத் தூக்குக் கயிறு தமிழகத்துக்குக் காக்கும் கவசமா?

”காலத்தின் தேவை முழுமையான மாநில சுயாட்சியின் கீழ் இறைமையுள்ள நாம் தமிழர் அரசு” என்ற தலைப்பிலான நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் ”இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 370” என்ற தலைப்பில் இவ்வாறு கூறப்படுகிறது:

1) ”முழு மாநில சுயாட்சியை நிலைநிறுத்திடவும், தேசிய இனங்களின் உரிமைகளைப் பெற்றிடவும் தமிழ்நாட்டு அரசின் இறைமையைக் காத்திடும் வகையிலும் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐப் போன்றதொரு சட்டத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கிட அனைத்து வழிகளிலும் நாம் தமிழர் அரசு உறுதியான தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்கும்.”

2) ”இதனைப் பெறுவதன் மூலம் இந்திய ஒன்றிய அரசின் சட்டங்கள் எவையும் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது. மேலும் தமிழ்நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை தமிழ்நாட்டு சட்டமன்றமே உருவாக்கிக் கொள்ளும் உரிமையும் நாம் தமிழர் அரசு உருவாக்கிய தமிழ்நாட்டிற்கான கொடிக்கும் இந்திய ஒன்றிய அரசியலமைப்பின் சட்டப் பூர்வ அங்கீகாரம் கிடைக்கப்பெறும்.”

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அதன் உறுப்பு 370இன் மீதும் நாம் தமிழர் கட்சி வைத்துள்ள பெருநம்பிக்கைக்கு சட்ட வகையிலோ வரலாற்று வகையிலோ எவ்வித அடிப்படையும் இல்லை என்பதே உண்மை. சுயாட்சி, இறையாண்மை நோக்கிய சாலைவரை (roadmap) எப்படியாம்? முதல் படி: நாம் தமிழர் தமிழ்நாடு மாநில அரசு அமைத்தல்; இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட இப்படியான தோர் அரசு அமைத்த பின் இரண்டாம் படி: 370 போன்றதொரு சட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்குதல், அதற்காக அனைத்து வழிகளிலும் அந்த அரசு உறுதியான தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்தல். இப்படியாக முழு மாநில சுயாட்சியை நிலைநிறுத்துதல், தேசிய இனங்களின் உரிமைகளை (தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை மட்டுமன்று) பெறுதல்.

நாம் தமிழர் கட்சி தன் அரசியல் இலக்கை அடைவதற்கு இந்த உறுப்பு 370இன் மீது பெரு நம்பிக்கையோடு தனதனைத்தையும் பந்தயம் வைக்கிறதே, அந்த அளவுக்கு அதில் என்னதான் உள்ளது? காசுமீரம் பற்றிய சிறப்பு வழி வகையாகிய உறுப்பு 370 போன்ற உறுப்பு தமிழ்நாட்டின் மாநில சுயாட்சிக்கோ இறைமைக்கோ எவ்வாறு பயன்படும்? காசுமீர மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதற்காகவே வரையப்பட்ட 370 போல், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதற்கும் ஒரு சட்டம் வேண்டும் என்பதுதான் நம் தமிழர் கட்சியின் கோரிக்கையா?

370ஆம் உறுப்பை காசுமீர மக்கள் துச்சமாக மதிக்கின்றார்கள். காசுமீரத்தில் அல்ல, இந்தியாவில்தான் 370 பற்றிய கூச்சல் பெரிது. இந்த 370ஐக் காட்டி உலகை ஏமாற்றிக் கொண்டிருந்த ஆளும் வகுப்பு ஒரு கட்டத்தில் அந்த 370ஐயும் செயலிழக்கச் செய்து விட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை முறைப்படி திருத்தாமலே, அல்லது எவ்வடிவிலும் காசுமீர மக்களின் கருத்தறியாமலே 370ஐ மோதி - அமித்சா கும்பல் சாகடித்து விட்டது. ”காசுமீரம் யாருக்கு?” என்ற நூலில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.

காசுமீரத்துக்கு உதவாத 370 போல் தமிழ்நாட்டுக்கும் உதவாத ஒரு சட்டம் வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் குறிக்கோளா? இப்படியொரு மோசடிச் சட்டம் தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கோ இறைமைக்கோ எப்படிப் பயன்படும் என்பதை நாம் தமிழர் கட்சித் தலைமையோ அக்கட்சிக்கு இவ்வாறு அறிவுரை வழங்கிய சட்ட வல்லுநர்களோதான் விளக்க வேண்டும்.

நாங்கள் இந்த 370ஐ அப்படியே கோரவில்லை, உரிய திருத்தங்களோடுதான் கேட்கிறோம் என்று நாதக தோழர்கள் சொல்லக் கூடும். அப்படியானால் தமிழ்நாட்டுக்கென நீங்கள் முன்மொழியும் 370 போன்ற சிறப்பு வழிவகை, அல்லது வேறு புதிய வழிவகை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்திட வழி என்ன? சொல்லுங்கள். இந்திய அரசமைப்பில் தமிழ்நாட்டுக்கு முழுமையான மாநில சுயாட்சியும் இறைமையும் கிடைக்கச் செய்யும் திருத்தச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டின் எல்லாத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியே வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றாலும் சரி, சட்டப் பேரவையில் நாம் தமிழர் கட்சியே பெரும்பான்மை பெற்று மாநில ஆட்சியைக் கைப்பற்றினாலும் சரி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு இதெல்லாம் போதவே போதாது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் கனவுகள் இத்துடன் முடியவில்லை. 370 போன்ற சட்டத்தைப் பெறுவது எப்படி? என்ற வினாவுக்கு விடையே இல்லாமல், இந்திய ஒன்றிய அரசின் சட்டங்கள் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாமற் செய்தல், தமிழ்நாட்டுக்குத் தனி அரசமைப்புச் சட்டத்தைத் தமிழ்நாட்டு சட்டமன்றமே உருவாக்குதல், தமிழ்நாட்டுக் கொடிக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறுதல்… இந்தக் கனவுகளையெல்லாம் நனவாக்கத் தமிழ் மக்களைத் திரட்டிப் போராடுவோம் என்று நா.த.க. பறைசாற்றுமானால் மதிக்கலாம். இந்திய வல்லரசியத்தின் அடிமைக் கங்காணி அரசுக்கு அக்கட்சி தேர்தெடுக்கப்படுவதுதான் இதற்கெல்லாம் முதற்படி என்றால் அந்த முப்பாட்டன் முருகனே முதலமைச்சரானாலும் முடியாது.

நாதக ஆவணம் காட்டும் இரண்டாம் வழி மாநில, ஒன்றியப் பட்டியல் என்பதாகும். இந்திய அரசமைப்பின் ஏழாம் அட்டவணையில் தரப்பட்டுள்ள அதிகாரப் பட்டியல்களை என்ன செய்தாவது மாற்றி மாநில சுயாட்சியையும் இறைமையையும் அடைந்து விட முடியுமா? பார்ப்போம்.

”காலத்தின் தேவை / முழுமையான மாநில சுயாட்சியின் கீழ் / இறையாண்மையுள்ள நாம் தமிழர் அரசு” என்ற நா.த.க ஆவணம் முழுமையான சுயாட்சியும் இறைமையும் அடைய மூன்று வழிகள் காட்டுகிறது. இவற்றுள் முதல் வழி அரசமைப்புச் சட்டத்தில் 370 போன்ற உறுப்பு இடம் பெறச் செய்தல் என்றால், இரண்டாம் வழி மாநில, ஒன்றியப் பட்டியல் என்பதாகும். இந்தத் தலைப்பில் சொல்லப்படுவதாவது:

1) ”இந்திய அரசியலமைப்புப் சட்டத்தின் பட்டியல் 7இல் உள்ள பொதுப் பட்டியல் முழுதாக நீக்கப்படும்.

2) “ஒன்றியப் பட்டியலில் உள்ள வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, தொலைத் தொடர்பு ஆகியவை தவிர மற்ற ஏனைய விவகாரங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு முழுதாக மாற்றப்படும். இதன் மூலம் மாநில நலன் சார்ந்த அனைத்திற்கும் சட்டமியற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரமும் மாநில அரசின் வரையறைக்கு உட்பட்டதே என்ற நிலை உருவாக்கப்படும்.

3) “இதற்கான ஒத்த கருத்துள்ள, மாநில உரிமைகளின் மேல் அக்கறை கொண்ட, இழந்த மாநில உரிமைகளை மீட்கும் எண்ணம் கொண்ட ஏனைய மாநில அரசுகளுடன், பிற சகோதர தேசிய இனத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்திய ஒன்றிய அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நாம் தமிழர் அரசு முழு முயற்சிகள் எடுக்கும்.”

இந்திய அரசமைப்பின் 7ஆம் அட்டவணையில் மூன்று பட்டியல்கள் உள்ளன: ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் (அல்லது இசைவுப் பட்டியல்). ஒன்றியப் பட்டியலில் 97 இனங்களும், பொதுப் பட்டியலில் 47 இனங்களும், மாநிலப் பட்டியலில் 66 இனங்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுப் பட்டியல் முழுதாக நீக்கப்படும் என்றும் ஒன்றியப் பட்டியலில் நான்கு அதிகாரங்கள் தவிர ஏனைய அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் நா.த.க. ஆவணம் சொல்கிறது. மாநில நலன் சார்ந்த அனைத்திற்கும் சட்டமியற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரமும் மாநில அரசின் வரையறைக்கு உட்பட்டதே என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் அது சொல்கிறது.

வெளியுறவுத் துறையும் படைத் துறையும் ஒன்றிய அரசின் கையில் தொடரும் போது தமிழ்நாட்டுக்கு எத்தகைய இறைமை மிஞ்சும் என்ற கேள்வி எழுகிறது. தமிழீழத்தின் மீது இந்தியப் படையெடுப்பு போன்ற முடிவுகளைத் தமிழ்நாட்டரசால் சட்டப்படி தடுக்க முடியாது என்பதே நா.த.க. முன்மொழிவின் விளைவாக அமையும். இது ஒருபுறமிருக்க, இது நீக்கப்படும், அது மாற்றப்படும், அந்நிலை உருவாக்கபப்டும் என்றெல்லாம் அறிவித்தால் போதுமா? யார் நீக்குவது? யார் மாற்றுவது? யார் உருவாக்குவது?

இதற்காக இந்திய ஒன்றிய அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சிக்கு நன்றாகவே விளங்குகிறது. இவ்வாறு அரசமைப்பைத் திருத்துவதற்கு ஒத்த கருத்துள்ள மாநில அரசுகளுடனும் பிற சகோதர தேசிய இனத் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து ஆதரவு திரட்ட வேண்டும் என்பதுதான் நா.த.க. திட்டமாகக் கூறப்படுகிறது.

ஒரு கேள்வி எழுகிறது: இறைமையற்ற மாநில ஆட்சியைக் கைப்பற்றிய பிறகுதான் இந்தக் கலந்தாலோசனையைத் தொடங்க வேண்டுமா? ஒரு கட்சியாகவே இதைச் செய்தால் என்ன? ஒத்த கருத்துள்ள மாநில அரசுகள் என்றால் எவை? அந்தப் பிற சகோதர தேசிய இனத் தலைவர்கள் என்றால் யார்? இந்தக் கலந்தாலோசனையை இப்போதே தொடங்க விடாமல் தடுக்கும் காரணி எது?

ஒரு கலந்தாலோசனையைத் தொடங்குவதற்கே கூட -- இறைமையற்றதென்று நீங்களே ஏற்றுக் கொள்ளும் -- மாநில ஆட்சியைக் கையில் கொடுத்தால் மட்டும்தான் உண்டு என்கிறீர்கள்!

இது ஒரு புறமிருக்க, மாநிலப் பட்டியலில் வழங்கப்படும் அதிகாரங்களில் மட்டுமாவது மாநிலத்துக்கு இறைமை உண்டா? அந்த அதிகாரங்கள் தொடர்பில் இயற்றப்படும் சட்ட முன் வடிவுகளும் கூட இந்திய அரசு அமர்த்திய ஆளாகிய ஆளுநரின் ஒப்பம் பெற்றால்தான் சட்டமாகும் என்பதன் பொருள் என்ன? எந்தக் கட்சி ஆட்சியிலமர்ந்தாலும் மாநிலச் சட்டப் பேரவைக்கு இறைமை கிடையாது என்பதே!

மாநிலப் பட்டியலை விரிவாக்குவதோ, எல்லா அதிகாரங்களையும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவருவதோ கூட மாநிலத்துக்கு இறைமை தந்து விடும் என்பதொரு மாயையே!

தமிழ்த் தேசிய விடுதலை அல்லது இறைமை மீட்பு என்ற அடிப்படைக் குறிகோளை விட்டு விலகிப் பதவி அரசியலுக்குத் தடம் அமைத்துக் கொள்ளவே மாநில அதிகார விரிவாக்கம் என்ற முழக்கம் பயன்படும். இது திமுக நடந்த பாதை; அதே பாதையில்தான் நா.த.க.வும் புறப்பட்டுள்ளது.

(தொடரும்)

- தியாகு